gowri panchangam Sprituality

அருள்தரும் சக்தி பீடங்கள்- 10 பூரி விமலா தேவி

அம்மனின் சக்தி பீட வரிசையில், ஒடிசா மாநிலத்தில் அமைந்துள்ள விமலா தேவி கோயில் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. பைரவி பீடம் என்று அழைக்கப்படும் இத்தலம், பூரி ஜெகநாதர் கோயில் வளாகத்துள் அமைந்துள்ளது.

‘உத்கலம்’ என்று அழைக்கப்படும் ஒடிசா மாநிலத்தில் அமைந்துள்ளது பூரி நகரம். இங்கு அன்னையின் நாபி விழுந்ததால், சக்தி பீடங்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது. பூரியில் உள்ள அனைத்துக் கோயில்களிலுமே அன்னை விமலா தேவி உறைந்து இருக்கிறார் என்பது நம்பிக்கை.




தல வரலாறு

பாரதப் போர் நிறைவுபெற்ற பிறகு, பகவான் ஸ்ரீகிருஷ்ணர், யாதவர்களின் போக்குப் பிடிக்காமல் தனிமையில் அமர்ந்திருந்தார். அப்போது அங்கு வந்த வேடன் ஒருவன், மான் என்று நினைத்து அம்பை எய்தினான். வேடன் எய்த அம்பு, ஸ்ரீகிருஷ்ணரின் காலைத் தைத்தது. விஷயம் அறிந்த வேடன் மனம் கலங்கினான். அவனுக்கு ஆறுதல் சொன்ன ஸ்ரீகிருஷ்ணர், “வேடனே வருந்த வேண்டாம். தவறு உன்னுடையது அல்ல. நான் ஸ்ரீராமராக அவதாரம் எடுத்தபோது வாலியை மறைந்திருந்து அழிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. நானும் அவனை அழித்தேன். அதற்கான பலனே இப்போது கிடைத்துள்ளது” என்று கூறி, மேனியை விட்டு வானுலகம் கிளம்பினார்.




கலங்கிய கண்களுடன் வேடன், ஸ்ரீகிருஷ்ணரின் உடலை தகனம் செய்தான். உடல் எரிந்து கொண்டிருக்கும்போதே வேடன் அங்கிருந்து புறப்பட்டான். திடீரென்று பெய்த மழையால் ஸ்ரீகிருஷ்ணரின் உடல், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. மக்கள் அதைக் கண்டுபிடித்து, அது ஸ்ரீகிருஷ்ணரின் உடல் என்பதை அறிந்து அங்கு கோயில் எழுப்பினர். இக்கோயிலே பூரி ஜெகந்நாதர் கோயில் ஆகும். இக்கோயில் சோழ மன்னர் அனந்த வர்மன் சோதங்க தேவனால் 11-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.

ஸ்ரீகிருஷ்ணரின் உடல் கண்டெடுக்கப்பட்டபோது, திருமூலர் பூரி தலத்தில் இருந்ததால், இந்தக் காட்சியை அவர் நேரில் கண்டிருக்கக்கூடும் என்று அறியப்படுகிறது. ஜெகந்நாதர் தலம் குறித்த தகவல்கள் திருமந்திரத்தில் காணப்படுகின்றன. ஸ்ரீகிருஷ்ணரின் உடல் கண்டெடுக்கப்பட்ட தலமாகவும், தேவியின் நாபி விழுந்த இடமாகவும் இரட்டைச் சிறப்புடன் பூரி தலம் திகழ்கிறது.




அன்னையின் அம்சம்


இங்கே ஜெகந்நாதரின் ஒரு பக்கத்தில் லட்சுமி தேவியும் மறுபக்கத்தில் சத்தியபாமாவும் அருள்புரிகின்றனர். லட்சுமி தேவியும் சத்தியபாமாவும் அன்னையின் அம்சங்கள் ஆவர். விமலா தேவி தனியாகக் கோயில் கொண்டு அருள்பாலித்தாலும், ஜெகந்நாதரின் சிறப்புகளுக்கு அன்னையே முழுமுதல் காரணமாக இருந்திருக்கிறார். இக்கோயில் அமைவதற்கு முன்பாகவே அன்னையின் உடற்கூறு இத்தலத்தில் விழுந்துள்ளதாக அறியப்படுகிறது.

பால மூர்த்தி அமைந்துள்ள பகுதிக்கு அருகே ‘ரோகிணி குண்டம்’ என்ற சிறிய குளம் உள்ளது. குளத்தருகே விமலா தேவி கோயில் அமைந்துள்ளது. இங்கு சாந்த வடிவத்தில் பத்மாசனத்தில் அமர்ந்து தாமரை, சாமர, அபய, வரத முத்திரைகளைத் தாங்கிய 4 கரங்களுடன் அருள்பாலிக்கிறார் விமலா தேவி. சிரசில் சந்திரகலையை தரித்திருக்கிறார்.

பூரி தலத்தின் பாதுகாவலராக விளங்கும் விமலா தேவி கோயிலில் கணேசர், தேவராஜன், மாதவன், மங்களா தேவி, லட்சுமி, கர்மாபாய், பாதாளேஸ்வரர், சிவபெருமான், சூரியன், ஹனுமன், நரசிம்மர் கோயில் கொண்டுள்ளனர். துன்பங்களை நீக்கி பூரியில் என்றும் அமைதி நிலவ, விமலா தேவி உறுதுணையாக செயலாற்றி வருவதாக தாந்திரிகர்கள் கொண்டாடுகிறார்கள். மேலும், லட்சுமி தேவியும், சத்தியபாமாவும் சக்தியின் அம்சமாக இருந்து அருள்புரிகின்றனர்.




கோயில் அமைப்பு

ஜெகந்நாதர் கோயில் 665 அடி நீளமும், 640 அடி அகலமும் கொண்டது. பிரகாரச் சுவர் 20 அடி முதல் 24 அடி உயரத்தைக் கொண்டது. இக்கோயிலில் நான்கு திசைகளிலும் நான்கு மகாதுவாரங்கள் உள்ளன. கிழக்கு புறத்தில் உள்ள மகாதுவாரம் சிம்ம துவாரம் என்று அழைக்கப்படுகிறது. ஜெகந்நாதர் கோயில் விமானம், ஜகன் மோகனம், நிருத்ய மந்திரம், போக மந்திரம் என்று 4 பகுதிகளாக அமைந்துள்ளது. விமானத்தில் தேவ மூர்த்திகள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளனர்.




தரிசனம் முடிந்த பின்பு வலம் வந்தால் மார்க்கண்டேய குளம், சந்தளிசரோவரம், இந்திரத்யும்ன குளம், லோகநாத மஹாதேவ மந்திரம், ச்வேத கங்கா குண்டம், சக்ர தீர்த்தம், ஸ்வர்க்க துவாரம், மலூகதாஸ் ஆசிரமம், ஜனகாபுரி தீர்த்தங்களைக் காணலாம்.

திருவிழாக்கள்

ஜெகந்நாதரின் கோயிலில் தினமும் காலை, மாலை வேளைகளில் சிறப்புச் சேவைகள் நடைபெறும். ஆஷாட (ஆடி) மாதத்தில் சுக்ல பட்ச (அமாவாசைக்குப் பிறகு வரும்) துவாதசி தினத்தில் நடைபெறும் ரதோற்சவம் மகத்தானதாகக் கருதப்படுகிறது. இந்த உற்சவத்தின் போது, பூரி தலமே திருவிழா கோலம் பூண்டு காணப்படும். தேர்த் திருவிழா சமயத்தில் மன்னர் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் தங்கத் துடைப்பத்தால் சாலைகளை தூய்மைப்படுத்துவர். ஒவ்வொரு வருடமும் புதிய தேர்கள் செய்வது இங்கு வழக்கமாக உள்ளது. ஜெகந்நாதரின் தேர் 45 அடி, சுபத்திரையின் தேர் 43 அடி, பலபத்ரனின் தேர் 44 அடி உயரம் கொண்டதாக இருக்கும்.




What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!