Serial Stories

எங்கே நானென்று தேடட்டும் என்னை 8

தேடல் — 8

         அந்த வீட்டின் முன்னே காரை நிறுத்தியது தான் தாமதம். மதுமதி வேற்றாளாகிப் போனாள். மனதில் கடலலை போல விடாது தொடர்ந்தன நினைவலைகள்.

        பின்னோடு வந்த விஷ்ணுப்ரியனோ எதிரில் வந்த லாயரோ வணக்கம் சொன்ன காவலாளியோ …எதிர்வந்து அழைத்த வேலைக்காரப் பெண்மணியோ எதுவுமே உணர்விலோ விழியிலோ பதியவில்லை.

        செலுத்தப்பட்டவளைப்போல விரைந்தாள்.

‘இதோ இங்கே தான் அம்மா கோலமாவு கோப்பையை வச்சிருப்பாங்க. இந்தப் பவளமல்லியிலிந்துதான் பூவை பூஜைக்கு  எடுத்துக்கிடுவாங்க. ராத்திரியே செடிக்குக் கீழே ஒரு துணியை விரிச்சு வச்சு இருப்பாங்க அதில் பூவெல்லாம் உதிர்ந்திருக்கும்…இதோ

இங்கேதான் அந்த நீள சோபாயிருக்கும். அப்பா காபி குடிக்க நானும் அக்காவும் பக்கத்திலே உட்கார்ந்து வம்பிழுப்போம். அம்மாவும் கையில் தம்ளரோடு  இந்த இடத்தில் தான் கீழே உட்காருவாங்க.

காலையில் காபி குடிக்கிற அந்தக் கால்மணி நேரமோ பத்து நிமிஷமோ சொர்க்கம் தான். பிறகு  வேலை இழுத்துக்கிடுமே!

அம்மாவுக்குப் பிடிச்ச பூஜை ரூம். அட ! இப்பவும் மேலிருந்து தொங்கும் அந்த விளக்கு முத்துப்போல எரிந்து கொண்டிருக்கே! அம்மா இதை எங்கேயோ பார்த்துட்டு ஆசைப்பட ….அப்பா அம்மாவின் ஒரு பிறந்த நாளில் பரிசாகத் தந்தார். அது வித்தியாசமாய் கீழே தரையில் வைக்கும் படியாக பாதமின்றி உச்சிமுடிவில் சங்கிலியோடு கோர்த்து இருந்தது. அதை அப்பாதான் அந்த மேல் கூரையிலிருந்து நீளமான கம்பியில் இணைத்து இரு பித்தளை வளையம் சேர்த்து தொங்க விட்டார்.

புதுமையாக இருந்தது அந்தத் தொங்கும் விளக்கு. கீழே குத்துவிளக்குகளும் காமாட்சியம்மன் விளக்குமிருந்தாலும் இதுவும் அதற்கு இணையாக அந்தரத்தில் தொங்கும். அதை கையால் வருடினாள்…அப்பாவின் ஸ்பரிசம் இருப்பது போல் உடம்பு அதிர்ந்தது.




இங்கேதான் அம்மா சாயந்திரத்தில் உட்கார்ந்து பூ கட்டுவார். இதே சமையல்கட்டின் திட்டின் மேலேதான் நான் காலாட்டிக் கொண்டே உட்கார்ந்து அம்மா முறுகலாய் தோசை வார்த்துப்போட போட சாப்பிட்டுக்கொண்டேயிருப்பேன். அப்பா சட்டினியும் சாம்பாரும் பறிமாறுவார்.

“அம்மா!”

மனசுக்குள் பந்து போல எதுவோ அடைத்தது. மதுமதி மூச்செடுக்க சிரமப்பட்டாள்.

அதற்குள் அந்தப் பெண்மணி தண்ணீர் கொடுக்க அருந்தியவள் தன்னை நிதானித்துக்கொண்டாள்.

சோபாவில் விஷ்ணுவும் லாயரும் ஏதோ பேசிக்கொண்டிருக்க அதை மூளையில் ஏற்றிக் கொள்ள முடியாமல் எதுவோ தடுத்தது.

“அப்போ உங்களுக்கு ஓகே  தானேம்மா! நாளைக்கு முறையா டாக்குமெண்ட்ஸ்ல கையெழுத்துப் போட்டுடலாம் நல்ல நாளும் கூட.இதை ஒரு முறை படித்துப்பாருங்க. “

அவள் இயந்திரம் போல அவர் தந்ததை வாங்கிக் கொண்டாள்.

அந்த வீட்டை…. விஷ்ணுப்ரியன் கம்பெனி கெஸ்ட் ஹவுஸாக மாற்றிக்கொள்ள வேண்டி தான் ஏற்பாடுகளுக்காக வந்திருந்தது. கூடவே விஷ்ணுவின் வேறு சில பணிகளின் நிமித்தமும் லாயரை இங்கேயே சந்தித்து அனைத்தையுமே முடித்துக் கொள்ள முடிவு செய்திருந்தான்.

இன்னும் திருச்சியில் குடும்பத்தொழிலான காட்டன் மில்லுக்கு விசிட் அடித்தே சில மாதங்களாகியிருந்தது.விஷ்ணுவிடம் லாயர் எதையோ பேசத் துவங்க அவன் மதுவைப் பார்த்துக்கொண்டே அவர் பேச்சில் கவனம் வைத்தான். மது ஏதோ ரெஸ்ட்லெஸ்ஸாக இருப்பதாகத் தோன்றியது.

அவளின் காதுக்குள்….

அம்மா அப்பா அக்காவின் குரலோடு தேவாவின் கம்பீரக்குரலும் சிசுவின் அழுகைக்குரலும் இடைவிடாமல் கேட்டது. மதுமதி தடுமாறினாள்.

       அவளைக் காப்பாற்றுவதே போல… அவள் மொபைல் அடித்தது.

“ஸார் ஒரு நிமிடம் “

விஷ்ணு கூர்மையாக அவளைப்பார்த்தான்.

முகம் சந்தோஷித்து, குழம்பி பிறகு இருண்டு  அலைப்புறுதலுடன் தவித்து பல்வேறு பாவங்களில் முங்கி எழுந்தது.

சோர்வு ஒன்று முழுதாய் தாக்கியது அவளை. ஓய்ந்து போனவளாய்….சட்டென்று இருக்கையில் சரிந்து உட்கார்ந்தாள்.

“ஓ கே ஸார்”

“……….”

“இல்லையில்லை… சீக்கிரமா அரேஞ்ச் பண்ணிடறேன்”

“……..”

“சரி! கண்டிப்பா! நீங்க சொன்னாற் போலவே ரெண்டு மூணு நாளிலே அரேஞ்ச் பண்ணிடுறேன். நம்புங்க …கண்டிப்பா. அவரோட விசிட் பத்தி முன்னமே சொல்லியிருக்கிறிங்க… சரிங்க ஸார் “




அவள் பேசி முடித்து விட்டு கண்களை மூடிக்கொண்டாள்.

மூடிய இமைச்சிறைக்குள் கண்மணிகள் அலைந்தன. அவள் எதையோ மனதில் வைத்துக்கொண்டு தவிக்கிறாள் என்பது புலப்பட்டாலும். என்னவென்று வாலண்டியராகக் கேட்க விஷ்ணு ஒன்றும் சாமானியனில்லையே!

இதழ்களை வளைத்து தோள்களைக் குலுக்கிக் கொண்டு லாயரின் பேச்சில் கவனம் வைத்தான்.

ஆனாலும்

மனம் என்னவோ வழுக்கும் வாளைமீனாய் அவளிடமே நழுவியது.

அவள் மெதுவே விழி திறந்த போது அவள் ஏதோ முடிவுக்கு வந்து விட்டாள் என்பது புரிந்தது.

வக்கீல் விடை பெறும் நேரம்…

அவள் அவரிடம்…

“ஸார்! சின்ன ஆப்ளி கேஷன் ப்ளீஸ் தப்பா நினைக்காதீங்க “

“சொல்லுங்க மேம்”

“ஸார்,நீங்களுமே தப்பா நினைக்காதீங்க.  எல்லாமே முடிவுக்கு வந்தபின்பு மாத்தி பேசுறாளேன்னு நினைக்காதீங்க…என் நிலைமை அப்படி. எனக்கு அவசரமா பணம் வேண்டும் “

“சைன் பண்ணதுமே உங்க அக்கவுண்ட்ல கிரெடிட் ஆகிடும் “

“இல்லையில்லை ஸார் நான் சொல்ல வந்தது…. இதை இந்த வீட்டையே யாருக்காவது ..வி…வித்துடலாம்னு இருக்கேன்” “விஷ்ணு எரித்து விடுவதைப்போல பார்த்தான்.

“என்னாச்சு மதுமதி! விளக்கமாச்சொன்னா தான் நான் ஹெல்ப் பண்ண முடியும். “

“ம்..வந்து ..என் மாமாவுக்கு ஹெல்த் ப்ராப்ளம். அவர் ஹாஸ்பிடலைஸ்டு. அவருக்கு இப்போ சிகிச்சைக்காக பாரின் டாக்டர் வரார். அதுக்காக…ஃபர்தர் ட்ரீட்மெண்டுக்கு குறைந்தது …மூணு நாலு லட்சமாகுமாம். “

பெருமூச்சு விட்டவள்

“என்னிடம் இந்த வீட்டைத்தவிர எதுவுமில்லை ஸார். அதான்…இ..இ..இதை  இதை..”

அவளை மீறி விம்மல் தெறித்தது.

அவர் விஷ்ணுவைப்பார்த்தார். அவனும் பார்த்தான்.

“மதுமதி! பொறுங்க! அவசரமா விக்க போனா அடிமாட்டு விலைக்கு கேட்பாங்க. பொறுங்க.  நாளைக்கு நான் வரேன். பேசலாம். மூணு நாலு லட்சத்துக்காக விற்பதாவது. இதன் மதிப்பு இருபதைத் தொடும். அயனான இடம் மதிப்பு அதிகம்.”

“ரெண்டு மூணு நாள்ள கட்டனும் னு…”

“ஏன் உன் புருஷன் இதுக்கு உதவ மாட்டானா? எல்லாம் பேசி முடித்த பின்னாலே இதென்ன நான்சென்ஸ்!?  இதனாலே எல்லா பிளானுமே சொதப்பும் புதுக்குழப்பத்தை உண்டாக்கி வைக்கிறேன்னு உனக்குப் புரியுதா? “

“என் புருஷனா? “

“அதான் வெளிநாட்டிலே சம்பாதிக்கிறான்  தானே… அப்புறம் ஏன் இந்த பிச்சைக்கார வேஷம்? பணம் பணம்னு அலையுறே? என்  கன்ஸெர்ன்ல வேலை செய்றது பத்தாதுன்னு… பெத்த பிள்ளையைக் கூட கவனிக்காம ட்யூஷன்,ட்யுடோரியல்னு அலையுறே …பார்த்தாலும் பார்த்தேன் உன்னைப்போல பணப்பிசாசை பார்த்ததேயில்லை.

” ஸார் எதையும் மாற்ற வேண்டாம். நாளைக்கு ஒரிஜினலைக்கொண்டு வாங்க.  கிளம்பலாம். “

மதுமதி அவனையே வெறித்தாள். அந்தப்பார்வையில் அப்படியோர் வலி தெறித்தது.

“வரேன் விஷ்ணு! “

“வரேன் மதுமதி! டேக் கேர். !”

விஷ்ணு அவரோடு வாசலுக்கு போனான்.




வீட்டில் வேலை செய்யும் பெண்மணி சமைத்தவைகளை மேஜை மீது வைத்துவிட்டு கிளம்பி விட்டார்.

வீடே அமைதியாக இருந்தது. அவனும் கணிணியில் மூழ்கிக் கிடந்ததில் எதையும் கவனிக்கவில்லை. சோம்பல் முறித்தபடி எழுந்தவன் சுற்றும் முற்றும் பார்த்தான்.

எங்குமே மது கண்ணில் படக்காணோம்.

மொட்டை மாடியில் முல்லைப்பூ பந்தலின் கீழே முழங்காலைக்கட்டிக் கொண்டு அமர்ந்திருந்தாள்.

முல்லைப்பந்தல் வனம் போல அடர்த்தியாக படர்ந்திருந்தது. நிலவொளி மிகவும் சிரமத்தோடு  புகுந்து தரையில் ஓவியம் தீட்ட திணறிக் கொண்டிருந்தது. பசுமை பூசியிருந்த இலைகள் பாலில் தோய்ந்திருக்கப் பூக்களோ வெள்ளியில் குளித்திருந்தன. நறுமணம் சுவாசத்தை நிறைத்தது. ஒளி விழுந்தும் விழாமலும் ஒரு ஓவியம் போல அமர்ந்திருந்தவளை அள்ளிக் கொள்ளலாம் போல் கையும் மனமும் பரபரத்தது.

இழுத்துப்பிடித்தக் கட்டுப்பாட்டுடன் அவளை  நெருங்கி

“மதுமதி! ” என்றதும் திரும்பியவளைப்பார்த்து திகைத்தான்.

விழியும் முகமும் அதைத்துக் கிடந்தது.

உயிரே இல்லை அந்த விழிகளில்…

அவனை நோக்கி நீண்ட அவளின் கை காற்றில் துவளும் கொடி போல. துவண்டு அவனுடைய டீஷர்ட்டின் கழுத்துப்பகுதியை பற்றுக்கோலாய் பற்றிக் கொள்ள அனிச்சையாக நீட்டிய அவனுடைய கைகளில் சரிந்தாள் அவள்.!

(தேடல் தொடரும்).




What’s your Reaction?
+1
12
+1
7
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!