gowri panchangam Sprituality

அருள்தரும் சக்தி பீடங்கள் – 24 காசி விசாலாட்சி

அம்மனின் சக்தி பீட வரிசையில் ‘மணிகர்ணிகை பீடம்’ என்று அழைக்கப்படும் காசித் திருத்தலம், சிவபெருமானின் 12 ஜோதிர்லிங்கத் தலங்களுள் முதன்மையானதாகக் கருதப்படுகிறது. ‘பூலோகக் கைலாயம்’ என்று அழைக்கப்படும் இத்தலம், முக்தி தரக்கூடிய ஏழு தலங்களுள் ஒன்றாகப் போற்றப்படுகிறது.

‘கங்கைக்கு நிகரான நதியும் இல்லை, காசிக்கு நிகரான பதியும் இல்லை’ என்பது ஆன்றோர் வாக்கு. இமயமலையில் பிறந்து விண்ணுக்கும் அடங்காமல் இமயவெற்புக்கும் அடங்காமல் அன்னை சக்தியின் வடிவாகப் பெருக்கெடுத்து வந்த கங்கை நதியைப் பேணி மேனியில் சுமந்தார் சிவபெருமான். கங்கைக் கரையில் அமைந்துள்ள காசி நகரத்தில் ஒருவர் இறக்க நேர்ந்தால், அவருடைய பாப வினைகள் அனைத்தும் தீர்க்கப்பட்டு, அவர் முக்தி அடைவார் என்பது நம்பிக்கை.

வாராணசி, பனாரஸ், ஆனந்த வனம், மகாமயானம், அவிமுக்தம் என்று அழைக்கப்படும் காசி நகரத்தில் 64 தீர்த்தக் கட்டங்கள் உள்ளன. விஸ்வநாதர் என்றால் அகிலத்தை ஆள்பவர் என்று பொருளாகும். இங்குள்ள தீர்த்தங்களில் நீராடினால் உடல் புனிதம் அடைகிறது. விஸ்வநாதரை வழிபட்டால் உயிர் புனிதம் அடைகிறது. பக்தர்கள் தீர்த்தக் கரையில் தங்கள் முன்னோருக்கு பிதுர் தர்ப்பணம் செய்து நேர்த்திக் கடன் செலுத்துகின்றனர்.




தல வரலாறு

தாட்சாயணியின் உடற்கூறுகள் பல்வேறு இடங்களில் விழுந்தன. கோபம் குறைந்த சிவபெருமான், மீதமுள்ள உடல்பாகங்களை கேதார்நாத்தில் இருந்து காசி நகரத்துக்கு (மகாமயானம்) கொண்டு வந்தார். தேவியின் உடலை அக்னியில் இட முயன்றபோது, தேவியின் காதில் தாரக மந்திரம் உபதேசம் செய்தார். அப்போது தேவியின் காதணி இல்லாததை அறிந்தார்.




அருகே திருமால் தனது சக்ராயுதத்தால் தீர்த்தக் கிணற்றை தோண்டி அதன் அருகே சிவபெருமானை நோக்கி தவம் செய்து கொண்டிருப்பதை உணர்ந்தார். தேவியின் காதணி குறித்து திருமாலிடம் சிவபெருமான் வினவ, அவர் அக்கிணற்றை சுட்டிக் காட்டினார். சிவபெருமான் கிணற்றை எட்டிப் பார்க்கும்போது அவரது காதணியும் கிணற்றில் விழுந்துவிட்டது.

கிணற்றில் இருந்து பேரொளியுடன் சிவலிங்கம் வெளிப்பட, அதில் சிவபெருமானின் சக்தியும் பார்வதி தேவியின் சக்தியும் இணைந்திருந்தன. திருமால் அந்த ஜோதிர்லிங்கத்தை எடுத்து இத்தலத்தில் பிரதிஷ்டை செய்து வணங்கினார். சிவபெருமானை நோக்கி தவம் புரிந்து, அவரை இத்தலத்தில் கோயில் கொண்டு பக்தர்களுக்கு அருள வேண்டினார். மேலும், “இத்தலத்தில் கங்கை சிவபெருமானை அர்ச்சிக்க வேண்டும், இங்கு பக்தர்கள் நீராடினால், அவர்களது பாபம் விலகி அவர்களுக்கு முக்தி கிடைக்க வேண்டும்” என்றும் வேண்டுகிறார்.




திருமாலின் வேண்டுகோளை ஏற்ற சிவபெருமான், அவருக்கு விஸ்வரூபம் காட்டியமையால், இத்தல சிவபெருமானுக்கு ‘விஸ்வநாதர்’ என்ற பெயர் கிட்டியது. விசாலாட்சியாக அவதரித்த பார்வதி தேவிக்கும், விஸ்வநாதருக்கும் திருமால் திருமணம் செய்து வைத்தார். பிரம்மதேவர் யாகங்கள் வளர்த்து, விஸ்வநாதர் – விசாலாட்சி திருமணத்துக்கு உதவி புரிந்தார்.

தல பெருமை:

காசி நகரத்தில் வசிக்கும் மனிதர்கள் மட்டுமல்ல, அங்கு வசிக்கும் அனைத்து ஜீவன்களும் புண்ணியம் செய்தவையே. இங்கு நாய்கள் குரைப்பதில்லை, பல்லிகள் சத்தம் எழுப்புவதில்லை. மாடுகள் யாரையும் முட்டுவதில்லை. கங்கையில் நீராடினால் நமது தேகமும், விஸ்வநாதரை தரிசித்தால் ஆன்மாவும் புனிதமடைகின்றன. முக்தி தலங்களாக குறிப்பிடப்படும் தலங்களில், காசி முதல் தலமாக சிறப்பு பெற்றுள்ளது. சைவர்கள் இதை பூலோக கைலாயம் என்றும் போற்றுகிறார்கள்.

தல பிரார்த்தனை:

பிரார்த்தனைகளில் பெரிய பிரார்த்தனை, பாவங்களை போக்கி முக்தியைப் பெறும்பேறுதான். விசாலாக்ஷியிடம் உருகிவேண்டினால் வேண்டியது வேண்டிய படி கிடைக்கும். வாழ்வில் ஒருமுறையாவது காசி பயணம் மேற்கொள்ளுங்கள், ஜோதிர்லிங்க தரிசனமும், சக்தி தரிசனமும் அமைய பெற்று பாவங்கள் தொலைந்து புதிய ஆன்மாவாய் வெளிவருவீர்கள்.

திருவிழாக்கள்

தை, ஆடி மாத அமாவாசை தினங்கள், தீபாவளி (அன்னக்கொடி உற்சவம்) ஹோலி பண்டிகை, சிவராத்திரி, நவராத்திரி தினங்களில் காசியில் சிறப்பு ஆராதனைகள் நடைபெறும். தீபாவளி சமயத்தில் தங்க அன்னபூரணி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். லட்டுத் தேர் அலங்காரத்தில் விசாலாட்சி அம்மன் அருள்பாலிப்பார். தசாஸ்வமேத கட்டத்தில் நாள்தோறும் மாலை நேரத்தில் கங்கை நதிக்கு ஆரத்தி வழிபாடு நடைபெறும் இந்நிகழ்வுக்கு ‘கங்கா ஆரத்தி’ என்று பெயர், இந்த ஆரத்தியைக் காண பக்தர்கள் குவிவது வழக்கம்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!