lifestyles News

மிதிவண்டியில் நாம் மறக்க முடியாத சுவடுகள்…! சுவாரசியமான நினைவுகள்…!

வீட்டில் சைக்கிள் இருந்தாலே கெளரவமாகப் பார்க்கப்பட்டது. அதிலும் பள்ளிக்கூடத்துக்கு சைக்கிளில் பசங்க வந்தால், அவர்கள் பணக்கார வீட்டுப் பையன்கள் என்று எல்லோருமே சொல்லுவார்கள் அது ஒரு காலம். ஆனால் இப்போது “லோன்”கிடைக்கிறது என்பதற்காக கார் வாங்கிவிட்டு, பிறகுதான் கற்றுக்கொள்கிறார்கள்.

ஆனால் அப்போது சைக்கிள் ஓட்டத் தெரியாமல், அப்பாக்கள் சைக்கிள் வாங்கித் தரமாட்டார்கள். “முதல்ல சைக்கிள் ஓட்டக் கத்துக்கோ… அப்புறம் பாக்கலாம்” என்று பதில் வரும்.




சைக்கிளே இல்லாமல் நாம் எப்படி ஓட்டுவதற்குக் கற்றுக்கொள்வது ? அதற்குத்தான் வாடகை சைக்கிள் கடைகள் இருந்தன. இப்போதும் உலக அதிசயமாக ஏதோவொரு ஊரில், இருக்கின்றன வாடகை சைக்கிள் கடைகள். ஒருமணி நேரத்துக்கு அப்போதெல்லாம் ஐம்பது காசு அல்லது ஒரு ரூபாய் என்றிருக்கும். அதிலும் சின்ன சைக்கிள் கூட உண்டு. கேரியர் வைத்த சைக்கிள், கேரியர் இல்லாத சைக்கிள், டைனமோ வைத்த சைக்கிள் என்று வாடகைக்கு விடுவார்கள்.

“நோட்ல பேரும் டைமும் எழுதிக்கிட்டு எடுத்துட்டுப் போ” என்று விசிறிக்கொண்டே, தாத்தாவோ அல்லது பாட்டியம்மாவோ சொல்லுவார்கள். உடனே வாடகை சைக்கிள் எடுக்க வந்த சின்னப்பசங்க முதல் பலரும் 10.20 மணிக்கு சைக்கிள் எடுத்தால், 10.30 என்று எழுதுவார்கள். அந்த ஒரு பத்து நிமிஷம், இன்னும் கொஞ்சம் ஓட்டலாமே என்கிற ஆசையின் வெளிப்பாடுதான் அது…! அது ஒரு கனாக்காலம்.

வாடகை சைக்கிள் எடுப்பவர்கள், நியூமரலாஜிப்படி அந்த எண் கொண்ட சைக்கிளை எடுப்பார்கள். “ஏழாம் நம்பர் வண்டி வெளியே போயிருக்குப்பா…” என்று சொன்னால், அந்த சைக்கிள் வரும்வரைக்கும் காத்திருப்பார்கள்.




இன்னும் சில காமெடிகளும் நடக்கும். சைக்கிளை வாடகைக்கு எடுத்துக்கொண்டு, தெரிந்தவரிடம் அல்லது நண்பரிடம் அல்லது உறவினரிடம் பணம் கேட்கச் செல்வார்கள். பணம் கிடைக்காத நிலையில், சைக்கிளை விடவும் பணமிருக்காது., அதற்காக, நான்கைந்து நாட்கள் சைக்கிளை வைத்துக்கொண்டு சுற்றுபவர்களும் உண்டு. பிறகு பணம் வந்ததும் சைக்கிளை ஒப்படைப்பார்கள்.

“செகண்ட் ஹேண்ட்” சைக்கிள் வாங்கிவிட்டாலே பசங்களுக்கு தலைகால் புரியாது. அந்த வண்டியைத் துடைப்பது என்ன.., தேங்காய் எண்ணெய் தொட்டு பாலீஷ் போடுவதென்ன, உப்புத்தாள் கொண்டு, வீல்கள் இரண்டையும் தேய்த்து பளிச்சென்று ஆக்குவதென்ன… என எப்போதும் சைக்கிள் பற்றிய நினைவுகளுடனேயே இருப்பார்கள்.

எண்பதுகளில் “ராலே” சைக்கிள்தான் கதாநாயகன். “ராலே சைக்கிள் கமல்” என்றால் “ஹெர்குலிஸ் சைக்கிள் ரஜினி”. நடுவே, விஜயகாந்த், சத்யராஜ், மோகன் மாதிரி அட்லஸ், ஹீரோ என்றெல்லாம் சைக்கிள்கள் இருந்தன.

“ராபின்ஹூட்” என்றொரு சைக்கிள். அந்த ஹேண்டில்பாரில் இருந்து சீட் வரை உள்ள தூரம், கம்பீரம் காட்டும். பத்துமுறை பெடல் செய்தால், ஒரு கி.மீ. தூரத்தை சுலபமாகத் தொடலாம் என்று அந்த சைக்கிள் வைத்திருப்பவர்கள் பந்தா காட்டுவார்கள். ஆனால் “ராபின்ஹூட்” சைக்கிள் பாண்டிச்சேரியில்தான் கிடைக்குமாம்… என சொல்லிச் சொல்லி அலட்டிக்கொள்வார்கள்.




 

 

 

டைனமோ இல்லையெனில் போலீஸ் பிடித்த காலமும் உண்டு. அபராதம் கட்டவேண்டும். அதேபோல், சைக்கிள் செயின் அடிக்கடி கழன்றுகொள்ளும் போது, அதை மாட்டுவதற்கு முயற்சிக்கும் போது, கையெல்லாம் மையாகியிருக்கும். “இந்த சைக்கிளுக்கு ஒரு விமோசனம் வரமாட்டேங்கிது” என்று அலுப்பும் சலிப்புமாக அந்த சைக்கிளுடனே பயணிப்பார்கள்.

“ஓவராயிலிங்” சைக்கிள் மருத்துவத்துக்கு இதுதான் பெயர். அக்குவேறு ஆணிவேறு என கழற்றி ஆயிலில் ஊறப்போட்டு, அதைத் தேய்த்து, சுத்தம் செய்து, திரும்பவும் பொருத்தி, ஹேண்டில் பார் கைப்பிடி, சீட்டுக்கு முன்னே இருக்கும் பார் பகுதிக்கு ஒரு கவர், சீட்டுக்கு குஷன் கவர், இரண்டு வீல்களுக்கும் நடுவே கலர்கலராய் வளையம் என சைக்கிளுக்கு அழகுப்படுத்துவது ஒரு கலை.

இன்னும் சிலர், சின்னச்சின்ன மணிகளை, வீல் ஸ்போக்ஸ் கம்பிகளுக்குள் வரிசையாக கோர்த்துவிடுவார்கள். டைனமோவுக்கு மஞ்சள் துண்டு அல்லது மொத்தமாக மெத்மெத்தென்று ஒரு கவர் என்று மாட்டுவார்கள்.




 

 

 

இப்போது எதற்கெடுத்தாலும் பைக்கை எடுக்கிறோம். கறிவேப்பிலை வாங்கவே, டூவீலரை எடுத்துக்கொண்டுதான் செல்கிறோம். அப்போது சைக்கிளில் சிட்டாகப் பறந்து, எட்டெல்லாம் போட்டு, கெத்துக் காட்டுவோம்.

சைக்கிளின் ரெண்டுபக்கமும் பெல் வைத்து, வித்தியாச ஒலி எழுப்புவார்கள். மாற்றங்கள்…வேகங்கள்… சைக்கிளின் மதிப்பும் மரியாதையும் டூவீலர்களால் குறைந்துவிட்டன.

“என்னடா மாப்ளே…இன்னமும் சைக்கிளை ஓட்டிக்கிட்டிருக்கே…இப்ப ஒரு சைக்கிள் நாலாயிரம் ரூபா. இதுக்கு செகண்ட் ஹேண்ட்ல எக்ஸ் எல் சூப்பரே வாங்கிடலாம்” என்றார்கள்.

 




 

 

அப்பா ஓட்டிய சைக்கிள், முதன்முதலில் வேலைக்குச் சென்ற போது வாங்கிய சைக்கிள் என்பதெல்லாம் மியூஸியம் போல் வீட்டில் வைக்கப்பட்டு, பிறகு அவற்றுக்கு இடமில்லை என்று காயலான் கடைக்குப் போடப்பட்டன.

இப்போதெல்லாம் ஒரு வீட்டில், இரண்டு அல்லது மூன்று டூவீலர்கள் இருக்கின்றன. அப்பாவுக்கு பைக், மனைவிக்கு ஆக்டீவா, மகளுக்கு ஸ்கூட்டி என்று நிற்கின்றன. குழந்தைகளுக்கும் பசங்களுக்கும் குட்டியூண்டு சைக்கிள்லோடு பரிதாபமாகக் காட்சி தருகின்றன.

வாகனத்துக்கும் நமக்குமான பந்தமோ செண்டிமெண்டோ இப்போதெல்லாம் இல்லை.
“ரெண்டு வருஷத்துக்கு ஒருதடவை வண்டியை மாத்திட்டே இருப்பேன்., அதான் நமக்குக் கையைக் கடிக்காது…” என்று தோள் குலுக்கி புத்திசாலித்தனம் காட்டத் தொடங்கிவிட்டோம்.

காலச் சுழற்சியில்.,தொப்பையைக் குறைக்கவும், சர்க்கரை அளவைக் குறைக்கவும் தினமும் சைக்கிளிங் செல்பவர்கள் அதிகரித்துவிட்டார்கள். ஸ்டாண்ட் போட்டு, சைக்கிளிங் பண்ணுவதற்கு, காத்தாட வண்டி ஓட்டலாம் என்று சைக்கிள் வாங்கத் தொடங்கிவிட்டார்கள்.

சைக்கிளுக்கும் நமக்குமான பந்தம்…பால்யகாலத்தில் இருந்தே இரண்டறக் கலந்தது. எத்தனை ராயல் என்பீல்டுகளும் யமஹாக்களும் இருந்தாலும், நமக்கும் நம் உடலுக்கும் எனர்ஜியையும் புத்துணர்ச்சியையும் கொடுக்கிற சைக்கிளை நாம் எப்படி மறக்கமுடியும்.

 




 

What’s your Reaction?
+1
1
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!