gowri panchangam Sprituality

காக்க காக்க கனகவேல் காக்க-23 (வல்லக்கோட்டை சுப்பிரமணிய சுவாமி கோயில்)

வல்லக்கோட்டை ஸ்ரீ சுப்பிரமணிய ஸ்வாமி கோயிலுக்கு வந்து வழிபட்டால் இழந்த செல்வங்களை மீண்டும் பெறலாம்.

வல்லக்கோட்டை அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் இழந்த செல்வங்களைத் திரும்பப் பெற வேண்டுமானால் இந்த அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வாருங்கள்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் இருந்து செங்கல்பட்டு செல்லும் சாலையில் 12 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது வல்லக்கோட்டை சுப்பிரமணிய சுவாமி கோயில். இது பிரபலமான முருகப் பெருமானின் திருத்தலங்களில் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. 1,200 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோயிலில் முருகப் பெருமான் (மூலவர்) 7 அடி உயரம் கொண்டவராக கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். இந்தியாவில் உள்ள முருகப் பெருமான் தலங்களில் உள்ள சிலைகளில், இத்தல மூலவர் விக்கிரகமே உயரமானதாகும்.




அருணகிரிநாதர் இத்தல முருகப் பெருமான் மீது 7 திருப்புகழ் பாடல்கள் புனைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. கோட்டை நகர், கோட்டையாம் பட்டி, கோடை எனும் பட்டி, கோட்டை என்று பலவாறு வல்லக்கோட்டையைப் போற்றி புகழ்ந்துள்ளார். இருப்பினும் வல்லக்கோட்டை என்ற பெயரே தற்போது நிலைத்துள்ளது.

தல வரலாறு

கலியுகத்தின் கண்கண்ட தெய்வம் முருகப்பெருமான். சுக்குக்கு மிஞ்சிய மருந்தில்லை சுப்பிரமணியனுக்கு மிஞ்சிய தெய்வமுமில்லை, வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை, குகனுண்டு குறைவில்லை, என்றெல்லாம் பலவாறு முருகப்பெருமானைப் போற்றுவார்கள்.

வாழ்விற்கு வேண்டிய அனைத்து செல்வங்களையும் வழங்குபவர் முருகப்பெருமான். எத்தனையோ ஊர்களில் அவருக்குத் திருக்கோயில்கள் உள்ளன. இந்த வல்லக்கோட்டையில் வள்ளி மற்றும் தெய்வானையுடன் திருக்காட்சி தருகிறார் சுப்பிரமணிய சுவாமி.

இவரின் உயரம் ஏழு அடிகள். இந்தியாவில் இருக்கும் சுப்பிரமணிய பெருமாள் திருவடிகளில் உயரமானது இதுதான். 1,200 ஆண்டுகள் பழமை வாய்ந்தது இந்த திருக்கோயில். துர்வாச முனிவரின் ஆலோசனையின்படி தனது ராஜ்ஜியத்தைத் திரும்பப் பெறுவதற்காகப் பகீரதன் இக்கோயிலைக் கட்டியதாகப் புராணம் கூறுகிறது.




வல்லான் என்ற அரக்கன் தேவர்களைச் சித்திரவதை செய்தார். முருகப்பெருமான் அந்த அரக்கனை வீழ்த்தி இவ்விடத்தில் அமைதியை நிலைநாட்டினார். வல்லான் என்ற அசுரன் பெயரிலேயே இந்த ஊருக்கு வல்லக்கோட்டை என்கிற பெயர் உள்ளது.

சுப்பிரமணியப் பெருமானை வழிபட வேண்டும் என்பதற்காக இந்திரன் தனது வஜ்ராயுதத்தால் உண்டாக்கிய வஜ்ர தீர்த்தம் எனும் தொட்டி இக்கோயிலில் உள்ளது. இக்கோயிலில் ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ அம்பாள், உற்சவர் முருகன் சன்னதிகள் உள்ளன.

ஸ்ரீ காமாட்சி திருவடிவம் மற்றும் ஸ்ரீ ஆஞ்சநேயரைத் தழுவிய ஸ்ரீராமன் திருவடிவம் போன்ற சிற்பங்கள் அர்த்த மண்டபத் தூண்களில் உள்ளன. பகீரதன் என்ற மன்னனைக் காண ஒருமுறை நாரத முனிவர் வந்திருந்தார். மன்னன் என்கிற ஆணவத்தினால் அவரை அவமதித்தார் பகீரதன். கோபம் கொண்ட நாரதர் அருகிலிருந்த காட்டிற்குச் சென்றார்.

அங்கே கோரன் என அரக்கனை சந்தித்தார் நாரதர். அந்த அரக்கன் பல கோயில்களுக்கு திக்விஜயம் செய்திருந்தார். பின்னர் நாரதர் அவரிடம், தன்னை யாரும் வெல்ல முடியாது என்கிற ஆணவத்தில் பகீரதன் இருக்கிறார். அவரை வெற்றி கொண்டால் தான் உன்னுடைய திக்விஜயம் முழுமை பெறும் என்று கூறினார்.

அதைக் கேட்ட கோரன், பகீரதன் மீது போர் தொடுத்து அவனைத் தோற்கடித்தார். தன்னுடைய ஆணவத்தால் நாட்டையும், செல்வங்களையும் இழந்த பகீரதன் காட்டிற்குச் சென்றார். அங்கே அவர் வருகைக்காகக் காத்திருந்த நாரதர் காலில் விழுந்து தன்னை மன்னிக்கும்படி மன்றாடினார்.

அவருக்கு மனம் இறங்கிய நாரதர், துர்வாச முனிவரிடம் சென்று முறையிடு உனக்கு நல்ல வழி பிறக்கும் என்று கூறி ஆசி வழங்கி அவரை அனுப்பினார். அதன்படி துர்வாச முனிவர் கண்டு முறையிட்டார் பகீரதன். முனிவர் அவருக்கு சில உபதேசங்களைச் செய்தார்.

அதன்படி வெள்ளிக்கிழமைகளில் விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபட்டு அருள் பெற்றார் பகீரதன். இழந்த செல்வங்களைப் பகீரதன் மீண்டும் பெறுவதற்குத் திருவருள் புரிந்த வல்லக்கோட்டை ஸ்ரீ சுப்பிரமணிய ஸ்வாமி கோயிலுக்கு வந்து வழிபட்டால் இழந்த செல்வங்களை மீண்டும் பெறலாம் என்பது ஐதீகம். அது மட்டுமல்லாது அனைத்து செல்வங்களைப் பெறுவதற்காக இந்த கோயிலுக்கு வரலாம்.

திருவிழாக்கள்

ஒவ்வொரு மாதத்திலும் பரணி, கார்த்திகை நட்சத்திர நாட்கள், தைப்பூசம், கார்த்திகை தீபம், வைகாசி விசாகம், கந்த சஷ்டி, சஷ்டி தினங்களில் முருகப் பெருமானுக்கு இங்கே சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். அன்றைய தினங்களில் சுப்பிரமணிய சுவாமி, வள்ளி – தெய்வானையுடன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா காண்பார்.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!