Cinema Entertainment விமர்சனம்

இளமை காதல், மரபை உடைத்த `புரட்சி’ க்ளைமாக்ஸ்… 80-களில் புதிய அலையை உண்டாக்கிய `அலைகள் ஓய்வதில்லை!’

18 ஜூலை 1981 அன்று வெளியான `அலைகள் ஓய்வதில்லை’, அந்தக் காலத்தில் மகத்தான வெற்றியையும் கவனத்தையும் பெற்ற ஒரு cult திரைப்படம். குறிப்பாக, இதன் பரபரப்பான க்ளைமாக்ஸுக்காக அதிக சர்ச்சைகளையும் அதே சமயத்தில் முற்போக்குவாதிகளிடமிருந்து பாராட்டுகளையும் பெற்றது. இவற்றைத் தாண்டி பொதுஜனம் இந்தப் படத்தை ஏற்றுக் கொண்டதுதான் இதன் உண்மையான வெற்றி.




“காதலுக்கு குறுக்கே மதம் வரும்போது அதைத் தூக்கி எறி” என்று மதத்தைப் பின்னுக்குத் தள்ளி காதலுக்கு முக்கியத்துவம் தந்த காரணத்தால் இளைய தலைமுறை ரசிகர்கள் இதைக் கொண்டாடியதில் ஆச்சர்யமில்லை.

இதன் பிரமாண்டமான வெற்றிக்கு மணிவண்ணனின் புத்துணர்ச்சியான கதை – வசனம், பாரதிராஜாவின் பிரத்யேக அழகியல் பாணி இயக்கம், B.கண்ணனின் அழகான ஒளிப்பதிவு, இளையராஜாவின் அற்புதமான இசை போன்றவை அடிப்படைக் காரணங்களாக இருந்தன.

பிரதான பாத்திரங்களில் நடித்த கார்த்திக், ராதா ஆகிய இருவருமே இந்தத் திரைப்படத்தில்தான் அறிமுகமானார்கள். ஸ்டார் நடிகர்களை விடுத்து எவ்வித அனுபவமும் இல்லாத புதிய நபர்களை அறிமுகப்படுத்தி அந்தப் படத்தை சூப்பர் ஹிட் ஆக்குவதென்பது இயக்குநரின் திறமையையும் தன்னம்பிக்கையையும் காட்டுகிறது. அது பாரதிராஜாவிடம் ஏராளமாக இருந்தது.




பாட்டு சொல்லிக் கொடுக்கும் ஏழை தாயின் மகன் விச்சு. பள்ளி நேரம் போக, நண்பர்களுடன் சேர்ந்து ஊரைச் சுற்றி வந்து அலப்பறை செய்வது தான் அவன் வேலை. அதே ஊரில், பணக்கார டேவிட்டின் தங்கை மேரி .அண்ணனின் முழுக்கட்டுப்பா ட்டில், பயந்து நடுங்கி வளர்கிறாள்.இவர்கள் இருவருக்கும் இடையே மோதலில் தொடங்கி பிறகு காதல் மலர, இவர்களின் கதையை ஆழகாக கூறும் கதை தான் ”அலைகள் ஓய்வதில்லை”.




வெங்காயத்தை இரண்டாக அரிந்து கக்கத்தில் வைத்துக் கொண்டால் உத்தரவாதமாகக் காய்ச்சல் வரும் என்கிற அரிய மருத்துவத் தகவல் இந்தப் படத்தில்தான் தெரிவிக்கப்பட்டது.

மீசையே முளைக்காத பருவத்தில் அறிமுகமான கார்த்திக்கின் நடிப்பும், இளமையும், வசீகரமும், ராதாவின்  கண்களிடம் இருந்தும் வெளிப்பட்ட எக்ஸ்பிரஷன்களும் அனைவரையும் மிகவும் கவர்ந்தது.  கவர்ச்சி நடிகை என்ற பட்டத்தை அகற்றி, அருமையாக நடித்த சில்க் ஸ்மிதாவின் முக்கியமான குணச்சித்திர படம் இதுவே ஆகும். ஏழை மற்றும் பரிதாப அம்மாவாக வெகு இயல்பாக கமலா காமேஷ் நடித்த முதல் முக்கியமான படம் இதுவே!

`அலைகள் ஓய்வதில்லை’ திரைப்படத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட இன்னொரு நடிகர் தியாகராஜன்.

இவருக்கு நடிப்பதில் எந்தவொரு ஆர்வமும் இருந்ததில்லை. அதற்கான முயற்சிகளும் எடுத்ததில்லை. தயாரிப்பாளர் பாஸ்கரின் நண்பரான இவரை ஒரு முறை சந்தித்தபோது நீண்ட நேரம் கூர்ந்து பார்த்திருக்கிறார் பாரதிராஜா. `ஏன் இவரையும் நடிக்க வைக்கப் போகிறீர்களா?” என்று பாஸ்கர் கேட்க, “ஆமாம்… இந்தப் படத்துல வில்லன் பாத்திரத்துக்கு” என்று சொன்ன பாரதிராஜா, தியாகராஜனை வில்லனாக ஒப்பந்தம் செய்துவிட்டார்.




கூலிங்கிளாஸும் சரிகை வேட்டியும் வெள்ளை நிற ஜிப்பாவும் கைகளில் காப்பும், கழுத்தில் தங்கச் சங்கிலி மின்ன, என்பீல்ட் பைக்கில் `டபடபவென்ற சத்தத்துடன் வலம் வரும் தியாகராஜனைப் பார்த்து அந்த ஊரே அஞ்சும். முதற்காட்சியிலேயே தியாகராஜனின் குணாதிசயத்தை வலுவாகப் பதிவு செய்துவிடுவார் பாரதிராஜா.முகத்தில் எவ்வித உணர்ச்சிகளும் வெளிப்படாமல் நடிப்பதில் தியாகராஜன் ஒரு தனிப்பாதையை வகுத்திருக்கிறார். இந்தத் திரைப்படத்தில் இவருக்கு குரல் தந்தவர் பாரதிராஜா.

பாவலர் கிரியேஷன்ஸ் தயாரித்த ‘அலைகள் ஓய்வதில்லை’, பஞ்சு அருணாசலம், கங்கை அமரன், வைரமுத்து, இளையராஜா என பலரும் பாடல்கள் எழுதிக் கொடுக்க, இப்படத்தின் பாடல்கள் அன்றைக்கு செய்த தாக்கம் இன்று வரைக்கும் ஒலித்துக்கொண்டே இருக்கின்றது. முக்கியமாக பாரதிராஜாவின் இயக்கம், அவர் வைக்கிற கோணங்கள், காதலை கவிதைபோல் சொல்லுகிற அழகு என ரசனையுடன், மணிவண்ணனின் வசனங்களும் சேர்ந்து ’அலைகள் ஓய்வதில்லை’நம் நினைவில் நீங்காத ஒரு படமாக திகழ்ந்துள்ளது. படத்தில் அலைகள், பாறைகள், ஆர்மோனியப் பெட்டி, தாமரைப் பூ ஆகியவை படத்தில் ஒரு முக்கிய இடம் பிடிக்க, அவற்றை கேரக்டர்களாகவே கருதிருக்கிறார், ஒளிப்பதிவாளர் பி.கண்ணன் .




இது இளையராஜாவின் குடும்ப தயாரிப்பு என்பதால் பாடல்களிலும் சரி, பின்னணி இசையிலும் சரி, தன் அசாதாரணமான இசைத்திறமையை அளவின்றி கொட்டியிருப்பார் இளையராஜா.

இதில் வரும் அத்தனை பாடல்களும் சூப்பர் ஹிட். இன்றைக்கும் கேட்பதற்கு இனிமையாக உள்ள தேன்குடங்கள். கிராமங்களில் பெண்கள் பாடும் கும்மிப்பாடலின் மெட்டை அப்படியே `ஆயிரம் தாமரை மொட்டுக்களே’வாக மாற்றினார் இளையராஜா.

விச்சு மற்றும் மேரியை வைத்து காதலை மிக அழகாகக் கூறிவுள்ளார் இயக்குநர் பாரதிராஜா . மேரிக்காக விச்சு கறி வாங்கிவருவதும், விச்சுவுக்காக மேரி அசைவத்தை விடுவதும் … இவர்களின் ஓயாத காதலை மிக அழகாகவும் ஆழமாகவும் கூறும் படம் “அலைகள் ஓய்வதில்லை!”




“கடல் அலைகள் ஓய்வதில்லை, அதே போல் நம் காதலும் ஓயாது…”. இளமை பொங்க காதலைச் சொன்ன விதத்திலும் சரி, புத்துணர்ச்சியுடன் காட்சிகளைப் பதிவாக்கியதிலும் சரி, மரபை உடைத்த அந்த க்ளைமாக்ஸும் சரி… 80-களில் உருவான புதிய அலைத் திரைப்படங்களின் ஒரு முக்கியமான படம் என்று `அலைகள் ஓய்வதில்லை’ படத்தைச் சொல்லலாம்.

எனவேதான் இந்தத் திரைப்படம்… சிறந்த படம், சிறந்த இயக்குநர்… என்று தமிழ்நாடு அரசின் எட்டு விருதுகளை அந்தச் சமயத்தில் வென்றது. பிற்பாடு தெலுங்கிலும் (1981), இந்தியிலும் (1983) இதே இயக்குநரால் ரீமேக் செய்யப்பட்டது.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!