gowri panchangam Sprituality

அருள்தரும் சக்தி பீடங்கள் – 11 சிருங்கேரி சாரதாம்பாள்

அம்மனின் சக்தி பீட வரிசையில். சிருங்கேரியில் அருள்பாலிக்கும் சாரதாம்பாள் ஸ்ரீசக்கர பீடத்தில் அமர்ந்து பிரம்மதேவர், திருமால், சிவபெருமான், துர்கா தேவி, லட்சுமி தேவி, சரஸ்வதி தேவியாகத் திகழ்கிறார். ஆதிசங்கரர் 8-ம் நூற்றாண்டில் நிறுவிய இந்த மடம், அத்வைத தத்துவத்தைக் கடைபிடித்து வருகிறது.

கர்நாடக மாநிலம், சிக்மகளூர் மாவட்டத்தில் துங்கபத்ரா நதிக்கரையில் அமைந்துள்ளது சிருங்கேரி மடம். ஆதிசங்கரர் யஜூர்வேதத்தை பிரதிநிதித்துவப் படுத்தும்விதமாக சிருங்கேரியில் இந்த மடத்தை நிறுவியுள்ளார்.சிருங்கேரி பெங்களூரில் இருந்து 336 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.




தல வரலாறு

ஒருசமயம் மாகிஷ்மதி நகரில், பிரம்மதேவரின் அம்சமாக விளங்கும் மண்டனமிச்ரருடன் வேதம் குறித்து ஆதிசங்கரர் வாதம் செய்தார். மண்டனமிச்ரரின் மனைவி உபயபாரதி சரஸ்வதிதேவியின் அம்சமாக இருப்பதால், நடுவராக இருக்க சம்மதித்தார். வேதத்தில் தோற்றவர்களுக்கு தகுந்த தண்டனை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

துறவறம் மேற்கொள்ளும் ஆதிசங்கரர், வாதத்தில் தோற்றால் இல்லறம் ஏற்க வேண்டும் என்றும், இல்லறம் மேற்கொள்ளும் மண்டனமிச்ரர், வாதத்தில் தோற்றால் துறவறம் ஏற்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டது. வாதம் தொடங்கும் முன்னர், ஆதிசங்கரருக்கும் மண்டனமிச்ரருக்கும் மாலை அணிவிக்கப்பட்டது. யாருடைய மாலை முதலில் வாடுகிறதோ, அவர்கள் தோற்றவர்களாக அறிவிக்கப்படுவார்கள் என்றும் தெளிவுபடுத்தப்பட்டது.

வாதம் 17 நாட்கள் நடைபெற்றது. முதலில் மண்டனமிச்ரரின் மாலை வாடியதால் அவரே, தான் தோற்றதாக ஒப்புக்கொண்டார். துறவறம் ஏற்கவும் தயாரானார், ஆனால் அவரது மனைவி சரஸவாணி என்னும் உபயபாரதி, “இல்லறம் குறித்து தன்னிடம் ஆதிசங்கரர் வாதம் செய்து வெற்றி பெற்றால்தான் அது முழு வெற்றியாகும்” என்றார்.

அதற்கு, ஒருமாதம் கழித்து அந்த வாதத்தை வைத்துக் கொள்ளலாம் என்று சொன்னார் ஆதிசங்கரர். ‘தான் பிரம்மச்சாரி என்பதால், இல்லறம் குறித்து கேள்விகள் கேட்கப்பட்டால் அதற்கு பதில் அளிக்க தன்னைத் தயார் செய்துகொள்ள வேண்டும்’ என்று நினைத்தார் ஆதிசங்கரர். அப்போது அமருகன் என்ற அரசர் உயிரிழந்ததை அறிந்த ஆதிசங்கரர், தனது யோக சக்தியின் துணைகொண்டு, மன்னரின் உடலில் புகுந்தார். இல்லறம் குறித்த செய்திகளை அறிந்தார். அதுவரை ஆதிசங்கரரின் உடலை பத்மபாதர் என்ற சீடர் பாதுகாத்து வந்தார்.




மீண்டும் ஆதிசங்கரர், தன் உடலில் புகுந்து, சரஸவாணியுடன் வாதம் செய்தார். சரஸவாணி கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் ஆதிசங்கரர் விடையளித்ததால், ஆதிசங்கரரே வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். வாதத்தில் தோற்றதாக அறிவிக்கப்பட்ட மண்டனமிச்ரர், ஆதிசங்கரரின் சீடரானார். துறவறம் ஏற்றதும் அவருக்கு ‘சுரேசுவரர்’ என்ற பட்டம் வழங்கப்பட்டது.

ஆதிசங்கரர், சரஸ்வதி தேவியின் அம்சமாக விளங்கும் சரஸவாணியிடம், “நான் செல்லும் இடங்களுக்கெல்லாம் என்னைத் தொடர்ந்து நீ வர வேண்டும்” என்று கூறினார். சரஸவாணியும் அதற்கு உடன்பட்டார். ஆனால், ‘ஆதிசங்கரர் திரும்பிப் பார்க்காமல் செல்ல வேண்டும் என்றும், ஒருக்கால் திரும்பிப் பார்த்தால் அந்த இடத்திலேயே நின்றுவிடுவேன்’ என்றும் நிபந்தனை விதித்தார். ஆதிசங்கரரும் அதற்கு உடன்பட்டார்.

ஆதிசங்கரருக்கு நான்கு சீடர்கள் கிடைத்தனர். அவர்களைக் கொண்டு கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு பகுதிகளில் மடங்களை நிறுவி, அத்வைத தத்துவத்தைப் பரப்ப வேண்டும் என்று விருப்பம் கொண்டார் ஆதிசங்கரர். மேற்கு தொடர்ச்சி மலையில் ஆதிசங்கரர் தனது சீடர்களுடன் நடந்து வந்து, துங்கபத்ரா நதிக்கரையை அடைந்தார். அங்கு தியானம் செய்ய ஓரிடத்தில் அமர்ந்தபோது, அருகில் தவளை ஒன்று தவித்துக் கொண்டிருந்ததைக் கண்டார். அதன் அருகே ஒரு சர்ப்பம், வெயிலின் தாக்கத்தை உணர்ந்து, படமெடுத்து, அந்தத் தவளையின் மீது வெயில் படாமல் காத்தது.




பொதுவாக தவளையை விழுங்கும் தன்மை கொண்ட பாம்பு, அதைக் காப்பதைக் கண்டதும், வலிவும் வலிவற்றதும் அன்புடன் இணைந்து காணப்படும் இந்த இடம் சிறப்பானதாக இருக்க வேண்டும் என்று நினைத்தார் ஆதிசங்கரர். அனைத்தும் ஒன்றே என்ற அத்வைத தத்துவத்தை நிலைநாட்டுவதற்கு இதுவே சிறந்த இடம் என்பதை உணர்ந்து, சிறிது தூரம் நடந்தார். அதுவரை கேட்டுக் கொண்டிருந்த சரஸவாணியின் சலங்கை சத்தம் கேட்காமல் போனதால், ஆதிசங்கரர் திரும்பிப் பார்த்தார். நிபந்தனைப்படி அந்த இடத்திலேயே நின்றுவிட்டார் சரஸவாணி.

அந்த இடம்தான் சிருங்கேரி. அதே இடத்தில் பாறை மீது ஸ்ரீசக்கரம் வடித்து தேவியை ‘சாரதாம்பாள்’ என்ற திருநாமம் சூட்டி பிரதிஷ்டை செய்தார் ஆதிசங்கரர். அவரின் விருப்பம் உணர்ந்த தேவி, அவர்முன் தோன்றி, “சங்கரா, இனி இந்த இடம் சிருங்கேரி சாரதா பீடம் என்று அழைக்கப்படட்டும். நான் இங்கேயே கோயில் கொண்டு அருள்கிறேன்” என்றார்.

கோயில் அமைப்பு

சாரதாம்பாள் பெரிய ராஜகோபுரத்துடன் தனி கோயிலில் அருள்பாலிக்கிறார். அருகே வித்யா சங்கரர் கோயில் உள்ளது. இங்கு 12 ராசிகளுக்கும் 12 தூண்கள் உள்ளன. ஆதிசங்கரர், ஜனார்த்தனர், அனுமன், கருட பகவான், சக்தி கணபதி, மலையாள பிரம்மா, சுப்பிரமணியர், வாகீஸ்வரி, ராமர், ஹரிஹரன் ஆகியோர் சந்நிதிகள் அமைந்துள்ளன. மேலும், தசாவதார காட்சிகளும், அஷ்ட திக்பாலகர்களின் வடிவங்களும் உள்ளன. சாரதாம்பாள் கோயிலுக்கு தென்புறத்தில் சுரேச்வராச்சாரியாரின் அதிஷ்டானம் அமைந்துள்ளது.




கோவில் சிறப்பு

  • சிருங்கேரி மடத்தில் உலகிலேயே மிகப்பெரிய வீணை உள்ளது. இந்த வீணைக்கு சார்வபவும வீணை என்று பெயர். தமிழ்நாட்டில் தயாரான இந்த வீணை கடந்த 2003-ம் ஆண்டு சிருங்கேரி மடத்துக்கு வழங்கப்பட்டது. 10 அடி நீளம், 76 செ.மீ. அகலம், 74 செ.மீ. உயரமுடைய இந்த வீணை சுமார் 70 கிலோ எடை கொண்டது.

  • நாட்டிய சாஸ்திரத்தில் வரக்கூடிய ஒன்பது விதமான ரசங்களில் ஒரு ரசத்துக்குப் பேர் சிருங்காரம். சிருங்காரம் என்றால் அழகு என்று அர்த்தம் வரும். சிங்காரி அம்பாளை செல்லமா நாம சொல்லும் வார்த்தை கூட இந்த சிருங்காரத்தில் இருந்து வந்த ரீங்காரம்தான் சிருங்கம் + கிரி = சிருங்கேரி.

  • சிவனால் சங்கராச்சாரியாருக்கு வழங்கப்பட்டதாக கூறப்படும் லிங்கம் ஒன்றும் இங்கு உள்ளது.




திருவிழாக்கள்

வைகாசியில் வரும் சுக்ல பஞ்சமி (ஏப்ரல்/மே) தினத்தை ஒட்டி 5 நாட்கள் இங்கே சங்கர ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது. வியாச பூஜை, வரலட்சுமி விரதம், வாமன ஜெயந்தி, உமா மகேஸ்வர விரதம், மகா சிவராத்திரி, நவராத்திரி, கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி, அனந்த பத்மநாப விரத தினங்களில் அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். அந்த சமயங்களில் பல்வேறு அலங்காரங்களில் சாரதாம்பாள் அருள்பாலிப்பார்.

வெள்ளிக் கிழமைகளிலும், நவராத்திரி நாட்களிலும் சாரதாம்பாள் வெள்ளி ரதத்தில் கோயில் பிரகாரத்தைச் சுற்றி பவனி வருவார்.




What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!