gowri panchangam Sprituality

அருள்தரும் சக்தி பீடங்கள் – 23 உஜ்ஜைனி மங்கள சண்டி

அம்மனின் சக்தி பீட வரிசையில் மகோத்பலா பீடமாகக் கருதப்படும் உஜ்ஜைனி மங்கள சண்டி கோயில், சிவபெருமானின் ஜோதிர்லிங்கத் தலமாகவும் கருதப்படுகிறது. ஏழு மோட்ச நகரங்களில் (அயோத்தி, மதுரா, ஹரித்வார், காசி, காஞ்சி, அவந்திகை, துவாரகை) ஒன்றாக உஜ்ஜைனி நகரம் கருதப்படுகிறது

மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள உஜ்ஜைனி நகரத்தில் அமைந்துள்ளது மகா காளேஸ்வரர் கோயில். சிப்ரா ஆற்றங்கரையில் மூன்று அடுக்குகள் கொண்ட கோயிலாக அமைந்துள்ள இது, தேவார வைப்புத் தலமாகும். சிவபெருமானின் லிங்க வடிவம் தன்னுள்ளேயே சக்தி ஓட்டத்தை உள்வாங்கி தானாகத் தோன்றியதாக ஐதீகம். இத்தலத்தில் தெற்கு நோக்கியபடி தட்சிணா மூர்த்தியாக சிவபெருமான் அருள்பாலிக்கிறார்.




தல வரலாறு

அவந்தி மாநகரில் விலாசன் என்ற அந்தணர் வசித்து வந்தார். சிறந்த சிவபக்தரான இவர், தினமும் சிவலிங்கம் பிடித்து வைத்து சிவ ஆராதனை செய்து வந்தார். இவருக்கு நான்கு மகன்கள். அவர்களும் தந்தைக்கு உதவியாக சிவத் தொண்டு புரிந்து வந்தனர். அச்சமயம் தூஷணன் என்ற அரக்கன், அவந்தி மாநகர மக்களுக்கு பலவிதங்களில் இன்னல்கள் கொடுத்து வந்தான். ஊர் மக்கள் அனைவரும் விலாசனை அணுகி, தங்களைக் காக்குமாறு வேண்டினர்.

ஒருநாள் விலாசன், சிவபூஜை செய்யும்போது, தூஷணன் வந்து பூஜைப் பொருட்களை களைத்து, சிவலிங்கத்தை அழிக்க முற்பட்டான். அப்போது லிங்கத்தைப் பிளந்து கொண்டு, மகா காளர் தோன்றி, அரக்கனை அழித்தார். அதுமுதல், ஊர் மக்களின் வேண்டுகோளுக்கு இணங்கி, லிங்க வடிவில் இத்தலத்தில் கோயில் கொண்டு, ஈசன் அருள்பாலிப்பதாக நம்பிக்கை.




தேவகிக்கு பிறந்த எட்டாவது குழந்தையான கிருஷ்ணர், யசோதையின் வீட்டில் விடப்பட்டார். அவருக்குப் பதிலாக நந்தகோபர் இல்லத்தில் பிறந்த பெண் குழந்தையை, வசுதேவர் தூக்கி வந்தார். அந்தப் பெண் குழந்தையை விண்ணில் தூக்கி எறிந்து வாளால் வெட்டுவதற்கு கம்சன் முற்பட்டபோது, அக்குழந்தை காளி உருவம் கொண்டு இங்கு தங்கிவிட்டதாகக் கூறப்படுகிறது. காளிதாசருக்கு அருள்புரிந்த காளி மாதா இவரே என்பது நம்பிக்கை.

கோயில் அமைப்பு

மகா காளேஸ்வரர் கோயில் வடக்கு பார்த்த பிரதான வாயிலுடன் விஸ்தாரமான வெளிப் பிரகாரத்துடன் அமைந்துள்ளது. உள்ளே நுழைந்ததும், ஆதி கோயிலின் சிதைந்த கல் சிற்பங்கள் சேகரித்து வைக்கப்பட்டிருப்பதைக் காணலாம். இவற்றுக்கு எதிரே மகா காளர் சந்நிதி அமைந்துள்ளது. மகா காளர் சந்நிதி வாயிலில் நீலகண்டேஸ்வரர் அருள்பாலிக்கிறார்.




மங்கள சண்டிகா ஹோமம்

அதிக சாமர்த்தியம், அதிக கோபம் கொண்டவராக மங்கள சண்டி விளங்குகிறார். திருமணத்தை அருளும் மங்கள நாயகியாகப் போற்றப்படுகிறார். மனு வம்சத்தில் பிறந்த மங்களன் என்பவன், சண்டியை வணங்கிய பின்பு ஏழு கண்டங்களையும் வெற்றி கண்டான். நவராத்திரி நாட்களில் சிவன் கோயில்களில் மகா சண்டி யாகம் நடைபெறும். சிங்க வாகனத்தைக் கொண்ட மங்கள சண்டிகை, ஒன்பது மாதர்களால் சூழப்பட்டுள்ளார். தனது எட்டு கரங்களில் சங்கு, சக்கரம், கதை, வாள், கேடயம், அம்பு, வில், பாசம் ஆகியவற்றைக் கொண்டிருக்கிறார்.




திருவிழாக்கள்

சிவராத்திரி, பிரதோஷம், நவராத்திரி, கார்த்திகை மாத பவுர்ணமி, ஆடி மாத நாக பஞ்சமி நாட்களில் இங்கு சிவபெருமான், காளி தேவிக்கு சிறப்பு அபிஷேகங்கள், ஆராதனைகள் நடைபெறும். அப்போது பக்தர்கள், பல விதமான பூக்கள், வில்வம் கொண்டு அர்ச்சனை செய்வது வழக்கம்.




What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!