Entertainment Serial Stories மனதில் உந்தன் ஆதிக்கம்

மனதில் உந்தன் ஆதிக்கம்-4

4

ஜீவிதா பேங்கில் கேட்டிருந்த லாங் லீவை கேன்செல் செய்துவிட்டு மீண்டும் வேலைக்கு செல்ல எண்ணினாள். தனது வேலையை டெல்லிக்கு மாற்றிக்கொள்ள அவள் விண்ணப்பித்த விண்ணப்பத்தை ஹெட் ஆஃபீசுக்கு அனுப்பி விட்டதாகவும்,அநேகமாக அவள் கேட்ட மாற்றம் கிடைத்துவிடும்  என்றும் அவளுடைய பேங்கிலிருந்து மெயில் வந்திருந்தது.

 குழந்தையுடன் டெல்லி சென்று வேலையில் சேர்ந்து விட எண்ணித்தான் அவள் பயணம் மேற்கொண்டது.ஆனால் அது முடியாமல் போய்விட்டது. இனி வேறு வழி யோசிக்க வேண்டும். வேலைக்கு செல்லும் முடிவெடுத்தவளுக்கு உடன் கிளம்ப மனதில்லை.இதோ எல்லைக்காவல் அய்யனாரப்பன் போல் நடுவீட்டில் உட்கார்ந்து லேப்டாப்பை மேய்ந்து கொண்டிருப்பவனை பார்த்தாலே பற்றிக் கொண்டு வந்தது.

 இப்போது அவள் வேலைக்கு சென்றாளானால் வீட்டிலிருக்கும் அவன் குழந்தையை முழுக்க முழுக்க தன்வசப்படுத்திக் கொள்வான். அதனை ஜீவிதா விரும்பவில்லை.சரி எடுத்த லீவை கொஞ்ச நாட்கள் நீட்டிக்கலாம். ஹரிஹரனது வேலைப்பளுவை அவள் அறிவாள். வீம்பிற்காகத்தான் அவன் இப்படி உட்கார்ந்து கொண்டிருக்கிறான் என்று தெரியும். அவன் கிளம்பும் நாளுக்காக காத்திருக்கலானாள்.





 

“அடுத்த வாரத்தில் நான் அங்கு இருப்பேன்” என்று போனில் அவன் யாருடனோ பேசியதை ஒட்டுக் கேட்ட ஜீவிதா மிகவும் சந்தோசம் அடைந்தாள்.ஆக,இன்னமும் ஒரு வாரம் தான் இவன் இங்கே இருப்பான்.தனது சந்தோஷத்தை குழந்தையை தூக்கி இறுக்கி அணைத்து தட்டாமாலை சுற்றியபடி கொண்டாடினாள்.

அப்படி சுற்றுவது ஈசனுக்கு ரொம்ப பிடிக்கும்.கிளுக்கி சிரித்தபடி அவளுடன் சுழன்ற குழந்தை, சுற்றி நின்றதும் “ஆஹூம்ம்மாஉம்” என தலைசுற்றி அவள் மேல் சாய்ந்து கொள்ள,தானும் அவனோடு கிறுகிறுத்து கட்டிலில் விழுந்தாள். 

உற்சாகமாய் உருண்டு கிடந்து திரும்பியவள் அறை வாசலில் கைகளை கட்டிக் கொண்டு நின்று இவர்களை பார்த்தபடி இருந்தவனை கண்டதும் வேகமாக தன் மேல் கிடந்த குழந்தையை பெட்டில் படுக்க வைத்து விட்டு எழுந்தாள். சுற்றிய வேகத்தில் கால் தடுமாற, விழ இருந்தவளை வேகமாக உள்ளே வந்து பற்றி நிறுத்தினான் ஹரிகரன்.

“தொடாதீர்கள்” சிலும்பி தள்ளினாள்.

 “கீழே விழுந்து மண்டையை உடைத்தாவது கொள்வேன்.தொடாதே என்கிறாயா?சரி போ உன்னிஷ்டம்…” வேண்டுமென்றே அவளை உந்தி தள்ளியே விட்டான்.

பொத்தென மீண்டும் தன்னருகே கட்டிலில் வந்து விழுந்தவளில் மகிழ்ந்த குழந்தை “ம்மா” என அவள் மேலேறி அமர்ந்து கொண்டான்.தேன் பருக துடிக்கும் வண்டாய் ஹரிகரன் பார்வை அவர்கள் மேல்.குழந்தையை அணைத்தபடி வேகமாக எழுந்தமர்ந்து அவனை முறைத்தாள்.

 “அட,நீதானேம்மா பிடித்து நிறுத்த வேண்டாமென்றாய்? அதிருக்கட்டும்  எதற்கு இவ்வளவு உற்சாகம்?” கட்டிலுக்கு குனிந்து அவள் முகத்தருகே முகம் வைத்து கேட்டான்.முகம் சுளித்து பின்னால் நகர்ந்தவளிடமிருந்து குழந்தை “அப்பா” என்று தவ்வினான்.

“உங்களை மாதிரி வில்லனை எல்லாம் பக்கத்தில் வைத்துக் கொண்டு நான் எதையும் கொண்டாடி விட முடியுமா?” வெறுப்பை உமிழ்ந்தாள்.

“கரெக்ட்,என்னைத் தாண்டி எந்த கொண்டாட்டமும் உனக்கு கிடையாது” கண்கள் மின்ன அறிவித்துவிட்டு குழந்தையுடன் வெளியே போனான்.

ஹரிஹரன் வீட்டை விட்டு வெளியேறப் போகும் நாளை எதிர்பார்த்து ஜீவிதா காத்திருக்க, அன்றிலிருந்து இரண்டாவது நாள் அவர்கள் வீட்டு வாசலில் வந்து நின்ற காரில் இருந்து கையில் பழ தட்டுக்களுடன் இறங்கி வந்தவர்கள் அவளுக்கு அதிர்ச்சியை கொடுத்தனர்.நடுத்தர வயதை தாண்டிய அவர்கள், தங்கள் கையில் கொண்டு வந்த இரண்டு தட்டுகளையும் டீப்பாயில் வைத்தவுடன் பின்னேயே டிரைவர் மேலும் நான்கு தட்டுகளை கொண்டு வந்து அடுக்கினான்.

சகாதேவன் கலைவாணியிடம் கை குவித்தனர். “நாங்கள் ஹரிஹரனின் சித்தியும், சித்தப்பாவும்.சிவகாசியில் இருந்து வந்திருக்கிறோம்”ஞ அறிமுகப்படுத்தி கொண்டனர்.

 இந்த அறிமுகத்திலேயே வியந்து அவர்களைப் பார்த்த ஜீவிதா தொடர்ந்த அவர்களது பேச்சில் அதிர்ந்தாள்.

” எங்கள் மகனுக்கு உங்கள் மகளை முறைப்படி பெண் கேட்டு வந்திருக்கிறோம்” சித்தப்பா சொல்ல நிஜமாகவே தலைசுற்ற சற்றே பின் நகர்ந்து சுவரில் சாய்ந்து கொண்டாள் ஜீவிதா.

 அருகிருந்த அறைக்கதவை திறந்து வந்த ஹரிஹரன் “வாங்க சித்தி ,வாங்க சித்தப்பா” முறையான வரவேற்பை அவர்களுக்கு கொடுத்துவிட்டு தொய்ந்து நின்றிருந்தவளின் காதருகே “இந்த ஐடியாவை நடராஜ் மூலமாக கொடுத்ததற்கு ரொம்ப நன்றி” என்று விட்டு வீட்டினராக மாறி அவர்களை உபசரித்து அமர வைத்தான்.

சகாதேவனும்,கலைவாணியும் ஹரிஹரனுடன் இணைந்து கொள்ள ஜீவிதா இன்னமும் நடப்பவற்றை நம்ப முடியாமல் பார்த்திருந்தாள். ஹரிஹரன் அவனது சொந்தங்களுடன் சமாதானமாக போய்விட்டானா?அவனுக்காக பெண் கேட்டு வரும் அளவு இருக்கின்றனரா? ஆச்சரியம் தான் அவளுக்கு.

“அப்புறம் சொல்லுங்க” சகாதேவன் முதலில் அவர்கள் சொன்னது காதில் விழாதது போல் பாவித்து மீண்டும் வந்த காரணம் கேட்டார்.

“எங்கள் மகன் ஹரிஹரனுக்கு உங்கள் மகள் ஜீவிதாவை திருமணம் செய்ய முறைப்படி பெண் கேட்டு வந்திருக்கிறோம்”

“அது வந்து…”சகாதேவன் நேரடியாக வந்து நிற்கும் பெரிய மனிதர்களை தவிர்ப்பது எப்படி என்று தலையை சொறிந்து யோசித்துக் கொண்டிருக்க, கலைவாணி அதற்குள் அவர்களுக்கு காபி கொண்டு வந்து கொடுத்திருந்தாள்.

” நாங்கள்… எங்களுக்கு கொஞ்சம் டைம் வேண்டும்.யோசித்துத்தான் பதில் சொல்லுவோம்” சகாதேவன் தள்ளிப் போட …சித்தி வேகமாக கேட்டாள்.

” எத்தனை நாட்கள்?”

“அது…நாங்கள்…அது ஜீவிதா தான் சொல்ல வேண்டும்.முதலில் அவளுக்கு சம்மதம் இருக்க வேண்டுமல்லவா ?” பேச்சை திசை திருப்பி விட்டார் சகாதேவன்.





” என்னம்மா நீங்க என்ன சொல்றீங்க?” சித்தப்பா கலைவாணியிடம் கேட்டார்.

” திருமணம் செய்து கொள்ளப் போகிறவள் சம்மதமும் வேண்டுமில்லையா?” 

“சரிதான்” என்ற சித்தப்பா இப்போது நேரடியாக ஜீவிதாவிடமே கேட்டார்.

” என்னம்மா உனக்கு ஹரிஹரனை திருமணம் செய்து கொள்ள சம்மதமா?”

” நிச்சயமாக இல்லை” கணீர் என்ற குரலில் அவர் கேள்வி முடியும் முன்பே பதில் சொன்னாள் ஜீவிதா.

” ஏன்?” சித்தியின் குரல் கோபமாக வந்தது.

” இது என்ன கேள்வி? உங்கள் மகளுக்கு என்றால் இதுபோலத்தான் இரண்டாம் தார மாப்பிள்ளை பார்ப்பீர்களா?” ஜீவிதாவின் குரல் சூடாக வந்து விழுந்தது.

” இதில் என்ன தவறு? இது அனேக இடங்களில் நடப்பதுதானே. இது போல் ஒரு சூழ்நிலை எங்கள் வீட்டில் வந்தால் நான் சரியென்றுதான் சொல்வேன்”சித்தி அசராமல் பதிலளித்தாள்.

” உங்கள் குடும்பங்கள் வேண்டுமானால் அப்படி இருக்கலாம். எங்கள் குடும்பங்களில் அப்படி  நடப்பதில்லை.நாங்கள் எல்லோரும் ஒருவனுக்கு ஒருத்தி என்ற கட்டுப்பாட்டுடன் வாழ்பவர்கள்.அத்தோடு பொண்டாட்டி செத்தா புதுமாப்பிள்ளை பழக்கமும் எங்களுக்கு கிடையாது” அசராமல் பதிலளித்தாள் ஜீவிதா. 

“என்னம்மா மனசுல எதை வச்சிக்கிட்டு இந்த மாதிரி பேசுற?” சித்தி கோபமாக எழ சித்தப்பா மனைவியை கையமர்த்தினார்.

” கொஞ்சம் இரும்மா.அவ தான் நம்ம குடும்பத்தோட லட்சணத்தை பிட்டு பிட்டு வைக்கிறாளே. நாம்… நம் குடும்பம் என்று ஒதுங்கி கொள்வோம்.இவர்களுடைய ஒத்துழைப்பு நமக்கு தேவையில்லை. டேய் ஹரி ஈசனை தூக்கிட்டு கிளம்புடா.நாம் போகலாம்” சொன்னதோடு கொண்டு வந்த தட்டுகளை எடுத்துக்கொண்டு கிளம்பியும் விட்டனர்.

 ஜீவிதா அதிர்ந்து நிற்க, ஹரிஹரன் உள்ளே சென்று தூங்கிக் கொண்டிருந்த குழந்தையை தோளில் போட்டுக்கொண்டு வெளியேறினான்.

” இல்லை” வீறிடலுடன் வேகமாக போய் குழந்தையை அவனிடமிருந்து தன் தோளுக்கு மாற்றினாள் ஜீவிதா. “என் குழந்தை. நான் தரமாட்டேன்”

” நீயா குழந்தையைப் பெற்றாய்?” சித்தி திரும்பி நின்று இடுப்பில் கைவைத்து கேட்டாள்.

” இல்லைதான்.ஆனால் என் அக்காவின் குழந்தை என் குழந்தை” ஜீவிதாவின் கத்தலில் குழந்தை விழித்துக் கொண்டு அழ, கலைவாணி குழந்தையை வாங்கி தட்டி கொடுத்து சமாதானப்படுத்தினாள்.

“என்னம்மா இது உன்னோடு ஒரே அக்கப்போரா இருக்குது? பெற்ற தகப்பனுக்கு பிள்ளையை தரமாட்டேன்னு நீயே வைத்துக்கிறாய். அம்மான்னு கூப்பிட வேறு பிள்ளையை பழக்கி வைத்திருக்கிறாய். சரி அவனையே திருமணம் முடித்துக் கொள்ளென்றால், முடியாது என்கிறாய். இதில் இப்போது நாங்கள் என்ன செய்வது? ஒன்று அவனை திருமணம் செய்து கொள், அல்லது அவன் குழந்தையை கொடுத்துவிட்டு ஒதுங்கி விடு. அவனுக்கு வேறு திருமணம் செய்து வைக்க வேண்டியது எங்கள் கடமை”

ஜீவிதா இடிந்து போய் அமர்ந்து விட்டாள். இந்த பிரச்சனையை விரிவாக எடுத்துப் பேசினால் இந்த முடிவில்தான் வந்து நிற்கும் என்று அவளுக்கு கடந்த ஒரு வருடமாகவே மனதில் பட்டுக்கொண்டே இருந்தது. அதனால் தான் இதனை பேசாமல் தள்ளிப் போட்டுக் கொண்டே போனாள்.

பேரனையும்,மகளையும் கவனித்து கணித்த கலைவாணி கிட்டத்தட்ட மனதளவில் இந்த திருமணத்திற்கு தயாராகி விட்ட நிலையில்,சகாதேவன் அங்கும் இங்குமாக ஈரெட்டான மனநிலையில் இருந்தார்.ஜீவிதாவுக்கு மட்டுமே இப்படி ஒரு திருமணம் என்பதனை மனதால் கூட நினைத்து பார்க்க முடியாத நிலைமை இருந்தது.

முகத்தை மூடிக்கொண்டு அழுது கொண்டிருந்த ஜீவிதாவை பார்த்த சித்தப்பா என நினைத்தாரோ தெரியவில்லை “சரி நாங்கள் கிளம்புகிறோம்.நீங்க உங்களுக்குள்ள பேசி நல்ல முடிவா சொல்லுங்க”என்று விட்டு “வாடா ஹரி, நாம் போகலாம்” என்றார்.





 ஹரிஹரனும் தனது லேப்டாப் பேக்கை எடுத்துக் கண்டு அவர்களை தொடர்ந்தான். வாசல் படி இறங்கிய சித்தப்பா அங்கிருந்தே திரும்பி இவளை பார்த்து “திரும்பவும் குழந்தையை தூக்கிக்கிட்டு எங்கேயாவது ஓடணும்னு நினைக்காதே. உங்களை சுத்தி காவலுக்கு ஆள் போட்டு இருக்கோம். ஒன்னு குழந்தையோட எங்க வீட்டுக்கு வர பாரு, இல்ல குழந்தையை கொடுத்துட்டு ஒதுங்கிக்க பாரு” ஒற்றை விரலாட்டி எச்சரித்துவிட்டு போனார்.

ஓய்ந்து போய் அமர்ந்திருந்த மகளின் தோள்களை ஆதரவாக தட்டினார் சகாதேவன். “ஜீவிம்மா நாம தம்புவ அவங்க கிட்ட கொடுத்திடலாம்டா” அப்பாவின் பேச்சில் ஜீவிதாவின் உடல் முழுவதும் ஒரு நடுக்கம் ஓடியது.

 ஜீவி… குழந்தை…என் குழந்தை, ஐயோ என் குழந்தையை மறந்து விட்டேனே! இவனை விட்டு நான் எப்படி போவேன் ஜீவி? என் குழந்தையை நீதான் பார்த்துக்கணும்மா. ப்ளீஸ் அவனை விட்டுடாதம்மா..ப்ளீஸ்மா… வாழ்வின் கடைசி நிமிடத்தில் இருந்து கொண்டு தன்னிடம் அக்கா யாசித்தது நினைவு வர ஜீவிதாவின் உள்ளம் நடுங்கியது.

அக்காவிற்கு உறுதி கொடுத்துவிட்டு தளர்ந்த நடையுடன் பிரசவ அறையை விட்டு வெளியே வந்த அடுத்த நிமிடமே உள்ளே நின்றிருந்த கலைவாணி “ஐயோ ஸ்வேதா” என அலறும் குரல் கேட்க வெளியில் நின்றிருந்த சகாதேவனும் ஹரிஹரனும் அதிர்ந்து உள்ளே ஓடினர்.

தானும் உள்ளே போகும் எண்ணம் அப்போது ஜீவிதாவிற்கு வரவில்லை. இந்த கத்தல்களில் குழந்தை என்னவாகும் என்ற எண்ணம் தோன்ற கையில் இருந்த குழந்தையை தூக்கி ஆதரவாக மார்போடு அணைத்தாள். அப்போது சிணுங்கிய குழந்தை முகம் திருப்பி அவள் மார்பை முட்ட உடல் முழுவதும் தாய்மை உணர்வு பரவ சிலிர்த்து நின்றாள் ஜீவிதா.

இதோ அதே உணர்வு இப்போதும் அவளுள்…”இல்லைப்பா, தம்பு என் குழந்தை. அவனை நான் கொடுக்க மாட்டேன்.நான் அக்காவிற்கு வாக்கு கொடுத்து இருக்கிறேன்.அவன் எனக்குத்தான்”கத்தினாள்.

 சகாதேவன் திகைத்து நிற்க, கலைவாணி அவர் கையை பற்றி இழுத்தாள் “வாங்க நாம கோவிலுக்கு போயிட்டு வரலாம். ஜீவி யோசிக்கட்டும்” குழந்தையையும் தூக்கிக் கொண்டு இருவரும் கிளம்பினார்கள்.

 அவர்கள் வீட்டில் எல்லோரும் செல்வது தெருமுனையில் இருக்கும் சந்தன மாரியம்மன் கோவிலுக்குத்தான்.வாரம்தோறும் போவது மட்டுமின்றி,ஏதாவது பிரச்சனை என்றாலும் தீர்வுக்கு செல்வதும் அந்த சந்தனமாரியிடம்தான்.

அன்று… 

ஜீவிதா ஸ்வேதாவை வற்புறுத்தி அந்த கோவிலுக்குத்தான் அழைத்து வந்திருந்தாள்.வந்த நாளிலிருந்து இரண்டு நாட்களாக அக்காவை கவனித்துக் கொண்டுதான் இருந்தாள். அவள் ஒருவித சோகத்தில் இருந்தாற் போல் தெரிய அதனை பற்றி விவரம் கேட்கவே அவளையும் இழுத்துக் கொண்டு கோவிலுக்கு வந்திருந்தாள்.

 தனிப்பட்ட முறையில் அன்று ஜீவிதா கோவிலுக்கு வர மற்றொரு காரணமும் இருந்தது.இரு நாட்கள் முன்புதான் அவளுடையவன் மெசேஜ் அனுப்பி இருந்தான்.தன்னுடைய குடும்பப் பிரச்சனைகள் அனைத்தும் ஒரு வாறாக முடிந்து விட்டதாகவும் இனி விரைவிலேயே தான் அவளை சந்திக்க வருவதாகவும் அனுப்பி இருந்தான்.அவனுடைய பிரச்சனைகள் தீர்ந்ததற்கு இவள் தெய்வத்திற்கு நன்றி சொல்லவும் வந்திருந்தாள்.

 அக்காவின் கைகளை பிடித்தபடி கோவில் தெப்பக்குள படிக்கட்டில் அமர்ந்து கொண்டு மெல்ல அக்காவிடம் அவளுடைய சோகத்திற்கான காரணம் கேட்டாள். ஸ்வேதா தயக்கத்துடன் சொன்னது அவளது காதலை.




What’s your Reaction?
+1
55
+1
40
+1
2
+1
3
+1
2
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!