gowri panchangam Sprituality

அருள்தரும் சக்தி பீடங்கள் – 19 மானசரோவர் தாட்சாயணி

அம்மனின் சக்தி பீட வரிசையில் மானசரோவர் தாட்சாயணி மிகவும் சிறப்பு வாய்ந்தவராகக் கருதப்படுகிறார். காமாட்சி, மீனாட்சி, விசாலாட்சி, காளி, பகவதி ஆகிய பெயர்களைத் தாங்கி பல இடங்களில் கோயில் கொண்ட தேவி, இத்தலத்தில் தாட்சாயணி என்ற பெயரையே தாங்கி அருள்பாலிக்கிறார். தேவியின் தலைப்பகுதி இத்தலத்தில் விழுந்ததாகக் கூறப்படுகிறது.




இமயமலையில் மணி முடியாகத் திகழ்ந்து கொண்டிருக்கும் கயிலை மலைக்கு அருகில் அமைந்துள்ளது மானசரோவர் தடாகம். கயிலை மலையையே ஈசனின் உருவமாகக் காண்பது வழக்கம். இங்கு சிவபெருமான், பார்வதி தேவியுடன் எழுந்தருளியுள்ளார். 22,028 அடி உயரமும், 32 மைல் சுற்றளவைக் கொண்டது கயிலை மலை.

கயிலை மலையும், மானசரோவர் தடாகமும் சேர்ந்து கவுரி சங்கரம் என்று அழைக்கப்படுகிறது. கயிலாயம் சிவ வடிவமாகவும், மானசரோவர் சக்தி வடிவமாகவும் கருதப்படுகிறது. இங்கு தாட்சாயணியே தடாக வடிவத்தில் அருளாட்சி புரிவதாக அறியப்படுகிறது.




தல வரலாறு

தட்சன் என்ற அரசர், சிவபெருமானை நோக்கி கடும் தவம் புரிந்தார். ஈரேழு உலகத்தையும் அடக்கி ஆள வேண்டும் என்றால் சிவபெருமான் தனது மருமகனாக வர வேண்டும் என்பதை மனதில் நினைத்துக் கொண்டார். தட்சனின் தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான் அவருக்கு வேண்டிய வரங்களை அளிப்பதாக உறுதி அளித்தார். சிவபெருமான் தனக்கு மருமகனாக வர வேண்டும் என்று அவரிடம் வேண்ட, ஈசனும் அவ்வாறே வரமளித்தார். தட்சனின் எண்ணத்தை உணர்ந்து கொண்ட சிவபெருமான் தக்க சமயத்தில் தட்சனுக்கு பாடம் புகட்ட எண்ணி தட்சணை அழிக்க முற்படும்போது, தட்சனின் தலை உருண்டது. தட்சன் அழிந்ததும், தட்சன் மகள் என்று தாம் அழைக்கப்படுவதை விரும்பாத தாட்சாயணி, தன் உடலை தீக்கிரையாக்கிக் கதை நமக்கு தெரிந்தது தான்.




தாட்சாயணியின் உடலைத் தாங்கிய சிவபெருமான் ருத்ர தாண்டவம் ஆடினார். அதன் காரணமாக, அனைத்து உலகங்களும் நடுங்கின. இந்த ஆட்டத்தைக் கண்ட திருமால் தனது சக்கரத்தை ஏவினார். திருமாலின் சக்கரம், தாட்சாயணியின் உடலை 51 துண்டுகளாகச் சிதறி விழும்படி செய்தது. அப்படி தாட்சாயணியின் தலைப்பாகம் விழுந்த இடம்தான் கயிலை மலைக்கு அருகில் உள்ள மானசரோவர். அதனாலேயே தாட்சாயணி என்ற பெயரிலேயே இத்தலத்தில் தேவி அருள்பாலிக்கிறார்.

மானசரோவர் தடாகம்

கயிலை மலையில் இருந்து பெரும் சிந்து நதி, சட்லஜ் ஆறு, காக்ரா ஆறு, பிரம்மபுத்திரா ஆறுகள் உற்பத்தியாகின்றன. 52 கிமீ தொலைவு கொண்ட இந்த கிரிவலப் பாதையில் பயணிக்க 15 மணி நேரம் ஆகும்.

கயிலை மலையின் சுற்று வட்டாரத்தில் கவுரி குண்டம், ராட்சச தடாகம் (உப்புநீர் ஏரி), மானசரோவர் தடாகம் (நன்னீர் ஏரி) ஆகிய தீர்த்தங்கள் அமைந்துள்ளன. கயிலை மலைக்கு தெற்கில் அதன் அடியில் இருந்து 40 மைல் தூரத்தில் மானசரோவர் தடாகம் அமைந்துள்ளது. இது 200 சதுர மைல் பரப்பும், 62 மைல் சுற்றளவும் கொண்டது. இதன் கருநீல நிறம் ஆழத்தையும் அமைதியையும் வெளிப்படுத்துகிறது. 250 அடிக்கும் மேலாக ஆழம் கொண்டது.




கடல் மட்டத்தில் இருந்து 15 ஆயிரம் அடி உயரத்தில் உள்ள இத்தடாகம், படைத்தல் தொழில் புரியும் பிரம்மதேவரால் தோற்றுவிக்கப்பட்டது என்று புராணங்கள் உரைக்கின்றன.

‘மானசரோவர்’ என்றால் ‘மனதில் இருந்து தோன்றிய தடாகம்’ என்று பொருள். வசிஷ்டர், மரீசி உள்ளிட்ட முனிவர்கள், தாங்கள் நீராடுவதற்காகவும், சிவ வழிபாட்டுக்காகவும் நீர்நிலையை அருளுமாறு பிரம்மதேவரை வேண்டினர். அதன்படி பிரம்மதேவர் தன் மனதில் இருந்து இந்த தடாகத்தை உருவாக்கினார் என்று கூறப்படுகிறது. தடாகத்தின் நடுவே சுவர்ணலிங்கமாக ஈசன் முனிவர்களுக்காக காட்சி கொடுத்தார். இந்தக் குளத்தின் நீரே பூமிக்கடியில் சென்று கங்கையாக உற்பத்தியாவதாக கருதப்படுகிறது.

இந்தத் தடாகத்தில் ஒரு முறை நீராடினால், கடந்த 100 பிறவிகளில் செய்த தீவினைகளும் நீங்குவதாக திபெத்திய புராணம் தெரிவிக்கிறது. தேவியின் அம்சமாக இத்தடாகம் கருதப்படுவதால், மேலும் சிறப்புடையதாகக் கருதப்படுகிறது. இந்த ராட்சச தடாகத்தில் இருந்து ராவணன், சிவபெருமானை நோக்கி தவம் புரிந்ததாகவும் கூறப்படுகிறது.




கயிலைச் சிறப்பு

ஒவ்வொரு ஆண்டு, பல்லாயிரக்கணக்கானோர் கயிலாய யாத்திரை மேற்கொள்கின்றனர். சீனாவின் திபெத்திய பீட பூமியில் அமைந்துள்ள கயிலை மலைக்கு இந்துக்கள் மட்டுமின்றி, புத்த மதம், சமண மதம், பொம்பா மதத்தைச் (திபெத்தின் ஆதி மதம்) சேர்ந்தவர்களும் வருகை புரிகின்றனர். இந்து மதத்தினர் கயிலை மலையை வலமாகச் சுற்றும்போது, பொம்பா மதத்தினர் இடமாகச் சுற்றுகின்றனர்.

நேபாளம் வழியாகச் செல்லும் வழி சுற்றுப் பாதையாக இருப்பதால், தற்போது இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தில் பிதவ்ரகட் மாவட்டம் வழியாக திபெத் எல்லை வரை இந்திய அரசு சாலை அமைத்துள்ளது. இப்பாதை வழியாக 97 கிமீ மட்டும் திபெத் வழியாகப் பயணித்து கயிலை மலையை அடையலாம்.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!