gowri panchangam Sprituality

அருள்மிகு ஆயிரங்காளியம்மன் திருக்கோவில்

 

தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் அன்னை பராசக்தி நீக்கமற நிறைந்து கோவில் கொண்டு அருளாட்சி புரிந்து வருகிறாள். அவளின் பேராற்றல் மற்றும் அற்புதங்களை சொல்ல வார்த்தைகள் இல்லை. ஒவ்வொரு ஊரிலும் கனவிலும் எண்ண இயலாத அதிசயங்களை செய்து வருகிறாள். அந்த வகையிலே பாண்டிசேரி மாநிலம் காரைக்காலிற்கு அருகில் திருமலைராயன் பட்டினத்தில் அமைந்த சக்தி திருத்தலமே “ஆயிரங்காளியம்மன்” கோவில் ஆகும்.




ஆயிரங்காளி தல வரலாறு :

அன்னை ஆயிரங்காளி திருமலைராயன்பட்டினதிற்கு தானாக வந்தவள் ஆவாள். முற்காலத்தில் வடக்கே காளி வழிபாடு மேலோங்கி இருந்த காலமது. அங்கே இருந்த மன்னன் ஒருவன் அன்னை காளியை திருவுருவம் வைத்து பூசித்து வந்தான். அன்னைக்கு எதை படைத்தாலும் ஆயிரம் என்ற எண்ணிக்கையில் படைத்து பூசித்தான்.

அவனது பகுதியில் மயங்கிய அன்னை அவனை ஆட்கொண்டாள். நாட்டின் பஞ்சம் நீங்க வரமளித்தாள். மேலும் தான் இங்கே இருந்தது போதும் தன்னை பெட்டியிலே வைத்து கடலில் போட்டுவிடும் படி ஆணையிட்டாள். பின் அவன் முன் ஒரு பேழை தோன்றியது அதில் அன்னையை வைத்து வங்க கடலில் விட்டுவிட்டு மன்னன் அன்னையின் பதம் அடைந்தான்.




பேழையும் மூழ்காமல் மிதந்து கொண்டே யார் கையிலும் அகப்படாமல் திருமலைராயன் பட்டினம் வந்தது. அருகில் இருந்த மீனவர்கள் பெட்டியை எடுக்க முயற்சித்தும் எடுக்க முடியவில்லை. அன்று இரவு செங்குந்தர் மரபை சார்ந்த சிவனேயரின் கனவில் தோன்றி, தான் பெட்டியில் மிதந்து வந்திருப்பதாகவும். தன்னை எடுத்து ஒரு இடத்தில் நிலையாக வைத்து பூசிக்குமாறும் அன்னை கூறினாள்.

விடிந்ததும் அவரும் ஊராரிடம் நடந்தவற்றை கூறி மேள தாள வாத்தியங்களோடு கடற்கரைக்கு அனைவருடனும் சென்றார். அவர் வந்தவுடன் யாருக்கும் அகப்படாத பெட்டி வேகமாக அவருக்கு அருகில் வர அவரும் பேழையை அணைத்து தூக்கி வந்தார். பின் அவ்வூரில் இருந்த மடத்தில் பேழையை வைத்து திறந்தனர். அதில் அன்னையின் அற்புதமான திருவுருவமும் ஒரு ஓலையும் இருந்தது.

ஓலையில்

“அருள்மிகு ஆயிரங் காளி அம்மன் இருளினை நீக்கி இன்பம் அளிப்பவள்,

அன்னைக்குப் படைக்கும் பொருள்கள் யாவும் எண்ணில் ஆயிரம் ஆதல் வேண்டும்

ஆண்டுகள் ஐந்திற் கொருமுறை திண்ணமாய்ப் பூசித்துத் திருவெலாம் பெறுகவே!” என்று இருந்தது.

அன்றிலிருந்து ஐந்து ஆண்டிற்கு ஒரு முறை மட்டுமே அன்னை வெளியே வந்து காட்சி தருகிறாள். அவளுக்கு எதை படைத்தாலும் ஆயிரம் எண்ணிக்கையில் தான் படைக்கப்படுகிறது. எனவே தான் ஆயிரங்காளி எனப் பெயர் கொண்டாள்.




அதிசய நிகழ்வுகள்

ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை வெளியே வரும் நேரத்தில் பேழையில் இருந்து கொலுசு சத்தம் கலீர் என்று கேட்கும். அதன் பின்பே பேழை திறக்கப்படும். ஐந்தாண்டுகளாக பெட்டியினுள் சாற்றப்பட்ட மாலை, எழுமிச்சை, மஞ்சள் எதுவும் வாடாமல் அன்று அணிவித்தது போலவே புதிதாக இருக்கும்.

கேட்ட வரம் தருவாள் ஆயிரம் காளி!

அன்னையை வெளியே எடுக்கும் நாள் இரவு வெளியே எடுத்து அலங்கரிக்கபடுவாள். பின் அடுத்த நாள் காலை முதல் தரிசனம் தருவாள். அடுத்த நாள் விடிவதற்குள் பெட்டிக்குள் வைக்கப்படுகிறாள். இவளிடம் என்ன வரம் கேட்டாளும் வாரி வழங்குகிறாள். தங்களால் இயன்றதை ஆயிரம் எண்ணிக்கையில் காணிக்கை ஆக்குகின்றனர். தனது பக்தர்கள் துயர் தீர்க்கும் கற்பக விருட்சமாக அன்னை ஆயிரங்காளி கோவில் கொண்டுள்ளாள்.

அனைவரும் திருமலைராயன் பட்டினம் சென்று அன்னையை தரிசித்து அவள் அருள் பெறுவோம்.




What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!