Entertainment Serial Stories மனதில் உந்தன் ஆதிக்கம்

மனதில் உந்தன் ஆதிக்கம்- 5

5

“என்னடா அந்த பெண் ரொம்ப திமிராக பேசுகிறாள்?அப்படியே உன் பொண்டாட்டி புத்தி அவளுடைய தங்கச்சிக்கும் இருக்குது. இவளையே கல்யாணம் பண்ணனும்னு உனக்கு என்னடா தலையெழுத்து?” சித்தி காரில் ஏறியதுமே படபடக்க பதில் சொல்ல முடியாமல் மௌனமாக காரை ஓட்டினான் ஹரிஹரன்.

” டேய் உன் சித்தி கேட்கிறாள்ல? பதில் சொல்லுடா ?”

” என்ன சொல்ல சித்தப்பா? பிசினஸ் காரணமாக குழந்தையை இரண்டு வருடங்களாக அவர்கள் வீட்டிலேயே விட்டு விட்டேன். குழந்தை அவளுடன் நன்றாக ஒட்டிக் கொண்டான். இப்போது நான் என்ன செய்வது? வேறொரு பெண்ணை திருமணம் முடித்தாலும் அவள் இந்த அளவு குழந்தையை பார்த்துக் கொள்வாளா? எனக்கு ஆயிரம் வெளி வேலைகள். வீட்டில் குழந்தையை கவனிக்க ஒரு பொறுப்பான பெண் வேண்டாமா? யாரோ ஒரு தெரியாத பெண்ணை மணம் முடித்து வந்தால் அவளால் குழந்தை என்ன ஆகுமோ என்ற கவலை தான் எனக்கு”





 

” அதெல்லாம் சரியாகிப் போகும் ஹரி. நீ இவளையே இழுத்துக் கொண்டு இருப்பதை விடு.நான் உனக்கு ஒரு பெண் சொல்கிறேன்.என்னுடைய அண்ணன் ராஜாமணி இருக்கிறாரே அவருடைய பெண் சகுந்தலா விருதுநகர் இன்ஜினியரிங் காலேஜில் கடைசி வருடம் படித்துக் கொண்டிருக்கிறாள். நாம் போய் பெண் கேட்டோம் என்றால் ஆகா என்று அண்ணன் அடுத்த மாதமே கல்யாணத்தை முடித்து விடுவார்”

“யாரடி சொல்ற?உன் சித்தப்பா பையன் ராஜா மணி பிள்ளையையா?”

” ஆமாங்க அவர்தான்.என்ன நம்ம அளவு வசதி பட்ட குடும்பம் கிடையாது.ஆனாலும் ஓரளவு வசதி தான். எப்படியும் நூறு பவுன் போடுவார், கூடவே ஒரு வீடும், காரும் சிவகாசியில் வாங்கிக் கொடுத்து விடச் சொல்லுவோம். இவர்கள் அங்கே வந்தால் தங்குவதற்கு சரியாக இருக்கும்”

” அட போடி அறிவு கெட்டவளே. அவனை போய் சொல்லிக்கொண்டு… அவனெல்லாம் ஒரு மனுஷனா? ஹரி நான் உனக்கு வேற பொண்ணு சொல்றேன். நம்ம பூதலிங்கம் மாமா இருக்காரு இல்ல,அவரோட தூரத்து அண்ணன் அழகன் பெருமாளோட மகள்.சிவகாசியிலேயே எஸ் எஃப் ஆர் காலேஜ்ல பி.எஸ்.சி படிக்கிறா. இன்னும் ரெண்டு மாசத்துல அவளோட படிப்பு முடியுது. நல்லா சிகப்பா அழகா நெகு நெகுனு உயரமா இருப்பா.உனக்கு ரொம்ப பொருத்தமா இருப்பா.அவளையே உனக்கு பேசி முடிச்சிடலாம். பூதலிங்கம் மாமா மூலமா போனா அழகன் பெருமாள் மறுக்க மாட்டாரு. இவங்க அந்த ராஜாமணிய விட ஒசந்த குடும்பம் .பெரிய தலகட்டு. 150, 200 ன்னு ரூம்களோட நாலு பட்டாசு பேக்டரி வச்சிருக்கான். மகனுக்கு இப்ப புதுசா ஆப்செட் வச்சு கொடுத்து இருக்கான். மகளுக்கு எப்படியும் இருநூறு பவுன் போடுவான்.நாம போய் நின்னம்னா உடனே பொண்ண கூட்டிக்கிட்டு போங்கன்னு சொல்லுவான். என்னடா சொல்ற?”

ஹரிஹரனுக்கு காரை நிறுத்திவிட்டு  இறங்கி குதித்து ஓடி விட வேண்டும் போல் இருந்தது.”சித்தப்பா கொஞ்சம் இருங்க.நீங்க சொல்ற 100 பவுன் 200 பவுன் பொண்ணுங்க எல்லாம் என்னோட குழந்தையை நல்லா கவனிச்சுக்கிடுவாங்களா?அதுக்கு நீங்க உறுதி கொடுப்பீங்களா?” பொறுமையை இழுத்துப் பிடித்துக் கொண்டு பேசினான்.

” அதெல்லாம் சரியா போய்டும்டா” சித்தி சொல்ல…

 சித்தப்பா “அப்படித்தான் சரியாகலைனா,பிள்ளையை நல்ல ஹாஸ்டல பார்த்து விட்டு வளர்த்திடுவோம். ஊட்டி கான்வென்ட் தெரியும் தானடா?நம்ம வீட்டு பிள்ளைங்க எல்லாருமே அஞ்சு வயசு ஆறு வயசுக்கு பிறகு அப்படித்தானே வளர்ந்தாங்க? இது சின்ன பிள்ளையிலேயே ஒன்னாவது வகுப்பிலேயே கொண்டு போய் சேர்க்க போறோம். அவ்வளவு தானே !இது ஒரு விஷயம்னு பேசிக்கிட்டு”

“அவன் எந்த கான்வென்டங்க பார்த்தான்?” சித்தியின் குரல் குத்தலாக வர சித்தப்பா “அதானே…இவுங்கதான் தனித் தீவாச்சே” என்றுவிட்டு ஒரு மாதிரி சிரித்தார்.சித்தி கழுத்து வைர அட்டிகையை சரி செய்தபடி கீழ்க்கண்ணால் இவனைப் பார்த்து ஓரமாக சிரித்தாள்.

 ஹரிஹரனின் கை ஸ்டியரிங்கில் அழுந்தி பதிந்த்ததில் உள்ளங்கை சிவந்தது .அவனுக்கு தெரியும் இதுதான் அவர்கள் குடும்பப் பழக்கம். அதாவது அவனுடைய தந்தை குடும்ப பழக்கம். பரம்பரையாக தொழில் குடும்பம் என்பதால் பின்னாளில் குழந்தைகள் தனியாக பாரம் தாங்கி தொழில் நடத்த வேண்டும் என்று காரணம் சொல்லி ஆறாவது படிக்கும் போதே ஊட்டியில் பெரிய கான்வென்டில் சேர்த்து விடுவது அவர்கள் வழக்கம்.





ஆனால் இந்த குடும்ப முறைக்கு அவனுடைய தாய் பெரிய எதிர்ப்பு காட்டினார்.எனது குழந்தைகள் என்னுடன் தான் வளருவார்கள் பிடிவாதமாக நின்றார்.தந்தை தாய்க்கு துணை நிற்க குடும்பத்தில் இல்லாத பழக்கமாக காதலித்து மணந்து வந்த பெண்டாட்டி பின்னால் போகும் புருஷன் என்று முத்திரை குத்தப்பட்டு அவர்களது குடும்பம் மட்டும் ஒதுக்கி வைக்கப்பட்டது. தொழில் முதல் எல்லா விசேஷங்களிலும் கூட அவர்களுக்கு இரண்டாவது இடம்தான். ஆனால் அவனது தந்தை அதனை சலனமின்றி ஏற்றுக் கொண்டார்.

 இப்போது அது போல் ஒரு நிலைமை ஈசனுக்கும் வருவதா? ஹரிஹரன் அதற்கு தயாராக இல்லை.அதற்காகத்தானே இவ்வளவு போராட்டம் போராடுகிறான். வீட்டின் முன் காரை நிறுத்தி இறங்கி “உள்ளே வாங்க சித்தி.பிறகு யோசிக்கலாம்”என்று மட்டும் கூறினான்.

மறுநாள் காலை மீண்டும் இதே பேச்சை எடுத்த சித்தி சித்தப்பாவிடம் “நான் பிரவீனுக்கும் கொஞ்சம் பங்குகள் கொடுக்கலாம் என்று இருக்கிறேன்” என பேச்சை திசை திருப்பினான். 

சித்தியின் விழிகள் விரிய சித்தப்பாவின் முகத்தில் பரவசம் கூடியது.”நிஜமாகவாப்பா?”

“ஆமாம் சித்தி.அவன் என் தம்பி தானே? அவனுக்கு கொஞ்சம் கொடுப்பதில் எனக்கு என்ன வந்து விடப் போகிறது?”

ஆண்டு வருமானத்தில் இரண்டே சதவிகிதம் கொடுத்தானானாலும்,எத்தனை லட்சங்கள் வரும்?குத்து மதிப்பாக போட்ட மனக்கணக்கிற்கே இருவரின் முகமும் பிரமிப்பில் விரிந்தது.வாயெல்லாம் பல்லாக தெரிந்தது.

“சரிப்பா சரி. நீ என்ன சொன்னாலும் சரிதான். அப்போ பத்திரம் எழுத ஏற்பாடு செய்து விடட்டுமா? உன் மேல் நம்பிக்கை இல்லாமல் இல்லை.எதற்கும் சட்டப்படி ரிஜிஸ்டர் செய்துவிடுவது நல்லதில்லையா?” சித்தப்பா காரியத்தில் கண்ணாக இருந்தார்.

” உடனே செய்ய வேண்டுமா சித்தப்பா?” 

“ஆமாம்பா. அடுத்த மாதம் பிரவீன் லண்டனிலிருந்து வருகிறான். அவன் வரும்போது நீ பங்குகளை தம்பிக்கான பரிசாக உன் கையாலேயே கொடுத்து விடேன்” வாழைப்பழத்தில் ஊசி ஏற்றினார்.

 ஆளரவமற்ற இந்த மலை உச்சியில் தன்னந்தனியாக இருந்து கொண்டு இத்தனை சம்பாதிக்கிறானே,பங்கிட ஆளின்றி ஒற்றையாய் வாரி முடிந்து கொள்ளும் விதி இவனுக்கு வாய்த்து விட்டதே…என்று வெந்து கொண்டிருந்தவர்களாயிற்றே…!

ஹரிஹரன் மனதிற்குள் சிரித்துக் கொண்டான்.”சரிதான் சித்தப்பா. அப்படியே செய்துவிடலாம்”

” நான் பத்திரம் எழுத ஆடிட்டரிடம் விவரம் கேட்கிறேன். நீ என்ன சொன்னாலும் சரியாகத்தான் இருக்கும்” 

“ஹரி உனக்கு ரொம்பவும் பெரிய மனது.அதோடு ரொம்பவும் நல்ல நினைப்பு” சித்தி அவனுடைய முகத்தை வலித்து தன் நெற்றியில் வைத்து சொடக்கிட்டாள்.

 “ஆமாம் சித்தி இதே மாதிரிதான் அந்த ஜீவிதாவேதான் என்னுடைய மனைவியாக வரவேண்டும் என்று நினைக்கிறேன்”

 இப்போது சித்தி சித்தப்பாவிடம் எதிர்ப்பே இல்லை. “சரிதான்பா நீ அப்படி நினைத்தாயானால் அதுவும் சரிதான்.உன் குழந்தைக்கும் பாதுகாப்பு வேண்டுமில்லையா? பெற்ற தகப்பனாக நீ அதையும் நினைப்பாய்தானே? ரொம்ப சரி. இந்த கல்யாண விஷயத்தில் நாங்கள் எதுவும் செய்ய வேண்டும் என்றால் சொல்லு, நேரே வந்து கூடவே இருந்து கல்யாணத்தை முடித்துவிட்டு போகிறோம்” சித்தப்பா சொல்ல சித்தி விரலை சொடக்கிட்டாள்.

” நீ இப்ப சொல்லு ஹரி,நான் போய் அந்த ஜீவிதா கையைப் பிடித்து தரதரவென்று இழுத்து வந்து இங்கே தள்ளிவிட்டு போகிறேன். ஐம்பதாயிரம் சம்பாதிக்க நாள் பூரா ஓடிட்டு இருக்கிற பொண்ணு. இவ்வளவு பெரிய எஸ்டேட்டை கட்டி காக்குறதுக்கு கசக்குமா என்ன?” 

சித்தி விவரித்த சம்பவங்கள் கண் முன் ஓட,முகம் மலர்ந்து பற்கள்  தெரிய சிரித்தான் ஹரிஹரன்.”நீங்க சொல்றதுதான் சரி சித்தி. அவள் மறுத்தாலும் விடாமல் தரதரவென்று இங்கே இழுத்து வரத்தான் போகிறேன்.அப்படி ஒரு உதவி தேவைப்பட்டால் மீண்டும் உங்களை அழைக்கிறேன்.இப்போது போய் வாருங்கள்”

” சரிப்பா கிளம்புகிறோம். பத்திர விவரம் நாளையே கேட்டு சொல்கிறேன்” சித்தியும் சித்தப்பாவும் கிளம்பினர்.

 இதுவரை இதயத்தில் அடைத்துக் கொண்டிருந்த காற்றை “ஊப்” என்று உதட்டை குவித்து வெளியேற்றினான் ஹரிஹரன்.

“ஜீவி எல்லாம் உனக்காக.சீக்கிரமே இந்த ஹரி் புயல் உன்னை மையம் கொள்ளப் போகிறது.தயாராயிரு செல்லம்” மனதிற்குள் சொன்னபடி உதட்டில் ஒரு உற்சாக மெட்டை பொருத்திக் கொண்டான்.




What’s your Reaction?
+1
56
+1
34
+1
2
+1
2
+1
0
+1
0
+1
1
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!