kana kanum kangal Serial Stories கனா காணும் கண்கள்

கனா காணும் கண்கள் – 2

2

 

மளமளவென்று ஒரு குட்டி சிலந்தி உள்ளுக்குள் ஊர்வது போன்ற மெலிதான அவஸ்தை இமைகளுக்குள்ளும் ,தலைக்குள்ளும் .மிருதுளா விழி திறந்து கொள்ளலாமா யோசித்தாள் .யாரோ ஒரு பெண்ணின் விசும்பல் சத்தம் நெடுநேரமாக அவளருகில் கேட்டுக்கொண்டே இருந்தது .அழாதே என்று சமாதானம் சொல்லும் ஒரு ஆணின் சத்தமும். அம்மாஅப்பா என ஊகித்தாள் . இமைகளை பிரித்துக்கொள்ள சோம்பலாக இருந்தது மிருதுளாவிற்கு.

 

யார் இங்கே நச நசவென்று பேசிக்கொண்டு அருகில் கேட்கும் சத்தங்களை அதட்ட எண்ணினாள் .ஆனால் அவளுடைய நா அசைய மறுத்தது .திடுமென விசும்பல்கள் குறைந்து ஆட்கள்  நகரும் , அருகமரும்  ஓசைகள். அவளது நெற்றிமேல் ஆதரவாக கதகதப்பாக ஒரு கை அமர்ந்தது.

 




மிக மெல்லியதாய் புரிந்து கொள்ள முடியாமல் சீறலாய் ஒரு குரல் ஒலித்தது .பாம்பின் சீறலை போல் அவளுக்கு அது தெரிந்தது .தொடர்ந்து சுற்றி கேட்டுக்கொண்டிருந்த அவளை தொந்தரவு செய்த சத்தங்கள் அப்படியே நின்றுவிட்டன.

 

சிறிது நேரம் எதையோ தேடி வெற்றிடத்தில் அலைந்து கொண்டு இருந்த அவளது மனம் அங்கே சத்தமற்ற வெறுமையை காணவும் தனக்குள் சுருங்கிக் கொண்டது. ஓய்வை நாடிய அவள் உள்ளம் நல்ல உறக்கத்தில் ஆழ்ந்து போனது.

 

அவள் மீண்டும் கண் விழித்த போது தலைவலி பெருமளவு குறைந்து இருப்பதை உணர்ந்தாள் . மெல்ல எழ முயற்சி செய்தவளின் தோள்களை மென்மையாக அழுத்தி மீண்டும் படுக்க வைத்தாள் அருகில் இருந்த நர்ஸ்.

 

” அலட்டிக்கொள்ளாமல் படுங்கள் மேடம் .ஓய்வு தான் உங்களுக்கு இப்போது தேவை ” 

 

அம்மா தனது குரல் மிகவும் பலவீனமாக இருப்பதை மிருதுளாவால் உணர முடிந்தது.

 

” உங்கள் அம்மா இப்போது வந்து விடுவார்கள் ” நர்ஸ் சொல்லிக்கொண்டிருக்கும்போதே அறைக்கதவு திறந்து மாரீஸ்வரி உள்ளே வந்தாள்.

 

குட்டி எழுந்து விட்டாயாடா ? ” கைகளை விரித்தபடி வந்த தாயை கைநீட்டி அணைத்துக்கொண்டாள் மிருதுளா.

 

” அம்மா ” காரணம் எதுவுமில்லாமல் ஏனோ அவளுக்கு அழவேண்டும் போல் இருந்தது தன் மார்பில் புதைந்திருந்த மகளின் கேவலை உணர்ந்த மாரீஸ்வரி கலங்கினாள்.

 

மிருது ஏன்டா குட்டி அழுற ? உடம்பு எதுவும் செய்கிறதா ? ” பரிதவிப்புடன் கேட்டாள்.

 

” இல்லம்மா ஏனோ அழனும் போல இருக்குது ” மிருதுளா மேலும் கேவினாள்

 

 

” காரணம் இல்லாமல் அழுகை வருமாஇது என்ன முட்டாள்தனம் மிருதுளா ? ” அதட்டிய குரலுக்கு அன்னையிடமிருந்து நிமிர்ந்து பார்த்தாள்.

 

” மகிபாலன் நீங்கள் எப்போது வந்தீர்கள் ?” முணுமுணுப்பாக  கேட்டாள்

 

” நீ பலப்பம் தொலைத்த பிள்ளைபோல் அழுதுகொண்டிருந்தாயே  அப்போதே வந்து விட்டேன் ” 

 

” பலப்பம் தொலைத்தேனா ? ”  கோபமாய் அவனை பார்த்தாள்.

 

” அதான் குட்டி இந்த சிலேட்டில் எழுதுவோமே .வெள்ளை கலரில் நீளமாக இருக்குமே அந்த பலப்பத்தைத்தான் சொன்னேன் ” மகிபாலன் புன்னகைத்தான்.

 




” மகி பலப்பம் தொலைத்து அழுதேனா நான் ? ”  சிணுங்கினாள்.

 

“:அப்படித்தானே அத்தை ?சிறுவயதில் உனக்கு எழுதக்கொடுத்த பலப்பத்தையெல்லாம் முறுக்கு சாப்பிடுவது போல சாப்பிட்டுவிட்டு தொலைந்து விட்டது என்று பொய் சொல்லி அழுவாய் மறந்துவிட்டாயா குட்டி ? “மகிபாலனின் உதடுகளோடு கண்களும் சேர்ந்து சிரித்தன.

 

ஓரமாக ஒதுங்கி நின்றிருந்த நர்ஸ் தன் உதட்டை கைகளால் மூடிக்கொண்டு சிரிக்க ” நோ மகி  ஏன் இப்படி என்னை ஓட்டுறீங்கசிஸ்டர் இவர் சொல்வதை நம்பாதீர்கள். நான் அப்படி பலப்பம் எல்லாம் சாப்பிடுகிற பெண் இல்லை ” சிறு குழந்தையாய் கைகளை பெட்டில் தட்டிக்கொண்டு சிணுங்கினாள் மிருதுளா.

 

” பெண்ணா சேச்சே நான் இப்போது சொல்லவில்லை குட்டி. உன் சின்னவயதில் நடந்ததைச் சொல்கிறேன் .ஆனால் நீ சொல்லிக் கொள்வதைப் பார்த்தால்அத்தை உங்களுக்கு சந்தேகம் வரவில்லை எதற்கும் இவளுடைய ஹேண்ட் பேக்கை ஆராய்ந்து பார்ப்போமாஉள்ளே பலப்பம் எதுவும் இருக்கிறதோ என்னவோ ? “

 

” மகி யூ ராஸ்கல் …” செல்லமாய் கடிந்து கொண்ட மிருதுளா தலையணையை அவன் மேல் தூக்கி எறிந்தாள். அதனை சரியாக பிடித்துக்கொண்ட மகிபாலன் ” பேக்கை பார்க்கப் போகிறோம் என்றதும் எவ்வளவு கோபம் பாருங்கள் அத்தை .எனக்கென்னமோ சந்தேகமாகவே …”  பேசிக் கொண்டு நின்றிருந்தவனின் சட்டையை பிடித்து கட்டிலுக்கு இழுத்து  அமர வைத்து அவன் தலையை குனிய வைத்து கொட்டினாள் மிருதுளா.

 

” சின்னப்பிள்ளையா நான் இன்னமும் பலப்பம் சாப்பிட ? ” 

 

அப்போது சின்ன பிள்ளையில் சாப்பிட்டது ஒத்துக் கொள்கிறாய் தானே குட்டி ,? ” ஒற்றை விரலை பற்களுக்கு இடையே வைத்து கடிப்பதுபோல் காட்டி அவன் கேட்க மிருதுளா சிணுங்கலாய் சிரித்தபடி அவன் முதுகில் தன் இரு கைகளாலும் மொத்தினாள் .

 

” முதலில் இந்த குட்டியை விட்டு விட்டு பேசுங்க ” 

 

” நீ முதலில் எதற்கும் இப்படி கண்ணை கசக்குவதை நிப்பாட்டு ” 

 

” நான் ஒன்றும் அழவில்லை ” 

 

” அப்படியா ? ” தன் இரு கைகளால் அவள் முகத்தை பற்றி அவள் கண்களுக்குள் உற்றுப் பார்த்து அவளது அழுகையை சோதிக்க இரு விழிகளையும் அகலத் திறந்து கருவிழிகளை உருட்டி பின் இரு கரு விழிகளையும் மூக்கை பார்த்து நகர்த்தி ஒன்றரைக் கண் பாவனை செய்ய அவளது இந்த சேட்டைகளில் பக்கென சிரித்து விட்டான் மகிபாலன்.

 

” இப்படியே சேட்டை செய்து கொண்டிருந்தால் உன்னை குட்டி என்று கூப்பிடாமல் என்ன செய்வது ? ” அவள் உச்சந்தலையில் கை வைத்து செல்லமாக அசைத்தான்.

 

” போங்க நீங்க ஒன்றும் என்னை கூப்பிட வேண்டாம் ” மிருதுளா இன்னமும் சிணுங்க மாரீஸ்வரி அவர்கள் இருவரையும் நிறைவாக பார்த்துக்கொண்டு நின்றிருந்தாள் .கையில் மாத்திரைகளுடன் மிருதுளா அருகே வந்த நர்சின் முகத்திலும் பெரிய முறுவல் சூரியகாந்தியாக  மலர்ந்திருந்தது.

 

” மாத்திரையா …? ” மிருதுளாவின் முகம் கோணிக் கொள்ள ”  போச்சுடாஅத்தை போய் சங்கு எடுத்துக் கொண்டு வாருங்கள். குட்டியை மடியில் படுக்க வைத்து மருத்து ஊற்றுவோம் ”  மகிபாலனின் சலிப்பில் படபடவென அவன் தோள்களை குத்தினாள் மிருதுளா.

 

” கொடுங்க சிஸ்டர் ” நர்ஸிடம் மாத்திரைகளை வாங்கி வாயில் போட்டு டக் டக் என விழுங்கினாள்.

 

” விழுங்கி விட்டேன் .எனக்கு ஒன்றும் சங்கு தேவையில்லை ” முகத்தை உர்ரென்று வைத்துக் கொண்டாள்.

 

” இப்போது மிகவும் அழகாக இருக்கிறாய் குட்டி ” அவள் கன்னத்தில் தட்டிவிட்டு எழுந்துகொண்டான் மகிபாலன்.”  தூங்கி ஓய்வெடு ” 

 




ம்ஹூம்  இங்கே வேண்டாம். அம்மா நாம் வீட்டிற்கு போகலாம்மா ? ” கெஞ்சலாய் தாயைப் பார்த்தாள் .மாரீஸ்வரி மகிபாலனை பார்க்க அவன் ” நான் டாக்டரை பார்த்துவிட்டு வருகிறேன் .அவளை படுக்க வையுங்கள் ” என்றுவிட்டு போனான்

 

” இவ்வளவு நேரம் தூங்கிக் கொண்டுதானே இருந்தேன். திரும்பவும் எப்படி தூக்கம் வரும் ? ” நினைத்தபடி படுத்த மிருதுளா ஐந்தே நிமிடங்களில் கண்கள் சொருக தூங்கிப் போனாள்.

 

 

மீண்டும் அவள் கண்விழித்தபோது அறையினுள் கலிவரதன் இருந்தார் .மாரீஸ்வரியும்  கலிவரதனும் தாழ்ந்த குரலில் ஏதோ பேசிக்கொண்டிருந்தனர் .மிருதுளா இப்போது தலை வலி மிக நன்றாகவே குறைந்திருப்பதை உணர்ந்தாள்.

 

” அப்பா ” மெல்லிய குரலில் அழைக்க கலிவரதன் வேகமாக எழுந்து அவள் அருகே வந்தார் .” குட்டி எழுந்து விட்டாயாடாஇப்போது உடம்பு எப்படி இருக்கிறது ? ” 

 

” இப்போது பரவாயில்லை அப்பா .எனக்குத்தான் உடம்பு சரியாகி விட்டதே நாம் வீட்டிற்கு போகலாம் ப்ளீஸ் ” 

 

” போகலாம்டா நாளைக்கு போகலாம் என்று டாக்டர் சொல்லி இருக்கிறார் ” 

 

இன்னும் ஒருநாள் இங்கே இருக்க வேண்டுமா ? ” சலித்தபலடி அறையைச் சுற்றி விழிகளை ஓடவிட்டாள்.”  ஏதோ ஒன்றை மறந்து விட்டேன் ” மெல்ல நெற்றி பொட்டை தேய்த்துவிட்டு கொண்டவளை  மாரீஸ்வரி ” அதெல்லாம் ஒன்றும் மறக்கவில்லையே . நீ படுத்துக்கொள் குட்டிஎன்றாள்.

 

” இல்லை அம்மா ஏதோஹாஅன்று அந்த ஆக்சிடென்ட்நான்மகியை ஏர்போர்ட்டிற்கு கொண்டு போய்விடும் போது ஆக்சிடென்ட் நடந்தது இல்லையாஅப்போதுதான் அடிபட்டு இங்கே வந்தேனாஎனக்கு என்ன ஆனது ? ” குனிந்து தன் கை கால்களை உடம்பை பார்த்துக்கொண்டாள்.

 

” அது சும்மா சின்ன உரசல் தாண்டா குட்டி .அதிலெல்லாம் எந்த காயமும் உனக்கு இல்லை ” கலிவரதன் மகளின் தலையை வருடினார்.

 

”  மகிபாலனுக்குப்பாஅவரும் என்னுடன் தானே வந்தார்  ? அவருக்கு ஏதாவது

…? ” 

 

” முழு உருவமாக ஆறடி உயரத்திற்கு உன் முன்னால் பழுது சொல்லமுடியாமல் நிற்கிறேன் .பிறகும் இப்படி கேட்கிறாயே மிருது ? ” சொன்னபடியே வந்தான் மகிபாலன்.

 

அவசரமாக அவன் தலை முதல் கால் வரை ஸ்கேனிங்காய் விழிகளை ஓட்டியவள் திருப்தியாக தலையசைத்துக் கொண்டாள்.

 

” அப்போது விழித்த போது உங்களிடம் இதைக் கூட கேட்காமல் விட்டுவிட்டேன் மகி ” 

 

நினைவு வைத்து கேட்குமளவு அதில் எந்த விசயமும் இல்லாதபோது இதை ஒரு பிரச்சனையாக எடுத்துக் கொண்டு வருத்தப்படாதே குட்டி ” 

 

 

ம்ரொம்பவே சின்ன ஆக்சிடென்ட் தான் அப்படித்தானே மகி ? ” 

 

” அப்படியேதான் .இப்போது நீ அதை எல்லாம் நினைக்க வேண்டாம் பேசாமல் தூங்கு ” 

 

” ஹேய் என்னப்பா எல்லோருமாக எப்போது பார்த்தாலும் என்னை தூங்கிக் கொண்டே இருக்க சொல்கிறீர்கள் ? ” மிருதுளா செல்லமாய் சலித்தாள் அவள் பார்வை ஜன்னல் வழியாக வெளியே விழுந்தது.

 

இன்றைக்கு பவுர்ணமி போல அழகான முழுநிலவு .கொஞ்ச நேரம் வெளியே நடந்து விட்டு வருகிறேன்பா ”  செல்லமாய் அப்பாவிடம் கேட்க கலிவரதன் திகைத்தார்.

 

” இந்நேரத்திற்கு வெளியே வேண்டாம் குட்டி .நாளை காலை வாக்கிங் போகலாம் ” 

 

” நோப்பா  படுத்தே இருந்து உடம்பெல்லாம் ஒரு மாதிரி மத மதப்பாக இருக்கிறது. நான் வாக்கிங் போகத்தான் போகிறேன் ” மிருதுளா எழுந்து கொள்ள மகிபாலனும் அவளுடன் எழுந்தான்.

 

” நானும் உன்னுடன் வருகிறேன் மிருது ” என்றவன் நான் பார்த்துக் கொள்கிறேன் என்ற விழி ஜாடையை  பெற்றவர்களுக்கு கொடுத்துவிட்டு மிருதுளாவுடன் வெளியேறினான்.

 

மருத்துவமனையை சுற்றியிருந்த தோட்டத்தில் புல்தரையில் இருவரும் மௌனமாக மெல்ல நடந்தனர் .

ஏதோ சிந்தனையுடன் அவனது 

இழுவைக்கு நடந்தபடி இருந்த மிருதுளா அறைக்குள் போனதும் கேட்ட கேள்வி ” மதுவை எங்கே ? ” 

 

இந்தக் கேள்விக்கு பதில் சொல்ல தெரியாமல் மூவரும் அதிர்ந்து நின்றனர்.

 

 

 

 

What’s your Reaction?
+1
4
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
2
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!