Cinema Entertainment விமர்சனம்

மூன்று முடிச்சு திரைப்படம் விமர்சனம்

ரஜினி என்றாலே ஸ்டைல் என்றான பிறகு அவர் நடித்த படங்களில் ஏதாவது ஒரு வகை ஸ்டைல் ரசிகர்களுக்காக திணிக்கப்படுவதுண்டு. ஆரம்ப கால படங்களில் ஸ்டைல் என்ற முத்திரை அவர் மீது விழுவதற்கு முன்பு வந்த படங்களில் குறிப்பிடத்தகுந்தவை இந்த மூன்று முடிச்சு. இந்த படத்தில் ரஜினியினுடைய எல்லா மேனரிசமும் ஒரு வகை ஸ்டைல்தான். ஸ்டைல் என்று சொல்லத்தெரியாமல் மக்கள் அவரை ரசிக்கத் தொடங்கிய காலம். தமிழில் இதன் திரைக்கதை வசனம் இயக்கத்தில் நிறைய புதுமைகளைப் புகுத்தியிருந்தார் இயக்குனர் கே.பாலச்சந்தர்.




கமலும் ஸ்ரீதேவியும் ஒருவரை ஒருவர் காதலிக்க, ரஜினி ஸ்ரீதேவியை ஒருதலையாய் காதலிப்பார். சாதாரண முக்கோண காதல் கதை போல் ஆரம்பித்தாலும், ரஜினியின் கோரமுகம் வெளிப்படும் போது சற்றே வேகமெடுக்கிறது கதை. கமலை ரஜினி வில்லத்தனம் நிறைந்த தன் இயல்பான நடிப்பில் தூக்கி சாப்பிட்டால், அவரை ஸ்ரீதேவி விழுங்கியேயிருப்பார்.தமிழ் சினிமாவின் பொற்காலத்தில் நிகழ்ந்த படம் இது.

பாலசந்தர் இப்படத்தில் ரஜினி நடித்த வேடத்தில் முதலில் ஜெயபாரதி  நடிக்க வைக்க நினைத்திருந்தார். ஆனால் தனக்கு நடிப்பில் ஆர்வம் இல்லை படங்களை இயக்கலாம் என்று இருக்கிறேன் என ஜெயபாரதி மறுத்துவிட்டார்.இப்படத்தின் சில படப்பிடிப்பு காட்சிகள் கமல்ஹாசன் வீட்டில் எடுக்கப்பட்டது.




வில்லனான ரஜினியே படம் முழுவதும் பூரணமாக நிறைந்திருக்கிறார். வில்லனுக்கு முக்கியத்துவம் கொடுத்து அப்போது எடுக்கப்பட்டிருந்தாலும் இப்போது பார்க்கும்போது ஏதோ ஆன்டி-ஹீரோ சப்ஜெக்ட் போலத்தான் தெரிகிறது. ரஜினி மட்டும் ஹீரோவாக நடிக்காமல் வில்லனாகவே தொடர்ந்திருந்தால் சூப்பர்ஸ்டார் ஆகியிருக்கமாட்டார் ஆனால் நிச்சயம் சூப்பர் வில்லனாகியிருப்பார்.




தொடர்ந்து தப்பு செய்யும் வில்லன் போல் இல்லாமல், மூர்கமாக தவறு செய்துவிட்டு பின்னர் மனசாட்சிக்கு பயந்து ஓடி ஒளியும் வில்லன். கடந்த 15 வருடங்களாக ரஜினிக்காகவே எழுதிய வசனங்களை கேட்டு பழகிப்போன நமக்கு, சாதரண ரஜினிக்காக, பிரசாத் என்கின்ற கதாபாத்திரத்துக்காக எழுதிய வசனங்களை கேட்கும் போது ரொம்பவே இயல்பாய் இருக்கிறது. ஒரு காட்சியில், ரஜினியின் தந்தை பிரசாத்தை பத்தி என்ன நினைக்கிறன்னு கேட்பார், அதற்க்கு ஸ்ரீதேவி “சரியான வில்லன் மூஞ்சி” என்பார். ஸ்ரீதேவியை கல்யாணம் செய்யும் ஆசையில் ரஜினி சுற்றிவர, பாலச்சந்தரின் சேட்டையால் ரஜினியின் அப்பாவும் ஸ்ரீதேவியும் கல்யாணம் செய்துகொள்ள, ஸ்ரீதேவிக்கு தலைமகனாகிவிடுவார் ரஜினி.

இந்த படத்தின் மொத்த கதையை நம் கவியரசர் வெறும் ஆறு வரியில் அழகாய் சொல்லியிருப்பார். இந்த ஆறு வரியை, இரண்டு இரண்டு வரிகளாக முக்கிய கதாபாத்திரங்களான கமல், ரஜினி, ஸ்ரீதேவி பாடும்படி படமாக்கியிருப்பார் கே.பி. படத்தில் வெவ்வேறு இடங்களில் இந்த வரிகள் வரும்.




கமல்: வசந்த கால நதிகளிலே வைரமணி நீரலைகள்
நீரலைகள் மீதினிலே நெஞ்சிரண்டின் நினைவலைகள்

ரஜினி: மணவினைகள் யாருடனோ மாயவனின் விதிவகைகள்
விதிவகையை முடிவு செய்யும் வசந்த கால நிரலைகள்

ஸ்ரீதேவி: நிரலைகள் முடிந்ததெல்லாம் நெஞ்சில்வந்த நினைவலைகள்
நினைவலைகள் முடிந்தயிடம் தாய்மகனாம் சூழ்நிலைகள்




ஒரு காட்சியில் ரஜினியை பார்த்து ஸ்ரீதேவி “போடா கண்ணா போ” என்பார். இதுவே இன்னைக்கு ஒரு கதாநாயகி ரஜினியை பார்த்து சொல்லமுடியுமா? இப்படி அவ்வப்போது பல வசனங்கள் நம்மை நிகழ்கால சூப்பர்ஸ்டார் ரஜினியோடு ஒப்பிட்டு பார்க்க வைக்கிறது. இரண்டாண்டுகளுக்கு முன்பு வந்த பொய் படத்தில் விதிக்கு உருவம் கொடுத்திருப்பார் கே.பி. அதை சற்றே வித்தியாசமாக உணர்ந்தேன். 1976ல் வந்த இந்த படத்தை பார்த்த பிறகுதான் தெரிந்தது, இதெல்லாம் கே.பிக்கு ஜுஜுபி என்று.

இந்த படத்தில் மனசாச்சிக்கு உருவம் கொடுத்திருக்கிறார். ரஜினி ஒவ்வொரு முறை தப்பு செய்த்தபிறகும், மனசாச்சி வந்து கேள்விகேட்கும், தவறை எல்லாம் வரவு வைத்துக்கொண்டே வரும். மனசாச்சிக்கு பைத்தியக்காரன் போன்ற ஒரு தோற்றத்தை கொடுத்திருப்பார். தவறு செய்த பிறகு ஒவ்வொரு முறையும் வந்து கேள்விகேட்கும் மனசாச்சி, ஏன் தப்பு செய்வதற்கு முன்பு வந்து எச்சரிக்காதா என்ற நம் நியாயமான கேள்விக்கு படத்தின் கடைசியில்

விதைக்கின்ற வேளையிலே விளங்காத மனசாட்சி…
விளைவுக்குப் பின்னாலே விரைந்துவரும் மனசாட்சி….
தனக்காகத் தன்னுடனே போராடும் மனசாட்சி….
தவறுபவன் கண்களுக்குப் பைத்தியந்தான் மனசாட்சி.




இந்த நாலு வரியில் பதில் சொல்லுகிறார். வசனங்கள் ஒவ்வொன்றும் அக்மார்க் கே.பி ரகம். ஸ்ரீதேவியின் அக்காவாக வரும் Y.விஜயா ஒரு துணை நடிகை, கமலுடன் பேசிக்கொண்டிருக்கும் போது, இயக்குனர் தூக்குப் போடும் காட்சியில் நடிக்க அழைப்பார், உடனே விஜயா கமலை பார்த்து “நா தூக்குல தொங்கிட்டு அப்புறமா வீட்டுக்கு வரேன். நீங்க போங்க.” என்பார். கல்யாணத்துக்கு வயது ஒரு தடை இல்லை என்று ஸ்ரீதேவி சொல்லும்போது அங்கு வரும்  ஒரு வயதானவர் “கீட்ஸ் சொல்லல, ஷெல்லி சொல்லல, நம்மூர் செல்வி சொல்லிட்டா” என்பார். இது போன்ற வசனங்களை கேட்கும்போது நம்மையும் அறியாமல் ஒரு புன்முறுவல் உதடுகளில் வந்து மறையும்.

இதில் ரஜினியின் அப்பாவாக நடித்த என்.விஸ்வநாத் என்ற கல்கத்தா விஸ்வநாதன் மிக அருமையான நடிகர்.அவர் மிருணாள் சென் மற்றும் சத்யஜித் ரே படங்களில் தொடர்ந்து நடித்து தன் பெயரை நிலைநாட்டியவர். இதில் 47 வயதில் 18 வயதுப் பெண்ணை இரண்டாம் தாரமாக மணக்கும் சிக்கல் மிகுந்த கதாபாத்திரத்தை எத்தனை அனாயசமாக செய்திருப்பார் பாருங்கள், அதிலும் தன் இரண்டாம் திருமணம் முடிந்து தன் முன்னால் நின்று கொண்டிருக்கும் மகனிடம் மெல்ல தயக்கத்தை விட்டு அசடு வழியப் பேசத் துவங்கும் காட்சிகளில் மனிதர் கொன்றிருப்பார்.




இப்படத்தில் நடிக்க கமல்ஹாசனுக்கு 30ஆயிரம் ரூபாயும்,ஸ்ரீதேவி அப்போது தான் அறிமுகம் என்றாலும் குழந்தை நட்சத்திரமாக மக்கள் மனதில் பதிந்த நடிகை என்பதால் 5 ஆயிரம் சம்பளமும் ரஜினிக்கு 2ஆயிரம் சம்பளமும் பேசியிருந்தார்கள் என ஸ்ரீதேவி நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி தொலைக்காட்சி நிகழ்ச்சியில் சொல்லியிருந்தார். ரஜினிக்கும் கமல் போல நிருபனமான நடிகராகி அந்த 30 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்க வேண்டும் என்பதே அன்றைய குறிக்கோளாக இருந்தததாகவும்,அதை அவர் வெளிப்படையாக ஸ்ரீதேவியிடமும் அவர் அம்மாவிடமும் சொன்னதாகவும் சொல்லியிருந்தார் .




இந்த படத்தில் ரஜினியினுடைய நடிப்பை பார்த்த நமக்கு, சூப்பர்ஸ்டார் என்ற வட்டத்துக்குள் வந்த பிறகு ரஜினி சிரத்தை எடுத்து நடிப்பத்தை தவிர்த்து விட்டாரா? அல்லது இயக்குனர்கள் அவருடைய நடிப்பை பயன்படுத்திக் கொள்ளவில்லையா? என்ற சந்தேகம் வருகிறது. காரணம் இந்த படத்தில் அப்படியொரு அருமையான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் ரஜினி.




What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!