Sprituality

திருவெம்பாவை பாடல்- 19

திருவெம்பாவையின்  பாடல்களும் பொருளும்




பாடல்- 19

உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலமென்று
அங்கு அப்பழஞ் சொற் புதுக்குமெம் அச்சத்தால்
எங்கள் பெருமான் உனக்கொன்று உரைப்போம் கேள்
எம் கொங்கை நின் அன்பரல்லாதோர் தோள் சேரற்க
எம் கை உனக்கல்லாது எப்பணியும் செய்யற்க
கங்குல் பகலெங்கண் மற்றொன்றும் காணற்க
இங்கு இப்பரிசே எமக்கு எம்கோன் நல்குதியேல்
எங்கெழிலன் ஞாயிறு எமக்கேலோர் எம்பாவாய்.

                              – மாணிக்கவாசகர்




சொற்பொருள்:

புதுக்கும் – புதுப்பிக்கும்;

கங்குல் – இரவு;

கோன் – அரசன்;

நல்குதி – கொடு;

எழில் – எழுந்தால்

பொருள் விளக்கம்:

   திருமணத்தின்போது தந்தை தன் பெண்ணை மாப்பிள்ளையுடன் அனுப்புகையில், “இனி இவள் உனக்கே அடைக்கலம்” என்று சொல்லி அனுப்புவது மரபு. இது இப்போது எங்கள் நினைவுக்கு வருவதால், உன்னிடம் சில வரங்களைக் கேட்கின்றோம்.




  உன் அடியார்கள் மட்டுமே எமக்குக் கணவராய் வாய்க்க வேண்டும். மற்ற எவரையும் திருமணம் செய்யும் நிலை எங்களுக்கு ஏற்படுதல் கூடாது. எங்கள் கைகள் உனக்கும் உன் அடியார்க்கும் தொண்டு செய்ய வேண்டும். வேறு வெட்டி வேலையில் அவை ஈடுபடுதல் கூடா. இரவு பகல் எப்போதும் உன்னையும் உன் அடியார்களையும் மட்டும் எம் கண்கள் காண வேண்டும். மற்ற எவற்றையும் அவை காணுதல் கூடா. இந்த வரங்களை எம் தலைவனாகிய நீ மனமுவந்து வழங்கிவிட்டால், ‘சூரியன் கிழக்கில் உதித்தாலென்ன மேற்கில் உதித்தாலென்ன’ என்று எந்தக் கவலையும் இல்லாமல் நாங்கள் வாழ்வோம்.




What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!