Entertainment gowri panchangam News Sprituality

மாசி மகம் 2023 எப்போது ?விரத பலன்கள் முழுவிவரம்




மாசி மகத்தின்  சிறப்பு

மகா சிவராத்திரிக்கு அடுத்த படியாக மாசி மாதத்தில் மிகவும் புண்ணியமான, முக்கிய நாளாக போற்றப்படுவது மாசி மகம். புனித நீராடுவதற்கும், பாவங்கள் தீரவும், முன்னோர்கள் சாபம் விலகும் வழிபடுவதற்கான மிக உன்னதமான நாள் மாசி மக திருநாளாகும். இந்த நாளில் அமிர்தத்திற்கு இணையாக போற்றப்படும் கங்கா தேவி, அனைத்து நீர் நிலைகளிலும் வாசம் செய்வதாக ஐதீகம். இதனால் மாசி மகத்தன்று புனித நீராடினால் அனைத்து புண்ணிய நதிகளிலும் நீராடிய பலன் கிடைக்கும்.

பெளர்ணமி தினம் சந்திர வழிபாட்டிற்கும், சிவ வழிபாட்டிற்கும் ஏற்ற நாளாகும். பெளர்ணமியுடன் மகம் நட்சத்திரம் கூடும் மாசி மகம் தினத்தின் சிவ பெருமானுடன் சந்திரனையும் வழிபட்டால் அனைத்து விதமான தோஷங்களில் இருந்தும் விடுபட முடியும். புத்தியின் செயல்பாட்டிற்கு காரணமான சந்தினின் பாதிப்பால் மனம் தடுமாறால் இருப்பதற்காகவே இது போன்ற சிறப்பான நாட்களில் தியானம், வழிபாடு போன்றவற்றில் மனதை ஈடுபடுத்தும் படி புராணங்கள் சொல்கின்றன.




தமிழ் மாதங்களில் 11 வது மாதமாக விளங்குவது மாசி மாதம். சூரிய பகவான், கும்ப ராசியில் தனது பயணத்தை துவங்கும் காலமாகும். இறை வழிபாட்டிற்கான மாதமாகவும், பல சிறப்புக்களையும் கொண்ட மாசி மாதத்தில் வரும் முக்கியமான தினம் மாசி மகம்.மாசி மாதம் பெளர்ணமி திதியுடன் வரும் மகம் நட்சத்திர தினத்தை மாசி மகம் என்கிறோம். இந்த நாளை இந்துக்கள் கடலாடும் விழா என்ற பெயரில் கொண்டாடுவதுண்டு. மாசி மகம் தினத்தில் கடல், ஆறு, குளம் ஆகியவற்றில் புண்ணிய நதியாம் கங்கை கலந்திருப்பதாக ஐதீகம். இதனால் மாசி மகத்தன்று புனித நீராடுவது ஏழு ஜென்ம பாவங்களை போக்கும் என சொல்லப்படுகிறது. இதன் காரணமாகவே 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பகோணத்தில் மகாமகம் நடத்தப்படுகிறது. இதையே வட இந்தியாவில் கும்பமேளாவாக கொண்டாடுகின்றனர். ​

மாசி மக வரலாறு :

பிரம்மகஹ்தி தோஷத்தால் பாதிக்கப்பட்ட வருண பகவான், கடலில் மூழ்கி கிடந்தார். இந்த தோஷத்தில் இருந்து விடுபட, சிவ பெருமானை அவர் வணங்கினார். வருணனுக்கு, சிவ பெருமான் அருள் செய்து, அவர் நிவாரணம் பெற்ற தினம் தான் மாசி மகம். இந்த நாளில் புனித நீராடுபவர்களின் பாவங்களை போக்கி அருள வேண்டும் என வருண பகவான் கேட்டுக் கொண்டதால், சிவ பெருமானும் அவ்வாறே அருளினார். வருண பகவான் தோஷ நிவர்த்தி பெற்ற நாள் என்பதால் இந்த நாளில் புனித நீராடுவது புண்ணியமானதாகும்.

சக்தியே பெரியது என சிவனிடம் ஆணவத்துடன் விவாதம் செய்ததன் விளைவாக, சிவனின் சாபத்தால் வலம்புரி சங்காக தாமரையில் தவம் இருந்தால் அன்னை பார்வதி. தட்ச பிரஜாபதி தனது மனைவியுடன் வந்து யமுனை நதியில் நீராடினான். வலம்புரி சங்கினை அவர் கையில் எடுத்ததும் அது அழகிய பெண் குழந்தையாக மாறியது. அந்த குழந்தையை அரண்மனைக்கு எடுத்து வந்து தாட்சாயிணி என பெயரிட்டு வளர்த்தார். அம்பிகை வலம்புரி சங்காக இருந்து, தாட்சாயிணியாக அவதரித்த தினமும் மாசி மக நாள் தான்.​​




மாசி மகம் 2023 எப்போது ?

2023 ம் ஆண்டில் மாசி மகம் மார்ச் 06 ம் தேதி வருகிறது. மகம் நட்சத்திரமானது மார்ச் 05 ம் தேதி இரவு 09.30 மணிக்கு துவங்கி, மார்ச் 07 ம் தேதி நள்ளிரவு 12.05 மணி வரை தொடர்கிறது. அதே சமயம் மார்ச் 06 ம் தேதி மாலை 05.39 துவங்கி, மார்ச் 07 ம் தேதி இரவு 07.14 வரை பொர்ணமி திதி நீடிக்கிறது. பெளர்ணமி மற்றும் மகம் நட்சத்திரம் கூடும் நாள் என்பதால் மார்ச் 06 ம் தேதியே மாசி மகம் கொண்டாடப்பட உள்ளது. அன்று நாள் முழுவதும் மகம் நட்சத்திரம் உள்ளது.

மாசி மகத்தன்று என்ன செய்ய வேண்டும்

மாசி மகம் வழிபாட்டிற்கு உரிய நாள் மட்டுமல்ல பித்ரு வழிபாட்டிற்கும் தர்ப்பணம் கொடுப்பதற்கும் மிக உகந்த நாளாகும். பொதுவாக அமாவாசை நாளிலேயே முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க ஏற்ற நாளாக கருதப்படுகிறது. ஆனால் புண்ணியம் நிறைந்த மாசி மாதத்தில் பெளர்ணமி நாளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது முன்னோர்களின் ஆசியை பெற்று தரும். மாசி மகத்தன்று புனித நீராடுதல் புண்ணிய பலன்களை தரும்.

யாரை வழிபட வேண்டும்?

மாசி மகத்தன்று சிவ பெருமானையும், மகா விஷ்ணுவையும் வழிபடுவது சிறந்தது. சிவ, விஷ்ணு, பிரம்மா இணைந்த ரூபமாக கருதப்படும் முருகப் பெருமானையும் மாசி மகத்தன்று வழிபடுவது தோஷங்களை நீக்கும். மாசிமகம் நாளானது முருகப்பெருமானுக்கும் உகந்ததாகும். சிவபெருமானுக்கு, முருகப் பெருமான் பிரணவ மந்திரத்தை உபதேசித்த தினம் இந்த மாசி மகம் தினத்தன்றே.மாசி மகம் விரத பலன்கள் :

மாசி மகத்தன்று புனித நீராடி, விரதமிருந்து, இறைவனை வழிபட்டால் ஆரோக்கியமான வாழ்வுடன், உலகையே ஆளும் பேற்றினை இறைவன் அருளுவான் என்பது நம்பிக்கை. வாழ்வில் இருக்கும் சகல துன்பங்களும் நீங்கி, வளமான வாழ்க்கை பெறவும்,  குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கும், குழந்தை வரம் வேண்டுவோர்க்கும் நிச்சயம் குழந்தை பேறு கிடைக்கும் . சிவ தீட்சை பெறுவதற்கும் ஏற்ற நாளாக மாசி சகம் கருதப்படுவதால் இந்த நாளில் சிவ சிந்தனையுடன் இருப்பது பல மடங்கு புண்ணியத்தை பெற்றுத் தரும்.

வீட்டில் பலன் பெறுவது எப்படி? 

​வீட்டிற்கு அருகே ஆறு, குளம் ஆகிய நீர் நிலைகளில் நீராட எந்த வாய்ப்பும் இல்லாமல் போனவர்கள், அயல்நாடுகளில் வசிப்பவர்கள் மாசி மகம் பலனை அடைய எளிய முறை உள்ளது. வீட்டின் பூஜை அறையில் செம்பு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து கொள்ளுங்கள். பூஜைக்கு செய்யும் போது எவர்சில்வர் பாத்திரங்களை உபயோகம் செய்யக் கூடாது. செம்பு, பித்தளை ஆகியவற்றால் ஆன பாத்திரங்கள் அது இல்லையென்றால் மண்ணால் செய்த பாத்திரங்களால் தான் பூஜை செய்ய வேண்டும். தண்ணீர் எடுத்து கொண்ட பாத்திரத்தில் கொஞ்சம் மஞ்சள் பொடி, வாசனை தூள், கங்கை தீர்த்தம் (தீர்த்தம் இருந்தால் சேருங்கள் கட்டாயமில்லை) ஆகியவையும் கலந்து எடுத்து கொள்ளலாம்.

பிரார்த்தனை எப்படி செய்வது? 

இந்த தண்ணீருக்கு தீபாராதனை, தூபாராதனை காட்டி, நவ நதிகளின் பெயரை உச்சரித்து பூஜிக்க வேண்டும். “இறைவனே எங்களுடைய இல்லத்தில் இந்த பாத்திரத்தில் உள்ள நீரில் எழுந்தருள்வாய். நாள் அறிந்தும் அறியாமலும் செய்த பாவங்களை நீக்கி, புனித நீராடிய பலனை எங்களுக்கு அருள வேண்டும்” என பிரார்த்தனை செய்து, அந்த நீரை கொஞ்சம் தலையில் தெளித்து கொள்ளுங்கள். சிறிது பருகலாம். இறைவனுக்கு பூஜித்த இந்த தண்ணீரை கொண்டு குளிக்கலாம். சாதாரண நீராக இருந்தாலும் பூஜை செய்த பிறகு தீர்த்த்திற்கு இணையாக மாறும். இந்த நீரை பயன்படுத்தி வீட்டில் குளிக்கும்போது புனித நீராடிய பலன் கிடைக்கும்.

What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!