Cinema Entertainment mayanginen mannan inke விமர்சனம்

இசையமைப்பாளர் டி ராஜேந்தர்

1980 களில் இசையில் கோலோச்சிக்கொண்டு இருந்த இளையராஜா  அல்லாமல் தங்கள் திறமையைக் காட்டிக்கொண்டு இருந்த சில இசையமைப்பாளர்களில் முக்கியமானவர் டி ராஜேந்தர்.

இயக்குநராக ஏராளமான வெற்றிப்படங்களைக் கொடுத்து இருந்தாலும், இசையிலும் சாதித்தவர் ராஜேந்தர். இவரைப் போல இரண்டிலும் சாதித்தவர் திரையுலகில் எவரும் இருப்பதாகத் தோன்றவில்லை.

இவர் பல திறமைகளை ஒருங்கே கொண்ட அஷ்டாவதானி.

டி ராஜேந்தரை இசையமைப்பாளராகவே அதிக மக்கள் ரசித்தவர்கள் உண்டு. குறிப்பாக, இவருடைய பல மெலடி பாடல்களின், பாடல் வரிகளுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உண்டு.

இன்னமும் ஒரு YouTube காணொளியில் இளையராஜா ஹிட்ஸில், இளையராஜா பாடல் என்று நினைத்து ராஜேந்தர் பாடலை முதல் பாடலாக வைத்துள்ளார்கள்.

அந்த அளவுக்கு அப்போது சில பாடல்கள் இளையராஜாவா ராஜேந்தரா என்று குழம்பும் அளவுக்குப் பல மெலோடி பாடல்களைக் கொடுத்து அசத்தியுள்ளார்.




ஒரு தலை ராகம்:

இவரது பெரும்பாலான படங்களின் தலைப்பு 3 வார்த்தைகள், 9 எழுத்தில் இருக்கும்.

முதல்படமான ஒரு தலை ராகத்தில் கதாசிரியராகப் பணி புரிந்தார், இயக்குனராக அல்ல ஆனால், இசையில் பலரும் ரசித்த பாடல்களைக் கொடுத்தார்.

படத்தையும் இவர் தான் இயக்கினார் ஆனால், வேறு இயக்குநரின் (E. M. Ibrahim தயாரிப்பாளர்) பெயர் வைக்கப்பட்டது.

இயக்குநர் பெயரில் தன் பெயரைப் போட வேண்டும் என்ற தயாரிப்பாளரின் நிபந்தனையுடன் ராஜேந்தருக்கு இப்பட வாய்ப்புக்கொடுக்கப்பட்டது.கிடைத்த வாய்ப்பைத் தவறவிடக் கூடாது என்பதற்காக ராஜேந்தர் ஒப்புக்கொண்டு அதே போல இயக்குநரின் பெயரில் தயாரிப்பாளரின் பெயர் சேர்க்கப்பட்டது.

இயக்கம் மட்டுமல்லாமல் பின்னணி இசைக்கு A. A. Raj என்பவர் பெயர் குறிப்பிடப்பட்டது, இதனால் இத்திரைப்படத்தைத் திரும்பப் பார்க்க மாட்டேன் என்று ராஜேந்தர் கூறியதாகச் செய்தியுண்டு.

தயாரிப்பாளர் கேட்ட தொகைக்கு விநியோகஸ்தர்கள் ஒப்புக்கொள்ளாததால், தயாரிப்பாளரே நேரடியாகப் படத்தை வெளியிட்டார்.ஆனால், துவக்கத்தில் சுமாராகச் சென்று பின்னர் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று 365 நாட்கள் படம் ஓடியது.

நம்பவே முடியாத இன்னோரு செய்தி, ஒரு தலை ராகம் 2 மாதங்களில் எடுத்து முடிக்கப்பட்டது. இதன் பிறகு ராஜேந்தர் திரை வாழ்க்கை ஏறுமுகம் ஆகி விட்டது.

ஒரு தலை ராகம் படத்தில் வாசமில்லா மலரிது, இது குழந்தை பாடும் தாலாட்டு, என் கதை முடியும் நேரமிது, கடவுள் வாழும் கோவிலிலே, கூடையில கருவாடு, நான் ஒரு ராசி இல்லா ராஜா, மன்மதன் ரட்சிக்கனும் போன்ற பாடல்கள் சூப்பர் ஹிட்.

தமிழ்நாட்டையே கலக்கிய காலமாக இருந்தது.




TM சௌந்தரராஜன்:

சூப்பர் ஹிட் பாடல்கள் என்றாலும் இதில் ஒரு பெரும் சோகமும் உள்ளது.

‘என் கதை முடியும் நேரமிது’ பாடலை TM சௌந்தராஜன் அவர்களைப் பாட வைத்த போது, ராகமும் வரிகளும் எதிர்மறையாக உள்ளதால், வேண்டாம் என்று மறுத்துள்ளார்.

ஆனால், ‘ இது படம் தானே! பாடலில் என்ன உள்ளது! பாடுங்கள் ஒன்றும் பிரச்சனையில்லை ‘  என்று ராஜேந்தர் கூறியுள்ளார்.

அதோடு ‘நானொரு ராசியில்லா ராஜா’ பாடலையும் பாட வைத்தார்.

TM சௌந்தரராஜன் அவர்கள் பயப்பட்டது போல அவரது இசை உச்சம் இப்படத்தோடு முடிந்து விட்டது. இதன் பிறகு வெகு சில பாடல்களே பாடினார், அதிலும் பல ராஜேந்தர் இயக்கிய படத்தின் இசையமைத்த பாடல்கள்.

இதைப் பற்றி TM சௌந்தராஜன் ஒரு பேட்டியில் கூறி வருத்தப்பட்டார். எனவே எதிர்மறை எண்ணங்கள்,  பேச்சுகள் மிக ஆபத்தானது.விளையாட்டுக்குக் கூட இதுபோலக் கூறக் கூடாது. நடிகர் தங்கவேலு அவர்களுக்குக் கூட இது போன்ற ஒரு பிரச்சனையானதை குறிப்பிட்டு இருந்தார்.




சூப்பர் ஹிட் பாடல்கள்:

நூலுமில்லை வாலும் இல்லை, வைகைக்கரை காற்றே நில்லு உட்பட ஏராளமான சூப்பர் ஹிட் பாடல்கள். இன்று கேட்டாலும் ரசிக்கத்தக்கதாக இருக்கும்.

இந்த மெலடி பாடல்களைக் கேட்கும் போது தற்போதைய டி ராஜேந்தரா இசையமைத்தது?! என்று தோன்றும். ஏனென்றால், தற்காலத் தலைமுறையினருக்கு இவரை ட்ரோல் நபராகத் தான் தெரியும் என்பது சோகம்.

இசை மட்டுமல்லாது பாடல் வரிகளும் அற்புதமாக இருக்கும். தற்காலத் தலைமுறை அறியாத இன்னொரு செய்தி, ராஜேந்தர் அற்புதமான கவிஞர் என்பது.

மெலடி பாடல்களைப் போலக் கல்லூரி பாடல்களுக்கு மிகப்பிரபலமானவர் ராஜேந்தர். கல்லூரி சம்பந்தப்பட்ட இவருடைய பாடல்கள் அக்காலத்தில் மிகப்பிரபலம்.

கட்டடிப்போம் காலேஜுக்கு, மன்மதன் ரட்சிக்கனும் உட்பட ஏராளமான பாடல்கள் அப்போது இளசுகளுக்குப் பிடித்தமானவை.

சென்டிமெண்ட் படங்களுக்கு ராஜேந்தர் பிரபலமானவர் போலக் கல்லூரி படங்களுக்கும் பிரபலமானவர். எனவே, இவ்வகைப் பாடல்களும் அதிகம்.




ட்ரம்ஸ்:

ராஜேந்தர் இசையில் மெலடிக்கு பிறகு ட்ரம்ஸ் அதிகம் பயன்படுத்தப்பட்டு இருக்கும். இவ்வகை இசையில்லாத படமே இருக்காது.

எதனால் ராஜேந்தருக்கு ட்ரம்ஸ் பிடிக்கும்?! என்று தெரியவில்லை ஆனால், பெரும்பாலான பாடல்களில் இவையே முதன்மையாக இருக்கும்.உற்சாகமான பாடல்களில் ட்ரம்ஸ் இல்லாத பாடலே இருக்காது. சில நேரங்களில் எரிச்சலாகவும் இருக்கும் காரணம், இவையே பாடல் முழுக்க ஆக்கிரமித்து இருந்தது.

ட்ரம்ஸ் இசைக்குத் தகுந்த மாதிரி அரங்கம் அமைத்து இருப்பார். இவரைப் போல அரங்க வடிவமைப்பில் பிரம்மாண்டத்தை அப்போது காட்டியவர் எவருமில்லை. எதற்கு இவ்வளவு செலவு செய்துள்ளார்கள் என்று தோன்றும்.




இசை வாழ்க்கையில்  உச்சம்:

அனைவருக்குமே ஒவ்வொருவருடைய உச்சம் என்று இருக்கும். சிலருக்கு மட்டுமே பல ஆண்டுகளுக்குத் தொடரும்.அது போல அவர் படத்துக்கு இசையமைத்த பாடல்களில் 70% சூப்பர் ஹிட் பாடல்களை அவருடைய இசை வாழ்க்கையில் கொடுத்துள்ளார்.20 வருடங்கள் பலரும் ரசிக்கும் பாடல்களைக் கொடுத்துள்ளார்.

கடைசியாக ‘சொன்னால் தான் காதலா’ (2001) பாடல்கள் பிரபலமாக இருந்தது. அதன் பிறகு அவரது படங்களும் குறைந்து விட்டது, பாடல்களும் ஹிட் ஆகவில்லை.

இதுவரை (2023) இயக்கி இசையமைத்து வெளியான இறுதிப்படம் வீராசாமி (2007). இதன் பிறகு சில பாடல்களைப் பாடியுள்ளார், அவையும் சில சூப்பர் ஹிட் ஆனது.

என்றுமே மறக்க முடியாத பாடல்களைக் கொடுத்த டி ராஜேந்தர் எப்போதும் இசையுலகில் மறக்க முடியாத நபராக இருப்பார்.




What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!