gowri panchangam Sprituality

சிவத்தொண்டர்கள்-12 (ஏயர்கோன்கலிக்காமர்)

சிவபெருமான், பக்தர்களின் மனத்தில் வாசம் செய்பவர். அவர்கள் தன்னை எப்படித் துதிக்கிறார்களோ அப்படியே அருள்பவர். நாயகன் நாயகி பாவம், ஆண்டான் அடிமை பாவம், தோழமை பாவம் என ஈசன் எந்த பாவத்தில் நினைத்தாலும் அப்படியே அருள்பாலிப்பவர். ஈசனைப் பொறுத்தவரை இவற்றில் எது ஒன்றும் உயர்ந்ததும் இல்லை தாழ்ந்ததும் இல்லை. இதை உணர்த்த ஈசன் பல்வேறு லீலைகள் புரிந்ததுண்டு. அப்படி ஈசன் திருவிளையாடல் புரியும் ஓர் அற்புதமான வாழ்வைப் பெற்றவர், ஏயர்கோன் கலிக்காம நாயனார். இவர், மானக்கஞ்சாறனாரது மருமகன். ஈசனுக்குத் திருப்பணிகள் செய்துவந்தவர். சுந்தரமூர்த்தி சுவாமிகள் காலத்தில் வாழ்ந்தவர்.




சுந்தரமூர்த்தி சுவாமிகள், ஈசனிடம் தோழமையோடு பழகியவர். அவர், பரவைநாச்சியாரிடத்தில் தூது செல்லுமாறு ஈசனை வேண்ட, ஈசனும் அவ்வாறே சென்றார். இதுகுறித்துக் கேள்விப்பட்ட ஏயர்கோன் கலிக்காமர், மனம் வருந்தினார்.

“இறைவனை தூதுபோகச் சொல்லலாமா… அவ்வாறு ஒரு மானிடன் பெண்ணாசை கொண்டு வேண்டுவான் என்றால் அதையும் ஈசன் கேட்கலாமா… இது என்ன அநியாயம்… நான்முகன் முதலான தேவர்கள்கூட இதைச் செய்யலாம். முற்றும் முதல்வனான ஈசன் இதைச் செய்யலாமா…” என்று சொல்லி வருந்தினார். இதை அறிந்த சுந்தரமூர்த்தி சுவாமிகள், ஈசனிடம் சென்று, ஏயர்கோனின் வருத்தத்தை நீக்கியருள வேண்டினார்.




தொண்டர்களின் சிறப்பைப் பாடுவதற்காக ஈசனின் பிம்பத்திலிருந்து அவதரித்தவர் சுந்தரமூர்த்தி சுவாமிகள். ஏயர்கோன் நாயனார் இதை அறியவில்லை. மேலும், பக்தி பாவத்தில் எதுவும் பிழையில்லை என்பதையும் ஏயர்கோனுக்கு உணர்த்த விரும்பினார் ஈசன். ஏயர்கோனுக்கு சூலை நோயைக் கொடுத்தார். சூலை நோய் ஏயர்கோனை வாட்டியது. அப்போது அவரிடம் சென்று, ‘உம் சூலை நோய் வன்தொண்டரின் தீர்த்தத்தினால் சுகமாகும்’ என்றார். இதைக் கேட்ட ஏயர்கோன், ‘ஈசனை இறைவன் என்று பாராது ஏவியவர் தரும் தீர்த்தத்தினால்தான் இந்நோய் குணமாகும் என்றால் அந்நோய் குணமடையவே வேண்டாம்’ என்று வைராக்கியமாகக் கூறினார்.

சிவபெருமான் சுந்தரமூர்த்தி சுவாமிகளிடம் சென்று நிலைமையை எடுத்துச் சொல்ல, அவர் ஏயர்கோனைக் காக்க அவர் இல்லம் தேடி வந்தார். இதைக் கேள்விப்பட்டதும் ஏயர்கோன், ‘மற்றவன் வந்து நீக்குதவற்கு முன்னால் என்னை நீங்கா சூலை நோயை என் உயிரை இழந்து அழிப்பேன்’ என்று வீரமாகச் சொல்லித் தன் வயிற்றை வாளால் கீறி உயிர்விட்டார்.




மக்களின் குரல் - தினம் ஒரு அடியார்-29 ஏயர்கோன் கலிக்காமர்: சோழநாட்டின் திருப்பெருமங்கலத்தில் ஏயர்குடியில் பிறந்தவர் இவர். இவரது பூசைநாள் ...

சுந்தரமூர்த்தி சுவாமிகள், ஏயர்கோன் இல்லத்துக்கு வந்து அந்தக் காட்சியைக் கண்டதும் அதிர்ந்துபோனார். ‘ஓர் அடியவரின் மரணத்துக்கு நாம் காரணமாகிவிட்டோமே’ என்று வருந்தித் தானும் அந்த வாளினை எடுத்துத் தன்னை அறுத்துக்கொள்ள முயன்றார். அப்போது சிவபெருமான் ஏயர்கோனை உயிரோடு எழுப்ப, அவர் ஓடிவந்து சுந்தரமூர்த்தி சுவாமிகளின் கரத்தைப் பிடித்துக் காத்தார். இருவரும் ஒருவரை ஒருவர் பணிந்து மெய்சிலிர்த்தனர். பக்தியில் எதுவும் பிழையில்லை என்பதை இருவரும் உணர்ந்து ஈசனைப் பணிந்தனர்.

இத்தகைய சிறப்புகளை உடைய ஏயர்கோன் நாயனாரின் குருபூஜை தினம், ஆனி மாத ரேவதி நட்சத்திர நாளில் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில், சிவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம். தற்போது, பக்தர்களுக்கு ஆலய தரிசனம் தடைசெய்யப்பட்டிருப்பதால், அனைவரும் வீட்டிலிருந்தபடியே ஏயர்கோனை நினைத்து மனத்தால் தொழுது, திருநீறு அணிந்து சிவபெருமானைத் தொழ நோய்கள் நீங்குவதோடு, சிவனருள் பரிபூரணமாகக் கிடைக்கும் என்கிறார்கள் பக்தர்கள்.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!