Big Boss Tamil 7 Cinema Entertainment

Big Boss Tamil 7:இலக்கியம், பெண்ணுரிமை, கல்வி – பரவாயில்லையே, பிக் பாஸ் வீட்ல இதெல்லாமா பேசறாங்க?

‘தலைமுறை இடைவெளி’யால் நிகழும் பிரச்னைகளுக்குச் சரியான உதாரணம் இந்த எபிசோடு. ஜெனரேசன் கேப் காரணமாக ஒரு சிறிய உரையாடல் கூட ஆவேச வெடிப்பிற்கு இட்டுச் செல்லும். அதுதான் இந்த எபிசோடில் உக்கிரமான சம்பவங்களாக நிகழ்ந்தது.

பிக் பாஸ் வீட்டு ரேசன் கார்டுபடி ‘மதர் கேரக்ட்டராக’ உள்ளே வந்த விசித்ரா, தன்னை உண்மையான அம்மாவாகவே கருதிக் கொண்டு ‘நீ அப்படி நில்லு… நீ அங்க நிக்காதே’ என்று தனது அதிகாரத்தை தொடர்ந்து நிறுவிக் கொண்டே இருந்ததால் மனதிற்குள் பொருமிக் கொண்டிருந்த இளையத் தலைமுறையினர் இன்று பொங்கி விட்டார்கள். காஃபி கிடைக்காத காரணத்தால் பவா செல்லத்துரை கூட காண்டாகி விட்டார்.

பிள்ளை வளர்ப்பு என்பது எந்தவொரு தலைமுறையிலும் பெற்றோர்களுக்கு ஒரு பிரச்னையாக இருக்கிறது. ‘சொன்ன பேச்சை கேக்கலையே’ என்று அங்கலாய்க்கிறார்கள். ‘பிள்ளைகள் வளர்வதற்கான சூழலை அமைத்துத் தருவது, ஒரு நண்பனாக நின்று ஆலோசனைகளைச் சொல்ல முயல்வது’ ஆகியவற்றோடு பெற்றோரின் எல்லை முடிந்து விடுகிறது. அதற்கு மாறாக ‘அன்பு, பாசம்’ என்கிற பெயரில் ஒவ்வொரு விஷயத்திலும் மூக்கை நுழைத்துக் கொண்டேயிருந்தால் ஒரு கட்டத்தில் அவர்கள் பொங்கி விடுவார்கள். பிறகு அந்த உறவில் ஒரு நிரந்தரமான கசப்பும் விலகலும் ஏற்பட்டு விடும்.

பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? (DAY 5 EP 6)

வார இறுதியில் கமலின் விசாரணை இருக்கும் என்பதாலோ என்னவோ, அதுவரை பெண்களிடம் சண்டைப் போட்டுக் கொண்டிருந்த விஷ்ணு ‘வாங்கப் பழகலாம்’ என்று ஒவ்வொரு பெண்ணிடமும் சென்று நட்புப் பாராட்டிக் கொண்டிருந்தார். ‘அடாது மழை பெய்தாலும் விடாது பேசுவோம்’ என்று அனன்யாவும் விஷ்ணுவும் குடை பிடித்துக் கொண்டு ‘பர்சனல்’ விஷயங்களைப் பேசிக் கொண்டிருந்தார்கள். “என்னை மாதிரியே கண்ணாடில தெரியற பையன்தான் எனக்கு வேணும்” என்று கான்வென்ட் தமிழில் சொல்லிக் கொண்டிருந்தார் அனன்யா. அதை ‘கண்ணாடி போட்ட பையன்’ என்று தன்னையே விஷ்ணு நினைத்துக் கொள்ளாமல் இருந்தால் சரி.

சின்ன பிக் பாஸ் வீட்டில் விசித்ரா செய்யும் ‘அட்ராசிட்டி’ பற்றி அங்குள்ள அனைவருக்குமே உள்ளூற கடுப்பு இருக்கிறது. “எவ்ளோ நேரம் மேக்கப் போடுவீங்கன்னு கேக்கறாங்க… எல்லோருமே ஆர்டிஸ்ட்தான். அழகா இருக்கணும்னு நெனக்கறதுல என்ன தப்பு. அடுத்த தடவை கேட்டுடுவேன்” என்று வினுஷா பொங்கிக் கொண்டிருக்க அதை ஆமோதித்தார் அனன்யா. “நைட்டு ஃபுல்லா பேசிட்டு இப்ப நல்லா தூங்குதுங்க… இவங்க எப்ப எழுந்து, அடுப்பைப் பத்த வைச்சு… நான் டீ சாப்ட்டு… பிக் பாஸூ நான் ரூல்ஸை மீறிடுவேன். பார்த்துக்கங்க…” என்று காலையிலேயே தனியாக அனத்திக் கொண்டிருந்தார் விசித்ரா.

‘காஃபி இல்லாத வாழ்க்கை… என்ன வாழ்க்கை!’ – நொந்து போன பவா

‘வேர்ல்டு கப்’ ஆரம்பிக்கப் போவதாலோ என்னமோ, ‘காதல் கிரிக்கெட்டு’ என்கிற பாடலுடன் நாள் 5 விடிந்தது. “ஒரு வாய் காபி கொடும்மா” என்று மாமனார் மாதிரி வந்து நின்ற பவாவிடம், “அதெல்லாம் இல்ல சார். பால் கம்மியாதான் இருக்கு” என்று விசித்ரா சூடாகப் பதில் சொன்னதால், ‘காஃபி இல்லாத வாழ்க்கை… என்ன வாழ்க்கை’ என்று நொந்து போய் பிறகு பிக் பாஸிடம் புகார் தெரிவித்தார்.

‘உணவு என்பது அனைவருக்கும் பகிர்ந்தளிக்கப்பட வேண்டிய விஷயம்’ என்று விசித்ரா நினைப்பது சரியான விஷயம். இதையெல்லாம் பிக் பாஸிடம் சென்று பவா புகார் அளிப்பது சரியல்ல. ஆனால் பவா சொன்ன கோணம் முக்கியமானது. “கிச்சன் ஏரியாவைத் தனது அதிகார மையமாக விசித்ரா ஆக்கிக் கொண்டிருக்கிறார். அவங்க அன்பை ரொம்ப ஈஸியா நிராகரிக்கறாங்க… அவங்களுக்குள்ள ஒரு வன்மம் இருக்கு” என்று வாக்குமூல அறையில் விசித்ராவிற்கு எதிராகப் பேசிக் கொண்டிருந்தார். சமையல் அறையில் பெண்கள் பல ஆண்டுகளாக மாட்டிக் கொண்டு சிரமப்படுகிறார்கள் என்பது உண்மைதான். ஆனால் சமையல் அறை என்பது சிலரின் அதிகார ஆயுதமாக இருக்கிறது என்பதை நடைமுறையிலேயே பார்க்கலாம்.

அனன்யாவைத் தொடர்ந்து மாயாவிடமும் சென்ற விஷ்ணு ‘வாங்கப் பழகலாம்’ என்று பிரெண்ட் ரிக்வெஸ்ட் கொடுத்தார். மாயாவும் பெருந்தன்மையாக ஏற்றுக் கொண்டார். பிறகு இந்த விஷயத்தை கூல் சுரேஷிடம் பெருமிதச் சிரிப்புடன் பகிர்ந்து கொண்டார் விஷ்ணு. “ஒருத்தரை பத்து பேரு எதிர்க்கறாங்கன்னா… யாரு பெரிய ஆளு?” என்று பன்ச் பேசிக் கொண்டிருந்தார் சுரேஷ்.

“என்னாதிது… சின்ன சின்ன புஸ்வாணமா இருக்கு… பெருசா ஏதும் வெடிக்கலையே?” என்று ரூம் போட்டு யோசித்த பிக் பாஸ், அடுத்த ஆயுதத்தை டாஸ்க் என்கிற பெயரில் ஏவினார். அதன்படி இரண்டு வீட்டிலும் உள்ள பிரச்னைகள், நபர்களின் நடத்தை, மேம்படுத்த வேண்டிய விஷயங்கள் போன்றவற்றைப் பற்றித் தேர்வு செய்யப்பட்ட நபர்கள் பேசலாம் என்று ஒரு விவாதத்தை ஆரம்பித்து வைத்தார். அவர் எதிர்பார்த்தபடி இது பற்றிக் கொண்டு எரிந்தது. புரொமோவில் போடுவதற்கும் அதிகமாகவே கன்டென்ட் கிடைத்தது.

பிக் பாஸ் புரொமோக்களுக்குத் தீனியளித்த விவாத மோதல்

முதலில் எழுந்த மணி, “பிரதீப் ப்ரோ எதிர்க்க இருக்கறவங்களை ஓப்பனா அடிச்சி விட்டுட்டு போயிடறாரு. ‘செஞ்சுடுவேன்’ன்னு நாமினேஷனை வெச்சு பேசறாரு… அவர் அதை மாத்திக்கலாம்” என்று விவாதத்தை ஆரம்பித்து வைக்க, “நான் இங்க ஜெயிக்கத்தான் வந்தேன். நாமினேஷன் பத்தி நான் மட்டும் பேசல. மத்தவங்களும்தான் பேசறாங்க” என்று பிரதீப் பதில் தர, இந்தச் சமயத்தில் குறுக்கிட்ட பிக் பாஸ் “நாமினேஷன் பத்தி டிஸ்கஸ் பண்ணலாம்” என்று விதியைத் தெளிவுப்படுத்தினார். ஆக, இந்த சீசனில் கலவரம் அதிகமாக இதுவொரு காரணமாக இருக்கும்.

அடுத்து எழுந்த விஜய், “பிரதீப் என்னை ஷூவால இடிச்சுட்டு போனாரு. ஒரு ஸாரி கூட கேட்கலை” என்று அத்தோடு முடித்திருந்தால் கேப்டனின் பெருந்தன்மையாக இருந்திருக்கும். அதற்கு மாறாக, “நானும் கையை வெச்சு டப்புன்னு தட்டினா என்னவாகும்… மூக்குல இருந்து ரத்தம் வரும். அப்புறம் ஆஸ்பத்திரிக்கு தூக்கிட்டுப் போகணும். வெளில இருக்கற நம்ம பசங்க எல்லாம் மோசமானவங்க… ஏதாச்சும் செஞ்சுடுவாங்க!” என்று தெலுங்குப்பட வில்லன் மாதிரி பன்ச் வசனம் பேசியதை ஒட்டுமொத்த வீடும் ரசிக்கவில்லை.




பிறகு எழுந்த விஷ்ணுவும் விஜய்யின் வன்முறை பேச்சைக் கண்டித்தது நல்ல விஷயம். “பிரதீப் தெரியாம பண்ணியிருக்கலாம். பதிலுக்கு வன்முறை எடுப்பேன்றது சரியல்ல” என்று ஆரம்பிக்க, விஜய் அதை ஒப்புக் கொள்ளவில்லை. “வன்முறை எந்த வடிவத்தில் வெளிப்பட்டாலும் அது தவறு” என்று மாயா சொன்னது திருவாசகம். பிறகு பவா உள்ளிட்ட ஒட்டுமொத்த வீடும் எதிர்ப்பு தெரிவித்ததும் விஜய் மன்னிப்பு கேட்டார். விஜய்யிடம் உள்ள விநோதமான விஷயம் என்னவென்றால் எதையாவது கோக்குமாக்காக ஆரம்பித்துவிட்டு பிறகு அதை யாராவது கண்டிக்கும் போது “சாரி ப்ரோ” என்று அப்படியே பம்மி அமர்ந்து விடுகிறார்.

விசித்ராவின் செல்லுபடியாகாத ‘மதர் கேரக்ட்டர்’

சின்ன வீட்டின் பக்கம் இருந்து ஒரு பிரச்னை புகைய ஆரம்பித்தது. இதை ஆரம்பித்தவர் அனன்யா. “சமைக்கறதைப் பத்தி ஏதாச்சும் சொல்லிட்டே இருக்காங்க. இப்படி இருந்தா எங்களுக்குச் சமைக்கவே தோணாது. என் டாட்டூ பத்திலாம் திரும்பத் திரும்ப பேசறாங்க” என்று அவர் குறிப்பிட்டது விசித்ராவைப் பற்றி. ‘நான் மதர்லி கேரக்ட்டர். என்ன பிரச்னைன்னு பசங்களிடம் விசாரிப்பேன். நீ எதை வேணா பண்ணிக்கோ… எனக்கென்ன?’ என்பது மாதிரி அசால்ட்டாக இந்தப் புகாரை எதிர்கொண்டார் விசித்ரா.

அடுத்து பேசிய ஜோவிகா, “ஒருத்தரோட பர்சனல் தேர்வுகள் பற்றி அவங்க அனுமதியில்லாம பொதுவில் பேச வேண்டாம். எனக்கு அது பிடிக்காது. முதல் நாள் அன்னைக்கு என் எஜூகேஷன் பத்திப் பேசினாங்க. அத பத்தி நான் முன்னாடியே முடிவு எடுத்துட்டேன். ஒருத்தர் மறைக்க விரும்பற விஷயங்களைப் பொதுவில் பேசாதீங்க” என்று சொன்னது ஒரு ‘ரெட் அலெர்ட்’. அதை விசித்ரா சீரியஸாக எடுத்துக் கொள்ளாததால் பிறகு மூக்குடைபட்டு தனியே அமர்ந்து கண்கலங்க வேண்டியிருந்தது.




“யாரும் இங்க ரூல்ஸ் ஃபாலோ பண்ணலை. என்ன மெனுன்னு காலைலையே சொல்லிடுங்க… சாப்பாட்டைக் கீழே சிந்தாதீங்க. சுத்தப்படுத்த கஷ்டமா இருக்கு. விசித்ராம்மா வர்றதுக்கு முன்னாடி நாங்க ஒரு மாதிரியா கோஆர்டினேட் பண்ணி சமைச்சுட்டு இருந்தோம். அவங்க வந்தப்புறம் எல்லாமே தப்பா போச்சு!” என்று நேரடியாக விசித்ரா பற்றிப் புகார் சொன்னார் நிக்சன். விசித்ராவின் முகம் கடுகடுவென மாறினாலும் ‘என் டர்ன் வரட்டும்’ என்று பல்லைக் கடித்துக் கொண்டு நின்றார்.

விசித்ரா ஆற்றிய நீண்ட சொற்பொழிவு

‘பெண்களின் மேக்கப் சாதனங்களைப் பறிப்பதற்காக டாஸ்க்கின் போது பிரதீப் செய்த சதி’ பற்றி விஷ்ணுவும் விஜய்யும் குற்றம் சாட்டினார்கள். ‘அது என் ஸ்ட்ராட்டஜி’ என்று வீம்பாக அழும்பு செய்தார் பிரதீப். விளையாட்டில் வெல்வதற்குப் பல்வேறு விதமான உபாயங்களைக் கையில் எடுக்கலாம் என்றாலும் அது நாகரிக எல்லையை தாண்டிச் செல்லக்கூடாது என்பதுதான் விளையாட்டுத் தர்மம்.

தன் மீது சொல்லப்பட்ட புகார்களைப் பல்லைக் கடித்துக் கொண்டு கேட்டுக் கொண்டிருந்த விசித்ரா, பிறகு ஆரம்பித்து ஒரு நீண்ட உரையை நிகழ்த்தினார். யார் குறுக்கே வந்தாலும் அடித்து தூக்கிவிட்டுச் செல்லும் பிரேக் பிடிக்காத வண்டி மாதிரி நான் ஸ்டாப்பாகப் பேசிக் கொண்டேயிருந்தார். “நான் உங்களையெல்லாம் போட்டியாளர்களா பார்க்கலை. குழந்தைகளாத்தான் பார்க்கறேன். ஒரு அம்மா மாதிரிதான் நெனக்கறேன்” என்கிற ரீதியில் விசித்ரா சொன்னது அனைத்தும் அவரது கோணத்தில் சரியாக இருக்கலாம். பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளின் மீதுள்ள அக்கறையில் சொல்கிற அதே மாதிரியான உபதேசங்களாகவே இருக்கலாம்.

ஆனால் பாருங்கள்… அன்பு என்பதும் கூட ஒருவிதத்தில் அதிகாரமாக மாறும். அன்பு என்கிற பாவனைக்குப் பின்னாலும் கூட பயங்கரமான வன்முறை இருக்கிறது. விசித்ராவிடம் தென்படுகிற இந்த ‘அன்பு’ பாவனையைத்தான் வீட்டில் உள்ளவர்கள், குறிப்பாக இளம் தலைமுறையினர் ரசிக்கவில்லை.

‘உங்களைப் போட்டியாளர்களாகப் பார்க்கவில்லை. அன்பு செலுத்த வந்தேன்’ என்று விசித்ரா சொல்வதே அடிப்படையில் அபத்தம். வீட்டிற்கு உள்ளே வந்தும் தன்னுடைய ‘அம்மா கேரக்ட்டரை’ அவரால் கைவிட முடியவில்லை. இன்றைய தேதியில் மட்டுமல்ல, எப்போதுமே பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் இடையே ஒருவிதமான உரசல் நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது. அதிலும் சமகால இளைய தலைமுறையினர் தங்களின் தேர்வுகள் குறித்துத் தெளிவாகவும் பிடிவாதமாகவும் இருக்கிறார்கள்.




இப்படிப்பட்ட சூழலில் ஒரு நண்பனாக நின்று இதமாக உபதேசம் செய்தால்தான் அது செல்லுபடியாகக்கூடிய சதவிகிதம் அதிகம். சொந்தப் பெற்றோருக்கே இதுதான் நிலைமை என்னும் போது பிக் பாஸ் என்னும் ரத்தபூமியில் வந்து விட்டு, ‘நீங்க என் குழந்தைகள்’ என்கிற ‘மதர் தெரசா’ பாவனையில் விசித்ரா தன்னுடைய அதிகாரத்தை நிலைநாட்ட முற்படுவது அவருக்கு வீழ்ச்சியைத்தான் அளிக்கும். உளவியல் படித்த விசித்ராவிற்கு இது தெரியவில்லை என்பதுதான் ஆச்சரியமாக இருக்கிறது.

படிப்பு விஷயத்தைத் தொட்டதும் சூடான அடுப்பாக மாறிய ஜோவிகா

அடுத்ததாகக் கல்வி சம்பந்தப்பட்ட விஷயம். இந்த நோக்கில் விசித்ரா சொல்வது சரியான விஷயம்தான். அடிப்படையான கல்வியை முடித்துவிட்டு பிறகு அவரவர்களின் விருப்பமான தேர்வுகளுக்கு நகர வேண்டும் என்பது அவர் சொன்ன முறையான ஆலோசனை. இதில் மாற்றுக்கருத்தேயில்லை.

மற்றொரு புறம், ‘தனது படிப்பு குறித்துப் பொதுவில் பேசப்படுவதை தான் விரும்பவில்லை’ என்பதை ஜோவிகா துவக்க நாளிலேயே வெளிப்படுத்தி விட்டார். இது குறித்த விவாதம் மீண்டும் பொதுவில் வந்தபோது பொங்கி எழுந்துவிட்டார். “கல்வி முக்கியமானதுதான். ஆனால் மரபு சார்ந்த கல்வியை ஒரு தண்டனையாக, மனஅழுத்தமாக கல்வி வராத பிள்ளைகளின் தலையில் திணிக்காதீர்கள். அதுதான் தற்கொலை உள்ளிட்ட விபத்துகளாக மாறுகிறது. வெவ்வேறு வடிவங்களில் ஒருவர் விஷயங்களைக் கற்க முடியும் விருப்பமான துறைகளில் முன்னேற முடியும்” என்பதாகத்தான் ஜோவிகா சொன்னதை எடுத்துக் கொள்ள முடிகிறது. இந்த மாற்றுத் தரப்பும் சற்று விவாதிக்கப்பட வேண்டியதே.

ஆனால், இப்படியான சுதந்திரமும் மனோபாவமும் பணம் படைத்தவர்களுக்குச் சுலபமான முடிவாக இருக்கலாம். காலங்காலமாக ஒடுக்கப்பட்டு வரும் மக்களுக்குக் கல்விதான் முன்னேற்றத்துக்கான ஆயுதம். எனவே பல பேர் பார்க்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கல்விக்கு எதிரான விவாதம் என்பது ஆபத்தான எண்ணத்தை விதைக்கவும் வாய்ப்பிருக்கிறது.




அதே சமயம், மற்றவர்களை அடக்கிவிட்டு உரத்த குரலில் பேசி இந்த விவாதத்தில் ஜெயிப்பதில்தான் விசித்ராவின் கவனம் இருக்கிறதே தவிர, சொல்ல வந்த செய்தியைப் பக்குவமாகச் சொல்ல வேண்டும் என்கிற நிதானம் இல்லை. இதை மறுபடியும் பொதுவில் விவாதிக்காமல் ஜோவிகாவிடம் தனியாகப் பேசியிருந்தால் கூட பிரச்னை பெரிதாக வெடித்திருக்காது. இது விசித்ரா x ஜோவிகா பிரச்னை மட்டுமல்ல. இந்த அகங்கார உரசல் ஒவ்வொரு வீட்டிலும் நிகழ்ந்து கொண்டேதான் இருக்கிறது.

விசித்ராவிற்கு எதிரான மாற்று தரப்புகளை மாயாவும் பவா செல்லத்துரையும் சொன்னார்கள். அதில், கல்வியறிவு இல்லாதவர்களைக் குறைவாக நினைக்க வேண்டாம் என்கிற ரீதியில் பவா செல்லத்துரை சொன்னது நியாயமான ஒன்றுதான். நம்மை ஆண்ட பல தலைவர்கள் கல்வியறிவில்லாதவர்கள்தான். அவர்கள்தான் நமக்கான முன்னேற்றத்தை வழங்கியுள்ளார்கள்.

ஆனால், “எஜுகேஷன் என்பது ஒரு மண்ணும் கிடையாது” என்று பவா சொல்வது கண்டிக்கத்தக்கது. உணர்ச்சி வேகத்தில் ஜோவிகாவுக்கு ஆறுதலாக அவர் அதைச் சொல்லியிருந்தாலும் கல்வி முறையை ஒட்டுமொத்தமாக கேன்சல் செய்யும் மனோபாவம் தவறான ஒன்றுதான். மீண்டும் அதேதான். தொலைக்காட்சியில் இப்படியான கருத்துகளை முன்வைப்பது ஆபத்தான விஷயமே!




இந்தக் கலவரம் முடிந்தப் பின்னர், “இனிமே நான் போட்டியாளராத்தான் இருக்கப் போகிறேன். புத்தி வந்துடுச்சு” என்றார் விசித்ரா. அடிபட்டுக் கொள்ளாமல் பாடம் கற்க பலருக்குத் தெரிவதில்லை.

அற்பமான விஷயங்களில் பிரச்னைகள் ஏற்படாமல், இலக்கியம், பெண்ணுரிமை, வன்முறை, கல்வி போன்ற விஷயங்கள் தொடர்பாக பிக் பாஸ் வீட்டில் விவாதங்கள் நடைபெறுவது ஆரோக்கியமான விஷயம். ‘பொலிட்டிக்கல் கரெக்ட்னஸ்’ என்கிற நோக்கில் நாம் மெல்ல முன்னேறிக் கொண்டிருக்கிறோம் என்பதற்கான அடையாளம் இது. மேலும் நெடுந்தூரம் நகர வேண்டும்.

கமலின் பஞ்சாயத்து நாள். இந்த சீசனின் முதல் விசாரணை. பவா சொன்ன கதை முதல் விசித்ரா சொன்ன கல்விப் பிரச்னை வரை பலவற்றிற்கு அவர் பொழிப்புரை ஆற்றலாம். பவா சொன்ன கதைக்கு ஆட்சேபம் தெரிவித்தவர்கள், கமல் விளக்கம் தரும்போது நிச்சயம் கைத்தட்டுவார்கள். என்ன சொல்லப்படுகிறது என்பதை விடவும் யார் சொல்கிறார்கள் என்பதை கவனிக்கும் உலகம் இது.

‘அடிப்படைக் கல்வி முக்கியம்’ என்கிற தலைப்பில் விசித்ராவிற்கும் ஜோவிகாவிற்கும் இடையில் நடந்த சூடான விவாதம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? கமெண்ட்டில் வந்து சொல்லுங்க மக்களே!

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!