Cinema Entertainment விமர்சனம்

ரிப்பப்பரி: திரை விமர்சனம்

எப்படியாவது சினிமாவில் சாதித்து விட வேண்டும் என்ற எண்ணத்துடன் ஓடிக்கொண்டு இருக்கும் வளர்ந்து வரும் நடிகர் மாஸ்டர் மகேந்திரன் நாயகனாக மீண்டும் களத்தில் குதித்துள்ள படம் ரிபப்பரி. நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஹாரர் காமெடி ஜானரில் வெளிவந்துள்ள இப்படம் ரசிகர்களை கவர்ந்ததா இல்லையா?

கோவை அருகேயுள்ள ஒரு கிராமத்தில், பாக்யராஜ் (நோபிள் கே ஜேம்ஸ்), பாண்டியராஜ் (மாரி) ஆகிய நண்பர்களுடன் சேர்ந்து யூடியூபில் சமையல் சேனல் நடத்துகிறார் சத்யராஜ் (மகேந்திரன்). தனது வீடியோக்களின் தீவிர ரசிகை ஒருவரைப் பார்க்காமலே காதலிக்கவும் செய்கிறார். இதற்கிடையில் சாதி மாறிக் காதலித்துத் திருமணம் செய்துகொள்பவர்களில், ஆண்களின் தலையை மட்டும் கொய்து போடுகிறது ஒரு பேய். சத்யராஜின் நண்பனும் அந்தப் பேய்க்குப் பலியாக, அதன் பின்னணியைத் துப்பறிந்து போலீஸுக்குச் சொல்ல வேண்டிய கட்டாயம் உருவாகிறது. சத்யராஜ், அந்த முயற்சியில் வெற்றி பெற்றாரா, பேயையும் காதலியையும் சந்தித்தாரா என்பது மீதிக் கதை.




கிராமத்துப் பின்னணியில் ஹாரர் காமெடியாகத் தொடங்கும் படம், க்ரைம் த்ரில்லராக உருமாறி, பின்னர் சாதிக்கு எதிராகச் சமூகத்துக்குச் செய்தி சொல்லிக்கொண்டே மீண்டும் ஹாரர் காமெடியாக, தொடங்கிய இடத்துக்கு வந்து முடிகிறது. தொய்வில்லாத திரைக்கதை, விரசமற்ற நகைச்சுவை, பேய்க்கான அழுத்தமான ‘ப்ளாஷ் பேக்’, பேயைச் சித்தரித்த விதம் என இறுதிவரை பார்வையாளர்களைத் தனது கைப்பிடியிலேயே வைத்திருப்பதில் வெற்றி பெற்றிருக்கிறார் இயக்குநர் அருண் கார்த்திக்.

பேய் அருகில் இருந்தால் டமாரம் அடிக்கும் போலீஸ் நாய் ஒன்றின் ஆவி அடைக்கப்பட்ட குரங்கு பொம்மை உட்பட லாஜிக் பற்றிய கவலையின்றி ரசிக்கும்படி பலவிதங்களில் சுவாரஸ்யம் கூட்டியிருக்கிறார்கள். பேயின் தோற்றம், நடமாட்டம் ஆகியவற்றைச் சித்தரித்த வகையில் ‘ஐ-மெட்டா மீடியா’ குழுவின் பங்களிப்பு தரமான சம்பவமாகப் பரவியிருக்கிறது.

நாயகனாக நடித்திருக்கும் மாஸ்டர் மகேந்திரன் பல இடங்களில் நன்றாக காமெடி செய்திருக்கிறார். அதேபோல் காட்சிகளையும் சிறப்பாக உள்வாங்கி நடித்திருக்கிறார். ஆனால் இவையெல்லாம் அவருக்கு நன்றாக சூட் ஆகிறதா என்றால் கொஞ்சம் சந்தேகமே. இவரின் முகபாவனைகளும் நடிப்பும் ஓரளவு நன்றாக இருந்தாலும் அவரது வசன உச்சரிப்பு மற்றும் தமிழ் உச்சரிப்பு ஆகியவை இன்னமும் நன்றாக இருந்திருக்கலாம். இத்தனை வருடம் தமிழ் சினிமாவில் நடித்து கின்னஸ் சாதனை படைத்திருக்கும் மாஸ்டர் மகேந்திரனுக்கு ஏன் இன்னமும் தமிழ் உச்சரிப்பு சரியாக வரவில்லை என்பது தெரியவில்லை.




இவருடன் நடித்த இரண்டு நண்பர்களும் சிறப்பாக நடித்து காட்சிகளுக்கு வலு சேர்த்து இருக்கின்றனர். குறிப்பாக உண்மை காதலன் மற்றும் சாமியார் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகர்கள் மிகச் சிறப்பாக நடித்து காட்சிகளுக்கு வேகம் கூட்டி இருக்கின்றனர். இவர்கள் இருவரும் வரும் காட்சிகள் அனைத்துமே கலகலப்பாக அமைந்து படத்திற்கு பிளஸ் ஆக அமைந்திருக்கிறது. இவர்களின் நடிப்பும் மிகச் சிறப்பாக அமைந்திருக்கிறது. வளர்ந்து வரும் நடிகர் ஸ்ரீனி ஃபிளாஷ்பேக் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார். பேயாக வரும் இவரின் கதாபாத்திரம் ஆங்காங்கே சில இடங்களில் பயமுறுத்துகிறது. இவர் நடித்திருக்கும் ஃபிளாஷ்பேக் காட்சியில் இருந்து ஆரம்பிக்கும் திரைப்படம் அதன் பிறகு சிறப்பாக அமைந்து இறுதியில் நிறைவாக முடிந்திருக்கிறது. படத்தில் வரும் இரண்டு கதாநாயகிகளும் அவரவருக்கான வேலையை நிறைவாக செய்துவிட்டு வழக்கம்போல் சென்று இருக்கின்றனர்.




இதுவரையில் தமிழ் சினிமாவில் வந்திருக்கும் ஹாரர் நகைச்சுவைப் படங்களில் ஒரு வீடு, அல்லது பயன்பாடற்றக் கட்டிடம் ஆகியவற்றில் வசிக்கும் பேய்களிடம் சிக்கிக்கொள்ளும் கதாபாத்திரங்கள் என்கிற சட்டகத்தை நம்பாமல், சாதி ஆணவத்தைக் கைவிடாத கிராமம், அதைச் சுற்றிய பகுதிகள் என கதைக்களத்தை அமைத்துக் காட்சிகளை அமைத்திருப்பது படத்தை ரசிக்கத் தூண்டுகிறது.

இப்படத்தில் மொத்தம் ஆறிலிருந்து எட்டு பாடல்கள் வரை வருகிறது. அவை அனைத்துமே படத்திற்கு சில இடங்களில் வேகத்தடையாகவும் சில இடங்களில் பிளஸ் ஆகவும் அமைந்திருக்கிறது. அதேபோல் படத்தின் பின்னணி இசையும் பேய் காட்சிகளைக் காட்டிலும் காமெடி காட்சிகளில் சிறப்பாக அமைந்திருக்கிறது. படம் எங்கெல்லாம் தொய்வு கொடுக்க ஆரம்பிக்கிறதோ அங்கெல்லாம் தன் பின்னணி இசை மூலம் செய்திருக்கிறார் இசையமைப்பாளர் திவாகரன் தியாகராஜன். தளபதி ரத்தினம் ஒளிப்பதிவில் காமெடி காட்சிகளும் பேய் சம்பந்தப்பட்ட காட்சிகளும் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. வேகமான ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரிய பிளஸ் ஆக அமைந்திருக்கிறது. படத்தின் நீளத்தை இன்னமும் கூட குறைத்து இரண்டாம் பாதியில் காட்டிய அக்கறையை முதல் பாதி திரைக்கதையிலும் காட்டி இருந்தால் இப்படம் கண்டிப்பாக இன்னமும் கூட நன்றாக பேசப்பட்டு இருக்கும்.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!