Sprituality

திருவெம்பாவை பாடல் 18 

திருவெம்பாவையின்  பாடல்களும் பொருளும்

பாடல் 18 





அண்ணாமலையான் அடிக்கமலம் சென்றிறைஞ்சும்
விண்ணோர் முடியின் மணித்தொகை வீறற்றாற் போல்
கண்ணார் இரவி கதிர் வந்து கார் கரப்பத்
தண்ணார் ஒளி மழுங்கி தாரகைகள் தாமகல
பெண்ணாகி ஆணாய் அலியாய் பிறங்கொளிசேர்
விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகி
கண்ணா ரமுதமாய் நின்றான் கழல் பாடி
பெண்ணே இப்பூம்புனல் பாய்ந்தாடலோர் எம்பாவாய்.

       – மாணிக்கவாசகர்

சொற்பொருள்:




இறைஞ்சும் – வணங்கும்;

வீறு – வலிமை;

இரவி – சூரியன்;

கார் – இருட்டு;

கரப்ப – மறைய;

தண் – குளிர்ச்சி;

தாரகை – நட்சத்திரம்;

பிறங்கும் – விளங்கும்;

கழல் – திருவடி.

பொருள் விளக்கம்:

   பெண்ணே! பேரொளி சிந்தும் அண்ணாமலையானின் அழகிய தாமரை மலர் போன்ற திருவடிகளில் பணிந்து தேவர்கள் வணங்கும் போது, அவர்கள் தம் முடிமீது தரித்துள்ள மகுடங்களில் உள்ள மணிகளின் ஒளி மறைந்து போவதைப் போல, இரவுப் பொழுதில் மின்னிக் கொண்டிருந்த விண்மீன்கள் காலையில் கதிரவன் எழுந்து இருட்டை மறைத்ததும் தாமும் ஒளியை இழந்து அகன்று விடுகின்றன.




   பெண்ணாகி, ஆணாகி, அலியாகி, ஒளி விளங்கும் விண்ணாகி, மண்ணாகி, இன்னும் வேறு வேறு ஆகி, இனிய அமுதமாகி, இப்படிக் கண்கொள்ளாக் காட்சியாகி நம் முன் தோன்றும் சிவபெருமானின்  திருவடிகளைப் போற்றிப் பாடியவாறு இந்தப் பூம்பொய்கையில் பாய்ந்து நீராடுவோம்.

தத்துவ விளக்கம்:

   இறை உணர்வு நம் உள்ளத்தில் பெருகும்போது மன மாசுகள் அகன்றுவிடும் என்பது இப் பாடலின் உட்பொருளாகும்.  




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!