gowri panchangam Sprituality

அருள்தரும் சக்தி பீடங்கள் – 7 அம்பத்தூர் வைஷ்ணவி தேவி

அம்மனின் சக்தி பீடமான வைஷ்ணவி தேவி பீடம், சென்னை அம்பத்தூருக்கு அருகே உள்ள திருமுல்லைவாயிலில் அமைந்துள்ளது. ஐம்பத்து ஒன்றாவது ஊர் என்பது, பின்னாட்களில் அம்பத்தூர் என்று மருவி அழைக்கப்படுகிறது. வைஷ்ணவி தேவியின் அருளால் செல்வ வளமும் கல்வி வளமும் கிட்டும் என்பது ஐதீகம்.

சென்னை மாநகரத்தை அடுத்துள்ள பாடல் பெற்ற தலமாக (வட) திருமுல்லைவாயில் விளங்குகிறது. சுந்தரமூர்த்தி நாயனார், அருணகிரி நாதர், வள்ளலார் ஆகியோர் திருமுல்லைவாயில் தலத்தைப் போற்றிப் பாடியுள்ளனர்.

தலவரலாறு

ஒருசமயம் திருமுல்லைவாயில் பிரதேசத்தை ஆட்சி புரிந்து வந்த தொண்டைமான் என்ற மன்னர், பகை வேந்தரிடம் தோல்வி அடைந்தார். அதன் காரணமாக, தொண்டைமானை அழிக்கும்பொருட்டு, பகை நாட்டு காவலர்கள் அவரைத் துரத்தினர். தப்பித்தால் போதும் என்று நினைத்த மன்னர், போர் யானையின் மீது ஏறி, அந்த இடத்தை விட்டு அகல நினைத்தார். வரும்வழியில் யானையின் கால்களை முல்லைக் கொடிகள் சுற்றிக் கொண்டன. முல்லைக் கொடிகளின் பிடியில் இருந்து யானையை விடுவிக்க, மன்னர் தனது கைவாளால் கொடிகளை வெட்டினார்.

வெட்டிய இடத்தில் இருந்து குருதி பெருகி ஓடுவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மன்னர், தான் கொடிகளை வெட்டியதற்கா குருதி வரும் என்று யோசித்தார். பிறகு தான் வெட்டிய கொடிகளை விலக்கிப் பார்த்தபோது அங்கு சிவலிங்கம் இருப்பதை அறிந்தார். அந்த லிங்கத்தின் உச்சியில் இருந்து குருதி வழிவதைக் கண்டார்.

போரில் தோல்வி அடைந்ததற்குகூட வருந்தாத மன்னர், சிவலிங்கத்தை வாளால் வெட்டியது குறித்து பெரிதும் கவலை அடைந்தார். இந்த உயிரைக் காப்பாற்றும் முயற்சியால்தான் இத்தகைய விபரீதம் நிகழ்ந்தது என்பதை உணர்ந்தார். உயிர் மீது இருந்த ஆசை காரணமாக உலகங்களுக்கெல்லாம் தலைவனாக உள்ள சிவபெருமானின் அபச்சாரத்துக்கு ஆளாகி விட்டோமே என்று நினைத்து, தன்னுயிரை மாய்த்துக் கொள்ள துணிந்தார். அப்போது இறைவனின் குரல், “மன்னவனே அஞ்ச வேண்டாம். உனது வாள் என்னை ஊறுபடுத்தாது. நான் மாசிலாமணி என்று அறிக” என்று ஒலித்தது. மேலும், பகைவர்களை விரட்டியடிக்கவும் நந்திதேவருக்கு ஆணை பிறப்பித்தார் சிவபெருமான்.

இறைவனின் ஆணையை ஏற்று, நந்திதேவர் சிவ கணங்களுக்கு தலைமை ஏற்று, பகைவர்களை அழித்து தொண்டைமானுக்கு வெற்றியைத் தேடித் தந்தார். இந்த நிகழ்ச்சி காரணமாக, இத்தலத்தில் நந்திதேவர் இறைவனை நோக்கி இராமல் எதிர்நோக்கியவாறு அருள்பாலிக்கிறார். இந்த வரலாறு, ‘சொல்லரும் புகழான் தொண்டைமான் களிற்றைச் சூழ்கொடி முல்லையாள் கட்டிட்டு எல்லையில் இன்பம் அவர் பெற வெளிப்பட்டருளிய இறைவன்’ என்ற தேவாரப் பாடல் மூலம் அறியப்படுகிறது.

‘தழுவுமையால் முன்னும் தமிழிறையாற் பின்னும் தொழுமிறையால் மேலும் சுவடு’ என்று மகா வித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை தனது வாட்போக்கி கலம்பகத்திலும் இதுகுறித்து குறிப்பிட்டுள்ளார்.

அன்னையின் உடற்கூறு விழுந்த இந்த இடத்தில் நடைபெற்ற இச்சம்பவத்தால் மனம் மகிழ்ந்த தொண்டைமான், தான் அறியாமல் செய்த பிழையை இறைவன் மன்னித்ததை நினைத்து அவருக்கு நன்றி தெரிவித்தார். இக்கோயிலுக்கு மிக அருகில் மன்னாதீஸ்வர பச்சையம்மன் கோயில் உள்ளது.

கோயில் அமைப்பு

வைஷ்ணவி தேவியின் சந்நிதிக்கு இருபுறமும் கந்த பெருமானும், விநாயகப் பெருமானும் எழுந்தருளியுள்ளனர். தேவியின் சந்நிதிக்கு அருகே பகவான் ரமணரின் உருவப் படம் வைக்கப்பட்டுள்ளது. கோயிலின் சுற்றுச் சுவரில் ஆஞ்சநேயர், ஸ்ரீ மஹேஸ்வரி, ஸ்ரீ நாராயணி, ஸ்ரீ பிராம்மி ஆகியோரின் உருவங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கோயிலின் வாயிற்புறத்தில் வள்ளிமலை சுவாமி, அகத்தியர், அருணகிரிநாதர், ஹயக்ரீவர் அருள்பாலிக்கின்றனர்.

திருவிழாக்கள்

ஆண்டுதோறும் இங்கு நவராத்திரி விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு நாளும் மூலவருக்கு கருட வாஹினி, அன்னபூரணி, ஸ்ரீ வள்ளி, நாக வாஹினி, காயத்ரி, கஜலட்சுமி, ராஜ ராஜேஸ்வரி, யோகேஸ்வரி, மகா காளி, சரஸ்வதி தேவி அலங்காரம் செய்யப்படும். உற்சவர் விதவிதமான வாகனங்களில் வீதியுலா செல்வார். நவராத்திரி நாட்களில் சிறப்பு பூஜைகள், அபிஷேக ஆராதனைகள், சண்டி ஹோமம், வேத பாராயணம் நடைபெறும். ஸ்ரீ சக்கரத்துக்கு லலிதா சஹஸ்ரநாம அர்ச்சனை நடைபெறும்.

திருவிழாக் காலங்களில், பக்தர்கள் வைஷ்ணவி தேவிக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து, சந்தனக் காப்பு அலங்காரம் செய்து வழிபடுவது வழக்கம். கல்வி, செல்வம், குழந்தைப் பேறு, வழக்கில் வெற்றி பெற, இழந்த செல்வத்தை மீட்க பக்தர்கள் இங்கு வழிபாடு செய்வர்.

What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!