gowri panchangam Sprituality Uncategorized

நவகிரக தோஷம் நீக்கும் நவ திருப்பதி- தென்திருப்பேரை திருக்கோவில்*சுக்கிரன் ஸ்தலம்*

தென்திருப்பேரை திருக்கோவில்

                   * சுக்கிரன்   ஸ்தலம்*

இன்றைய திருக்கோயில் பதிவில் நாம் தரிசிக்க இருக்கும் திருத்தல தரிசனம், நவதிருப்பதிகளில் சுக்ரன் ஸ்தலமாக விளங்கும் தென்திருப்பேரை திருக்கோவில் .இத் தலம் தூத்துக்குடி மாவட்டம் அமைந்துள்ளது.

 

ஸ்ரீபேரை (லக்ஷ்மியின் உடல்) என்ற பெயரில் பூமிதேவி இங்கு தவம் செய்ததால் திருப்பேரை என்றே இத்தலத்திற்குப் பெயருண்டாயிற்று. 108 வைணவ திவ்ய தேசங்களில் சோழநாட்டில் திருச்சிக்கு அண்மையில் திருப்பேர் நகர் என்ற திருத்தலம் ஒன்றிருப்பதால் இத்தலத்தை தென்திருப்பேரை என்று அழைத்தனர். இறைவன் கிழக்கு நோக்கி அமர்ந்த கோலத்தில் காணப்படுகிறார். இறைவன் பெயர்கள்: மகர நெடுங்குழைக்காதன். நிகரில் முகில் வண்ணன். இறைவி பெயர்கள்: குழைக்காதுவல்லி, திருப்பேரை நாச்சியார்; தீர்த்தம் : சுக்ர புஷ்கரணி, சங்க தீர்த்தம், மகர தீர்த்தம் ஆகியன. விமானம்: பத்ர விமானம் என்ற வகையைச் சேர்ந்தது. ஆழ்வார்களில் நம்மாழ்வாரால் மட்டும் 11 பாசுரங்களால் பாடல் பெற்றது. மணவாள மாமுனிகளும் இத்தலத்தைப் பாடியுள்ளார்.





தல வரலாறு

முற்காலத்தில் ஒருசமயம் மகாவிஷ்ணு ஒருமுறை பூமாதேவியுடன் தனியாக அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார். இதனை பார்த்துவிட்ட ஸ்ரீ தேவி, தன் கணவன் பூதேவியோடு மட்டுமே அதிக நேரம் செலவிடுகிறார் என்று கோபித்து கொண்டாள். இதற்கு காரணம் பூதேவி கரிய நிறமாக காட்சியளிப்பது தான் என்றும் நினைத்துக்கொண்டாள். அப்போது அங்கு வந்த துர்வாச முனிவரை வரவேற்க, முனிவரோ வாடிய ஸ்ரீ தேவியின் முகத்திற்கு காரணம் கேட்கிறார். அதற்கு ஸ்ரீ தேவியும் தன் கணவர் கரியநிறம் கொண்ட பூ தேவி மீது தான் அதிக பாசம் காட்டுவதாக கூறி வருந்தினாள். நிலைமையை உணர்ந்த துர்வாசர் அவளை சமாதானப்படுத்திவிட்டு சென்றார். பின் ஒரு நாள் துர்வாச முனிவர் வைகுண்டத்திற்கு வருகையில் அங்கு விஷ்ணுவும், பூதேவியும் தனித்து உரையாடிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கிருந்த பூதேவி துர்வாச முனிவரை வணங்கி வரவேற்காமல், கண்டும் காணாதது போல இருந்து விடுகிறாள்.

இதனால் வெகுண்ட துர்வாச முனிவர் எந்த அழகினால் நீ இருமாப்பு கொண்டு என்னை அவமதித்தாயோ அந்த கரியநிற அழகு போய் நீ சிவந்தமேனியாக கடவது என பூதேவிக்கு சாபமிட்டுவிடுகிறார்.அதன்பின் தன் தவற்றை உணர்ந்த பூதேவி துர்வாச முனிவரிடம் மன்னிப்பு கேட்டு, அவர் கொடுத்த சாபத்திற்கு விமோசனம் கேட்கிறாள். மனம் இறங்கிய துர்வாசரும் பூஉலகில் தாமிரபரணி நதிக்கரையில் உள்ள பத்ரி வனம் சென்று தாமிரபரணியில் மூழ்கி மகாவிஷ்ணுவை வழிபட்டு வர மீண்டும் சுய உருவம் அடையப்பெறுவாய் எனக்கூறி சாபத்திற்கு விமோசன வழி கூறியருளுகிறார்.

 

அதன்படி பூதேவி பூஉலகம் வந்து, தாமிரபரணி  ஆற்றின்கரையில் பத்ரி வனம் இருந்த இடத்தை கண்டுபிடித்து, தாமிரபரணியில் நீராடி மகாவிஷ்ணுவை நோக்கி கடுந்தவம் புரிகிறாள். ஒரு பங்குனி மாத பெளர்ணமி தினம் அன்று பூதேவி தாமிரபரணியில் மூழ்கியெழுந்த போது அவள் கைகளில் மீன் வடிவமுடைய இரண்டு மகர குண்டலங்கள் கிடைக்கிறது. அதே நேரம் மகாவிஷ்ணுவும், பூதேவியின் தவத்திற்கு மகிழ்ந்து அவளுக்கு காட்சியளிக்கிறார். பெருமாளை வணங்கி துதித்த பூதேவி, தனக்கு கிடைத்த அந்த இரண்டு மகர குண்டலங்களையும் பெருமாளுக்கு சமர்பிக்க, பெருமாளும் அந்த மகர குண்டலங்களை தன் காதுகளில் அணிகலன்களாக ஏற்று அருள்புரிந்தார். எனவே தான் இங்கு பெருமாளின் திருநாமம் மகரநெடுங்குழைக்காதர் ஆகும்.





கோவில் அமைப்பு:

 

  • தாமிரபரணி ஆற்றின் தென்கரையில் கிழக்கு நோக்கி அமையப்பெற்றுள்ள இக்கோவில், மூன்று நிலை ராஜகோபுரத்தை கொண்டது. இக்கோவிலின் முன்புறம் விசாலமான தெரு அமைந்துள்ளது.இந்த ராஜகோபுரத்தை தாண்டி உள்ளே சென்றால் முன் மண்டபம் நம்மை வரவேற்கிறது. அங்கு கொடிமரமும், பலிபீடமும் அமையப்பெற்றுள்ளது. அதனை தாண்டி உள்ளே சென்றால் கருவறைக்கு நேரெதிரே கருடன் சன்னதி உள்ளது.

  • அர்த்தமண்டபம்  நடுவே தனி மண்டபத்தில் உற்சவர் நிகரில்முகில்வண்ணன் தாயார்களுடன் காட்சிதருகிறார். அவருக்கு பின்புறம் துவாரபாலகர்கள் காவல்புரியும் கருவறையில் மகரநெடுங்குழைக்காதர் காட்சித்தருகிறார்.

  • இதுதவிர வைணவ திருக்கோவில் பரிவார மூர்த்திகளான பன்னிரு ஆழ்வார்கள், இராமானுஜர், கிருஷ்ணன், நரசிம்மர் மற்றும் பிற சன்னதிகளும் உள்ளன.

அமைவிடம்:

திருநெல்வேலியிலிருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் சுமார் 36-கி.மீ தொலைவில் அமையப்பெற்றுள்ளது தென்திருப்பேரை திருக்கோவில்.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!