gowri panchangam Sprituality

அருள்தரும் சக்தி பீடங்கள் – 4 திருக்குற்றாலம் யோக பீட நாயகி

தமிழ் வளர்த்த மலைகளில் ஒன்றாகத் திகழும் திரிகூட மலை / திருக்குற்றால மலை, சக்தி பீட வரிசையில் பராசக்தி பீடமாக விளங்குகிறது.

தாட்சாயணியின் உடல்கூறு விழுந்த தலமாக இத்தலம் விளங்குவதால், இத்தலம் சக்தி பீட வரிசையில் பராசக்தி பீடமாக புகழ்பெற்று விளங்குகிறது. இந்த பீடத்துக்கு அருகில், அன்னை பராசக்தி தன் குழந்தைகளை (அரி, அரன், அயன்) தாலாட்டி வளர்ப்பதைக் குறிக்கும் வகையில், தாணுமாலவன் பூந்தொட்டில் ஆடிக் கொண்டிருக்கிறது. அம்பிகையின் அம்சமாக இந்தப் பீடம் இருப்பதால், பவுர்ணமி தினத்தில் இங்கு ‘நவசக்தி பூஜை’ செய்யப்படும். மேலும், பராசக்தி உக்கிரமாக இருப்பதால், அவர் முன்னர் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. அவர் ‘காமகோடீஸ்வரர்’ என்ற நாமம் கொண்டு அருள்பாலிக்கிறார்.

இத்தலத்தில் அன்னை யோக பீட நாயகியாக, குழல்வாய் மொழியம்மையாக பல வடிவங்களில் அருள்பாலிக்கிறார். திருவாலங்காட்டில் ரத்தின சபையிலும், தில்லையில் பொன்னம்பலத்திலும், மதுரையில் வெள்ளியம்பலத்திலும், நெல்லையில் தாமிர சபையிலும் ஆடிய சிவபெருமான் இத்தலத்தில் சித்திர சபையில் நின்றாடுவது சிறப்பாகும்.

தல வரலாறு

கயிலை மலையில் சிவபெருமானுக்கும் பார்வதிதேவிக்கும் திருமணம் நடைபெறுவதால், அதை தரிசிக்க பிரம்மதேவர், திருமால், தேவர்கள், முனிவர்கள் அனைவரும் வந்திருந்தனர். இதனால் பூமியின் வடதிசை தாழ்ந்தது. தென் திசை உயர்ந்தது. இதை சமன்படுத்த நினைத்த சிவபெருமான், அகத்திய முனிவரை அழைத்து, “உலகத்தை சமநிலைக்கு கொண்டுவர உம்மால் மட்டுமே முடியும். அதனால் நீர் தென் திசை சென்று குற்றால மலையில் திருமாலாக அருள்பாலித்து வரும் என்னை சிவலிங்கமாக மாற்றி மகுட ஆகமப்படி பூஜை செய்தால், அங்கிருந்தபடியே எங்கள் திருமணத்தைக் காணலாம்” என்று சொன்னார்.

சிவபெருமான் கூறியபடி அகத்திய முனிவர், குற்றாலம் வந்து திருமாலை தரிசிக்கச் செல்கிறார். ஆனால் அங்கிருந்த துவாரபாலர்களால் தடுத்து நிறுத்தப்படுகிறார் அகத்தியர். இதனால் வருத்தம் அடைந்த அகத்தியர், அருகில் உள்ள இலஞ்சிக் குமாரர் கோயிலுக்குச் சென்று வெண்மணலில் லிங்கம் பிடித்து சிவபெருமானை வழிபடுகிறார். அவர் முன் தோன்றிய முருகப் பெருமான், சிவக் கோலத்தை கலைத்துவிட்டு வைணவக் கோலத்துடன் கோயிலுக்குச் சென்று வழிபடுமாறு அகத்தியருக்கு யோசனை தெரிவிக்கிறார்.

அதன்படி அகத்தியரும் நெற்றியில் திருமண் இட்டு, கழுத்தில் துளசி மாலை அணிந்து கோயிலுக்குள் சென்று திருமாலை வழிபடுகிறார். மேலும், திருமாலின் தலையில் கைவைத்து, ‘திருமேனி குறுக குறுக’ என்று வேண்டுகிறார். அதனால் நெடிய திருமால் குறுகிய சிவபெருமானாக மாறுகிறார். அங்கேயே அகத்தியருக்கு சிவபெருமான் – பார்வதி தேவியின் திருமணக் காட்சி கிடைக்கிறது.




 

மலையின் சிறப்பு

திரிகூட மலையானது மூன்று சிகரங்கள், அருவி, குன்று மட்டுமல்லாது, மூன்று வித சிறப்புகளைக் கொண்டதாகவும் விளங்குகிறது. படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் மூன்று தொழில்களை பிரம்மதேவர், திருமால், சிவபெருமான் நிறைவேற்றி வருகிறார்கள். உலக இயக்கம் நடைபெற படைப்புத் தொழில் புரிய ஒருவரை படைக்க வேண்டும் என்று விரும்பிய ஆதிசக்தி, பிரம்மதேவரைப் படைத்தார். பிரம்மதேவர் சிருஷ்டித் தொழிலை தொடங்கி, மனிதர்கள், மிருகங்கள், பறவைகள், நீர்வாழ் உயிரினங்கள் என்று அனைத்தையும் உருவாக்கத் தொடங்கினார். அவ்வாறு படைக்கப்பட்ட உயிரினங்களைக் காக்க திருமால் படைக்கப்பட்டார். அதன்படி திருமால் உயிரினங்களை பலவகை இன்னல்களிடம் இருந்து காத்து அருளினார்.

படைத்தலும், காத்தலும் மட்டுமே நிகழ்ந்தால், உயிர்களின் கூட்டம் கணக்கற்ற முறையில் பெருகிவிடும் என்பதாலும், உலகில் சமநிலையை எய்த வேண்டும் என்பதாலும், அழித்தல் தொழிலைப் புரிய ஒருவரைப் படைக்க வேண்டும் என்று ஆதிசக்தி விரும்பினார். அதன்படி அழிக்கும் தொழிலைப் புரிய சிவபெருமான் படைக்கப்பட்டார்.

பராசக்தி, நடுநாயகமாக இருந்து செயல்பட,  மூன்று சிகரங்களும் படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய தொழில்களை நிறைவேற்றிவரும் முப்பெரும் தேவர்களைக் குறிக்கின்றன.

சிகரங்களில் இருந்து கொட்டும் அருவி, அன்னை பராசக்தியின் கருணை ஊற்றாகும். மலையாக பராசக்தி இருந்து காக்கிறார். சிகரங்கள், அருவி, மலை ஆகிய மூன்றும் மும்மூர்த்திகள், அன்னையின் கருணை, பராசக்தி ஆகிய மூன்று வடிவங்களாக உருவகப்படுத்தப்படுகின்றன.

கு+தாலம் என்பதில் ‘கு’ என்பது பிறவிப் பிணியையும், ‘தாலம்’ என்பது தீர்ப்பது என்ற பொருளையும் குறிக்கிறது. பிறவிப் பிணியைத் தீர்க்கும் தலமாக திருக்குற்றாலம் விளங்குகிறது. வைராக்கிய நெஞ்சம் கொண்டு அன்னையை வணங்கினால், மனதில் உள்ள மாசுகளைக் களைந்து, நம்முடைய பிறப்புகளை அழித்து, பேரானந்த வாழ்வுக்கு வழி செய்வார் என்பது உறுதியாகிறது.




கோயில் சிறப்புகள்

அகத்தியர் தன் கைவிரல்களால், சிவலிங்கத்தின் தலையில் வைத்து அழுத்தியதால், லிங்கத்தின் மேல்பகுதியில் விரல்களின் தடம் இருப்பதைக் காணலாம். அகத்தியர் கைவைத்து அழுத்தியதால் சிவபெருமானுக்கு தலைவலி ஏற்பட்டது. அதனால் இன்றும் காலை 9-30 மணிக்கு நடைபெறும் பூஜையில், சிவலிங்கத்துக்கு தைலம் சாற்றுவது நடைபெறுகிறது. (பசும்பால், இளநீர், சந்தனம் முதலான 42 விதமான மூலிகைகளூடன் நல்லெண்ணெய் சேர்த்து இந்தத் தைலம் தயாரிக்கப்படுகிறது).

திருக்குற்றால நாதருக்கு அபிஷேகம் செய்த பிறகு, பக்தர்களுக்கு இந்தத் தைலம் பிரசாதமாக வழங்கப்படும். மேலும், அர்த்த ஜாம பூஜையின்போது, சிவபெருமானுக்கு ‘கடுக்காய் கஷாய’ நைவேத்யம் செய்யப்படும். அருவி விழும் இடத்தில் இருப்பதால் சிவபெருமானுக்கு ஜுரம், குளிர் காய்ச்சல் உண்டாகும் வாய்ப்பு இருப்பதால், இந்தக் கஷாயம் படைக்கப்படுகிறது.




திருவிழாக்கள்

அன்னை யோக பீட நாயகி சந்நிதியில் பல்வேறு விழாக்கள் நடைபெற்று வருகின்றன. அதில் குறிப்படத் தகுந்தது 10 நாள் நவராத்திரி விழாவாகும். ஆடி அமாவாசை தினத்தில் லட்சதீபம் ஏற்றப்படும். அன்று கோயில் முழுவதும் 1,008 தீபம் ஏற்றும் ‘பத்ரதீப’ விழா நடைபெறும்.




What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!