Entertainment Serial Stories மனதில் உந்தன் ஆதிக்கம்

மனதில் உந்தன் ஆதிக்கம்-2

2

ரொம்பவும் கோபிப்பானோ? என்ற பயத்துடன் கலைவாணி பார்க்க ஹரிஹரன் ஆதரவாக புன்னகைத்தான். “உங்கள் மேல் தவறு இருக்காது என்று எனக்கு தெரியும் அத்தை”.

சகாதேவன் கொஞ்சம் விரைப்பாகவே ஓரமாக சோபாவில் அமர்ந்திருந்தார்.ஓரக் கண்களால் அவரைப் பார்த்தபடி கலைவாணியிடம் பேசினான் ஹரிகரன். காரில் திரும்ப வருவதற்குள் தூங்கி இருந்த குழந்தையை படுக்கையறைக்குள் படுக்க வைத்தாள் ஜீவிதா.

“நான் கொஞ்ச நாட்கள் இங்கேயே தங்கலாம் என்று இருக்கிறேன்” தாடையை வருடியபடி சாதாரணமாக சொல்லிவிட்டு சோபாவில் பின்னால் சாய்ந்தமர்ந்து கால் மேல் கால் போட்டுக் கொண்டான்.

சகாதேவன் திடுக்கிட்டு பார்த்தார்.”அக்கம் பக்கமெல்லாம் என்ன நினைப்பார்கள்?”கத்தலாக குரல் உயர்த்தினார்.

 கலைவாணியின் முகத்திலும் வருத்தம் தான்.பதிலில்லாமல் தலை குனிந்திருந்தாள்.

“அடுத்தவர்களின் நினைப்பை பற்றிய கவலை எனக்கு கிடையாது” சற்று முன் மகளுக்கு சொல்லியதே இப்போது பெற்றோருக்கும்.சகாதேவன் பற்களை நறநறக்க கலைவாணி பாந்தமாக குரலை வழிய விட்டாள்.

“அது சரியாக வருமா தம்பி?”

“ஏன் அத்தை.எனக்கு இந்த வீட்டில் தங்க உரிமை இல்லையா…உறவுதான் இல்லையா?”ஹரிகரனது குரலும் குழைந்தது.

எத்தன் இவன்…இவனைப் பற்றி நன்கு தெரிந்தும் இவனை மீறி குழந்தையுடன் போக நினைத்தது என் தவறு…கண்ணீர் வழிந்து தலையணையை நனைக்க,கொதிக்கும் மனதுடன் குழந்தையை அணைத்தபடி படுத்திருந்தாள் ஜீவிதா.மூன்றே மணி நேரங்களுக்கு முன்பு இந்த அறையை விட்டு வெளியேறிய போது பொங்கிக் கொண்டிருந்த விடுதலை உணர்வு இப்போது வற்றிப் போய், மனம் வறண்டு கிடந்தது.

“நடு இரவாக போகிறது.இவ்வளவு நேரம் விழித்திருந்தால் உங்கள் உடம்பு என்னாவது? போய் படுங்கள்.நான் மாடி அறையில் தங்கிக் கொள்கிறேன்” எழுந்து நின்று உடம்பை பின்னால் வளைத்து நெட்டி முறித்தான்.

“ஷ்…ஷப்பா சரியான அலைச்சல்…” முணுமணுத்தபடி அவன் ஜீவிதா அறைப் பக்கம் போக சகாதேவன் பதறினார்.

“அங்கே எங்கே போகிறீர்கள்?”

நின்று நேராக அவரை உறுத்தான்.”என் மகனைப் பார்க்க போகிறேன்”நிமிர்வாய் அறிவித்து விட்டு சாத்தியிருந்த கதவை தள்ளித் திறந்தான்.

படுத்திருந்த ஜீவிதா அவசரமாக எழுந்தாள்.”என்ன?” சீறினாள்.அவளோடு ஒட்டிப் படுத்திருந்த குழந்தை இந்த அசைவில் சிணுங்கி புரண்டான்.

“மெல்ல…இப்படியா பிள்ளையை உதறி எழுவாய்?” கிசுகிசுப்பாய் அவளைக் கடிந்தபடி,தாவி கட்டிலில் அமர்ந்து மெல்ல பிள்ளையை தட்டிக் கொடுக்க ஆரம்பித்தான்.ஜீவிதா கட்டிலை விட்டு இறங்கி ஓரமாக நின்று கொண்டாள்.

“இன்டீசன்ட் பெல்லோ” முணுமுணுப்பாக ஆனால் அவனுக்கு கேட்கும்படியே சொன்னாள்.ஹரிகரனோ காதற்று போய் விட்டது போல் மகனை சமாதானப் படுத்துவதில் ஆழ்ந்து கிடந்தான்.

ஒரு வழியாக குழந்தை புரளல் நின்று தூங்க ஆரம்பிக்கவும் எழுந்தான்.”மாடி அறையில் தூங்க போகிறேன் “அழுத்தமாக சொல்லிவிட்டு போனான்.

கொதிக்கும் மனதுடன் படுக்கையில் விழுந்து விழி மூடியவளின் கண்கள் எரிந்தன.தூங்க முடியுமென்று தோணவில்லை.உயிர் உருவும் வேதனையுடன் தூக்கமும் ,விழிப்புமாக அல்லாடியவளின் மனதிற்குள் அனுமதி இல்லாமலேயே நுழைந்தன அவன் நினைவுகள்.

” எனக்கு பார்ட்டி கிடையாதா?” பின்னால் கேட்ட குரலிலேயே அவனை உணர்ந்து உற்சாகமாக திரும்பினாள் ஜீவிதா.

“என் ப்ராஜெக்ட்டை எல்லோரும் பாராட்டுகிறார்கள்.நம் காலேஜ் லைப்ரரியில் ஷோ பண்ணப் போவதாக சொல்லிவிட்டார்கள்.இதற்கெல்லாம் காரணமே நீங்கள்தான்….”

“வெயிட்…வெயிட்.நீ கஷ்டப்பட்டு சேர்த்து வைத்திருந்த விபரங்களை வரிசைப்படுத்தி கோர்த்து கொடுத்தேன்.அவ்வளவுதானே…”

“அந்த கோர்த்தலில்தானே விஷயமே இருக்கிறது.ப்ரசென்டேசன் முக்கியம் இல்லையா?நீங்கள் இல்லாமல் என் ப்ராஜெக்ட் இவ்வளவு கவனம் பெற்றிருக்காது.இந்த பார்ட்டியே அதற்காகத்தான்.மற்றவர்களுக்கு முன்பு உங்களைத்தான் முதலில் கூப்பிட நினைத்திருந்தேன்.

நீங்கள்தான் ஒரு வாரமாக கண்ணிலேயே படவில்லையே”

“தேடினாயா?”முன்புறம் லேசாக குனிந்து அவன் கேட்க இவளுக்கு உடலில் சிலிர்ப்போடியது.

“ம்” முணுமுணுத்து விட்டு,”ஆறு மணிக்கு கனிஷ்கா ரெஸ்ட்ரான்ட் வந்துடுங்க”என்றாள்.





 

அன்று மாலை பைக்கும்,ஸ்கூட்டியும் வைத்திருப்பவர்கள் பின்னால் இல்லாதவர்கள் தொற்றிக் கொள்ள,”என்னிடம் பைக் இல்லை.உன்னோடு வரட்டுமா?”புன்னகையோடு அவன் கேட்டபோது ஜீவிதாவின் தலை வேகமாக சம்மதித்து ஆடியது.

ம்..பைக் வாங்கும் வசதியில்லாதவன்,இரக்கமாக அவனைப் பார்த்துவிட்டு, அவனது முக மாற்றத்தில் வேகமாக இரக்கத்தை அழித்து உற்சாகம் காட்டி ஸ்கூட்டியை முடுக்கினாள்.

“ஹேர் ஸ்ப்ரே என்ன ப்ளேவர்?.மைல்டான வாசனையா இருக்கு” பின்னால் அமர்ந்திருந்தவன் அவள் கூந்தல் வாசம் பிடிப்பதை உணர்ந்து கழுத்தோரம் குறுகுறுத்தது.

“செர்ரி” பதில் சொன்ன  ஜீவிதாவிற்கு சினிமாவில் ஹீரோ பைக்கில் இரண்டு கைகளையும் விரித்தபடி செல்வது போல் பயணிக்க தோன்றியது.

“அவரவர்க்கு பிடித்ததை வாங்கி சாப்பிடுங்க” ஜீவிதா சொன்னதும்,

சிக்கன் தந்தூரி,க்ரில்டு,டிக்கா,

பெப்பர் ப்ரை,பஞ்சாபி,செட்டி நாடு…என ப்ரெண்ட்ஸ் எல்லோரும் அந்த ஹோட்டல் கிச்சனுக்குள் போய் அடுப்பை இங்கே உருட்டிக் கொண்டு வராத குறையாக ஆர்டர் சொல்லினர்.

“நீங்க எதுவும் சொல்லலையா?” அமைதியாக உட்கார்ந்தவனிடம் கேட்டாள்.

“மெனு கார்டை பார்த்தாலே ஒரே குழப்பமாக இருக்கிறது” அருகே இருந்த கார்டை தள்ளி வைத்தான்.

மீண்டும் எழுந்த பரிதாப உணர்வை முகத்தில் காட்டாமல் மறைத்தாள்

“நான் ஹெல்ப் பண்ணவா?” 

அவன் தலையசைக்க,அவனுக்கும் ஜீவிதாவே ஆர்டர் செய்தாள்” உங்களுக்கு ப்ரட் பிடிக்குமா?” கேட்டு ப்ரெட் சிக்கன்,சிக்கன் நுக்கட்ஸ்,ஹைதராபாத் பிரியாணி என ஆர்டர் செய்தாள்.

தட்டிலிருந்து தலை நிமிர்த்தாமல் சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களை பார்த்தவன்”பில் நிறைய வரும் போலவே…உனக்கு…உன்னிடம் இருக்கிறதா?” என்றான்.

ஜீவிதா அவனை கனிவாகப் பார்த்தாள்.”நோ ப்ராப்ளம்.என் கார்டில் நிறைய பணம் இருக்கிறது ” 

அனைவரும் உணவு முடித்து ஐஸ்க்ரீமிற்கு வந்தனர்.”உங்களுக்கு லெமன் பிடிக்கும்தானே?”கேட்டுக் கொண்டு லெமன் ஹெலோ ஐஸ்க்ரீம் ஆர்டர் செய்தாள்.வெண்ணிலாவில் லெமனின் லேசான புளிப்பு சுவையோடு,தேங்காயின் நறநறப்பும் கலந்த அந்த வித்தியாசமான ஐஸ்க்ரீமை புருவம் உயர்த்தியபடி அவன் துளித் துளியாக ரசித்து சாப்பிடுவதை பார்த்தபடி இருந்தாள்.

ஹாஸ்டலுக்கு திரும்பும் போது “நீங்கள் ஓட்டுகிறீர்களா?” எனக் கேட்க “எனக்கு பழக்கம் இல்லை” சொல்லிவிட்டு அவள் பின்னாலேயே அமர்ந்து கொண்டான்.

“எங்கள் வீட்டில் கொஞ்சம் ஃபேமிலி ப்ராப்ளம்.அதுதான் ஒரு வாரமாக நான் காலேஜ் வரவில்லை” அவள் கேட்காமலேயே விளக்கம் கொடுத்தான்.

“ஓ,சரிதான்” மேலும் விளக்கங்கள் கேட்டு அவனை தர்ம சங்கடப்படுத்த அவள் விரும்பவில்லை.பாய்ஸ் ஹாஸ்டலில் அவன் இறங்கிக் கொள்ள தன் ஸ்ட்டியை கேர்ள்ஸ் ஹாஸ்டல் பக்கம் திருப்பினாள்.





“ம்…மா..ம்..ம்…” தூக்கத்திலேயே ஏதோ கனவு கண்டோ என்னவோ கத்தலுடன் குழந்தை அழ ஜீவிதா குழந்தையை தூக்கி தன் மேலேயே படுக்க வைத்துக் கொண்டாள். முதுகை வருடி தட்டிக் கொடுத்தாள். அதற்குள் ஹரிஹரன் கீழே இறங்கி வந்து விட்டான்.

 கதவை லேசாக திறந்து இருவரையும் பார்த்துவிட்டு மெல்லிய தலையசைவுடன் சென்றான். திடுமென எட்டிப் பார்த்தவன் முன் எழக்கூட முடியாமல் குழந்தை மேலே இருக்க பற்களை நறநறத்தபடி படுத்திருந்தாள் ஜீவிதா.

 மறுநாள் காலை அவனது கறுப்பு மெர்சிடிஸ் வாசலில் நிற்பதை பார்த்தபடியே வாசல் தெளித்து கோலமிட்டாள்.எதிர் வீட்டு பரிமளா அந்த காரையும் இவளையும் ஒரு மாதிரி பார்த்தபடி வாசல் தெளித்துவிட்டு உள்ளே போனாள்.

“உங்கள் எண்ணம்தான் என்ன? எதற்காக ஊர் முழுவதும் உங்களை தண்டோரா அடித்துக் கொண்டு இருக்கிறீர்கள்?” கோலமாவு கிண்ணத்துடன் எதிரே நின்றபடி ஆத்திரத்துடன் பேசுபவளை நிமிர்ந்து பார்த்து புன்னகைத்தான் ஹரிஹரன். அவன் கைகளில் ஆவி பறக்கும் காபி இருந்தது.

“என்ன விஷயம்?”நிதானமாக காபியை உறிஞ்சினான்.

“அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள் ஒரு மாதிரி பார்த்துவிட்டு போகிறார்கள். எதற்காக இங்கே தங்க நினைக்கிறீர்கள்?”

“என் மகனுக்காக”

ஜீவிதா வாய் அடைத்து நிற்க, “அவனுடைய அம்மாவிற்காகவும் தான்”தொடர்ந்தான் அழுத்தமாக.

விடு விடு என்று படுக்கை அறைக்குள் வந்தவள் யோசனையுடன் சிறிது நேரம் அங்கும் இங்கும் நடந்தபடி இருந்தாள். பிறகு ஒரு முடிவுடன் போனை எடுத்து எண்களை அழுத்தினாள்.

“நடராஜ் எனக்கு சம்மதம்.நீங்கள் உங்கள் அம்மா அப்பாவோடு என்னை பெண் கேட்டு வரலாம்”




What’s your Reaction?
+1
54
+1
40
+1
2
+1
9
+1
1
+1
0
+1
2
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!