தோட்டக் கலை

வீட்டிலேயே வளர்க்கலாம் ‘சுவீட் கார்ன்’

காலனி ஆதிக்க காலத்தில் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து காய்கறிகள், பழங்கள் போன்றவை மற்ற பகுதிகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்டு அங்கு அவை பூர்வீக பயிர்களை காட்டிலும் மிகுந்த விளைச்சல் கொடுக்கக்  கூடிய பயிர்களாக மாறி இருக்கின்றன. அப்படிப்பட்ட ஒரு அற்புத பயிர்தான் சோளம். சோளம் வட அமெரிக்காவில் இருக்கின்ற மெக்சிகோ நாட்டை பூர்விகமாகக் கொண்ட ஒரு பயிர் வகையாகும். அந்த நாட்டில் வாழ்ந்த பழங்குடியினர் சோளத்தை உணவிற்கு மட்டுமல்லாமல் பல மருத்துவ சிகிச்சைக்கும் பயன்படுத்தினர். அப்படிப்பட்ட சோளத்தை நம் வீட்டில் எப்படி வளர்ப்பது என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

விதை விதைத்தல்

ஸ்வீட் கார்ன் விதைகளை ஒரு இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். எறும்பு அரிப்பில் இருந்து தடுப்பதற்காக ட்ரைகோடெர்மா விரிடி மற்றும் சூடோமோனஸ் உயிரி உரத்தில் தோய்த்து எடுத்து நிழலான பகுதியில் உலர்த்த வேண்டும். இதன் மூலம் விதையின் முளைப்புத் திறனும் அதிகரிக்கும். எலிகளின் நடமாட்டம் இருக்கும் பட்சத்தில், விதைகளை டிரேவில் நட்டு நாற்று வந்தபிறகு, நடவு செய்யலாம்.

மண் கலவை

வீட்டில் வீணாகும் காய், கனி கழிவுகளைக் கொண்டு உரம் தயாரித்து, அத்துடன் வேப்பம் புண்ணாக்கு, மக்கிய சாண எருவும் கலந்து மண் கலவையினைத் தயாரித்துப் பயன்படுத்தினால், செடி ஆரோக்கியமாக வளரும். சூரிய வெளிச்சமும், காற்றோட்டமும் நன்றாகக் கிடைக்கக்கூடிய பகுதியில் ஒரு அடி இடைவெளி விட்டு விதை நடவு செய்தால், மூன்றாவது வாரத்தில் ஒரு அடி உயரத்துக்கு செடி வளர்ந்துவிடும்.




நிலத்தில் செடி வளர்ப்பதற்கான சூழல் இல்லாதவர்கள் ‘க்ரோ பேக்’ அல்லது தொட்டிகளிலும் வளர்க்கலாம். செடி வளர, வளர வேர்ப்பகுதி மேலெழுந்து கொண்டே வரும் என்பதால், அவ்வப்போது செடிக்குத் தேவையான மண்ணை நிரப்பிக்கொண்டே வர வேண்டும். அவ்வாறு செய்வதன் மூலம், காற்றின் அசைவால் செடி சாய்ந்து விடுவதையும் தடுக்கலாம்.

மகரந்தச் சேர்க்கை

செடி நட்ட 2 மாதங்களில் கதிர் விடும். அப்போது, ஆண் பூவில் இருக்கும் துகள்கள், பெண் பூ மீது விழுந்து மகரந்தச் சேர்க்கை நடைபெற வேண்டும். காற்றின் அசைவினால் இயல்பாக மகரந்தச் சேர்க்கை நடைபெறாத சமயத்தில், செடியினை அசைத்து செயற்கையாக மகரந்தச் சேர்க்கையினை நடைபெறச் செய்ய வேண்டும்.

சோளக்கதிர் பறிப்பு

செடி நட்டு 80 முதல் 90 நாட்களில் சோளக் கதிரினைப் பறிக்கலாம். நாட்டுச் சோளம் என்றால், ஒரு செடிக்கு மூன்று முதல் நான்கு கதிர்கள் காய்க்கும். ஆனால், சுவீட் கார்னில் ஒரு செடிக்கு ஒரு கதிர் தான் கிடைக்கும். இயற்கை உரங்கள் மட்டுமே இட்டு வளர்ப்பதால், கடைகளில் வாங்குவதைவிட சோளம் சற்று சிறியதாக இருக்கும். ஆனால், சுவை அதிகமாக இருக்கும்.

 




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!