gowri panchangam Sprituality Uncategorized

அருள் தந்து காக்கும் அன்னை சேலம் கோட்டை மாரியம்மன்

சேலம் மாநகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள மாங்கனி நகரத்தில் கோயில் கொண்டுள்ளாள் கோட்டை மாரியம்மன். சேலத்திலுள்ள எட்டு மாரியம்மன்களுக்கும் தலைமையாக விளங்குவதால் கோட்டை பெரிய மாரியம்மன் என்று பெயர் வந்துள்ளது.

இக்கோட்டையில் அமைந்த இக்கோவில் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. கோட்டைக்கு காவல் தெய்வமாக இருந்ததால் கோட்டை பிறக்கையிலே கூடப்பிறந்த பெரிய மாரி, சேலம் பிறக்கையிலே சேர்ந்து பிறந்த பெரிய மாரி என்ற சின்னப்பகவுண்டரின் பாடல்கள் மூலம் தெரியவருகிறது.




தல வரலாறு;

சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு சேர நாட்டைச் சேர்ந்த சிற்றரசர்கள் ஆண்ட காலத்தில் இப்போது கோட்டை என்று சொல்லும் இடத்தில் ஒரு கோட்டை அமைத்து ஆட்சி செய்தபோது இந்த மாரியம்மன் கோவிலையும், ஒரு பெருமாள் கோவிலையும் அமைத்தார்கள். இந்த அம்மன் கோவிலை கோட்டை வீரர்கள் எல்லாம் ஒரு காவல் தெய்வமாக வணங்கி வழிபட்டு வந்தார்கள். கோட்டையில் இருந்த வீரர்களுக்கு மாரி காவல் தெய்வமாக இருந்திருக்கிறாள். ஆனால் இன்று அந்த கோட்டை இல்லை. கோட்டை இருந்ததற்கு அடையாளமாக கோட்டைமேடு என்ற பகுதி மட்டுமே இன்று உள்ளது.




கோவில் அமைப்பு:

சேலத்தில் அமைந்துள்ள கோட்டை மாரியம்மன் அம்மாப்பேட்டை மாரியம்மன், செவ்வாய்ப்பேட்டை மாரியம்மன், சஞ்சீவிராயன்பேட்டை மாரியம்மன், சின்னக் கடை வீதி சின்னமாரியம்மன், குகை மாரியம்மன், அன்னதானப்பட்டி மாரியம்மன், பொன்னம்மாப்பேட்டை, மாரியம்மன் ஆகிய 8 மாரியம்மன்களில் கோட்டை மாரியம்மன் தான் பெரியவள். சக்தி வாய்ந்தவள். இதனாலேயே கோட்டை பெரிய மாரியம்மன் என்று பக்தர்களால் அழைக்கப்படுகின்றது. சேலத்தில் உள்ள 8 மாரியம்மன்களுக்கும் தலைமையாக விளங்குவதால் எட்டுப்பேட்டைகளை கட்டியாளும் அன்னை கோட்டை மாரி என்ற சிறப்புப் பெயரும் உண்டு. சேலத்தில் உள்ள 8 மாரியம்மன்களுக்கும் தலைமையானவள் என்பதற்கு மற்றொரு சான்றையும் சொல்லலாம்.

இங்கு மூலவராக காட்சியளிக்கும் மாரியம்மன் நான்கு கரங்களுடன் அழகு திருமேனியுடன் கம்பீரமாக விளங்குகிறார். வலது மேற்கரத்தில் நாகபாசமும், உடுக்கையும் ஏந்தி, இடது மேற்கரத்தில் அங்குசமும் அமுத சின்னமும் ஏந்தியவளாய் காட்சியளிக்கிறாள். இடது கீழ்கரத்தில் கபாலம் காணப்படுகிறது.

அன்னை வலது காலைத் தொங்கவிட்டுக் கொண்டு, இடது காலை மேல் யோகாசனமாக மடித்து வைத்துக்கொண்டு ஈசான திசை நோக்கி அமைதி வடிவமாய், ஆனந்தம் பொங்கும் முகத்தாளாய் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருளாட்சி செய்து வருகின்றாள்.




மேலும் இத்திருக்கோயில் முன் மண்டபம், வெளிமண்டபம், பலிபீடம், வெள்ளிபிரகார மண்டபம், கிளி மண்டபம், வசந்த மண்டபம், கருங்கல்லால் அமைக்கப்பட்ட ராஜகோபுரம் கம்பீரமாக காட்சியளிக்கிறது.

மேலும் இக்கோவிலில் அம்மை நோய் கண்ட பக்தர்கள் அம்மனை வேண்டி புனித நீர் வாங்கி தம் மீது தெளித்து நோய் நீங்க பெறுவதாக நம்புகிறார்கள்.மேலும் கண் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கண்ணடக்கம் செய்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செய்வதும் வழக்கமாக உள்ளது. மேலும் இக்கோவில் திருவிழாவின்போது பூச்சாடுதல் விழா நடைப்பெறும் அவ்விழாவில் இக்கோவிலிருந்து பூக்களை எடுத்துச் சென்று சேலத்தில் ஏனைய ஏழு மாரியம்மன் கோவில்களுக்கு பூச்சாட்டி அபிஷேகத்தை பக்தர்கள் செய்து வருகிறார்கள்.

அமைவிடம்:

சேலம் ஜங்சன் ரெயில் நிலையத்தில் இருந்து 6 கிலோ மீட்டர் தொலைவிலும், டவுன் ரெயில் நிலையத்தில் இருந்து 1 கிலோ மீட்டர் தொலைவிலும் இக்கோவில் அமைந்துள்ளது.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!