gowri panchangam Sprituality

காக்க காக்க கனகவேல் காக்க- 10 வயலூர் சுப்பிரமணிய சுவாமி கோயில்

திருச்சி மாநகரில் இருந்து 11 கி.மீ தொலைவில் உள்ள வயலூர் சுப்பிரமணிய சுவாமி கோயில், கௌமார வழிபாட்டுத் தலங்களுள் சிறப்பு பெற்றதாக விளங்குகிறது. அருணகிரியார் போற்றிய தலமாக விளங்கும் இத்தலத்தில், முருகப் பெருமானே தன் வேலால் குத்தி உண்டாக்கிய சக்தி தீர்த்தம் உள்ளது. சிவபெருமானை முருகப் பெருமான் தெய்வானை, வள்ளியுடன் பூஜித்த தலம் என்பது குறிப்பிடத்தக்கது.

தந்தையையும், தாயையும் முன்னிறுத்தி, தினமும் தாய் தந்தையர் காலில் பணிந்து பூஜைகள் செய்து அருள்பெற்ற பாலகராய் வயலூரில் அருள்பாலிக்கும் முருகப் பெருமான் ‘அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்’ என்பதை அனைவருக்கும் வலியுறுத்துகிறார்.

தல வரலாறு

ஒருசமயம் சோழ மன்னர் ஒருவர் வயலூர் பகுதியில் வேட்டையாடிக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு தாகம் எடுத்ததால், பல இடங்களில் சுற்றி அலைந்தார். அப்போது ஓர் இடத்துக்கு வரும்போது மூன்று கிளைகளாக வளர்ந்த கரும்பைக் காண்கிறார். தாகம் தீர்க்க வேண்டி அக்கரும்பை ஒடித்தபோது அதில் இருந்து குருதி கசிந்தது. அதிர்ச்சி அடைந்த அரசர், அக்கரும்பு விளைந்த இடத்தைத் தோண்டிப் பார்த்தபோது அதில் சிவலிங்கம் இருந்ததாகவும், பின்னர் அவரே அந்த இடத்தில் கோயில் எழுப்பியதாகவும் கூறப்படுகிறது. ‘வயலிடை கண்ணுற்ற மூலவர்‘ என்பதால் வயலூர் என்று இத்தலம் அழைக்கப்படுகிறது.




கோயில் சிறப்புகள்

வயலூர் தலம் சிவபெருமான் கோயிலாக இருந்தாலும் இங்கே முருகப் பெருமானுக்கு தனி முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. மூலஸ்தானத்தில் முருகப் பெருமானின் வாகனம் ‘தேவமயில்’ வடக்கு பக்கம் பார்த்து உள்ளது. பொதுவாக ஏனைய தலங்களில் வடக்கு பக்கம் பார்த்து இருக்கும் ஆதிநாயகி இத்தலத்தில் தென்முகம் பார்த்து இருப்பது தனிச்சிறப்பு.

ஏனைய தலங்களில் தாய் தந்தையரை, தனியாக இருந்தே முருகப் பெருமான் வழிபடுவார். இத்தலத்தில் வள்ளியுடன் இணைந்து பூஜைகள் செய்வார். நடராஜர் சூரத்தாண்டவ மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

முருகப் பெருமான் விரும்பிய தலங்களுள் ஒன்றாக வயலூர் விளங்குவதால், திருப்புகழின் பெருமையில் வயலூர் பிரதான இடத்தை வகிக்கிறது. அருணகிரிநாதருக்கு முருகப் பெருமான் திருமணக் கோல குமாரராகக் காட்சி அருளியதால் இத்தலத்தில் வழிபட்டால் தடைபட்ட திருமணங்கள் கைகூடும் என்பது ஐதீகம்.




சிவபெருமான் சந்நிதிக்குப் பின்புறம் சுப்பிரமணியர், வள்ளி, தெய்வானையுடன் தனி சந்நிதியில் அருள்பாலிக்கிறார். கந்த சஷ்டியின்போது முருகப் பெருமான் – தெய்வயானை, பங்குனி உத்திர திருவிழாவில் முருகப் பெருமான் – வள்ளி திருக்கல்யாணம் நடைபெறும். வள்ளி திருமணத்தின்போது முருகப் பெருமானுக்கு வேடன், கிழவன் போல் அலங்காரம் செய்தும், யானையால் வள்ளி விரட்டப்படுவது போலவும் பாவனை செய்யப்படும். தைப்பூச தினத்தில் அருகில் உள்ள 4 கோயில் மூர்த்திகளுடன் முருகப் பெருமான் சேர்ந்து பஞ்ச மூர்த்திகளாக அருள்பாலிப்பது வழக்கம்.

நேர்த்திக் கடன்

கோயிலின் வெளியே கல்லால மரத்தடியில் வேல் வடிவில் உள்ள தோற்றத்தை இடும்பன் கோயில் என்றும், கிராம தேவதைக்கோவில் என்றும் சொல்கிறார்கள். முருகன் கை வேலின் வடிவமாகிய தேரடியான் கோயிலும் வந்தோர்க்கு வளம் தரும் அம்சமாக காட்சியளிக்கிறது.

வயலூர் முருகனை வழிபட்டு இறவாப்புகழை பெற்றார் அருணகிரிநாதர் என்ற ஒன்று போதும் இந்த தலத்தின் பெருமைக்கு சான்று. பழனி, திருச்செந்தூருக்கு வேண்டுதல் வைத்தவர்கள் இந்த கோயிலில் வந்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தலாம். ஆனால், வயலூரானுக்கு வைத்த வேண்டுதலை வேறு கோயிலில் செலுத்த முடியாது அசலோடு வசூலித்துவிடுவான் இந்த வடிவேலன் என்பது இந்த ஊர் மக்களின் சொல்லாக இருக்கிறது.

சர்ப்ப தோஷம் உள்ளவர்கள், இத்தல தீர்த்தத்தில் செவ்வாய்க்கிழமை நீராடி, சுவாமி தரிசனம் செய்தால் தோஷம் நீங்கும் என்பது ஐதீகம். நோய் நீங்க, துன்பம் நீங்க, குழந்தை வரம் பெற, ஆயுள் பலம் பெருக, கல்வி, அறிவு, செல்வம், விவசாய செழிப்பு ஏற்பட இங்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.




முடி இறக்கி காது குத்துதல், காவடி, பால்குடம் எடுத்தல், சஷ்டி விரதம் இருத்தல், அங்கப்பிரதட்சணம் (ஆண்கள்), அடிப்பிரதட்சணம் மற்றும் கும்பிடு தண்டம் (பெண்கள்) ஆகிய நேர்த்திக் கடன் செலுத்தி பக்தர்கள் வழிபடுவது வழக்கம். இங்கு சண்முக வேள்வி, சண்முகார்ச்சனை உள்ளிட்டவையும் செய்வதுண்டு. கார்த்திகை விரதம் இருத்தல், அன்னதானம் செய்தும் வழிபாடுகள் நடைபெறுகின்றன.

இத்தலத்தில் குழந்தையை தத்துக் கொடுக்கும் பரிகாரம் தனிச்சிறப்பு வாய்ந்ததாகக் கூறப்படுகிறது. குழந்தைக்கு அடிக்கடி உடல்நலம் இல்லை, சரியாக சாப்பிடவில்லை, இரவில் பயந்து நடுங்கி அழுதவண்ணம் உள்ளது போன்ற பிரச்சினைகளுக்கு பக்தர்கள் இங்கு வந்து முருகப் பெருமானிடம், “இனி இந்தக் குழந்தை உன் குழந்தை” எனக் கூறி தத்துக் கொடுத்து பரிகாரம் செய்கின்றனர். அவ்வாறு பரிகாரம் செய்து குழந்தையை அழைத்துச் சென்றால், இனி அவர்கள் ஆரோக்கியமாக இருப்பர் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

திருவிழாக்கள்

வைகாசி விசாகத் திருவிழா (12 நாள்), கந்த சஷ்டி சூரசம்ஹாரத் திருவிழா (7 நாள்), பங்குனி உத்திரத் திருவிழா (4 நாள்), தைப்பூசத் திருவிழா (3 நாள்) இத்தலத்தில் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. வைகாசியில் நடைபெறும் சட்டத் தேர்விழாவுக்கு எண்ணற்ற பக்தர்கள் இங்கு வருவதுண்டு.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!