gowri panchangam Sprituality

அருள் தரும் சக்தி பீடங்கள்-5 (ராஜயோகம் அருள்வாள்* திருவாரூர் கமலாம்பாள்)

திருவாரூர் தியாகராஜர் கோயில் அமைந்துள்ள அன்னை கமலாம்பாள் சந்நிதி மிகவும் பெயர்பெற்ற சக்தி தலம் ஆகும். இத்திருக்கோவில் மூன்றாம் பிரகாரத்தின் வடகிழக்கு திசையில் உள்ளது. சந்நிதியில் இரண்டு கால்களையும் மடக்கி யோகினியாய் அன்னை அமர்ந்திருக்கிறார். திருச்சுற்றின் தென்மேற்கு மூலையில் அட்சர பீடம் உள்ளது. இதனை  சக்தி பீடம், கமலை பீடம் என்றும் காமகலா பீடம் என்றும் அழைக்கப்படுகிறது. மூர்த்தி, தீர்த்தம், தலம் என்று அனைத்துமே இக்கோயிலில் பிரம்மாண்டமாக அமைந்துள்ளது. திருவாரூர் தேர் அழகு என்பதற்கு ஏற்ப, உலகிலேயே பெரிய தேரும், அழகிய தேரும் கொண்ட திருத்தலம் திருவாரூர்தான்.

பஞ்சபூதத் தலங்களில் பிருத்வி (பூமி) தலமாக விளங்கும் இத்தலம், சப்தவிடங்கத் தலங்களின் தலைமை இடமாகத் திகழ்கிறது. சிவபெருமானின் தேவாரப் பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இத்தலம் 150-வது தேவாரத் தலம் ஆகும். சமயக் குரவர்கள் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தர மூர்த்தி நாயனார், மாணிக்கவாசகர் ஆகிய நால்வராலும் இத்தலம் போற்றி பாடப்பெற்றுள்ளது.




தல வரலாறு

திருமால் மகாலட்சுமியுடன், பிள்ளைப் பேறு வேண்டி சிவபெருமானை பூஜித்தார். சிவபெருமான், அவருக்கு சிறிய மரகத லிங்கத்தை அளித்தார். திருமால் அந்த லிங்கத்தை தன் நெஞ்சில் வைத்து தினம் பூஜித்து வந்தார். திருமாலின் மூச்சால், அவர் மார்பின் ஏற்ற இறக்கத்துக்கு ஏற்ப சிவபெருமான் நடனம் புரிந்ததாகக் கூறப்படுகிறது.

தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் எப்போதும் நடைபெறும் போர்களில், ஒருசமயம் இந்திரனுக்கு அசுரர்களால் ஆபத்து ஏற்பட்டது. முசுகுந்த சக்ரவர்த்தியின் உதவியுடன் இந்திரன் அதில் இருந்து தப்பினார். மன்னருக்கு ஏதேனும் கைமாறு செய்ய நினைத்த இந்திரன், அவருக்கு வரம் அளிப்பதாகக் கூறினார். அப்போது இந்திரன், திருமால் தன் நெஞ்சில் வைத்து பூஜித்த (சிறிய மரகத லிங்கம்) விடங்க லிங்கத்தைக் கேட்டார்.

தேவர்கள் மட்டுமே வணங்கக் கூடிய விடங்க லிங்கத்தை ஒரு மானிடருக்கு அளிக்க விரும்பாத இந்திரன், தேவசிற்பி மயனை வரவழைத்து, அதேபோன்று 6 லிங்கங்களை செய்யப் பணித்தார். முசுகுந்த சக்ரவர்த்தி அவை அனைத்தும் போலி என்பதை உணர்ந்து, தனக்கு நிஜ லிங்கமே வேண்டும் என்று கேட்டார். வேறு வழியில்லாமல் நிஜ லிங்கத்தை மன்னரிடம் அளித்தார் இந்திரன்.

தற்போது திருவாரூரில், திருமால் நெஞ்சில் வைத்து பூஜித்த வீதி விடங்க லிங்கமே உள்ளது. சோமாஸ்கந்த மூர்த்தியாக உற்சவ மூர்த்தியாக, தியாகராஜப் பெருமான் இத்தலத்தில் அருள்பாலிக்கிறார். மற்ற லிங்கங்கள் நாகப்பட்டினம் (சுந்தர விடங்கர்), திருக்குவளை (அவனி விடங்கர்), திருவாய்மூர் (நீல விடங்கர்), வேதாரண்யம் (புவனி விடங்கர்), திருக்காரவாசல் (ஆதி விடங்கர்), திருநள்ளாறு (நகர விடங்கர்) ஆகிய ஊர்களில் அமைந்துள்ளன.

கோயில் அமைப்பு

திருவாரூர் தியாகராஜர் கோயிலில் சுயம்பு மூர்த்தியாக தியாகராஜர் அருள்பாலிக்கிறார். இக்கோயில் வீதிப் பிரகாரத்தையும் சேர்த்து, 5 பிரகாரங்களைக் கொண்டுள்ளது. ஐந்து வேலி நிலப்பரப்பில் அமைந்துள்ள இக்கோயிலுக்கு ஐந்து வேலி நிலப்பரப்பில் குளம், ஐந்து வேலி நிலப்பரப்பில் ஓடை உண்டு. 9 ராஜ கோபுரங்கள், 80 விமானங்கள், 12 பெரிய மதில்கள், 13 பெரிய மண்டபங்கள், 15 தீர்த்தங்கள், 3 நந்தவனங்கள், 3 பெரிய பிரகாரங்கள், 365 லிங்கங்கள், 86 விநாயகர் சிலைகள், 24-க்கும் மேற்பட்ட உட்கோயில்கள், 100-க்கும் மேற்பட்ட சந்நிதிகள் கொண்டு இக்கோயில் அமைந்துள்ளது.




ஆழித் தேர்

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் நடைபெறும் தேர்த்திருவிழா மிகவும் பெயர் பெற்றது. “திருவாரூர் தேரழகு” என்று சிறப்பிட்டுச்சொல்லும் அளவிற்கு புகழ் பெற்றது. திருநாவுக்கரசர் தனது தேவாரத்தில், ‘ஆழித்தேர் வித்தகனை நான் கண்ட தாரூரே’ என்று போற்றிப் பாடியுள்ளார். ஆழித்தேரின் உயரம் 96 அடி ஆகும். 96 தத்துவங்களைக் கடந்தவர் வீதிவிடங்கர் என்பது இதன் உட்பொருள் ஆகும். தேரின் மேல்பகுதி கமலவடிவமாக அமைந்துள்ளது. யஜூர் வேத ஸ்ரீருத்ரத்தில் தேராகவும், தேர்த் தலைவராகவும் சிவபெருமான் உள்ளார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பங்குனி பிரம்மோற்சவத்தின்போது நடைபெறும் தேர்த்திருவிழாவைக் காண ஏராளமானோர் திரள்வது வழக்கம்.

திருவிழாக்கள்

மார்கழி திருவாதிரை பாத தரிசனம், பங்குனி பிரம்மோற்சவம் 10 நாள், ஆழித் தேரோட்டம், ஆடிப்பூர விழா 10 நாள், மாசி மகம், சித்திரை விழா, தெப்பத் திருவிழா, மாதாந்திர பிரதோஷம், தீபாவளி, பொங்கல், தமிழ் வருடப் பிறப்பு, ஆங்கிலப் புத்தாண்டு தினங்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள், சுவாமி வீதியுலா நடைபெறும்.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!