gowri panchangam Sprituality

பாதாள பொன்னியம்மன் கோவில்- புரசைவாக்கம்

சென்னையில் உள்ள அம்மன் கோயில்களில் கீர்த்தி வாய்ந்தது பாதாள பொன்னியம்மன் கோயில், நானூறு ஆண்டுகளுக்கு முன்னால் அமையப்பெற்றது.  இந்த அம்மன் பாதாளத்தில் மறைந்திருந்து பக்தர்களைக் காப்பதற்காக தானே வெளிப்பட்ட சுயம்பு சக்திதேவி. இந்த வடிவை சிந்தாமணிதேவி என்ற சிற்ப சாஸ்திர நூலான சிற்ப விவேக சூடாமணி தெரிவிக்கிறது. நூறுஆண்டுகளுக்கு   முன்பு, இந்த அம்மனின் உற்சவர் ஊர்வலம் போனால் ஆலயத்திற்கு திரும்பத் திருமேனி ஆறு மாதமாகுமாம்! சென்னையைச் சுற்றியுள்ள சுமார் எழுபது கிராமங்களுக்கு இந்த அம்மன் வீதிஉலா சென்றதாலேயே இத்தனை காலம்! கோயிலைச் சுற்றி ஏழு திருக்குளங்கள் இருந்தனவாம். வீதி உலா செல்லும் அம்மன் தங்குவதற்கு வழிநெடுக அறுபத்தி நான்கு மண்டகப்படி இருந்தனவாம்.




Pathala Ponniamman Temple in Kilpauk,Chennai - Best Temples in Chennai - Justdial

அம்மனுக்கு அலங்காரமும் நைவேத்தியமும் அந்தந்த கிராம மக்களே செய்வார்கள். நேர்த்திக் கடன்களையும் செலுத்துவார்கள். சென்னையைச் சேர்ந்த பல லட்சம் மக்களுக்கு இந்த பாதாள பொன்னியம்மனே குலதெய்வமாக விளங்கியிருக்கிறாள். இந்த அம்மன் கோயிலுக்கு ஏழு இடங்களில் தோரண வாயில் அமைந்திருந்தனவாம்.

தல வரலாறு :

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகள் தொண்டை மண்டலம் என்றழைக்கப்பட்டன.  இந்த மண்டலத்தை பல்வேறு தொண்டைமான்கள் ஆண்டனர். பின்னர் சிறிது காலம், நாயக்கர் வம்சத்தைச் சேர்ந்த ராயர்கள் ஆட்சி. விஜய நகர சாம்ராஜ்யத்தை சேர்ந்த தளபதிகள் நாயக்கர் எனப்பட்டனர். அவர்களின் ஒருவர் சென்னப்ப நாயக்கர். அவரிடம் குத்தகைக்கு நிலத்தைப் பெற்று ஆங்கிலேயர்கள் இந்த பகுதியில் ஆட்சியுரிமை செலுத்திவந்தனர். அப்பொழுது புரசைவாக்கம் பகுதியில் மாந்தோப்புகளும், பூவரச மரங்களும் நிறைந்திருந்தது.

காய்கறிகள், பழங்கள் பயிரிடப்பட்டன. இருநூறு ஆண்டுகளுக்கு முன் விவசாய பாசனத்திற்கு நீர் அதிகம் தேவைப்பட்டது. தோட்டத்தின் வடக்கு மூலையில் நீர் சுரப்பதை அறிந்து, கூலி ஆட்கள் உதவியுடன், கிணறு வெட்டத் தொடங்கினர். ஏழடி தோண்டினாலே நீர் கிடைக்கும் இந்த பகுதியில், தொடர்ந்து முப்பதடி ஆழம் தோண்டியும் நீர் வரவில்லை. நிலச்சொந்தக்காரரும், வேலையாட்களும் சோர்ந்து விட்டனர். ஆனாலும் சக்தி அம்மாவை வேண்டியபடி கடப்பாரையை மேலும் இறக்க, அது ஒரு பாறைமீது பட்டு, தீப்பொறி வந்தது, அதைத் தொடர்ந்து தண்ணீரும் பீறிட்டு அடித்தது. சுற்றியிருந்த மக்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். பாறையை நெம்பி எடுக்க, கடப்பாரையால் தோண்ட, அனைவரும் ‘சிலை, சிலை’ என்று கூச்சலிட்டனர். அது அபூர்வமான அம்மன் சிலை அமர்ந்தக் கோலத்தில் காட்சியளித்தது. அம்மன் சிலையை வெளியே எடுத்தபோது, அதற்குக் கீழே ஐம்பொன் விக்கிரகம் ஒன்றும் கிடைத்தது. அனைவரும் ஒன்றுகூடி இரு சிலைகளுக்கும் அபிஷேகம், ஆராதனை, நைவேத்யம் செய்து வழிபட்டனர்.




அப்போது ஒரு பெண்மணிமீது அருள்வாக்கு வந்தது: ‘‘என் பிரிய பக்தர்களே, பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு நான் இங்கு கோயில் கொண்டிருந்தேன். ஞானிகளும், முனிவர்களும் என்னை வழிபட்டனர். பின்னர் மன்னர்கள் எனக்கு ஆலயம் அமைத்தனர். காலச்சுழற்சியில், இந்த பகுதி அழிந்துவிட, நான் பாதாளத்தில் வாழ்ந்தேன். வெளிப்படவேண்டிய நேரம் வந்ததால் நான் வெளிப்பட்டேன். எனக்கு ஆலயம் கட்டி என்னை வழிபடுங்கள். என் பிள்ளைகளான அனைத்து பக்தர்களையும் காப்பேன்.’’  அதன்படி, முதலில் கீற்றுக் கொட்டகை அமைத்து மூலவராக கல் விக்கிரகத்தையும், உற்சவராக ஐம்பொன் விக்கிரகத்தையும் ஸ்தாபித்தனர். பாதாளத்திலிருந்து கிடைத்ததால் பாதாள பொன்னியம்மன் என்று பெயரும் வைத்தனர். கிணறு தோண்டிய வேலையாட்களின் பரம்பரையினரே இன்றுவரை ஆடி மாத வீதி ஊர்வலத்தின்போது இந்த பாதாள பொன்னியம்மனுக்கு தாய் வீட்டுச் சீர் செய்கின்றனர்.

பக்தர்களின் எண்ணிக்கையும், காணிக்கையும் பெருகப் பெருக ஆலயமும் விரிவடைந்தது. அடுத்து அண்ணன்மார் சிலைகள் தனி கருவறையில் காவல் தெய்வங்களாக வைக்கப்பட்டன. முப்பது ஆண்டுகளுக்கு முன்பு, விநாயகர், முருகன் சிற்றாலயங்கள் கட்டப்பட்டன. அரசமர மேடை நாகர் சிலைகளும், நவகிரக சந்நதியும் கட்டப்பட்டன. கருவறை கோட்டத்தில் நர்த்தன கணபதி, தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, துர்க்கை ஆகியோர் காட்சியளிக்கிறார்கள். மிகப்பெரிய நூற்றுக்கால் மகா மண்டபமும் உள்ளது. அம்மன் சிலை கிடைத்த விவரத்தை தூணில் படைப்புச் சிற்பமாக செதுக்கியுள்ளனர். பாதாள பொன்னியம்மன் கற்சிலை வெகு அபூர்வமானது.அம்மன் வலது கையில் சூலமும், இடது கையில் அன்னப் பாத்திரமும் ஏந்தியுள்ளாள்; சாந்த சொரூபிணியாகத் திகழ்கிறாள்.




கோவில் அமைப்பு

வலதுப்புற வெளிப்பிராகாரத்தில் தனிச் சந்நதியில் நான்கு கைகளுடன் பாசம், அங்குசம், மோதகம், ஏக தந்தம் ஆகியன ஏந்தி மூன்றரை அடி விக்கிரமாக அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார் விநாயகர். இடது புறத்தில் நின்றகோல முருகனுக்கும் தனிச் சந்நதி. அபய-வரதம் அருளும் கைகளுடன் ஐந்தடி விக்ரமாகக் காட்சி தருகிறார். இவரிடம் வேல் ஆயுதம் உள்ளது. அடுத்து துர்கா தேவி நின்ற கோலத்தில் நான்கு கைகளுடன் சங்கு, சக்கரம் ஏந்தி காட்சி தருகிறாள். பாதாள பொன்னியம்மனின் கருவறை எதிரே நூற்றுக்கால் மண்டபம் உள்ளது. இந்த மண்டபத் தூணில் புடைப்பு சிற்பங்களாக கணபதி, முருகன், சிவன், பார்வதி, தட்சிணாமூர்த்தி, நடராஜர், துர்க்கை, அனுமன், விஷ்ணு, பிரம்மா, கால பைரவர் ஆகியோர் காணப்படுகின்றனர். நவராத்திரி மண்டப மேல்விதானத்தில் சக்கர வேலைப்பாடுகள் காட்சியளிக்கின்றன.

அம்மன் சந்நதி எதிரே உள்ள நவராத்திரி மண்டபத்தினுள் அண்ணன்மார் சந்நதி உள்ளது. இங்குள்ள நீளமான கருங்கல் மேடையில் புடைப்புச் சிற்பமாக  ஆண் வீரர்கள் எழுவரின் சிலைகள் நின்ற கோலத்தில் காட்சி தருகின்றன. இவர்கள் அனைவரும், இடது கையில் கேடயம் வைத்துள்ளனர். வலது கையில், கத்தி, கோடரி, தண்டம், அரிவாள், கதை, சூலம், வாள் முதலியவற்றை வைத்துள்ளனர். இவர்கள் அம்மனின் படைவீரர்கள் என்றும், பரிவார தேவதைகள் என்றும் அழைக்கப்படுகிறார்கள்.

சென்னையில் கீழ்ப்பாக்கம் பகுதியில் அமைந்திருக்கும் இக்கோயிலுக்கு கோயம்பேடு, பாரிமுனை, எழும்பூர் பகுதிகளிலிருந்து பேருந்து வசதி உள்ளது.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!