Entertainment Serial Stories மனதில் உந்தன் ஆதிக்கம்

மனதில் உந்தன் ஆதிக்கம்- 7

7

“உன் அக்காவை திருமணம் செய்து கொள்ள வேண்டி எனக்கு போன் செய்தாயே நினைவிருக்கிறதா?” ஹரிஹரன் கேட்க நினைவிற்கு திரும்பினாள் ஜீவிதா. வெறுப்பாய் அவனை பார்த்தாள். ஈசனுக்கு மீன்களை காட்ட அவளை விட்டு தள்ளி இரண்டு படிகள் கீழே அமர்ந்திருந்தான்.அங்கிருந்தபடியே இவளிடம் கேட்டுக் கொண்டிருந்தான்.

அன்று…

போனில் ஹலோ குரல் கேட்டதும், “சார் மன்னிக்கணும்.நான் ஸ்வேதாவின் தங்கை ஜீவிதா பேசுகிறேன். ஸ்வேதா இப்போது பேசும் நிலைமையில் இல்லை. நேற்று நீங்கள் இருவரும் என்ன பேசிக் கொண்டீர்களோ எனக்கு தெரியாது.என்னுடைய கணிப்புப்படி அவளை திருமணம் செய்ய நீங்கள் மறுத்திருக்கலாம்.அவள் இப்போது இருக்கும் நிலைமை உங்களுக்கு தெரியும் என்று நினைக்கிறேன். இது மாதிரி ஒரு நிலையில் அவள் இருக்கும் போது நீங்கள் இப்படி பேசலாமா? என்னவாக இருந்தாலும் அது உங்கள் இருவருடைய குழந்தை இல்லையா? நான் உங்களிடம் மிகவும் கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன்.நீங்கள் என் அக்காவை திருமணம் செய்து கொள்ள வேண்டும்.இது அவள் வயிற்றில் வளரும் குழந்தைக்கு நீங்கள் செய்யும் நன்மையோடு, உங்கள் கடமையும் கூட. உங்கள் மனதில் வேறு எந்த நினைவுகள் இருந்தாலும் எல்லாவற்றையும் விட்டுவிட்டு தயவு செய்து எங்கள் ஸ்வேதாவை திருமணம் செய்து கொள்ளுங்கள்.இல்லாவிட்டால்… இல்லாவிட்டால்…”மேலே பேச முடியாமல் விம்மினாள்.

இதுவரை ஒன்றும் பேசாமல் இருந்த எதிர்முனை இப்போது மெல்ல கேட்டது.”என்ன ஆச்சு ?”

“ஸ்வேதா நேற்று இரவு தற்கொலைக்கு முயன்றாள். நான் விழித்து பார்த்து காப்பாற்றி விட்டேன்.”

எதிர்முனையில் கனத்த மவுனம். ஜீவிதா பதறினாள் “சார் நீங்கள் திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை என்றால் ஸ்வேதா மீண்டும் தற்கொலை முடிவிற்குத்தான் போவாள்.அவள் மட்டுமல்ல அவள் வயிற்றில் உங்கள் குடும்ப வாரிசும் இருக்கிறது.அதை மறந்து விடாதீர்கள். தயவு செய்து நன்றாக யோசித்து முடிவெடுங்கள்” அவள் பேசி நிறுத்த பதில் ஏதும் இல்லாமல் எதிர்முனை கட்டானது.

“அக்காவிற்கு வாழ்க்கை கொடுங்கள் என்று போனில் கெஞ்சி கொண்டிருக்கும்போது பதிலே சொல்லாமல் போனை வைத்தவர் தானே நீங்கள்?” எகிறினாள் ஜீவிதா.

” ஒன்றும் சொல்லாமல் இல்லை. சொல்ல முடியாமல் போனை வைத்தேன்” சொன்னபடி குழந்தையை கீழ்ப்படியிலேயே அமர்த்தி விட்டு எழுந்து வந்து அவள் அருகே அமர்ந்தான் ஹரிஹரன்.

“நீயும் நானும் ஒரே படகில்தான் பிரயாணம் செய்து கொண்டிருக்கிறோம் ஜீவிதா”.அவன் சொன்னது புரியாமல் பார்த்தாள்.





 

” நமது பிரயாணத்தின் இலக்கு இதோ இவன்தான். இலக்கு ஒன்றாக இருக்கும்போது வெவ்வேறு பாதை நமக்குள் சாத்தியம் கிடையாது. ஒரே பாதையில் இணைந்து கொள்வது தான் புத்திசாலித்தனம்” இப்போது அவன் சொல்ல வருவது புரிந்துவிட வெறுமையாய் அவனை பார்த்தாள்.

” இதுவரை உன்னிடம் நேரடியாக கேட்கவில்லை.உன் அம்மா அப்பாவிடம் பேசி இருக்கிறேன்.அவர்களுக்கு தயக்கம். இப்போது உன்னிடமே நேரில் கேட்கிறேன. நாம் திருமணம் செய்து கொள்வோமா?”

 இதோ இந்த ஹரிஹரன் மேல் அளவற்ற வெறுப்பை சேர்த்து வைத்திருந்தாள் ஜீவிதா. ஆனாலும் இதோ இப்படி அவன் உருகலான குரலில் கேட்ட மண சம்மதத்திற்கு  ஒரு நிமிடம் உறைந்து போய்தான் விட்டாள். 

“எப்பொழுதோ சொல்லியிருக்க வேண்டியது.இப்போதுதான் சொல்வதற்கு நேரம் வந்தது போல…” சொன்னவனின் குரல் கரகரக்க தன்னை அறியாமல் ஜீவிதாவின் விழிகளும் நிரம்பி வழிந்தது. அவள் மனம் முன்பு அவனது சாயம் வெளுத்த நிகழ்விற்கு போனது.

பதிலின்றி ஹரிஹரன் போனை வைத்ததும் ஏதோ கோளாறு, கட் ஆகிவிட்டது என்று நினைத்து மீண்டும் முயன்றாள் ஜீவிதா. அந்த எண் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. பிறகும் பலமுறை முயன்று பார்த்தும் அதே நிலைதான். நம்பிக்கையை இழந்து விட்டவள் அக்காவின் நிலையை எண்ணி வருத்தத்துடன் இருந்தாள்.

 அன்று மாலை சகாதேவனும் கலைவாணியும் வேலையில் இருந்து வீடு திரும்பிய பிறகு ஆறு மணிக்கு வாசலில் வந்து நின்ற காரை புருவம் சுருக்கி பார்த்தபடி இருந்தாள். முதலில் காரில் இருந்து இறங்கியவனை கண்டதும் உற்சாகத்தில் அவள் மனம் உயரே எழும்பியது. அன்று ஏதோ அவசர வேலை போலும்.கோவிலில் திடுமென காணாமல் போய்விட்டவன் இதோ வீட்டிற்கே வந்து விட்டான்.

வேகமாக அவனை வரவேற்க வாயில்புறம் போனவள், அவன் குனிந்து காருக்குள் இருந்து வெற்றிலை பாக்கு தட்டு ஒன்றையும் பழத்தட்டு ஒன்றையும் எடுத்துக்கொண்டு நிமிர்வதை கண்டதும் யோசனையுடன் நின்றாள்.

 ஏனோ அவள் மனம் பிராண்டப்பட அப்படியே பின்னடைந்தாள். தட்டுக்களுடன் உள்ளே நுழைந்த அவன் அவளை பார்த்து விட்டான்.ஒரு நிமிடம் முகம் முழுக்க வலியுடன் அங்கேயே நின்றவன் பின் தலையை உலுக்கி சமாளித்தபடி வீட்டிற்குள் நுழைந்தான்.

 தட்டுக்களை டீப்பாயில் வைத்து விட்டு “வணக்கம். நான் ஹரிஹரன். உங்கள் மூத்த மகள் ஸ்வேதாவை எனக்கு மணம் முடிக்க கேட்டு வந்துள்ளேன்”என்றான்.

 தன் அவனின் பிம்பம் உரு தெரியாமல் கரையத் துவங்க ஜீவிதா உச்சி மீது பனிமலை பெய்தாற் போல் உறைந்து நின்றாள்.

“என்ன? நீங்கள் யார்? என்ன இப்படி திடீரென்று…?” கலைவாணி படபடக்க,

சகாதேவனோ “இங்க பாரு தம்பி. நீ வீடு மாதிரி வந்துட்டேன்னு நினைக்கிறேன். தயவு செய்து வெளியே போ” என்றார்.

“இல்லை சார் நான் சரியான இடத்திற்கு தான் வந்திருக்கிறேன். சென்னையில் நானும் ஸ்வேதாவும் ஒரே கம்பெனியில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறோம். இருவரும் காதலிக்கிறோம்.எனக்கு வீட்டில் பேசுவதற்கு பொறுப்பான பெரியவர்கள் இல்லை. அதனால் நானே முறையாக பெண் கேட்டு வந்துள்ளேன் .எங்கள் இருவருக்கும் திருமணம் முடித்து வைக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்” மிகவும் பணிவாக பேசி கைகட்டி நின்றான்.

” ஊர் பெயர் தெரியாத கண்ட அனாதை பயலெல்லாம் என் வீடு தேடி ஏறி வந்து பெண் கேட்கிறாயா?” சகாதேவன் கொதித்தார்.

 வெடுக்கென்று நிமிர்ந்து அவரைப் பார்த்த ஹரிஹரனின் கண்கள் கலங்கி இருந்தன.ஆனால் முகம் கோபத்தில் ஜிவு ஜிவுத்தது. “நான் அனாதை இல்லை.பெரிய குடும்பத்தை சேர்ந்த பையன்.எங்கள் சொந்த ஊர் சிவகாசி.அங்கே எங்களுக்கு நிறைய உறவினர்கள் இருக்கின்றனர்.சமீபத்தில் சொத்து பிரிக்கும் பிரச்சனை காரணமாக உறவுகளுக்குள் கொஞ்சம் தகராறு. அதுதானே தவிர வேறு பிரச்சனைகள் இல்லை.இங்கே கொழுக்குமலை எஸ்டேட் எங்கள் பங்கிற்கு வந்துள்ளது.நான் எஸ்டேட் முதலாளி ஹரிஹரன்,உங்கள் மகள் ஸ்வேதாவை திருமணம் செய்து கொள்ள கேட்கிறேன்” நெஞ்சை நிமிர்த்தி நின்று கேட்டான்.

“ஸ்வேதா…” கலைவாணி உள்ளே திரும்பி கத்த,ஸ்வேதா மெல்ல வந்து நின்றாள்.

” இந்த பையன் சொல்வதெல்லாம்…?”

” உண்மைதான் அம்மா” எந்திரமாய் வார்த்தைகளை உதிர்த்தாள்.





“அப்படியே என்றாலும் எங்களுக்கும் யோசிக்க டைம் வேண்டுமல்லவா தம்பி? நீங்கள் இப்போது கிளம்புங்கள். வாரம் பத்து நாளில் நாங்களே உங்களுக்கு தகவல் சொல்கிறோம்” சகாதேவன் சொல்ல தீவிரமாய் மறுத்து நின்றான் ஹரிஹரன்.

” இல்லை சார். இன்று இப்போதே எங்கள் திருமணம் உறுதி செய்யப்பட வேண்டும்.உடனடியாக நடந்தும் ஆக வேண்டும் “

” அது ஏன் அவ்வளவு அவசரம்?”

” அவசரம் தான்.ஏனென்றால்….”தயங்கி நிறுத்தி நாவால் உதடுகளை வருடி ஈரப்படுத்திக் கொண்டவன் மெல்ல சொன்னான். “ஸ்வேதா இப்போது இரண்டு மாத கர்ப்பம்…”

“ஐயோ…” கலைவாணி சத்தமாய் அலற ,ஓசை இல்லாத மன அலறல் ஜீவிதாவிற்கு. ஹரிஹரன் உள்ளே நுழைந்ததில் இருந்தே ராட்சச சம்மட்டி ஒன்று இதயத்தின் மீது ஓயாமல் அடித்துக் கொண்டே இருக்கும் உணர்வு அவளுக்கு.

“ஸ்வேதா இது உண்மையா ?”கலைவாணி அலறலாய் கேட்க, ஸ்வேதா தலை குனிந்து முணுமுணுத்தாள். “ஆமாம் “

கலைவாணி ஆத்திரத்துடன் அவளை நோக்கி பாய்ந்தாள்.”அடிப்பாவி உன்னை இப்பவே கொன்னு போட்டுடுறேன்…”

சட்டென இருவருக்குமிடையில் வந்தான் ஹரிஹரன்.

“தயவுசெய்து கோபப்படாதீர்கள். நடந்தது நடந்து விட்டது.இனி அடுத்து என்ன என்பதைத்தான் நாம் யோசிக்க வேண்டும். இப்போது நமக்கு எங்கள் திருமணத்தை தவிர வேறு வழி இல்லை”

 நிதர்சனம் உரைக்க சகாதேவனும் கலைவாணியும் குமுற, ஜீவிதா உள்ளறைக்கு நகர்ந்தாள்.ஸ்வோதாவை காப்பவன் போல் கை வளையம் இட்டபடியே தாய் தந்தையிடம் சமாதான பேச்சுக்கள் பேசிக் கொண்டிருந்தவனை விரக்தியாக பார்த்தாள்.

 அதன் பிறகு ஸ்வேதா, ஹரிஹரன் திருமணம் சம்பந்தமான பேச்சுக்கள் நடைபெற ஆரம்பிக்க, அடுத்த இரண்டாவது நாளில் இன்னமும் ஜாயின்ட் லெட்டர் கொடுக்காத தனது பேங்க் வேலைக்கு முன்பே சென்னை வந்து பி.ஜியில் தங்கிக் கொண்டாள் ஜீவிதா.இப்போதுதான் புதிதாக சேர்ந்த வேலை என்பதால் லீவு கிடைக்கவில்லை. அக்காவின் திருமணத்திற்கு வர முடியாது என்ற தகவல் சொல்லிவிட்டாள். 

ஹரிகரன்-ஸ்வேதா திருமணம் சந்தன மாரியம்மன் கோவிலில் வைத்து நடைபெற்றது.திருமண போட்டோக்கள் அம்மாவின் மூலம் வாட்ஸ்அப்பில் வந்து திறந்து பார்க்க ஆளின்றி ஜீவிதாவின் போனிற்குள்ளேயே முடங்கியது.

அதன் பிறகு கலைவாணி அவ்வப்போது அவளிடம் போனில் ஸ்வேதா பற்றியோ ஹரிஹரன் பற்றியோ ஏதாவது பேச முனைந்தாலென்றால் ஆரம்பத்திலேயே பேச்சை வெட்டி விடுவாள். தாயுடனோ தமக்கையுடனோ போனில் பேசுவதை கூட மிகவும் குறைத்துக் கொண்டாள்.

வேலையை தூரமாக எங்காவது மாற்றி தள்ளிப் போய்  கொண்டு…எஞ்சி இருக்கும் வாழ்நாளை எப்படியேனும் ஓட்ட வேண்டியதுதான் எனும் விரத்தியுடன் அவள் இருந்தபோது கலைவாணி போன் செய்தாள்.

” ஜீவிதா அக்காவை பிரசவத்திற்காக ஆஸ்பத்திரியில் சேர்த்திருக்கிறோம். எனக்கு ரொம்பவும் பயமாக இருக்கிறது.நீ பக்கத்தில் இருந்தால் கொஞ்சம் தைரியமாக இருக்கும். தயவு செய்து வாம்மா”

போனில் அழுத அம்மாவை  மறுக்க முடியாமல், சென்னையில் இருந்து பிளைட் பிடித்து கோயம்புத்தூர் வந்து இறங்கினாள்.

பிரசவத்தில் ஸ்வேதா குழந்தையை இவள் கையில் ஒப்படைத்துவிட்டு இறக்க,ஹரிஹரனோ அவனுடைய தொழில், வேலை என்று வெளியிலேயே அலைந்து கொண்டிருக்க குழந்தையும் ஜீவிதாவும் மிகவும் நெருக்கமானார்கள்.அவ்வப்போது ஹரிஹரன் குழந்தையை பார்க்க வந்தாலும் வரும் நேரங்களில் எல்லாம் இவள் அவன் கண்களிலேயே படாமல் ஒதுங்கிக் கொள்வாள்.

அவனும் குழந்தையை மடியில் வைத்திருந்து தோளில் போட்டுக்கொண்டு என்று சிறிது நேரம் கொஞ்சிக் கொண்டு இருந்துவிட்டு போய்விடுவான்.

ஈசன் என்று அவன் குழந்தைக்கு பெயர் வைக்க அவன் வைத்தான் என்பதற்காகவே அந்தப் பெயரைச் சொல்லி அழைக்காது தம்பு என்று செல்ல பெயரிட்டு பிள்ளையை அழைத்து வருகிறாள்.

மூன்று வருடங்களாக சரியாகவே போய்க்கொண்டிருந்த நிலைமை இப்போது மாறி, ஹரிகரன் குழந்தையை என்னிடம் ஒப்படை அல்லது என்னையே திருமணம் செய்து கொள் என்ற நிர்ப்பந்தம் வைப்பதில் நிலை குலைந்து கிடக்கிறது.




What’s your Reaction?
+1
51
+1
36
+1
2
+1
1
+1
1
+1
1
+1
3
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!