Entertainment News

விஷப்பெட்டியாக மாறிவிட்ட ஃப்ரிட்ஜ்! ஷாக்கிங் தகவல்கள்




விஷப்பெட்டியாக மாறிவிட்ட ஃப்ரிட்ஜ்! ஷாக்கிங் தகவல்கள்… சமாளிக்க 10 கட்டளைகள்!அவேர்னஸ்

விஷப்பெட்டியாக மாறிவிட்ட ஃப்ரிட்ஜ்!

ஷாக்கிங் தகவல்கள்… சமாளிக்க 10 கட்டளைகள்!அவேர்னஸ் ”குளிர்சாதனப்பெட்டி (Refrigerator) என்பது இன்று எல்லா இல்லங்களிலும் அத்தியாவசியப் பொருளாகிவிட்டது. ஆனால், பலருக்கும் தெரியாது அதில் பொதிந்துள்ள ஆபத்துகள் பற்றி!” என்று அதிர்ச்சி கொடுக்கும் தகவல்கள் மற்றும்  குளிர்சாதனப்பெட்டி கண்டுபிடிக்கப்பட்டதன் நோக்கம் தொடங்கி, அதன் பயன்பாடு திசைதிரும்பியதால் அதிகரித்துள்ள உடல்நலப் பிரச்னைகள், ஃப்ரிட்ஜுக்கான மாற்றுவழி வரை விரிவாகப் இங்கே பார்க்கலாம்…




குளிர்சாதனப்பெட்டி… எதற்காக?

“மருந்தையும், சமைக்காத உணவையும் குளிர்படுத்தி பாதுகாத்து நீண்ட நாட்களுக்கு பயன்படுத்த கண்டுபிடிக்கப்பட்ட மின்சாதனமே, இயந்திர தொழில்நுட்ப வரலாற்றில் முக்கியக் கண்டுபிடிப்பான குளிர்சாதனப்பெட்டி. உணவுப் பொருட்கள் அதிகமாகக் கிடைக்கும் காலங்களில் அவற்றைப் பாதுகாத்து, குறிப்பிட்ட அந்த உணவுக்கு தட்டுப்பாடு வரும் காலத்தில் பயன்படுத்துவது, உணவுகளை உற்பத்தி இடங்களில் இருந்து வேறு இடங்களுக்கு பாதிப்படையாமல் எடுத்துச் செல்வது, மருந்துகளைப் பாதுகாக்கப் பயன்படுத்துவது, பால், காய்கறி போன்ற சமைக்காத உணவுகளைப் பாதுகாத்துப் பயன்படுத்துவது… இதெல்லாம்தான் குளிர்சாதனப்பெட்டி கண்டுபிடிப்பின் நோக்கங்கள்.

இன்றோ, சமைத்த உணவுகளையும் ஃப்ரிட்ஜுக்குள் வைப்பது, பல வகையான உணவுப் பொருட்களையும் வைக்கும்போது சரியாக மூடாமலும், சரிவர பிரித்து வைக்காமலும் ஸ்டோர் செய்வது, போன வாரம் வாங்கிய காளான் முதல், மிகுந்துபோன குழம்பு வரை அடைத்து வைப்பது என… ஒவ்வொரு வீட்டிலும் குளிர்சாதனப்பெட்டி, கண்ணுக்குப் புலப்படாத விஷப்பெட்டியாகத்தான் நின்றுகொண்டிருக்கிறது!




குளிர்சாதனப்பெட்டி அவசியமா?

குளிர்சாதனப்பெட்டி அவசியம் இல்லை என்பதுதான் உண்மை. நம் முன்னோர் குளிர்சாதனப் பெட்டியை அறியவில்லை; அவர்களின் ஆரோக்கியத்துக்கும் குறைவில்லை. அவர்களிடம் இருந்த சுறுசுறுப்போ, நேரமோ நமக்கில்லை என்பதால், நம் சோம்பேறித்தனத்துக்கு சாமரம் வீசும் ஃப்ரிட்ஜை சார்ந்து வாழப் பழகிவிட்டோம். முழுக்க முழுக்க, மேற்கத்திய நாடுகளில் உள்ளவர்களுக்காக கண்டிபிடிக்கப்பட்ட இந்த சாதனம், அவர்களின் சீதோஷ்ணம், வேலை, சூழலுக்குப் பொருந்தும். ஆனால், எல்லாவற்றிலும் ‘வெஸ்டர்னைஸடு’ ஆகும் நமக்கு, ஃப்ரிட்ஜும் விதிவிலக்கல்லாமல் போய்விட்டது. இதனால், அடிக்கடி காய்கறி வாங்க வேண்டிய வேலையும், மூன்றுவேளை சமைக்கும் வேலையும் குறையும் என்பதே பலரின் நினைப்பு. கொஞ்சம் மெனக்கெட்டால், இந்த சார்பை விலக்கலாம். இல்லையென்றால், அதில் பொதிந்துள்ள ஆபத்துகள் நம் ஆரோக்கியத்தையும், ஆயுளையும் குறைக்கும்.




செய்ய வேண்டிய விஷயங்கள்!

பெரியவர்கள், குழந்தைகள் உள்ள வீடுகளில் வயிற்றுவலி, பேதியில் இருந்து, ஒபிஸிட்டி எனப்படும் உடற்பருமன் வரை ஃப்ரிட்ஜ் உணவுகள் ஏற்படுத்தும் பாதிப்புகள் பல. ‘இவ்வளவு பாதிப்புகளா?! ஆனாலும், ஃப்ரிட்ஜ் இல்லாமல் இருக்க முடியாதே?’ என்பவர்களுக்கு… 10 கட்டளைகள்… இதோ!

1. 5 டிகிரி செல்சியஸ் முதல் 60 டிகிரி செல்சியஸ் வரையிலான டெம்பரேச்சரில் பாக்டீரியாக்கள் மிக வேகமாக வளரக்கூடும் என்பதால், -15 டிகிரி செல்சியஸ் முதல் 5 டிகிரி செல்சியஸ் அளவுக்குள் குளிர்சாதனப்பெட்டியின் டெம்பரேச்சரை செட் செய்ய வேண்டியது மிக முக்கியம். முடிந்தவரை 4 டிகிரி செல்சியஸ் அளவில் எப்போதும் வைத்துப் பயன்படுத்துவது நல்லது.

2. மின்சாரம் தடைபட்டால் இரண்டு மணி நேரம் மட்டுமே குளிர்சாதனப் பெட்டியில் உள்ள உணவு கெடாமல் இருக்கும். அதற்குப் பின்னும் மின்சாரம் இல்லையெனில், உடனடியாக ஃப்ரிட்ஜில் உள்ள உணவுகளை வெளியே எடுத்து, சூடுபடுத்தி சாப்பிட்டுவிட வேண்டும். வெயில் காலத்தில், ஒரு மணி நேரத்துக்கு மேல் மின்சாரம் இல்லாமல் இருந்தாலே, உணவுகளை வெளியே எடுத்துப் பயன்படுத்திவிட வேண்டும்.

3. காய்கறி, பழங்கள், கீரைகள், உணவுகள், அசைவ உணவுகள் இப்படி அனைத்தையும் சரிவரப் பிரித்து ஸ்டோர் செய்ய வேண்டும். அதாவது, ஃப்ரீஸரில் அசைவ உணவுகள், டிரேயில் பால் பாக்கெட்டுகள், டோர்களில் கூல்டிரிங்ஸ், கீழ் டப்பாவில் காய்கறிகள், பழங்கள் போன்ற சமைக்காத உணவுகள், நடுத்தட்டில் மாவு உள்ளிட்ட உணவுப் பொருட்கள், மேல்தட்டில் சமைத்த உணவு… இப்படி ஒவ்வொன்றையும் அதற்கான இடத்தில் வைக்க வேண்டும். ஒவ்வொன்றையும் முறையாக இறுக்கமாகப் பேக் செய்து/ மூடி வைக்க வேண்டியது மிக அவசியம். ஒரு பொருளுக்கும் இன்னொரு பொருளுக்கும் இடையில் இடைவெளி இருக்க வேண்டியது மிக முக்கியம்.




செய்யக் கூடாத விஷயங்கள்!

4. என்னதான் குளிர்சாதனப்பெட்டியில் வைக்கப்பட்டாலும், உணவில் மாற்றம் நிகழத்தான் செய்யும். உதாரணமாக, பிரெட் உள்ளிட்ட மைதா சார்ந்த பொருட்களில் உருவாகும் பூஞ்சை, மற்ற உணவுப் பொருட்களையும் பாதிக்கும் என்பதால் நீண்ட நாட்களுக்கு எந்தப் பொருளையும் ஸ்டோர் செய்ய வேண்டாம்.

5. ஆட்டுக்கறி, கோழிக்கறி, வடித்த சாதம் போன்றவற்றில் பாக்டீரியா வளர்ச்சி அதிகமாக இருக்கும், அது மற்ற உணவுகளுக்கும் எளிதில் பரவக்கூடும் என்பதால் இவற்றை ஃப்ரிட்ஜில் ஸ்டோர் செய்வதைத் தவிர்க்கவும்.

6. அதிக சூடான உணவுப் பொருட்களை ஒருபோதும் குளிர்சாதனப்பெட்டிக்குள் வைக்கக்கூடாது. அது அதிக மின்சாரம் செலவாக வழிவகுப்பதுடன், அந்த வெப்பம் ஃப்ரிட்ஜின் மொத்த டெம்பரேச்சரையும் தொந்தரவு செய்து, உணவுப் பொருட்களை பாதிக்கும்.

7. பொதுவாக, குறைந்த டெம்பரேச்சரில் இருந்து அதிக டெம்பரேச்சருக்கு உள்ளாகும்போது, அந்தப் பொருட்களில் பாக்டீரியாவின் வளர்ச்சி அதிகரிக்கும். எனவே, குளிர்சாதனப் பெட்டியில் இருந்து எடுக்கும் காய்கறிகள், உணவுகளை அவற்றிலிருக்கும் குளிர் தன்மை குறைந்ததும் சமைத்தோ, சூடுபடுத்தியோ பயன்படுத்தாவிட்டால் ஆபத்து.

8. சமைத்த உணவுகளை ஃப்ரிட்ஜில் ஸ்டோர் செய்வது பரிந்துரைக்கத்தக்கதல்ல. காரணம், அதில் நுண்கிருமிகள், பாக்டீரியாக்கள் உருவாகி பாழாவதோடு, மற்ற உணவுப் பொருட்களையும் பாதிக்கும். இதில் சிலர் சமைத்து, உள்ளே வைத்து, வெளியே எடுத்து சூடுபடுத்தி, மீண்டும் உள்ளே வைத்து என்று பயன்படுத்தினால் அது உணவாக இருக்காது, விஷமாகிவிடும்.

9. கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகள், வயதானவர்கள், நோயாளிகள், நுண்சத்து குறைபாடு உள்ளவர்கள் குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்பட்ட உணவுகளை முற்றிலும் தவிர்ப்பதே நல்லது.

10. குளிர்சாதனப்பெட்டியில் வைக்கும் உணவுகளில் புரதச்சத்து, மாவுச்சத்து, கொழுப்புச்சத்து போன்றவற்றில் பெரிதாக மாற்றம் ஏற்படாது என்றாலும், சுவை, விட்டமின் சத்து குறைவதுடன், போனஸாக பாக்டீரியா, பூஞ்சைத் தொற்று கிடைக்கும். எனவே, எச்சரிக்கை தேவை!

ஃபிரிட்ஜ்… உணவுப் பொருட்களை ஃப்ரெஷ்ஷாக எடுத்து சாப்பிடத்தானே அன்றி, அழுகும் நிலைக்கு முன்வரை வைத்திருந்து சாப்பிட அல்ல என்பதை நினைவில் கொள்க!”

விழிப்பு உணர்வும் எச்சரிக்கையும் கண்டிப்பாக நம் அனைவருக்கும் வேண்டும்.




What’s your Reaction?
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!