Serial Stories Thereri vantha nila தேரேறி வந்த நிலா

தேரேறி வந்த நிலா – 5

5

அன்று அதிகாலை இருளில் வந்து நின்று இறைஞ்சி மன்னிப்பு கேட்ட இருவரின் நினைவும் வர , இவர்கள் மன்னிப்பை சொல்ல வேண்டுமே …என நினைத்தபடி மெல்ல ஆன் செய்து காதில் வைத்து ” ஹலோ ..” என்றாள் .

” தேங்க் காட் …எங்கே நான் கட் பண்ணியது போல் கட் பண்ணிவிடுவாயோ ..என பயந்து கொண்டிருந்தேன் …” பெருமூச்சு வந்த்து எதிரிலிருந்து .

” என்ன விசயம் …? ” என்றாள் கறாராக .

” அட எதற்கம்மா இவ்வளவு கோபம் …? அப்போது நீ போன் பண்ணிய போது நான் கொஞ்சம் பிஸியாக இருந்ததால் …” என அவன் பேசிக்கொண்டிருக்கும் போதே …

” இப்போது நான் கொஞ்சம் பிஸியாக இருக்கிறேன் .வைத்துவிட்ட்டுமா …? ” என்றாள் பட்டென்று .

” ம் ..நிஜம்மாகவே பிஸியா …? “

” ஏன் நீங்கள் மட்டும்தான் பிஸியாக இருப்பீர்களா …? நானும் பிஸிதான் ….அதனால் பிறகு நானே அழைக்கிறேன் “

” இல்லை பொய் .நீ வேலை பார்த்துக் கொண்டிருந்தால் போனை அணைத்து வைத்துவிடுவாய் .ம் ….உனக்காகவே போன் செய்து பேசும் எண்ணமிருந்தால் அந்த எண்ணத்தை அழித்துவிடு .நீ தாங்க மாட்டாய் ….”

பெரிய இவன் …ரொம்ப தெரிந்தவன் போலத்தான் …
அதென்ன தாங்கமாட்டாய் ….

” ஏனோ ….? “

” உன் போன் பேலன்ஸ் எவ்வளவு இருக்கிறது ஐம்பது , நூறு …ஒரு ஐந்து நிமிடம் பேசினால் எல்லாம் காலியாகிவிடும் .அதனால் வேறு உன் போனை கட் பண்ணினேன் .”

” ஏனோ …? …என மீண்டும் கேட்டவள் சட்டென நிதானித்து ” நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் …? ” என்றாள் .

சட்டென்ற அவளது புரிதலை மெச்சியபடி ” சைனாவில் ..திடீரென அன்று இரவே கிளம்ப வேண்டியதாயிற்று . பிளைட்டிலோ ..அங்குமிங்கும் பயணத்திலோ எப்படி உன்னிடம் பேச முடியும் சொல்லு …” என்றான் .

” ம் …” என்றவள் மௌனமானாள்.எதிர்புறமும் மௌனம் காத்தது .பிறகு

” மேக்கப் வேலையை முடித்து விட்டாயா …? இப்போது எங்கே இருக்கிறாய் …? ” என்றான் .

ஸ்டுடியோ பெயரை சொல்லி ” இந்த சீன் முடிந்த்தும் அடுத்த சீன் மேக்கப்பிற்கு போக வேண்டும் ்வெளியே இருக்கிறேன் ” என்றவளுக்கு இன்று நடந்த நிகழ்வுகளை அவனிடம் கொட்ட வேண்டும் போல் ஒரு வேகம் வந்த்து .குறிப்பாக அந்த அஸிஸ்டென்ட் டின் அருவெறுப்பான பார்வையை .

சொன்னால் நாளை காலை அவனும் தன் வீட்டு முன் மன்னிப்பு வேண்டி வந்து நிற்பானோ …? என சந்தோசமாக நினைத்தாள் .

” என்னம்மா என்ன பிரச்சினை …? ” என்றான் அவன் மறுமுனையில் .

எப்படி இவன் எல்லாவற்றையும் கண்டு பிடிக்கிறான் ..? என எண்ணியபடி ” ஒன்றுமில்லை …” என்றாள் .

” நிஜம்மாக ….? “

” ஆமாம் நிஜம்மாக ஒன்றுமில்லை “ஆயிரக்கணக்கான மைல் தள்ளி இருப்பவனிடம் இங்கேயிருப்பதை கூறுவதில் என்ன பலனிருக்கும் .மேலும் அவ்வளவு தூரம் இருப்பவனிடம் இதையெல்லாம் கூறி கஷ்டப்படுத்துவானேன் …என நினைத்தாள் .

” தூரமாக தள்ளியிருந்தாலும் …என்னால் கொஞ்சம் ஏதாவது செய்ய முடியும்மா …” என்றபோது அவள் அயர்ந்து போனாள் .

” இங்கேதான் பக்கத்தில் எங்காவது இருக்கிறீர்களா …? ” சுற்றி சுற்றி பார்த்தாள் .

” வீணாக ஏன் கழுத்தை கஷ்டப்படுத்துகிறாய் …? ” எவ்வளவு பார்த்தாலும் சைனா கண்ணிற்கு தெரியாது” என்றான் .

” ம் …உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும் .மறுநாள் காலையே அவர்கள் இருவரும் எங்கள் வீட்டிற்கே வந்து மன்னிப்பு கேட்டனர் “

” சரி …நாளை யாரை அப்படி வர வைக்க வேண்டும் …? ” என அவன் அதிலேயே குறியாக இருக்க , மனதிற்குள் சிரித்தபடி …

” உங்கள் பெயர் என்ன ..? எனக்கு தெரியாதே …” என்றாள் .

” பேச்சை மாற்றுகிறாய் .சரி விடு .என் பெயர் தெரியாதா உனக்கு …? “

” உங்களைப் போல் மேஜிக் எதுவும் எனக்கு தெரியாதே ்பார்த்த சிறிது நேரத்திலேயே அவர் சொல்லாமலேயே அவர் பெயர் அறிந்து கொள்ளும் வித்தை …” சிறு நக்கல் கலந்து அவள் கூற மறுமுனையில் அவன் சிரித்தான் .

” ஹேய் …வைசாலி ..சொல்லுடா ..இப்போது உனக்கு என்ன விபரங்கள் வேண்டும் …? “

அவனது இந்த கரிசனையான பேச்சு மனதினை வருட ” உங்கள் விபரங்கள்தான் …” என்றாள் .

” என் பெயர் மனோகரன் .என் அப்பா கதிரேசன் .அம்மா கௌசல்யா .என் தங்கை மஹிமா .என் தந்தை சென்னையில் கொஞ்சம் சொல்லிக் கொள்ளும்படி முக்கியபுள்ளி .நிறைய தொழில்கள் , சொத்துக்கள் …ம் …வேறென்னடா விபரம் வேண்டும் …? “

மனோகரன் என மனதிற்குள் உச்சரித்து பார்த்துக் கொண்டு , அந்த பெயரினை வெளியேயும் சொல்லும் ஆவலில் ” இது போல் மனோகரன் என பெயர் வைத்திருப்பவர்களுக்கெல்லாம் எதிரில் வந்து நிற்பவர்கள் பற்றிய எல்லா விபர்ங்களும் இரண்டு மணி நேரத்தில் தெரிந்து விடுமோ ….? ” என்றாள் .

” ஒரு மணி நேர்த்திலேயே தெரிந்துவிடும் .மனோகரன் என்ற பெயருக்காக இல்லை .செல்வாக்கிற்கும் , ஆள் பழக்கத்திற்கும் …”

” அப்போது அன்று என்னை பற்றிய விபரங்களை ஒரு மணி நேரத்திலேயே அறிந்து கொண்டீர்களா …? “

” அன்று கம்பெனி ஆட் பிலிம் சம்பந்தமாக பேச  ஸ்டுடியோவிற்கு வந்தேன் .அங்கே உன்னைப் பார்த்ததும் பேசலாமென வந்தால் நீ ஓடிப் போய் ஒளிந்து கொண்டாய் .பிறகு விசாரித்ததில் உன் விபரங்கள் தெரிவது ஒன்றும் கஷ்டமில்லையே …”

” ம் …பெரிய சாதனைதான் …” என்றாள் கேலியாக .

” இல்லையா பின்னே …வெறுமனே பெயர் கேட்டதற்கே அன்று ஏன்டா அந்த முறை முறைத்தாய் …? அத்தோடு ஸ்கூட்டியை ஸ்டார்ட் பண்ணி ஓடி விட்டாய் …”

” நீங்கள் நடுரோட்டில் நிறுத்தி வைத்து, பார்த்து பத்து நிமிடமே ஆன பெண்ணை  அழகாயிருக்கிறாய் என்பீர்கள் .நான் இளித்துக் கொண்டு பெயர் சொல்லவேண்டுமா ….? “

” அழகாக இருந்தால் அழகாயிருப்பதாகத்தான் சொல்வேன் .அது வரை ஹெல்மெட்டால் பாதி முகத்தை மறைத்தபடி பேசிக் கொண்டிருந்தாய் .கருவண்டு போல் அங்குமிங்கும் அலையும்  உன் கண்களை பார்த்தபடி நானும் பேசிக்கொண்டிருந்தேன் .திடீரென ஹெல்மெட்டை சுழட்டி விட்டாய் .அந்த நிலவுதான் தரையிறங்கி வந்து விட்டது ….என அப்படியே திகைத்து விட்டேன் ….”

மனோகரனின் இந்த நேரடி பாராட்டில் கூச்சமுற்ற வைசாலி ” போதும் …ரொம்பவே ஓட்டாதீர்கள் …” என்றாள் மெல்லிய குரலில் .ஏனோ பயத்துடன் சுற்று முற்றும் பார்த்துக் கொண்டாள் .வேறு யார் காதிலும் அவனது இந்த பேச்சு விழுந்து விடுமோ …என காரணமின்றி பயந்தாள் .

” இல்லை சாலி …இது வேடிக்கை பேச்சில்லை .அப்போது என் மனது உணர்ந்த்தைதான் சொன்னேன் .அன்று உன் முடியை உயர தூக்கி இறுக்கமாக ஒரு பேன்டில் கட்டி பின்னால் விட்டிருந்தாய் .தலையை முக்காடிட்டு  கழுத்தை சுற்றி கறுப்பு சாலினை போட்டிருந்தாய் .இந்த அலங்காரம் உன் வட்ட  முகத்தை நிலவு போல் எடுத்து காட்டியது எனக்கு …” குரலை மென்மையாக்கி மனோகரன் கூற வைசாலிக்கு மூச்சடைப்பது போல் இருந்த்து .

” ஏய் லைனில் இருக்கிறாயா …? இல்லையா …? ” மனோகரன் கேட்க ,

” ம் ..நீங்கள் …ஏதேதோ பேசுகிறீர்கள் .நான் போனை கட் பண்ணி விடுகிறேன ” என போனை கட் பண்ணிவிட்டாள் .தன் கைகளிலேயே முகத்தை புதைத்தபடி மெல்ல அவனது பேச்சை உள்வாங்கினாள் .உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் நோக்கி பூவானம் ஒன்று பூ சிதறியபடி சென்றது போல் உணர்ந்தாள் .

அதென்ன சாலி …? ஏன் அப்படி அழைக்கிறான் …? அடுத்த முறை பேசும் போது கேட்கவேண்டும் .ஆனால இனி போன் பண்ணுவானா …? ஒரு வேளை இப்போதே மறுபடியும் போன் பண்ணுவானோ …? போனை கைகளில் வைத்து பார்த்தபடி இருந்தாள் .

மனோகரன் போன் பண்ணவில்லை .ஆனால் …”எனக்கு இரவு இரண்டு மணி வைசாலி .உன்னுடன் பேசுவதற்காகவே இவ்வளவு நேரம் விழித்திருந்தேன் .நாளை காலை ஏழு மணிக்கு ஒரு மீட்டிங் இருக்கிறது .அதனால் இப்போது தூங்க போகிறேன் . மீண்டும் நாளை பேசுகிறேன்.அதற்குள் கொஞ்சம் உன்னை நிதானப்படுத்திக் கொள் ….” என கிண்டலோடு ஒரு மெசேஜ் ‘ வாட்ஸ் அப் ” பில் அனுப்பியிருந்தான் .

கூடவே ஒரு குட்நைட் இமேஜும் .

இப்போது என்ன நிதானமில்லாமலா இருக்கிறேன் …? என அவனை திட்டியவள் …ஆனால் இன்னும் சிறிதுநேரம் அவனோடு பேசியிருந்தால் நிதானமில்லாமல் ஏதேனும் பேசியிருப்போமோ …என்ற சந்தேகம் அவளுக்கே வந்த்து .

இரவு இரண்டு மணி வரை எனக்காக விழித்திருந்தானாமே ..எதற்காகவாம் …? இப்படி அவனுடன் பேசிய பேச்சினை வரிசையாக மீண்டும் மனதினுள் ஓட விட்டபடி , அமர்ந்திருந்தாள் .

அவள் முகத்தின் முன் இரு கைகள் நீண்டு பலமாக தட்டின. தூக்கத்திலிருந்து விழிப்பவள் போல் தன்னுணர்விற்கு வந்தவள் எதிரே கைகளை இடுப்பில் வைத்தபடி நின்றிருந்த வேதாவை பார்த்ததும் அவசரமாக தனது போனை பின்புறம் மறைத்தாள் .

அதனை தனது கூர்மையான பார்வையால் கண்டு கொண்ட வேதா …”அரைமணிநேரமாக கூப்பிட்டுக் கொண்டிருக்கிறேன் .காதிலேயே ஏறாமல் ஏதோ கனவுலகில் மிதந்தபடி இருக்கிறாய் .போனில் யாரிடம் பேசிக் கொண்டிருக்கிறாய் …? ” குத்தும் பார்வையுடன் கேட்டாள் .

” அடுத்த சீன் வந்துவிட்டதா ..? வாருங்கள் போகலாம் …” உள்ளே நடந்நாள் வைசாலி .

பேசிக்கொண்டிருக்கும்போதே உள்ளே போகிறாயா …? இரு உன்னை ….பார்த்துக் கொள்கிறேன் .மனதினுள் கருவியபடி உள்ளே போனாள் வேதா .

What’s your Reaction?
+1
6
+1
2
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!