Entertainment Serial Stories மனதில் உந்தன் ஆதிக்கம்

மனதில் உந்தன் ஆதிக்கம்-8

8

“உங்களை நம்பி பழகிய பெண்ணை ஏமாற்ற எப்படி மனது வந்தது?” ஜீவிதா வெடுவெடுக்க அவளை புதிராய் பார்த்தான் ஹரிஹரன்.

“எந்த பெண்ணை நான் ஏமாற்றினேன் என்கிறாய்?”

 இப்போது அவள் திகைத்தாள். யாரை ஏமாற்றினான்?என்னையா? உன்னை எப்போதாவது காதலிக்கிறேன் என்று அவன் சொன்னானா ?

இந்தக் கேள்வியோடு பலமுறை ஜீவிதாவின் மனசாட்சி அவளை குத்தி கிழித்திருந்தது. நீயாக அவன் மேல் அப்படி ஒரு எண்ணம் வளர்த்துக் கொண்டாய். அக்காவை காதலிப்பதாக ஹரிகரன் சொல்லி வந்து நின்ற நாளிலிருந்து அவர்கள் திருமணம் முடிந்த பின்னாலும் நிதானமாக பலமுறை யோசித்த பிறகு ஜீவிதாவின் மனதில் இப்படித்தான் தோன்றியது.

 பொதுவாக ஹரிஹரன் அமைதியான அதிகம் பேசாத மாணவன்.ஏதோ உன்னிடம் நாலு வார்த்தை அதிகம் பேசி விட்டதினாலேயே உன்னை காதலிக்கிறான் என்று நினைத்து விடுவாயா? உன்னுடைய நினைப்பிற்கு அவன் பழியா? இப்படி எண்ணித்தான் அவள் தன்னை தேற்றிக்கொண்டாள். 

தன்னுடையது ஒரு தலை காதல். அது தனக்குள்ளேயே மடிந்து போகட்டும். அக்காவின் வாழ்வு நன்றாக இருக்கட்டும் என்று எண்ணியே அவள் விலகி வந்து விட்டாள். ஆனாலும், அப்படி பார்த்தானே… அவ்வளவு அக்கறையாய் பேசினானே! அந்த பார்வையும் அக்கறையும் காதலை குறிக்கவில்லையா? இந்த அரிச்சல் அவள் மனதை தொடர்ந்து கொண்டே இருந்தது.

காதலித்தவள் வயிற்றில் தன் கரு என்று தெரிந்த்தும் அப்போதைய தங்கள் இக்கட்டான குடும்ப நிலையிலும்  உடனேயே திருமணம் செய்து கொள்ள முன் வந்த ஹரிஹரன் ஒரு வகையில் அவளுக்கு உயர்வானவனாகவே தோன்றினான்.ஆக, அவன் காதலித்த ஸ்வேதாவையும் ஏமாற்றவில்லை. காதலித்தேன் என்று சொல்லி உன்னையும் ஏமாற்றவில்லை. பின்னே ஏமாற்றுக்காரன் என்று அவனை எதற்காக குற்றம் சாட்டுகிறாய்?

 ஜீவிதாவின் மனது முரசாய் அறைய ஹரிஹரனின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் தலை குனிந்தாள்.

தலை குனிந்து அமர்ந்திருந்தவளை சில நொடிகள் பார்த்தபடி இருந்தவன் மெல்ல நகர்ந்து அவள் அருகே நெருங்கி அமர்ந்தான். அவள் கையை எடுத்து தன் இரு கைகளுக்குள் பொதித்துக் கொண்டவன் உணர்ச்சியுடன் “ஜீவி “என்று அழைத்தான் .

ஜீவிதா திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தாள். இதோ இந்த கண்கள்… துடிக்கும் இதழ்கள்… உணர்வுகளை கொட்டும் முகபாவம்… இவை எல்லாம் சொல்ல வருவது என்ன? ஏதோ ஒன்றில் தான் பிழை  செய்துவிட்ட மனோபாவம் தோன்ற, எதிலோ தோற்றாற் போல் உணர்ந்தாள் ஜீவிதா. அவன் கைகளுக்குள் இருந்து தன் கையை உருவி கொள்ள முயல அதற்கு அனுமதிக்காது கைகளை அழுந்தப் பற்றினான்.





 

“ஒரு நிமிஷம்மா ப்ளீஸ்… ஸ்வேதா விஷயம்..” என்று அவன் ஆரம்பிக்க தன்னை அறியாமல் ஜீவிதாவின் உடல் தூக்கி போட்டது.

இல்லை… இவன் ஏதோ சால்ஜாப்பு சொல்ல வருகிறான் என்று உள்மனது எச்சரிக்க அவள் எதிர்ப்பை கண்களில் காட்டி அவனை பார்த்த நொடி…

“ஏம்மா அந்த குழந்தை உங்களுடையதுதானே? அங்க பாருங்க…” சற்று தள்ளி இருந்து ஒரு பெண்ணின் குரல் கேட்க திரும்பிப் பார்த்த இருவரும் திடுக்கிட்டனர்.

” ஐயோ தம்பு! ஹரி நம்ம குழந்தை!”கத்தியபடி ஜீவிதா படி இறங்கி பதட்டத்தில் கால் மடங்கி சப்பென படியிலேயே அமர்ந்து விட்டாள்.

 அகல எட்டுக்களுடன் அவளுக்கு நான்கு படி முந்தி இறங்கியிருந்தான் ஹரிஹரன். மீன்களை வேடிக்கை பார்த்தபடி மெல்ல மெல்ல குளத்தின் அருகே சென்று இருந்தான் ஈசன். தண்ணீர் தளும்பி கிடக்கும் முதல் இரண்டு படிக்கட்டுகளிலும் இறங்கி இருந்தான். இடுப்பிற்கு மேலே உயர்ந்திருந்த நீரினுள் தெரிந்த மீன்களை பிடிக்க முயற்சித்துக் கொண்டிருந்தான். குனிந்த போது தண்ணீர் அவன் நாசி அருகே தொட்டுத் தொட்டு சென்று கொண்டிருந்தது. ஒரு நிமிடம் தாமதித்தாலும் குளத்திற்குள் மூழ்கிவிடும் நிலையில் இருந்த குழந்தையை வாரி எடுத்திருந்தான் ஹரிஹரன்.

“தம்பு” கதறலுடன் பிள்ளையை வாங்கி தன் மேல் போட்டு இறுக்கி அணைத்தாள் ஜீவிதா. அம்மா அழக்கண்ட குழந்தை புரியாமல் தானும் அழத்துவங்க, அவர்கள் அருகே அமர்ந்து இருவரையும் தலை வருடி சமாதானப்படுத்தலானான் ஹரிஹரன்.

“ஒரு நிமிடம் என் மூச்சே நின்னுடும் போலாயிடுச்சுங்க” விம்மியவளையும்,குழந்தையையும் சேர்த்தே அணைத்துக் கொண்டான்.

“சரி…சரி திருஷ்டி கழிஞ்சதுன்னு நினைச்சுக்கோங்க.மாரித்தாய்க்கு ஒரு அர்ச்சனை பண்ணிட்டு வர்ற திருவிழாவுக்கு பொங்கல் வைக்கிறதா வேண்டிக்கோங்க. அட எந்திரிம்மா,புருசனும் பொண்டாட்டியும் இப்படியா இடிஞ்சு போயி உட்கார்ந்து இருப்பீங்க? ஏதோ ஒரு நிமிடத்தில் தவறுவதுதான். எல்லாருக்கும் நடப்பதுதான். இனிமே ரெண்டு பேரும் ஒண்ணா இருந்து புள்ளைய பத்திரமா பார்த்து வளருங்க” அந்தப் பெண் சொல்லியபடி போய்விட்டார்.

ஏனோ அந்தக் குரல் ஜீவிதாவினுள் அசரீரி போல் மீண்டும் மீண்டும் ஒலித்தபடியிருந்த்து.

” ஜீவி நம்ம குழந்தையை பத்திரமா கவனிச்சு வளர்க்குறதுக்கு நீ என் கூடவே இருக்கனும்டா. ப்ளீஸ்டா ஜீவி” ஹரிஹரன் கேட்க, அதே நேரம் டண் டண்ணென ஒலித்த கோவில் மணியை நிமிர்ந்து பார்த்தாள் ஜீவிதா.

கூடவே கூடாது என்று மனதினுள் வரித்து வைத்திருக்கும் சில விசயங்களை,வஞ்சினங்களை கண் சிமிட்டும் ஓரிரு விநாடிகளில் மாற்றிக் கொண்டுவிடுவோம்.காரணம்…

நமக்கே தெரியாது.அது ஆழ்மன விருப்பமாகவோ,கூடி வந்துவிட்ட சமயமாகவோ இன்னமும் நமக்கே பிடிபடாத எதுவாகவோ இருக்கும்.தற்போது ஜீவிதாவின் நிலைமை அதுதான்.

 நடப்பது புரியாமல் குழந்தை இருவர் கழுத்திலும் கை போட்டுக்கொண்டு அம்மா,அப்பா என்று அழ ஏதோ ஒரு வேகத்தில் “எனக்கு சம்மதம்” என்று சொல்லிவிட்டு குழந்தையை தூக்கிக்கொண்டு தளர்ந்த நடையுடன் வீடு நோக்கி நடந்தாள் ஜீவிதா.

வாசலில் வந்து நின்ற சிகப்பு நிற ஜீப் ரேங்லரை யோசனையாக பார்த்தாள் ஜீவிதா.”நமக்குத்தான் ஜீவி.மலையேறுவதற்கு இதுதான் சரியென்று எடுத்து வரச் சொன்னேன்”  சொன்னான் ஹரிஹரன்.

“அத்தை.போதும்…இந்த வீட்டையே மடித்து உங்கள் மகளின் பேக்கிற்குள் சொருகி விடும் எண்ணம் இருப்பது தெரிகிறது.ஆனால் அவ்வளவு பாரம் எங்கள் எஸ்டேட் வீடு தாங்காது.அதனால் கொஞ்சம் குறைத்துக் கொள்ளுங்கள்” உற்சாகம் கொப்பளித்தது ஹரிகரனின் குரலில்.

“எப்படியும் எங்கள் மகளுக்கு நாங்கள் செய்யத் தானே வேண்டும் மாப்பிள்ளை?”கலைவாணி சொல்ல…”நீங்கள் ஸ்வேதாவிற்கு கொடுத்ததே வீட்டில் அப்படியே இருக்கிறது அத்தை. அதுவே போதும். இப்போது ஜீவிக்கு உடைகள் மட்டும் எடுத்து வையுங்கள்”  என்றான்.

 ஜீவிதாவின் மனதிற்குள் கனத்த திரையொன்று விழுந்தது .ஸ்வேதாவிற்கும் இதுபோல் சீர் செய்து அனுப்பினார்கள்.அதே வீட்டிற்கு தானும் அதே ஆளை திரும்ப மணம் முடித்துக் கொண்டு…அவளால் நடப்பதை ஜீரணிக்க முடியவில்லை. மீண்டும் அவள் மனம் குழம்ப ஆரம்பித்தது.

ஏன் திருமணத்திற்கு சம்மதம் சொன்னேன்.அந்த அளவிற்கா இவன் என் மனதில் ஆதிக்கம் செலுத்தியிருந்தான்?

“என்னடா ?” அவள் முக மாறுதலை உடனே கவனித்து அருகில் வந்த அமர்ந்து கேட்டவனை குற்றச்சாட்டுடன் பார்த்தாள். “ஸ்கூட்டி கூட ஓட்ட தெரியாது என்றீர்கள்?” 

புருவம் சுருக்கி யோசித்தவன் நினைவு வந்து மலர்ந்து சிரித்தான் .”ஏய்… அது சும்மா, உன் கூட ஸ்கூட்டியில் வரணும் என்பதற்காக” லேசாக கண்சிமிட்டினான்.

பொய் சொல்லி ஏமாற்றி இருக்கிறான்.ஜீவிதாவின் மனதை என்னவோ நெருடியது. 

அவள் சம்மதம் சொன்ன இரண்டாவது நாளே திருமணத்தை ஹரிஹரன் ஏற்பாடு செய்து விட, இவர்களின் நெருங்கிய சொந்தங்களோடு,சிவகாசியில் இருந்து வந்த இறங்கிய அவன் பக்கத்து நெருங்கிய சொந்தங்களோடும் அன்று அதிகாலை 6:00 மணிக்கு சந்தன மாரியம்மன் கோவிலில் வைத்து இருவரின் திருமணமும் முடிந்திருந்தது.

“பார்த்து பார்த்து வளர்த்தேன். இரண்டு பெண்களோட திருமணமும் இப்படியா ரகசியமாக நடக்க வேண்டும்?” சகாதேவன் சலித்துக் கொண்டார்.

“இரண்டு பெண்களையும் ஒரே மாப்பிள்ளைக்கு திருமணம் செய்து கொடுத்தால் அப்படித்தான் நடக்கும் அப்பா” எதற்காக அப்பாவை குத்துகிறோம் என்று தெரியாமலேயே வார்த்தைகளை உதிர்த்தாள்.

அவர் முகம் கன்றி போகவும் நாக்கை கடித்துக் கொண்டு அவரை தேற்றும் முறை தெரியாமல் தடுமாறி அங்கிருந்து நகர்ந்து விட்டாள்.





செவ்வண்ணத்தில் ராஜ கம்பீரத்துடன் வாசலில் நின்ற வாகனம் அவளுக்கு எரிச்சலை கிளப்பியது.இதன் சொந்தக்காரனுக்கு அவள் பைத்தியக்காரத்தனமாக ஸ்கூட்டிக்கு டிரைவராக இருந்திருக்கிறாள். ஆனால் அப்படியேனும் இவள் பின்னால் ஏறி வர இந்த எஸ்டேட் ஓனருக்கு என்ன காரணம்?மீண்டும் மீண்டும் ஹரிஹரன் அவள் மனதில் நிரடிக்கொண்டே இருந்தான்.

“நீங்கள் டூவீலரே ஓட்டுவது இல்லையோ?” காரில் ஏறி கிளம்பியதும் அவன் பக்கம் திரும்பி கேட்டாள். இறுகி கிடந்த ஹரிஹரனின் முகத்தில் திகைத்தாள்.

 இவளுக்கு பதில் சொல்லும் எண்ணமின்றி குழந்தையை இவர்கள் இருவருக்கும் இடையே பேபி சீட் அமைத்து அதில் செட் செய்து கொண்டிருந்தான் அவன்.

“பைக் வைத்திருக்கிறீர்களா? ஓட்டுவீர்களா?” தன் கேள்வியை தொடர்ந்தாள்.  ஹரிஹரன் கல்லூரியில் படிக்கும் போது தன்னுடன் எந்த மனநிலையில் பழகினான் என்று தெரிந்து கொள்வது மிகவும் அவசியமாக தோன்றியது.

“எத்தனை மணிக்கு எஸ்டேட்டிற்கு போகலாம் அண்ணா?” டிரைவரிடம் கேட்டான்.

” மூன்று மணி நேரம் ஆகும்.எட்டு மணிக்கு போய் விடலாம் சார்” டிரைவர் பதில் சொல்ல தலையாட்டி விட்டு சீட்டில் பின்னால் சாய்ந்து கண்களை இறுக மூடிக்கொண்டான்.

 என் கேள்விக்கு பதில் சொன்னால் இவனது குட்டு வெளிப்பட்டு விடும் என்று காது கேளாதது போல் இருந்து கொள்கிறான்,ஜீவிதாவின் உள்ளம் கொதித்தது.

எனக்கு மட்டும் உன்னோடு என்ன பேச்சு? அவள் வெளிப்புறம் திரும்பிக் கொள்ள, ஹரிஹரனும் அப்படியே கண்களை மூடிக்கொண்டு இருந்து கொண்டான். ஈசனும் தூங்க ஆரம்பிக்க அவர்களது பயணம் சுமுகமாக தொடர்ந்தது. 

சூரியன் தன் பிரகாசத்தை சிறிது சிறிதாக குறைத்துக் கொள்ள தொடங்கிய பிறகு, வந்த பாதையில் ஜீவிதாவிற்கு திக் என்றது. என்ன ரோடு இது?இதெல்லாம் மனிதர்கள் செல்லும் பாதைதானா? ஜன்னல் வழியாக ரோட்டை பார்த்தவள் பயத்தில் முகம் வெளிரினாள்.

குண்டும் ,குழியுமாக இருந்தது ரோடு. மலையேற்ற பாதை. ஒவ்வொரு திருப்பத்தின் போதும், அவ்வளவுதான் இதோ கீழே தான் விழப் போகிறோம் என அறிவிக்கும் வளைவுகள். அவளுக்கு என்னவோ தான் முழுதாக இடம் போய் சேர்வோம் என்ற நம்பிக்கையே இல்லை.

 ஹரிஹரன் ஈசனை அள்ளி தன் மடியில் அமர்த்தி ஆதரவாக அணைத்துக் கொண்டிருந்தபடியால் குழந்தை எந்த தடுமாற்றமும் இன்றி தனது தூக்கத்தை தொடர்ந்திருக்க, ஜீவிதா உண்டியல் காசு போல் குலுங்கி கொண்டிருந்தாள். பத்து நிமிடம் போல் அவளை வேடிக்கை பார்த்தவன் குழந்தையை இடக் கையால் அணைத்துக் கொண்டு வலக்கையை அவளுக்கு நீட்டினான்.

 அதோ பஞ்சுக்குள் பொதிந்து கிடக்கும் கண்ணாடி பரிசு பொருளென சொகுசாய் இருக்கும் குழந்தை போல் மாறிவிட அவளுக்கும் ஆசைதான்.ஆனால்… தலையாட்டி அவனது அழைத்தலை மறுத்துவிட்டு சீட் பெல்ட்டை இழுத்து போட்டுக் கொண்டாள்.ஓரளவு குலுக்கல் குறைய,ஆனாலும் வயிறு பிரட்டி வாந்தி உணர்வு உண்டானது.

 ஹரிஹரன் நீட்டிய மிட்டாயை வாங்கி வாயில் ஒதுக்கி கொண்டவள் கண்களை இறுக மூடிக்கொண்டாள். இப்பொழுது உள்ளுக்குள் சூழ்ந்த அந்தகாரம் மேலும் பயத்தை தருவதாக இருக்க அவசரமாக கண்களை திறந்து கொண்டாள்.

 இந்தப் பாதை இவனுக்கு பழக்கம் போலும்,அதிகம் அதிராமல் நிதானமாக அவன் இருப்பதை எரிச்சலுடன் பார்த்தபடி ஜீவிதா கடந்த பொழுதுகள் வெறுமனே அரை மணி நேரம்தான். ஆனால் அரைநாள் ஆனது போன்ற உணர்வை பெற்றிருந்தாள். வீட்டின் வாசலில் இறங்கியபோது உடலின் பாகங்கள் அனைத்தும் தனித்தனியாக கழன்று நிற்பது போன்ற உணர்வில் இருந்தாள்.




What’s your Reaction?
+1
54
+1
34
+1
4
+1
3
+1
0
+1
0
+1
1
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!