News

சித்திரையை ஏன் தமிழ் புத்தாண்டாக கொண்டாடுகிறோம்?

 

தமிழ்ப் புத்தாண்டு 

 தமிழர்  புதிய ஆண்டு பிறப்பதைக் கொண்டாடும் விழாவாகும். இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும், பிற நாடுகளிலும் வாழும் தமிழ் மக்கள் சித்திரை  மாதத்தின் முதல் நாளைப் புத்தாண்டாகக் கொண்டாடுகின்றனர்.

ஒரு தமிழ் ஆண்டு என்பது வானியல் ரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும் அளவிடப்பட்ட காலத்தைக் கொண்ட காலப்பகுதியாகும்.பூமி , சூரியனை ஒரு தடவை சுற்றிவர 365 நாட்கள், 6 மணி, 11 நிமிடம், 48 நொடிகள் ஆகின்றது. இதுவே தமிழ் வருடத்தினதும் கால அளவாகும். சூரிய மேஷ ராசியில்  பிரவேசிக்கும்போது தொடங்கும் ஆண்டு, மீன இராசியிலிருந்து வெளியேறும்போது முடிவடைகின்றது. ஆகவே தமிழ் வருடத்தின் கால அளவு எப்போதும் சீரானதாகவே இருக்கிறது. இதன் அடிப்படையிலேயே தமிழ்ப் புத்தாண்டு பிறக்கும் நாள், நேரம் கணிக்கப்படுகிறது. ஆங்கில கிரெகொரிய நாட்காட்டியில் பெரும்பாலும் ஏப்ரல் 14  தொடங்கும் தமிழ் ஆண்டு சில ஆண்டுகளில் ஏப்ரல் 13 அல்லது 15 நாட்களில் தொடங்கும். இதற்குக் காரணம் ஆங்கில (கிரகோரியன்) நாட்காட்டி ஒரே சீரானதாக இல்லை என்பதே.

 

நடைமுறைக்கு ஏற்றதாக தமிழ்ப் புத்தாண்டு ஒரு குறிப்பிட்ட நாளில் கொண்டாடப்பட்டாலும், தமிழ்ப் பஞ்சாங்கங்களில் அந்த நாளில் ஆண்டு பிறக்கும் சரியான நேரம் குறிப்பிடப்பட்டிருக்கும். அதன் அடிப்படையிலேயே ஆண்டுக்காலம் கணிக்கப்படுகிறது.

பஞ்சாங்கத்தில் சூரியன் தென்கிழக்கு திசையிலிருந்து வட கிழக்கு நோக்கி நகருகின்ற காலம் உத்தராயணம் என்றும், வட கிழக்கு திசையிலிருந்து தென்கிழக்கு நோக்கி நகருகின்ற காலம் தட்சிணாயனம் என குறிப்பிடப்படுகின்றன.




இதில் உத்தராயண காலத்தில் நடுவில், அதாவது சூரியன் சரியாக நடு கிழக்கு திசையிலிருந்து உதிக்கின்ற நாள் தான் சித்திரை மாதம். அதனால் அந்த மாதத்தில் தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது என கூற்று உள்ளது.அதுமட்டுமல்லாமல் தமிழ் வருடங்கள் எல்லாம் பிற மொழியிலும் உள்ளன.

சித்திரை மாதம் முதல் நாளை ஒவ்வொரு ஆண்டும் தமிழ் வருடப்பிறப்பாக கொண்டாடுகிறோம். சூரியன் மேஷ ராசியில் சஞ்சரிக்கத் தொடங்குவது இந்த சித்திரை மாதத்தில் தான். சித்திரை முதல் நாளில் நமது குலதெய்வத்தை வழிபடலாம். குல தெய்வ வழிபாட்டின் மூலம் நம் குடும்பம் வாழையடி வாழையாய் தழைக்கும்.

 

நம் இஷ்ட தெய்வ வழிபாடு இருந்தாலும் முதலில் குல தெய்வத்தை வணங்கினால் தான் சகல சௌபாக்கியங்களும் நம்மை தேடி வரும். வாழ்க்கை செழிப்புடன் அமையும். இப்போது உள்ள சூழ்நிலையில் குலதெய்வ கோவிலுக்கு போக முடியாதவர்கள் வீட்டிலேயே குல தெய்வ படத்தை வைத்து வணங்கலாம். அன்றைய தினம் பஞ்சாங்கம் படிப்பதன் மூலம் நிறைய நன்மைகள் நடக்கும் என்பது நம்பிக்கை.




தமிழகம், கேரளாவில் சூரியனின் நகர்வை அடிப்படையாக வைத்து மாதப்பிறப்பு கணக்கிடப்படுகிறது. கர்நாடகா, ஆந்திராவில் சந்திரனை அடிப்படையாக வைத்து மாதங்கள் கணக்கிடப்படுகின்றன. சூரியன் மேஷ ராசியில் சஞ்சரிக்கும் மாதம் சித்திரை மாதம். இளவேனில் காலத்தில் மாதம் பிறக்கிறது. கிழக்கு திசையில் தொடங்குகிறது சித்திரை. தை மாதம் சூரியன் வடக்கு நோக்கி நகர்வார். ஆடி மாதத்தில் சூரியன் தெற்கு நோக்கு நகர்வார்.

 

சித்திரை வருடப்பிறப்பை வடநாட்டில் பைசாகி என்றும், மேஷ சங்கராந்தி என்றும் குறிப்பிடுவர். கேரளத்தில் விஷூ என்றும் கொண்டாடுகிறார்கள். வீட்டிலேயே தமிழ் புத்தாண்டினை எளிமையாக கொண்டாடலாம். அன்றைய தினம் என்ன என்ன செய்யலாம் என்று பார்க்கலாம்.

பஞ்சாங்கத்திற்கு பூஜை :

புதுவருட பிறப்பன்று நம் வருங்கால பலன்களை அறிவது அவசியம். சித்திரை முதல் நாள் காலையில் எழுந்து குளித்து புது ஆடைகளை அணிந்து அந்த வருட பஞ்சாங்கத்திற்கு மஞ்சள் தடவி, பூஜை அறையில் வைக்க வேண்டும். பின்னர், விநாயகர் நவக்கிரகங்கள், குல தெய்வம் ஆகியவைகளுக்குப்பூஜை செய்து வழிபட வேண்டும்.




பஞ்சாங்கம் படித்தல் :

சித்திரை முதல் நாள் பஞ்சாங்கம் படிப்பதால் பலவித பலன்கள் கிடைக்கும். விரதத்தைப்பற்றிச் சொன்னால், ஆயுள் விருத்தியும், திதியைப்பற்றிச் சொன்னால், செல்வச்செழிப்பும் கரணத்தைப் பற்றிச் சொன்னால் பலவித காரிய நிவர்த்திகளும் உண்டாகும். அதே போல, நட்சத்திரங்களைப் பற்றிச் சொன்னால் பாவங்கள் தீரும். யோகத்தைப்பற்றிச் சொன்னால், வியாதிகள் குணமடையும் என்பது நம்பிக்கை. ஸ்ரீ ரங்கம் ரங்கநாதர் ஆலயத்திலும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்திரை புத்தாண்டை முன்னிட்டு அன்றைய தினம் அதிகாலை பஞ்சாங்கம் படிக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.


கனி காணுதல் :

சித்திரை வருடப்பிறப்பன்று பலரது வீட்டிலும் கனி காணுதல் நிகழ்ச்சி நடைபெறும். பூஜை அறையில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த மங்கள பொருட்களை காணச்செய்வதே கனி காணுதல் ஆகும். பூஜைக்குரிய தெய்வத்தையும், பூஜைக்கு வைத்துள்ள மங்கலப் பொருட்களையும் முதன் முதலாக தரிசிக்கும்படி செய்வார்கள் . இவ்வாறு செய்தால் வருடம் முழுவதும் மகிழ்ச்சி பொங்கும் எனவும் மங்கலப் பொருள்கள் செழித்து இருக்கும் என்பது நம்பிக்கை.




சித்திரை கைநீட்டம்:

புதுவருட தினத்தில் ஏழைகளுக்கும், உறவினர்களுக்கும் புதிய விசிறிகளை தானம் செய்ய வேண்டும். சித்திரை மாதம் முதல் நாள் கை நீட்டம் என்று ஒரு வழக்கம் பின்பற்றப்படுகிறது. பெரியவர்கள் குழந்தைகளை ஆசிர்வாதம் செய்து அன்பளிப்பாகப் பணம் தருவதே கை நீட்டமாகும். புத்தாண்டு தினத்தில் தாத்தா, அப்பா என்று வீட்டுப் பெரியவர்களின் காலில் அனைவரும் விழுந்து ஆசி பெற்று, அவர் தரும் பணத்தைப் பெற்றுக்கொள்வார்கள். இதனால், ஆண்டு முழுவதும் பணவரவுடன் பல நன்மைகளும் ஏற்படும் என்பது நம்பிக்கை. இப்படிப் பெரியவர்கள் கொடுக்கும் பணத்தைப் பத்திரமாக வைத்துக்கொள்ளவேண்டும். அடுத்த சித்திரை பிறப்பு வரை கூட சிலர் வைத்திருப்பார்கள்.




சோபகிருது வருடம் 2023 ஏப்ரல் 14ஆம் தேதியன்று தமிழ் புது வருட நாளில் அவரவர்களின் இஷ்ட தெய்வம், குல தெய்வத்தை வணங்கி நோய் பாதிப்பு நீங்க பிரார்த்தனை செய்வது நல்லது. கனி காண வசதியில்லாதவர்கள் வீட்டில் குலதெய்வ படத்தில் கண் விழிக்கலாம் ஆண்டு முழுவதும் நன்மைகள் நடைபெறும்.

 

நேர்மறையாக பேசுங்கள்:

புது வருட பிறப்பு நாளில் நல்ல செயல்களை மட்டுமே செய்யுங்கள். நேர்மறையாக பேசுங்கள் எதிர்மறை எண்ணங்களை தவிர்த்து விடுங்கள். இந்த ஆண்டு அனைவரும் குடும்பத்தோடு வீட்டிற்குள் இருப்பதால் சுவையான சைவ உணவுகளை சமைத்து சாப்பிட்டு இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள். இதுபோல ஒற்றுமையோடு ஆண்டு முழுவதும் இருக்க வேண்டிக்கொள்ளுங்கள்.

நமது தளத்தின் சார்பாக, ஆதரவு அளிக்கும் அனைத்து  நண்பர்களுக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!




What’s your Reaction?
+1
1
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!