Cinema Entertainment விமர்சனம்

பிள்ளை நிலா திரைப் பட விமர்சனம்

எண்பதுகளில் வெளிவந்த ‘திகில்’ திரைப்படங்களில் இன்றும் நினைவில் கொள்ளத்தக்கப் படம் ‘பிள்ளை நிலா’. சிறுமிக்குப் பேய் பிடிப்பது, மறுபிறவி அடைவது, பண்ணை வீட்டில் ஆவி நடமாடுவது போன்றவற்றைக் கருப்பொருளாகக் கொண்ட ‘ஹாரர்’ திரைப்படங்கள் ஹாலிவுட்டில் பெரும் வெற்றியடைந்தன. ‘தி எக்ஸார்ஸிஸ்ட்’, ‘தி ஓமன்’ போன்ற திரைப்படங்கள், தமிழகத்திலும் கூட பரபரப்பான வெற்றியை அடைந்தன. ‘‘தி எக்ஸார்ஸிஸ்ட்’ படத்தைப் பயப்படாமல் திரையரங்கில் தனி ஆளாகப் பார்த்தால் பெரும் பரிசு’ என்பது போன்ற விளம்பரங்கள் அப்போது உற்சாகமாக வலம் வந்தன.

இந்தப் பாதிப்பில் தமிழில் உருவான திரைப்படங்களுள் முக்கியமானது ‘பிள்ளை நிலா’. தன்னுடைய காதல் நிறைவேறாத காரணத்தால் தற்கொலை செய்து கொள்ளும் ஓர் இளம்பெண்ணின் ஆவி, ஒரு சிறுமியின் உடலில் புகுந்து கொண்டு காதலனையும் அவனது குடும்பத்தையும் பழிவாங்க நினைக்கிறது. ஆவி புகுந்த சிறுமியாக பேபி ஷாலினி நடித்து அசத்தியிருந்தார். மலையாளத்தில் அவர் பிரபலமான குழந்தை நட்சத்திரமாக இருந்தாலும், தமிழில் ஏற்கெனவே இரண்டு படங்களில் நடித்திருந்தாலும் தமிழகத்தில் அவரை மிகவும் பிரபலமாக்கியது ‘பிள்ளை நிலா’ திரைப்படம்தான்.




தற்கொலை முயற்சியில் ஈடுபடலாமா என்று யோசிக்கும் அளவுக்கு மனச்சோர்வின் உச்சத்திலிருந்த இயக்குநர் மனோபாலாவை புதிய உற்சாகத்துடன் இயங்க வைத்த படம் இது. மனோபாலா இயக்கிய முதல் திரைப்படமான ‘ஆகாய கங்கை’ தோல்வியடைந்தது. நடிகர் மோகன் வாய்ப்பு தேடி அலைந்த காலகட்டத்தில் அவருக்கு மிக உதவியாக இருந்தவர் மனோபாலா. அந்த நட்பு காரணமாக மோகன் வாய்ப்பு தர, மனோபாலா அடுத்து இயக்கிய ‘நான் உங்கள் ரசிகன்’ படமும் தோல்வியை அடைந்தது. இளையராஜா தயாரித்த இந்தப் படத்தில் பாடல்கள் அனைத்தும் ‘ஹிட்’ என்றாலும் படம் வெற்றியைப் பெறவில்லை.

பாரதிராஜாவிடம் பல திரைப்படங்களில் உதவியாளராக இருந்து மிகுந்த அனுபவம் பெற்றவரான மனோபாலா, தொடர்ந்து இரண்டு படங்கள் தோல்வியடைந்ததால் மனச்சோர்விற்கு ஆளானார். ‘தற்கொலை செய்து கொள்ளலாமா?’ என்னும் அளவிற்கு அவரது சோர்வு அமைந்தது. இந்த நிலையில் கலைமணியின் மூலம் ‘முதல் வசந்தம்’ திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பு வந்தது. ஆனால், ‘மணிவண்ணன் இயக்கினால்தான் நன்றாக இருக்கும்’ என்று இதர தயாரிப்பாளர்கள் கருதியதால் அந்த வாய்ப்பும் பறிபோனது.

திருச்சி வெக்காளி அம்மனிடம் மிக உருக்கமாகக் கடிதம் எழுதி வேண்டுகோள் வைத்தார் மனோபாலா. அந்த பிரார்த்தனை வீண் போகவில்லை. மீண்டும் அழைத்த கலைமணி, “மோகன் கால்ஷீட் தரேன்னு சொல்லிட்டாரு. ஆனா டைரக்ஷன் நீதான் செய்யணும்னு கண்டிஷனா சொல்லிட்டாரு” என்று சொல்ல, மனோபாலாவிற்கு ஆனந்தக் கண்ணீர். வாய்ப்பு தேடிய காலத்தில் தனக்குப் பல்வேறு விதங்களில் உதவி செய்த மனோபாலாவை மறக்காமல் ஆதரிக்க முன்வந்தார் மோகன். அப்போது மோகன் பல திரைப்படங்களில் ஹீரோவாக பிஸியாக நடித்துக் கொண்டிருந்ததால் ‘இரவு நேரங்களில் நடித்துத் தருகிறேன்’ என்று சொன்னார். எனவே இரவுக் காட்சிகள் அதிகம் இருக்குமாறு எழுதப்பட்ட திரைக்கதைதான் ‘பிள்ளை நிலா’. இதன் பிறகு மனோபாலா பிஸியான இயக்குநராக மாறுவதற்குக் காரணமாக இந்தத் திரைப்படம் அமைந்தது.




சிறுமிக்குள் புகுந்து விடும் இளம்பெண்ணின் ஆவி

மிகப்பெரிய செல்வந்தரான டேவிட்டின் செல்லத் தங்கை டாலி. அவளுடைய மகிழ்ச்சிக்காக எதை வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருக்கிறார் டேவிட். மிதமிஞ்சிய செல்வம், செல்லம் காரணமாகப் பிடிவாதக் குழந்தை போல் வளரும் டாலி, தான் விரும்பியதையெல்லாம் செய்கிறார். கல்லூரி முதல்வர் தன்னை கேள்வி கேட்ட காரணத்தினால், அடுத்த நிமிடமே அந்தக் கல்லூரியை விலைக்கு வாங்கி விடுகிறார். கல்லூரித் தேர்தலில் ஒட்டுமொத்தமாக அனைவருமே டாலிக்கு ஆதரவு தர, ஒருவன் மட்டும் எதிர்த்து நிற்கிறான். வேறு யார்? அவன்தான் ஹீரோ மோகன். வழக்கம் போல் இருவருக்கும் மோதல் ஆரம்பித்து காதலில் முடிகிறது. மோகனை டாலி காதலிக்க ஆரம்பிக்கிறாள். இந்த விஷயம் மோகனுக்கு இன்னமும் தெரியாது.                                                                                                                                                                                                                                                                                       

கல்லூரி படிப்பு முடிந்த கையோடு மோகனைத் தங்களின் நிறுவனத்தில் மிகப்பெரிய பொறுப்பில் அமர்த்தும் டாலி, வெளிநாடு சென்று விடுகிறாள். திரும்பி வந்ததும் தன் காதலைச் சொல்லித் திருமணம் செய்து கொள்ளலாம் என்பது அவளது உத்தேசம். ஆனால் அதற்குள் மோகனுக்கும் அவனது முறைப்பெண்ணுக்கும் திருமணம் நடந்து விடுகிறது. வெளிநாட்டிலிருந்து திரும்பி வரும் டாலி, இதைக் கேட்டு முதலில்             அதிர்ச்சியடைந்தாலும் தன்னையும் திருமணம் செய்து கொள்ளச் சொல்லி வற்புறுத்துகிறாள். மோகன் இதை மறுக்க, கட்டடத்திலிருந்து குதித்து டாலி தற்கொலை செய்து கொள்கிறாள். மிகச் சரியாக அதே நேரத்தில் மோகனின் மனைவிக்கு ஒரு பெண் குழந்தை பிறக்கிறது.




டாலியின் ஆவி, குழந்தையின் உடலில் புகுந்துள்ளதை ஒரு கட்டத்தில் அறியும் மோகன் அதிர்ச்சியடைகிறான். தன்னை ஏமாற்றிய காதலனையும் அவனது குடும்பத்தையும் பழிவாங்கும் செயல்களில் ஆவி ஈடுபடுகிறது. இதற்காகச் சிறுமியின் உடலைப் பயன்படுத்திக் கொள்கிறது. மோகனின் அம்மா மர்மமான முறையில் இறந்து போகிறாள். மீதமிருப்பது மோகனும் அவனது மனைவியும்.

மோகனின் குடும்பத்துக்கு என்னவானது, டாலி தன் பழியைத் தீர்த்துக் கொண்டாளா என்பதையெல்லாம் பரபரப்பான, திகிலான காட்சிகளின் மூலம் சொல்லியிருக்கிறார்கள்.

மோகன் – நளினி – பேபி ஷாலினி

ஹீரோவாக மோகன். ஒரு மிடில் கிளாஸ் நாயகனின் குணாதிசயத்தை வழக்கம் போல் மிகச் சரியாகக் கொண்டு வந்து விடுகிறார். ‘மேடம்… மேடம்…’ என்று நன்றியுணர்ச்சியுடன் ராதிகாவை அழைப்பது, அம்மாவிடம் பாசமாக இருப்பது, முறைப்பெண்ணிடம் வழிவது என்று இவரது பிரத்யேக பிராண்ட் நடிப்பு நன்றாக வெளிப்பட்டிருக்கிறது. ராதிகாவின் ஆவி தனது மகளிடம் புகுந்து குடும்பத்தை அழிக்க நினைக்கிறது என்பதை அறிந்த அடுத்த கணத்திலிருந்து வேறோரு நபராக மாறி வித்தியாசமான நடிப்பைத் தந்திருக்கிறார் மோகன்.




பிற்பாதியில் வந்தாலும் படத்தின் முக்கியமான கேரக்டர் பேபி ஷாலினிதான். இவருடைய ‘க்யூட்’ ஆன ஹேர்ஸ்டைல் அந்தக் காலகட்டத்துச் சிறுமிகளிடையே பிரபலமாக விளங்கியது. ஒரு ‘துருதுரு’ சிறுமியாக ஆரம்பக் காட்சியில் வந்து உள்ளத்தைக் கொள்ளை கொள்ளுகிறார். இவரிடம்தான் ராதிகாவின் ஆவி புகுந்திருக்கிறது என்பது நமக்குத் தெரிந்தவுடன் அதற்கேற்ப பீதியை உருவாக்கும் நடிப்பைத் தந்துள்ளார். ‘சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு’ என்று தன் பாட்டியின் கழுத்தைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு கண்ணைப் பயங்கரமாக உருட்டிக் கொல்ல முயற்சி செய்யும் போது நமக்கே திகிலாகத்தான் இருக்கிறது. பொருத்தமான காட்சிக் கோணங்களை வைத்து பேபி ஷாலினியிடம் நன்றாக வேலை வாங்கியுள்ளார் மனோபாலா.

தமிழில் வெளியான ஹாரர் திரைப்படங்களின் முன்னோடி என்கிற வகையிலும் ராஜாவின் அட்டகாசமான பின்னணி இசை, பேபி ஷாலினி உள்ளிட்டவர்களின் நடிப்பு, முற்பாதியில் இழுவையாக அமைந்தாலும் பிற்பாதியில் அமைக்கப்பட்டிருக்கும் திகிலான காட்சிகளின் சுவாரஸ்யங்கள் போன்றவற்றுக்காக இன்றும் கூட ரசிக்கும் வகையில் அமைந்திருக்கிறது, இந்த ‘பிள்ளை நிலா’.




What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!