Serial Stories thanga thamarai malare தங்க தாமரை மலரே

தங்க தாமரை மலரே – 40

40

 எல்லாம் சரியாக வரும்தானே கமலினி ? ” பத்தாவது தடவையாக கேட்டாள் பாரிஜாதம் .

” எதற்குக்கா இந்த பதட்டம் ? நிச்சயம் எல்லாம் நல்லபடியாக நடக்கும் . நீங்கள் தைரியமாக இருங்கள் ” பாரிஜாத்த்திற்கு ஊட்டிய நம்பிக்கை கமலினிக்கு சிறிதும் குறையவில்லை .

தனக்காகவேனும் …தன்னிடமுள்ள ஈர்ப்புக்காகவேனும் விஸ்வேஸ்வரன் சந்தானபாரதியிடம் ஒழுங்காக பேசுவான் என நம்பினாள் .அதற்காகவே அவனது விருப்பத்திற்கு தலையசைத்து வைத்தாள் .

இதென்ன பேரம் ..என அவள் கோபித்த போது ” உன்னிடமிருந்து கற்றதுதான் ” என்றான் அவன் .

புரியாமல் பார்த்தவளுக்கு அன்றைய நாளை நினைவூட்டினான் . ” திருவானைக்காவல் லிங்கத்திற்கான தங்க கவச வேலைகளில்இருக்கிறேன் கமலினி . எனது மனத்தினுள் இருக்கும் உயிர் ஆசை ஒன்று  நிறைவேற இந்த கவச வேலையை நானே தனியாக செய்து முடிப்பதாக அந்த சிவனிடம் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறேன் .அதனாலேயே இரவு பகல் பார்க்காது அந்த வேலைகளில் மூழ்கியிருக்கிறேன் .அன்று நீ வந்து பேசிய போது கூட வேலையில் தீவி்ரமாக இருந்ததினால் உனக்கு சரியான பதில் கொடுக்க முடியவில்லை ” 

விளக்கமாய் ஆரம்பித்து தாபமாய் முடிந்த அவன் பேச்சில் சிலிர்த்து நின்ற தன் உடலை அவனது உணர்வுகளிலிருந்து மறைக்க தவித்தாள் கமலினி . கண்களை அறை மூலைக்கு நகர்த்திக் கொண்டவள் ” என்ன அந்த ஆசை ? உங்கள் அண்ணியின் மறு வாழ்வு பற்றியதா ? ” 




நிதானமான இந்த கேள்வியில் நிதானமிழந்தான் விஸ்வேஸ்வரன் .சடாரென அவன் எழுந்து நின்ற வேகம் அதைத்தான் சொன்னது .அவள் முன்  இரு விரலால் சொடக்கிட்டான் .

” ஏய் வெளியே போடி , நாளைக்கு அந்த சந்தானபாரதி கூட பேசிட்டு பிறகு இருக்குது உனக்கு … உன்னை வச்சி செய்யலை …என் பெயரை …” 

” நீமோன்னு மாற்றிக்கோங்க …” கத்தலாய் சொல்லிவிட்டு அதற்கான அவனது செயல் ஆரம்பிக்கும் முன் ஓடி வந்துவிட்டாள் .

இப்போதும் அந்த நினைவு இதழ்களுக்கு புன்னகை கொடுக்க , ” நீ இப்படி அழகாக சிரிக்கும் போது எந்த பிரச்சனையும் வராது என்ற நம்பிக்கை வருகிறது ” பாரிஜாத்த்தின் பேச்சில் இப்போதைய நினைவிற்கு வந்தாள் .சே இவர்கள் எவ்வளவோ டென்சனில் இருக்கும் போது , நான் பாட்டிற்கு எதையோ நினைத்து சிரித்துக் கொண்டு …

குற்றவுணர்வு பார்வை பார்த்தவளின் கை பற்றி அழுத்தி புன்னகைத்தாள் பாரிஜாதம் .” உன் புன்னகை என் மன அழுத்தத்தை குறைத்து விட்டது ” மொட்டு புன்னகை மலரானது.

இரு பெண்களும் காருக்குள் அமர்ந்து கொண்டு , இரு ஆண்களையும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர் . அன்று குறிப்பிட்டு சொல்லும்படி வேலை எதுவும் விஸ்வேஸ்வரனுக்கு கிடையாது என்பது கமலினிக்கு தெரியும் .ஆனாலும் லேட் பண்ணுகிறான் … இவனை …பற்களை கடித்தாள் .

” பாரதிக்கு ஸ்கூல்ல இன்ஸ்பெக்ஷன் டைம் . வர லேட்டாயிடுமோ …? விஸ்வா அதனால் கோபிப்பாரோ ? ” பாரிஜாதம் நகம் கடித்தாள் . 

” இதற்கெல்லாம் கோபிக்க மாட்டார் அக்கா .டென்சனாகாதீர்கள் ” வெளியே தைரியம் சொல்லி , உள்ளே சீக்கிரம் வாயேன்டா என மௌன அலறலை வழிய விட்டாள் .

சர்ரென்ற டயர் உராயும் சத்தத்துடன் அவர்களருகே காரை அந்த ஹோட்டலின்  பார்க்கிங்கில் கொண்டு வந்து நிறுத்தினான் விஸ்வேஸ்வரன் . கோபமாக பார்த்தவளுக்கு பதிலாக கை வாட்சை உயர்த்தி காட்டினான் . சொன்ன டைம்தானாம் .

” இருவரும் ஒன்று போல் கடையை போட்டு விட்டு இப்படி மணிக்கணக்கில் வெளியே வந்துவிட்டால் அங்கே வியாபாரம் என்னாவது ? “தேவையில்லாமல் முன்பே வந்து நின்று  கொண்டிருக்கிறார்களாம் … 

” நீங்கள்தான் இருந்தீர்களே முதலாளி .உங்களுக்கு மேலா நாங்கள் பார்த்துக் கொள்ள போகிறோம் ? ” கமலினியின் பதிலில் அவளை மீண்டும் கழுத்தை நெரிக்கும் ஆவல் அவன் கண்களில் மின்னியது .

கமலினி சுடிதார் ஷாலை கழுத்திற்கு ஏற்றி சுற்றி விட்டு பாதுகாத்துக் கொண்டாள். ” பழைய அடையாளமே இன்னும் லேசாக இருக்குது ” முணுமுணுத்தாள் .விஸ்வேஸ்வரன் அவளிடமிருந்து பார்வையை திருப்பிக் கொண்டான் .

இவர்களது சண்டையை பாரிஜாதம் கவனிக்கவில்லை .அவளது கவனம் இன்னமும் வந்து சேராத சந்தானபாரதியிடம் கவலையாக இருந்த்து . அவள் பார்க்க தன் கை உயர்த்தி நேரம் பார்த்த விஸ்வேஸ்வரனிடம் இகழ் சிரிப்பு . பாரிஜாதத்திடம் தவிப்பு. 

” எனக்கு பயங்கர பசி .போய் சாப்பிடவாவது செய்யலாம் .வாருங்கள் …” வெறுமனே சாப்பிட்டு விட்டு போகப் போகிறோம் பாருங்கள் எனும் சவால் விஸ்வேஸ்வரனிடம் . சாப்பிட்டுக் கொண்டே பேசுவதாகத்தான் ஏற்பாடு .

” ஒரு விருந்தினரை அழைத்திருக்கும் போது அவர் வரும் முன்பே நாம் போய் சாப்பிட உட்காருவதா ? ” கமலினி சண்டையில் இறங்கினாள் .

” உங்கள் விருந்தினர்தான் சொன்ன நேரத்திற்கு வரவில்லையேம்மா .எனக்கு பசிக்கிறதே ..நான் என்ன செய்வது ? ” பாவம் போல் முகத்தை வைத்துக் கொண்டவனை முகத்திலேயே அறைந்தாலென்ன என அவளுக்கு தோன்றியது .

” சும்மா அளக்காதீர்கள் .அப்படி என்ன பசி உங்களுக்கு ? ” பாரிஜாதம் கை பிசைதலுடன் ஹோட்டல் வாசலை பார்த்தபடி நிற்க , கமலினி எகிறலுடன் அவன் முன் வந்து நின்றாள் .

” சுடிதார் நெக் லோகட் .ஷாலை ஒழுங்காக போட்டு தொலை ” பற்களின் நறநறப்பு இங்கே கேட்டது .முகம் சிவக்க  கழுத்தில் இருந்த ஷாலை சரி செய்த கமலினி அவனை முறைத்தாள் . அந்த முறைப்பை வாங்க அவன் அங்கே நிற்கவில்லை .முதுகு காட்டி நடக்க ஆரம்பித்திருந்தான் .

  முகத்தை …சரியாக  என் கண்களை பார்த்துத்தானே பேசிக் கொண்டிருந்தான் . பிறகெப்படி …? திருட்டுப்பய ..செய்கிற கள்ளத்தனத்தை நேக்காக செய்ய படித்து வைத்திருக்கிறான் .




இந்த குளறுபடி சிந்தனையில்  லிப்டை நோக்கி நடக்க ஆரம்பித்திருந்தவனை கமலினி தன்னையறியாது பின்பற்ற தொடங்கியிருக்க , பாரிஜாதமும் வேறு வழியின்றி   பரிதவிப்புடன் திரும்பி திரும்பி பார்த்தபடி அவர்களை பின் தொடர்ந்தாள் . விஸ்வேஸ்வரன் பட்டனை அழுத்தி லிப்ட் மூடிக் கொள்ளப் போகும் கடைசி வினாடியில் ஒரு கை இடையே நுழைந்து தடுக்க , லிப்ட் கதவு மீண்டும் திறந்து கொள்ள , புன்சிரிப்புடன் நின்றிருந்தான் சந்தானபாரதி .

” நானும் உங்களுடன் சேர்ந்து கொள்ளலாமா நண்பர்களே ? ”  

” நிச்சயம்.  வாங்க…வாங்க ” உற்சாகம் பொங்க அழைத்த கமலினியை விட , அதே அழைப்பை கண்களில் மட்டும் காட்டி கசிந்துருகி நின்ற பாரிஜாதம் விஸ்வேஸ்வரனிக்கு அதிக வெறுப்பேற்றினாள் .

” ஹலோ விஸ்வா …” நட்புடன் நீண்ட சந்தானபாரதியின் கையை யோசனையுடன் பார்த்து தாடை தடவினான் .

” முதல் அறிமுகத்திலேயே இப்படித்தான் எல்லோரையும் பெயர் சொல்லி விடுவீர்களோ ? ” 

கமலினியும் , பாரிஜாதமும் முகம் கறுக்க …சந்தானபாரதியின் புன்னகை வாடவில்லை . ” நேருக்கு நேர் இப்போதுதான் அறிமுகமே தவிர , நீங்கள் எனக்கு புதியவரில்லை விஸ்வா . பாரிஜாதம் வழியாக நீங்கள் எனக்கு மிக நன்றாகவே பழக்கம் . சார் என்று தள்ளி நிறுத்துமளவு அந்நியனாக உங்களை நான் நினைக்கவில்லை தம்பி …” உரிமையான உறவு அழைத்தல் ஒன்றுடன் பேச்சை முடித்து தானே அவன் கை பற்றினான் .

” நீங்கள் உள்ளேயும் , நான் வெளியேயும் இருந்தால் நாம் எப்படி சேருமிடம் சேர்வது ? ” பற்றிய கையை விடாமல்  லிப்டினுள் வந்து பட்டனை அழுத்தினான் .

” பசி எனக்கு .சாப்பிடும் இடம் போவதை சொன்னேன் ” தன் பேச்சுக்கு விளக்கம் சொன்னவனின் பார்வை பாரிஜாதம் மேல் பட்டு பட்டு மீள்வதை கடுப்புடன் பார்த்தான் விஸ்வேஸ்வரன் .

” நீங்கள் இருவரும் அதோ அந்த கடைசி டேபிளுக்கு போங்க .” உடன் அமர வந்த பெண்களிருவரையும் விஸ்வேஸ்வரன் விரட்ட இருவரும் திகைத்தனர் .

சும்மாவே காய்ந்து கொண்டிருக்கிறான் .இதில் இருவரையும் தனியாக வேறு விட வேண்டுமா …? கமலினியின் கவலை பார்வையை அவன் சந்திப்பதாக இல்லை .” ம் …கிளம்புங்க ” இரக்கமற்ற விரட்டல் .

சந்தானபாரதி பாரிஜாத்த்திற்கு ஆதரவு பார்வை தந்து சமாதானப்படுத்தி போகுமாறு சொல்ல , அவள் தலையசைத்து நகர்ந்தாள் .இந்த பார்வை பரிமாற்றத்தால் மாறிய விஸ்வேஸ்வரனின் முகத்தை வேடிக்கையாக பார்த்தபடி தானும் உடன் போனாள் கமலினி .

ஆளுக்கு இரண்டு சப்பாத்திகளை வாங்கி வைத்துக் கொண்டு ஏசி குளிரில் அவற்றை விரைக்க வைத்து , மெல்ல முடியாது …முயற்று மென்றாலும் விழுங்க முடியாது தவித்தபடி பெண்கள் இருவரும் அமர்ந்திருக்க , ஆண்கள் இருவருமாக தட்டு தட்டாக ஏதேதோ ஆர்டர் செய்து சாப்பிட்டபடி இருந்தனர்.

பகாசூரன்கள் மாதிரி விழுங்குவதை பார் …இவர்கள் பேசுகிறார்களா இல்லையா …? கமலினிக்கு அவர்கள் உணவை மென்ற  நேரம் போக , இடையிடையே பற்களுக்கு ஓய்வளிக்க நாவை அசைத்தது போலிருந்த்து. சந்தானபாரதி இவர்களுக்கு முதுகு காட்டி அமர்ந்திருக்க விஸ்வேஸ்வரனின் முகம்தான் இவர்கள் பார்க்கும் திசையில் இருந்த்து .

” விஸ்வா முகத்தை பார்த்தால் …ஏதாவது உனக்கு பிடிபடுதா கமலினி ? ” பாரிஜாதம் படபடக்க , அந்த கல்லுளிமங்கன் என்றைக்கு உணர்வை முகத்தில் காட்டியிருக்கிறான் …என நினைத்தபடி பொதுவாக தலையசைத்து வைத்தாள் .

ஒரு வழியாக இருவரும் சாப்பாட்டை முடித்து எழ , இவர்கள் இருவரும் அந்த காய்ந்த ரொட்டியை கை விட்டு விட்டு வேகமாக எழுந்து அவர்களருகே வந்தனர் .அதே மாறா புன்னகையோடு விஸ்வேஸ்வரன் கை பற்றி குலுக்கிய சந்தானபாரதி ” பிறகு பார்க்கலாம் ” என , அவன் தலையசைத்தான் .

” சிங்காரத்தோப்பு  பூம்புகாரில்  நிறைய ராஜஸ்தான் புடவைகள் , சுடிதார்கள் கலெக்சன்ஸ் வந்திருக்கிறதாம் .  . பார்க்கலாம் .வருகிறாயா …? ”  சந்தானபாரதியின் நேரடி அழைப்பில் இரு பெண்களும் அதிர , அவன்  இப்போது சுவாதீனமாக பாரிஜாத்த்தின் கையையே பற்றிக் கொண்டான் .

” ஒரே மணி நேரம்தான் .நானே உன்னை என் பைக்கில் ஸ்வர்ணகமலத்தில் டிராப் செய்து விடுகிறேன் .வா …” லேசான இழுப்புடன் பிடிவாதம் காட்டி அவள் கை பற்றி அழைத்துப் போயே விட்டான் .கமலினி நம்ப முடியாமல் அவர்களை பார்த்து விஸ்வேஸ்வரன் பக்கம் திரும்ப அவன் தாடைகள் இறுக நின்றிருந்தான் 

” விஸ்வா …” 

அவளது அழைப்பு காதில் விழாதவன் போல் படபடவென நடந்து லிப்டை உபயோகிக்காமல் படி வழியாக கீழிறங்கியவன் , கமலினி அவனை தொடர்ந்து ஓடி ஓடி இறங்கி வந்து கீழே நின்றால் , அவனது கார் ஹோட்டலை விட்டு வெளியேறுவதைத்தான் பார்க்க முடிந்தது .

என்னதான் நடந்த்து …கமலினிக்கு தலையை பிய்த்துக் கொள்ளலாம் போலிருந்த்து. ஒன்றும் புரியாமல் பாரிஜாத்த்துடன் வந்த காரில் ஏறி ஸ்வர்ணகமலம் வந்து , தனது வேலையை தொடர்ந்து முடித்த பிறகும் , விஸ்வேஸ்வரனோ , பாரிஜாதமோ வராமல் போக கமலினி வேலை முடித்து வீட்டிற்கு திரும்பினாள் .

நடந்த்து அறியாமல் இரவு தூக்கம் வர மறுக்க , எழுந்து வந்து பால்கனியில் நின்று கொண்டு தெருவை வெறித்துக் கொண்டிருந்தாள். திடுமென பார்வையை கூர்மையாக்கி எதிரே பார்க்க , அங்கே …நின்று கொண்டிருந்த்து விஸ்வேஸ்வரனின் காரேதான். இவன் …இங்கே என்ன செய்கிறான் …? 

கமலினி தனது போனில் அவனை அழைக்க , முதல் ரிங்கிலேயே எடுத்தவன் ” கீழே வா ” என்றான் .




கமலினி சத்தமின்றி கதவை திறந்து கொண்டு கீழே போய் அவன் காரில் ஏறினாள் .

” அவனுக்கு எவ்வளவு தைரியம் பார்த்தாயா …?என் கண்ணெதிரிலேயே அண்ணியின் கை பிடித்து கூட்டிப் போகிறான் ? ” அவள் காரில் ஏறியதுமே படபடத்தவனை மௌனமாக பார்த்தாள் .

” திடீரென முளைத்து இடையில் வந்திருக்கிறான் .இவனுக்கு என்ன அவ்வளவு உரிமை ?” 

கமலினியின் பார்வை மாறவில்லை .அலை பாய்ந்த விழிகளை அவள் முகத்தில் ஒரு நிமிடம் ஊன்றி  நிறுத்தியவன் திடுமென தளர்ந்தான் . சீட்டில் மெல்ல அவள்புறம் நகர்ந்து தொய்ந்து அவள் தோளில் சரிந்தான் .

” என்னால் ஜீரணிக்க முடியவில்லை கமலி ” 

இதென்ன பத்தாம்பசலித்தனமென ஆத்திரமாக நினைத்தாலும் அப்போது அந்த நிலையில் அவனை உதற கமலினியால் முடியவில்லை .

சொல்ல சொல்ல கேட்காமல் உயரத்தில் ஏறி விளையாண்டு கீழே விழுந்து அடிபட்டுக் கொண்டு அம்மாவை கட்டிக்கொண்டு அழுமே குழந்தை , அந்தக் குழந்தையை அன்னை உதறவா செய்வாள் ?  ஆதரவாக அணைத்துக் கொள்ளத் தானே செய்வாள் ? 

கமலினி விஸ்வேஸ்வரனின் அன்னையாக மாறிப் போனாள் .




What’s your Reaction?
+1
29
+1
15
+1
3
+1
4
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

2 Comments
Inline Feedbacks
View all comments
Santhiya
4 years ago

Nice ud

Kurinji
Kurinji
4 years ago

Ore neer kottil valarnthirukaan.

2
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!