Entertainment Serial Stories மனதில் உந்தன் ஆதிக்கம்

மனதில் உந்தன் ஆதிக்கம்-1

1

“இந்த பேக்கில் குட்டிப்பையனுக்குரிய டிரஸ் மற்ற சாமான்கள் இருக்கிறதும்மா” அம்மா கலைவாணி கொடுத்த பேக்கையும் எடுத்து தனது டிராலி அருகே வைத்தாள் ஜீவிதா.

“இது சரியாக வருமாம்மா?” அப்பா சகாதேவன் ஐம்பதாவது தடவையாக கேட்டார்.

“சரியாக வர வேண்டும்பா” சலித்துக் கொள்ளாமல் அதே பதிலை சொன்னாள் ஜீவிதா.

“எனக்கு ஹரிகரன் தம்பியை நினைத்தால் பயமாக இருக்கிறதும்மா” அம்மாவின் குரல் லேசாக நடுங்கியது.அதே பயம் அப்பாவின் முகத்திலும்.

“ரவுடிப்பய…”பெற்றவர்களின் முக நடுக்கம் அவளை முணுமுணுக்க வைத்தது.இப்படி பயப்படுவதற்கு கூட தகுதியற்றவன் அவன்,கொஞ்சம் தயங்கிய தன் மனதினை தட்டி நிமிர்த்தினாள்.

“தம்புக்குட்டி…” பாயில் அமர்ந்து கலர் ப்ளாக்குளால் கோட்டை கட்டிக் கொண்டிருந்த மூன்று வயது குழந்தை இவளை நிமிர்ந்து பார்த்து முளைத்திருந்த நான்கே பற்கள் காட்டி சிரித்தது.

“அம்மா” கை உயர்த்தி தூக்க சொல்லி கொஞ்சிய குழந்தையை குனிந்து அள்ளிக் கொண்டாள்.மூன்று வருடங்களாக இவன் பிறந்த நிமிடம் முதல் இதோ இப்போது வரை சலிக்காமல் இப்படி கையள்ளி கொள்கிறாள்.ஆனாலும் ஒவ்வொரு முறையும், முதன் முதலில் அவனைக் கையேந்திய பொழுது உண்டான அதே சிலிர்ப்பு.

தனை மறந்து அவன் கன்னங்களில் இதழ்களை முத்தி எடுத்தாள்.பதிலுக்கு தானும் கன்னம் நனைத்த பிள்ளையின் செயலில் நெகிழ்ந்து கலங்கிய கண்களை மறைத்துக் கொண்டு “தம்பு நாம் ஊருக்கு போகலாமா?” என்றாள்.

“ம் மா.காரு எங்க?” வாசலில் தேட,ஒரு நிமிடம் ஸ்தம்பித்து உடன் சுதாரித்துக் கொண்டாள்.அவள் வாங்கும் சம்பளத்திற்கு ஆறே மாதங்களில் ஒரு கார் வாங்க மாட்டாளா என்ன?

“கார் பிறகு தம்பு.இப்போ பஸ்ஸில் போகிறோம்”

“ம் சரிம்மா.போலாம்…வா…வா”





 

“இரு செல்லம் கொஞ்ச நேரம் ஆகட்டும்” ஜீவிதா இருட்டுவதற்கு காத்திருந்தாள்.வீட்டின் முன்பக்கம் தவிர்த்து பின்வாசலுக்கு, புக் செய்த கேப்புக்கு வழி சொன்னாள்.பின்வாசல் விளக்கை போடாமல் வெளியேறி டாக்சியில் குழந்தையுடன் ஏறினாள்.

ஷாலை எடுத்து தலையை சுற்றி முக்காடு போட்டுக் கொண்டு முகத்தை மறைத்துக் கொண்டாள்.குழந்தைக்கு மங்கி குல்லா போட்டு முகம் மறைத்தாள்.

கண் கலங்க விடை கொடுத்த பெற்றோருக்கு ஜாக்கிரதை சொன்னாள்.”எங்களுக்கு தெரியாது என்பதிலேயே உறுதியாக நில்லுங்கள்”திரும்பவும் நினைவுபடுத்தினாள்.

டாக்சி காந்திபுரம் பஸ் ஸ்டான்டில் நின்றதும்,தன்னையும்,குழந்தையையும் முடிந்தளவு மறைத்துக் கொண்டு இறங்கி டிக்கெட் புக் செய்திருந்த டிராவல்ஸ் பஸ்ஸில் ஏறினாள்.ஸ்லீப்பர் சீட்டில் அமர்ந்து சன்னலில் தொங்கிய கனத்த  திரைகளை இழுத்து விட்டாள்.பஸ் கிளம்பும் வரை திக் திக் மனதுடன் அமர்ந்திருந்தாள்.

பத்தாவது நிமிடம் பஸ் கிளம்பியதும் நிம்மதி மூச்சு விட்டாள்.கோயம்புத்தூரை விட்டு வெளியேறி சென்னை செல்லும் சாலையை பிடித்து பஸ் ஓட ஆரம்பித்து அரை மணி நேரத்திற்கும் மேலானதும் அவளது சுவாசம் சீரானது.விடியும் போது ஹரிகரனை விட்டு வெகு தூரம் போயிருக்கலாம் உற்சாகமாக நினைத்தபடி குழந்தைக்கு பிஸ்கெட்டை பாலில் நனைத்து ஊட்டி தட்டிக் கொடுத்து உறங்க வைத்தாள்.

தானும் உறங்க எண்ணி கண் மூடியவளின் மனதிற்குள் ஏதேதோ குழப்பங்கள்,பயங்கள்.அனைத்தையும் தாண்டி மேலிருந்து காற்றிலிறங்கும் நறுமண மலரென அவன் முகம் அவள் மேல் விழுந்து அப்பியது.இதழ் பிரிக்காமல் அவனது புன்னகை,இதழ்கள் விரிந்து பற்கள் தெரியும் சிரிப்பு,கனிந்து உருளும் விழிகள் என ப்ரேம் ப்ரேமாக அவனது முக வடிவுகள் மனம் முழுவதும் ஊர்வலம் போனது.

 ஜீவிதா இது தவறு.மனதை அலை பாய விடாதே,மனம் அவளை இடித்துரைக்க,வேகமாக அவனது போட்டோ பிரேம்களை அழிக்க முயன்றாள்.ஆனால் நீர் மேல் குமிழி போல் குபுக் குபுக்கென லேலெழுந்து அவள் மனமெங்கும் அலைந்தாடினான் அவன்.

“ஐயோ பேப்பர்ஸ் இல்லாமல் நான் எப்படி நாளை காலேஜ் போவேன்?” ஜீவிதாவின் கன்னங்களில் கண்ணீர் கோடிட ஆரம்பிக்க,அவன் பதறினான்.

“ஷ்…இதென்ன அழுகை?நான் ஹெல்ப் செய்கிறேன் வா.நாளை மாலை நான்கு மணி வரை டைம் இருக்கிறது.அதற்குள் ப்ராஜெக்டை முடித்து பேப்பர்சை தயார் செய்து விடலாம்”

மெல்லிய அதட்டலாய் சொன்னவனை நிமிர்ந்து பார்த்தாள்.அவளது சீனியர்.ஆனால் வேறு பாடப்பிரிவு.

நாளையே கடைசி எனும் நிலையில் செய்து முடித்து வைத்திருந்த ப்ராஜெக்ட்ஸ் பேப்பர்சை தொலைத்து விட்டு நிற்கிறாள்.இந்த பாடத்துக்குரிய ப்ரொபசர் கொஞ்சம் பழைய காலம்.லேப்டாப்பில் டாக்குமென்ட்ஸ்,பி.டி.எப் போன்றவற்றை ஏற்றுக் கொள்வதில்லை.பேப்பரில் பைல் செய்து ஆல்பமாக்கி தர வேண்டும் அவருக்கு.சிறந்தவற்றை கல்லூரி லைப்ரரியில் வைப்பேன் என்பார்.

“உ…உங்களுக்கும் ப்ராஜெக்ட் இருக்கும்தானே?” அவள் தயங்கி நிற்க,

“உன்னைப் போன்றுதான் நானும்.ஒரு நாள் முன்னதாகவே முடித்து விடுவேன்.வா இப்போதே ஆரம்பிக்கலாம்” அவன் லேப்டாப்பை திறந்து ஆன் செய்து கொண்டு அமர,ஜீவிதா பிரசாந்தை திரும்பிப் பார்த்தாள்.

தொலைந்து போன பேப்பர்ஸை பற்றிப் பேசவே,உடன் படிக்கும் அவன் அறையை தேடி வந்திருந்தாள்.அவனோ டேபிளில் கிடந்த அவன் ப்ராஜெக்ட் பேப்பர்களில் கவிழ்ந்து கிடந்தான்.

“ஜீவிதா அண்ணனுக்கு ரொம்பவே ஹெல்பிங் மைன்ட்.நீ அவரையே பிடிச்சுக்கோ”

ப்ராஜெக்ட் முடியும் கடைசி நேர பரபரப்பில் மாணவர்கள் யாரும் யாருக்கும் உதவும் நிலையில் இல்லை…அவனை தவிர.அன்று இரவு முழுவதும் விழித்திருந்து,மறுநாள் பகல் முழுவதும் வேலை பார்த்து அவர்கள் கணக்கிட்டிருந்த நேரத்திற்கு ஒரு மணி நேரம் முன்பே மதியம் மூன்று மணிக்கே ப்ராஜெக்ட் பைல் அவள் கைகளில்.நன்றி சொல்லக் கூட நேரமின்றி பைலோடு காலேஜிற்கு ஓடினாள்.

அடுத்து இரண்டு நாட்கள் கழித்துதான் அவனை கல்லூரி வளாகத்தில் பார்க்க முடிந்தது. இவளது நன்றியை ஏற்றுக் கொண்டு அவன் புன்னகைத்த போது கண்ணோரம் உண்டான சுருக்கங்களுக்குள் தான் சிக்கிக் கொண்டதாக உணர்ந்தாள் ஜீவிதா.

பஸ்ஸில் திடீரென்று ப்ரேக் போடப்பட உடல் குலுங்கி விழி திறந்தாள்.கனவா…நனவா என தெரியாமல் அவளுள் ஓடிய நினைவுகள் அறுபட,ஸ்கிரீனை லேசாக ஒதுக்கி வெளியே பார்த்தாள்.குழந்தை “ம்மா” என்ற முனகலுடன் அவளை ஒட்டிப் படுக்க,ஆதரவாக அணைத்துக் கொண்டாள்.

“ஏன் பஸ் நிற்கிறது?” என ஆளாளுக்கு கேட்க,டிரைவர் பக்கமிருந்து எந்த பதிலும் வரவில்லை.யாருக்கோ காத்திருப்பது போல் பத்து நிமிடங்கள் வரை பஸ் நின்றிருக்க,மூன்று கார்கள் பின்னிருந்து வந்து அவர்கள் பஸ்ஸின் முன் நின்றன.





கனத்த ஸ்கிரீனின் ஒதுங்கிய முனை வழியே கடந்து போன கார்களை பார்த்தவளின் மனது மத்தளம் கொட்ட ஆரம்பித்தது.இல்லை…

அவளது திட்டம் பலிக்கவில்லை.மாட்டிக் கொண்டாள்.

இரண்டே நிமிடங்களில் டிரைவரும்,கண்டக்டரும் அவளது சீட் தேடி வந்தனர்.கை கூப்பினர்.”மேடம் ப்ளீஸ் இறங்கிடுங்க.உங்களை இறக்கி விட்டுத்தான் பஸ்ஸை எடுக்கனும்னு எங்க முதலாளி போனில் சொல்லிட்டார்.உங்களால் மற்ற பயணிகளுக்கும் தொந்தரவு.அவுங்களை நினைத்து பாருங்க.”

ஜீவிதா மௌனமாக தூங்கிக் கொண்டிருந்த குழந்தையை தோளில் போட்டுக் கொண்டு எழுந்தாள். அவளது லக்கேஜ்களை டிரைவரும் கண்டக்டருமே தூக்கிக் கொண்டு அவள் பின்னேயே வந்தனர்.பஸ்ஸை மறித்து முதலில்  நின்ற காருக்குள் பவ்யமாக குனிந்து அவள் லக்கேஜ்களை வைத்தனர்.

சாலையை விட்டு இறங்கி ஓரமாக இருந்த இரண்டாவது கார் அருகே நின்றிருந்தவனை இங்கிருந்தே  கும்பிட்டு விட்டு பஸ்ஸிற்கு திரும்பினர்.

ஜீவிதா தளர்ந்த நடையுடன் இரண்டாவது காரை நோக்கி நடந்தாள்.பலி கொடுக்கச் செல்லும் ஆட்டை போல் தன்னை உணர்ந்தாள். சுற்றியிருந்த இருளில் ஹெட்லைட் வெளிச்சம் மட்டும்  சீறி பாய்ந்தபடி இருக்க அதன் நடுவே நின்றிருந்த ஹரிஹரன் வரி வடிவமாக தெரிந்தான்.அவன் கண்கள் சினத்தினால் இருளிலும் மின்னியது. அந்த கண்ணிற்கு நெற்றிக்கண்ணின் சக்தி இருந்திருந்தால் நிச்சயம் இவள் பஸ்பமாகி இருப்பாள்.

வழியில் நின்று இருந்த கார்கள் ஒதுங்கி வழி விட பஸ் வேகமாக அந்த இடத்தை விட்டு நகர்ந்தது. பஸ்ஸின் ஜன்னல் வழியே இங்கே எட்டிப் பார்த்துக் கொண்டே போன தலைகள் அவளுக்குள் ஒரு வித குன்றலை கொடுத்தது. இவர்கள் எல்லாம் என்ன நினைப்பார்கள்?

“அடுத்தவர்களின் நினைப்பை பற்றிய கவலை,எனக்கு கிடையாது” பாறை மேல் உரசும் கருங்கற்கள் போல் அவனது குரல்.

 மனிதர்களுக்குத்தானே சக மனிதர்களின் எண்ணம் பற்றிய கவலை இருக்கும். உன் போல் அசுரனுக்கு அது ஏன் இருக்கப் போகிறது?நினைத்தபடி தரையைப் பார்த்து நின்றாள்.

“எவ்வளவு தைரியம் இருந்தால் இப்படி ஒரு திட்டம் போடுவாய்?”, இப்போது ஹரிஹரன் குரல் கொஞ்சம் கத்தலாக உயர்ந்துவிட, குழந்தை தூக்கத்திலிருந்து அசைந்தான். ஜீவிதா அவன் முதுகை தட்டிக் கொடுத்து சமாதானம் செய்ய முற்பட அவன் சிணுங்கலுடன் தலையை தூக்கி அங்கும் இங்கும் பார்த்தான்.

முன்னால் உறுமியபடி நின்றிருந்தவனை பார்த்த குழந்தையின் முகம் சிணுங்கல் மறைந்து மலர்ந்தது.”அப்பா “உற்சாகமாக கத்தியபடி இரு கைகளையும் நீட்டி ஹரிகரன் மேல் தாவினான் குழந்தை.





 

What’s your Reaction?
+1
79
+1
46
+1
3
+1
4
+1
0
+1
0
+1
3
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!