Serial Stories uravu solla oruvan உறவு சொல்ல ஒருவன்  

உறவு சொல்ல ஒருவன் – 10

                                              10

” இந்த ஞாயிற்றுக்கிழமை ப்ரின்ஸ்ஸோடு நானும் சர்ச்சுக்கு வருகிறேன் …” மனைவியை ஆச்சரியமாக பார்த்தார் ஆடம்ஸ் .

” நிஜம்மா ஜெபி .நீ வெளியே வருகிறாயா …? “

” மம்மி நன்றாக சத்தமாக சொல்லுங்கள் .இங்கே பாருங்கள் டாடி தன் காதை பரிசோதித்துக் கொண்டிருக்கிறார் …” கிண்டல் செய்த மகனின் தலையை விளையாட்டாக தட்டினாள் .

” போடா …கிண்டல் பண்ணாதே .ப்ரின்ஸ் பாட்டியிடம் வாடா …” கிறிஸ்டியின் மடியிலிருந்த பேரனை பார்த்து ஆசையாக கை நீட்டினாள் .

சாந்தனு ஓரளவு ஜெபசீலியிடம் பழகியிருந்தாலும் இன்னமும் முழுதாக அவளை தேடிப் போய் ஒன்ற யோசிப்பான் .அவளாக வற்புறுத்தி கூப்படுகையில் மறுக்காமல் போவானே தவிர , அவனாக பாட்டியை தேடுவதில்லை .அத்தோடு இந்த மொழி பிரச்சினை வேறு இருக்கிறது .இவர்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து பேசுவது எதுவுமே சாந்தனுவுக்கு புரிவதில்லை .அதனால் சத்யப்ரியா இல்லாமல் கிறிஸ்டியனின் குடும்பத்தினரோடு மட்டும் இருப்பதை அவன் விரும்புவதில்லை .




நீட்டிய கைகளில் பாட்டியின் அழைப்பை உணர்ந்தவன் அதை காணாத்து போல்  ” அம்மா எங்கே …? ” கிறிஸ்டியனிடம் நிமிர்ந்து கேட்டான் .

சத்யமித்ராவை அடுத்து சாந்தனு கொஞ்சம் ஒட்டுவது கிறிஸ்டியனிடம்தான் .காரணம் அவன் பேசும் தமிழ் .

” அம்மா உனக்குத்தான் பால் கொண்டுவர போயிருக்கறார்கள் ப்ரின்ஸ் .நீ பாட்டியிடம் போ….”

” பால் குடிச்சிட்டு போறேன் …” கிறிஸ்டியனின் மேலேயே நன்கு சாய்ந்து கொண்டான் .

” என்கிட்ட வருகிறாயா ப்ரின்ஸ் .உனக்கு சாக்லேட் வாங்கி தருகிறேன் ….” முதன்முறையாக பேரனிடம் பேசினார் தாத்தா தமிழில் .

அங்கே தனக்கு புரிந்த மொழி பேசிய இன்னொருவரைக் கண்டதும் ஆவலோடு அவர் பக்கம் திரும்பியவன் ,மீண்டும் தலையசைத்து மறுத்துவிட்டு கிறிஸ்டியனிடமே சாய்ந்து கொண்டான் .

அப்படி அவன் தலையசைத்து மறுத்த விதம் கவர்ச்சியாய் மனதை இழுக்க தனது பெரிய மனிததனம் மறைந்து ஒரு சாதாரண தாத்தாவாகி எழுந்து கிறிஸ்டியனின் பக்கம் பேரனின் கையை பிடித்து  அமர்ந்து கொண்டு ….

” ஏன் இளவரசே …உங்க சித்தப்பாகிட்ட மட்டும்தான் இருப்பீங்களா …? இந்த தாத்தா கிட்ட இருக்க மாட்டீங்களா …? ” சாந்தனுவுக்கு புரிவதற்காகவும் , பேரனுக்கு புரிந்த மொழி பேசி அவனது அபிமானத்தை பெற்றுவிடும் ஆவலிலும்  தமிழிலேயே பேசியபடி இருந்தவரின் பேச்சு கையில் பால் கப்போடு வந்து நின்ற சத்யமித்ராவைக் கண்டதும் பாதியில் நின்று திணறியது .

ஆக உனக்கு தமிழ் நன்றாக பேச தெரியும் .வேண்டுமென்றேதான் என்னுடன் பேசவில்லை ….கேள்வியை பார்வையால் கேட்டபடி நின்றாள் அவள் .சிறு திணறலுடன் பேரனை விட்டு தள்ளி அமர்ந்து கொண்டார் ஆடம்ஸ் .

” ப்ரின்ஸ் பால் குடிக்கலாமா …? “

அம்மாவின் கேள்விக்கு வேகமாக அவளை நோக்கி வந்த சாந்தனு அவள் பால் கப்பை ஜெபசீலியிடம் தருவதை சிறு சிணுக்கத்துடன் பார்த்தான் .

” பாட்டிகிட்ட போய் குடி ….” அன்பு நிறைந்திருந்தாலும. மறைமுக வலியுறுத்தல் இருந்த்து அவள் குரலில் .

ஒரு நொடியே யோசித்த சாந்தனுஅம்மாவின் கையை இழுத்து பாட்டியின் அருகில் அமர வைத்து விட்டு  தான் பாட்டி மடியில் ஏறி அமர்ந்து சமர்த்தாக பால் குடிக்க தொடங்கினான் .

குட்டிப்பையனின் இந்த செய்கை எல்லோருடைய முகத்திலும் முதலில் புன்னகையை கொண்டு வந்தாலும் , பெரியவர்கள் சிறிது நேரத்திலேயே முகம் கறுத்தார்கள் .

” அண்ணி உங்களை இப்படி பார்க்க ரொம்ப சந்தோசமாக இருக்கிறதண்ணி …” நிஜமான சந்தோசத்தோடே சொல்லியபடி வந்தாள் கரோலின் .

கூடவே ஷீபாவும் , ரேச்சலும் .எப்போதும் போல் அவர்கள் பார்வை தன்னை அறுக்கும் என அறிந்திருந்த்தால் அவர்களை நிமிர்ந்து பாராமல் சாந்தனுவை பார்த்தபடி அமர்ந்திருந்தாள் சத்யமித்ரா .

” இறுதியாக நம்  தேவன் கருணை வைத்துவிட்டார் .நீங்கள் இது போல் குடும்பத்தோடு பேசிக்கொண்டு அமர்ந்திருப்பதை பார்த்து எவ்வளவு நாட்களாகி விட்டது ” பாசத்தோடு ஜெபசீலியின் அருகமர்ந்து  கைகளை பற்றிக் கொண்டாள் கரோலின் .

” எல்லாம் என் பேரன் வந்த நேரம் .என் நோய் ஓடிவிட்டது …” சொல்லியபடி சாந்தனுவை அணைத்துக்கொண்டாள் ஜெபசீலி .

” உன் உடலை விட மனதில்தான் நோய் இருந்த்து ஜெபி …” ஆடம்ஸ் சொன்னார் .

” அந்த மனதைத்தான் என் பேரன் செப்பனிட்டு விட்டான் ”
மலையாளத்தில் என்றாலும் இவர்களின் பேச்சை ஓரளவு உணர்ந்து நிறைவுடன் கேட்டுக்கொண்டிருந்த சத்யமித்ராவை பார்த்த கரோலின் …

ஜெபசீலியின் கையிலிருந்த காலி பால் கப்பை வாங்கி சத்யமித்ராவின் கையில் கொடுத்தாள். ” உள்ளே கொண்டு போய் வை …” என்றாள் .எஜமானிக்கான அதிகாரம் குரலில் .




மாறிய முகத்துடன் எழுந்த சத்யமித்ரா உள்ளே போக ” குடும்ப விசயம் பேசும்போது வேலைக்கார்ர்கள் ஏன்  இங்கே வருகிறார்கள் …?” ஷீபாவின் இந்த பேச்சு நிச்சயம் சத்யாவிற்குத்தான் .

ஆனால் இதனை அவள் சொல்வாளானால்  அதோ அவளை சொன்னேன் என தரையை சுத்தம் செய்ய வந்த பெண்ணை அவள் காட்டக்கூடும் .எனவே மௌனத்தை சுமந்து வெளியேறினாள் சத்யமித்ரா .

ஓரவிழியால் பார்த்தபோது கையிலிருந்த செல்போனில் கிறிஸ்டியனிடம் எதையோ காட்டியபடி அவனை ஒட்டிக்கொண்டு அமர்ந்திருந்த ரேச்சல் தென்பட்டாள் .

வெகு கவனமாக அந்த தொடு திரையை பார்த்துக்கொண்டிருந்தவன் திடீரென ரேச்சலின் தோள்களை அணைத்து சிரிக்க ….சத்யமித்ராவின் தேகம் எரிந்த்து .கையிலிருந்த காலி கப்பால் அவன் தலையில் ஓங்கி ஒன்று போட்டாலென்ன …?

இவனென்ன …யாரையும் தொடாமல் பேசமாட்டானா …? இப்போது அவளிடம் இவ்வளவு உரசிக்கொண்டு உட்காரவிட்டால் என்ன …?

இங்கு வந்த நாள் முதல் இயல்பாக அவளை தொட்டு பேசிய கிறிஸ்டியன் நினைவு வந்தான் .கூடவே முதல்நாள் தோட்டத்தில் அவளை முழுதுமாக அணைத்து நின்ற கிறிஸ்டியன் .

தனக்கும் …அவனுக்குமிடையில் ஏதோ ஓர் ரகசிய ஒட்டுதல் இருப்பதான பிரமை எப்போதும் சத்யாவிற்கு இருந்த்து . முதல்தின அவனது அணைப்பின் பிறகு அது உறுதியானது போல் உணர்ந்தாள் .

ஆனால் இது போன்ற அணைப்புகள் இவனிடம் சகஜம் போலவே …இவன் எல்லோரிடமும் இப்படித்தானே நடந்து கொள்கிறான் .இது தெரியாமல் …தானே தன் தலையில் ஓங்கி கொட்டிக்கொண்டாள் .கலங்கிய கண்களுக்காக தன் மீதே கோபம் கொண்டுவிட்டு …கொட்டியதால் வலித்திருக்கும் என தானே சமாதானமும் செய்து கொண்டாள் .

” சமையல்காரம்மா ஏதோ விபரம் கேட்கிறார்கள் .வந்து சொல்லுங்கள் …” வலியுறுத்தும் குரலில் ஜெபசீலியிடம் சொல்லியபடி  வந்து நின்ற சத்யமித்ராவை எரிச்சலோடு பார்த்தார் ஆடம்ஸ் .

” அவள் கொஞ்சம் ஓய்வெடுக்கட்டும் .சமையல் வேலையெல்லாம் தானே நடக்கும் …”

” இல்லை அவர்கள் வந்து ஒரு தடவை பார்த்துவிட்ட்டும் ….” பிடிவாதமாக நின்றாள் .

ஆடம்ஸ்ஸும் , மற்றவர்களும் சத்யமித்ராவை கொலை பார்வை பார்க்க ,

” சத்யா ஏதோ விபரம் கேட்கிறாள் .வந்து சொல்லுங்களேன்மா …” என தாயிடம் மலையாளம் பேசிய கிறிஸ்டியனை ஆச்சரியமாக பார்த்தாள் .

இவனென்ன எப்போதும் எனக்கு எதிராகத்தானே பேசுவான் .இன்று ஏனோ காற்று என் பக்கம் அடிக்கிறதே ….அவள் விழிகளை ஊடுறவ முயன்ற கிறிஸ்டியனின் கண்களை தவிர்த்து …

” வாங்க அம்மா ..” ஜெபசீலியின் கைகளை பிடித்தாள் .

” அட வாங்கம்மா நம்ம வீட்டு கிச்சன் பக்கம் நீங்கள் வந்து எவ்வளவு நாளாகிவிட்டது .வந்து ஒரு பார்வை பாருங்கள் ” தாயின் மடியிலிருந்த சாந்தனுவை தூக்கி சத்யமித்ராவிடம் கொடுத்தவன் அம்மாவின் தோளை அணைத்து எழுப்பினான் .

தன் கைகளை தீண்டிய கிறிஸ்டியனின் விரல்களிலிருந்து அவசரமாக விலகி முன்னால் நடந்தாள் சத்யா .

மகனுக்காக வந்தவள்தான் .அவளில்லாத சமையலறை  இருந்த கோலத்தை கண்ட ஜெபசீலி அதிர்ந்து , தன்னை ..தன் நோயை மறந்து அங்கிருந்த வேலைக்கார்ர்களுக்கு ஆலோசனைகளை உத்தரவாக வழங்கியபடி தனது வீட்டை திருத்த தொடங்கினாள் .

மனைவிக்கென ஒரு நாற்காலியை இழுத்து போட்டு அதில் அவளை அமர வைத்துவிட்டு அவளது அரசாங்கத்தை ஆவலோடு அருகிருந்து ரசிக்க தொடங்கினார் ஆடம்ஸ் .

” மற்றுமொரு முறை சாதித்திருக்கிறாய் சத்யா ….” வழக்கமான இயல்போடு அவளை தொட வந்த கிறிஸ்டியனிடமிருந்து நாசூக்காக விலகியபடி …

” இது ஒரு சின்ன மனோத்த்துவம்தான் .அதனை புரிந்து கொண்டதற்கு நன்றி ..” என்றாள் .

” ஓ…என்ன பேபி இது …பெரிய மனுசி மாதிரி நன்றியெல்லாம் சொல்லிக்கொண்டு …” குறும்பு கொப்பளிக்கும் கண்களுடன் அவளை நெருங்கியவனை கையுயர்த்தி நிறுத்தினாள் .

” என்ன பேசுவதாக இருந்தாலும் தள்ளி நின்று தொடாமல் பேசுங்கள் …” அழுத்தமாக அறிவித்துவிட்டு நகர்ந்தாள் .

மாடியேறிக்கொண்டிருந்தவளின் காதுகளில் பின்னாலேயே வந்து படபடவென மலையாளத்தில் கத்திய கரோலினின் குரல் கேட்டது .கொஞ்சம் நிதானமாக நிறுத்தி பேசினால் கூர்ந்து கவனிக்கும் போது புரிந்து கொள்ள கூடிய மொழிதான் .

ஆனால் அதற்கான மனநிலை அப்போது இல்லாமல் அலுப்பாக வந்த்து சத்யாவிற்கு .வெகு வேகமாக இப்போது கொட்டினால்தான் உண்டு என்பது போல் கரோலினும் , ஷீபாவும் மாற்றி மாற்றி குப்பையாக கொட்டியதன் சாராம்சம் சத்யா புரிந்து கொண்ட வரை இதுதான் .

டேவிட்டிற்கும் , ஷீபாவிற்கும் திருமணம் முடிக்க வேண்டுமென்று கரோலினும் , ஆடம்ஸும் நினைத்திருந்தனர் .அதனை சத்யாவின் குடும்பத்தினர் கெடுத்துவிட்டனர் .அதற்கு தண்டனையாகத்தான் கர்த்தர் அவர்கள் குடும்பத்தையே அழித்துவிட்டார் .

இப்போது கிறிஸ்டியனுக்கும் , ரேச்சலுக்கும் திருமணமென்று பேசி முடிவு செய்து வைத்துள்ளனர் .இதனை கெடுக்கும் விதமாக சத்யா ஏதாவது செய்தாளென்றால் அவர்களிருவரும் அவளை சும்மா விடப்போவதில்லை .கர்த்தரும் அவளுக்கும் சரியான தண்டனை வழங்குவார் .

மனதிற்குள் மட்டுமாக இவர்கள் இருவருக்கும் திருமணமென்ற பேச்சு இருக்கலாமா …என்ற அவளது சந்தேகம் இப்போது உறுதிப்பட்டு விட உறைந்து போய் நின்றாள் சத்யமித்ரா .அவளது அதிர்ச்சியை திருப்தியாக பார்த்த அம்மாவும் , மகளும் …உடனே அந்த வீட்டை விட்டு வெளியேறி விடும்படி அவளிடம் கூறினர் .

போகத்தான் போகிறேன் .ஆனால் நீங்கள் சொல்லி அல்ல …எனக்கென்ற நேரம் வரும்போது .மனதிற்குள் கூறிக்கொண்டு தனது முக அதிர்ச்சியை மாற்றிக்கொண்டு ….

” என்ன சொல்கிறீர்கள் …? ” என்றாள் .தொடர்ந்து புரியவில்லை என சைகை காட்டினாள் .

இவ்வளவு நேரமாக மூச்சை பிடித்துக்கொண்டு பேசியதெல்லாம் வீணா ….எரிச்சலுடன் மீண்டுமொரு முறை விளக்க ஆரம்பித்த கரோலினை கையுயர்த்தி நிறுத்தினாள் .

” எனக்கு மலையாளம் தெரியாது .அதனால் நீங்கள் சொன்ன எதுவுமே புரியவில்லை ….” என்றவள் அவர்கள் விழிப்பதை பார்த்துவிட்டு அதனையே ஆங்கிலத்தில் மிகத் தெளிவாக திரும்பவும் கூறிவிட்டு தனது அறைக்குள் நுழைந்து கொண்டாள் .




பாட்டியும் பேரனும் ஒருவருக்கொருவர் ஊட்டி விட்டுக்கொள்வதை புன்னகையோடு பார்த்தபடியிருந்தாள் சத்யமித்ரா .சாந்தனு பரவாயில்லை .கொஞ்சம் கொஞ்சமாக இந்த வீட்டினருடன் ஒட்டிக்கொள்ள ஆரம்பித்திருக்கிறான் .இன்னும் கொஞ்ச நாட்கள்தான் அதன் பிறகு சத்யமித்ரா …இங்கிருந்து வெளியேற வேண்டியதுதான் .பெருமூச்சுடன் நினைத்துக் கொண்டாள் .

” அம்மா பாதர் வந்திருக்கிறார் …” சொல்லியபடி வந்த கிறிஸ்டியன்  பாசத்தோடு தாயின் மடியிலிருந்த சாந்தனுவை வருடினான் .மறந்தும் சத்யாவின் பக்கம் திரும்பவில்லை .

ஒரு வாரமாக…அன்று சத்யா கோபமாக பேசியதிலிருந்து  அப்படித்தான் இருந்தான் .இங்கேதான் இருக்கிறானா …இல்லை எங்கேயும் வெளியூருக்கு போய்விட்டானா என நினைக்குமளவு அங்கே இருந்தாலும் சத்யாவின் கண்ணிலேயே படாமல் , அவளோடு பேசாமல் , அவள் பக்கமே திரும்பாமல் இருந்தான் .

இப்போதும் அவர்கள் அவளை விட்டு ஏதோ தனிமையாக பேச எண்ணுவதை போல் தோன்ற வெளியேறி விட எண்ணி சத்யா ஒரு எட்டு எடுத்து வைத்தபோது , அவளுக்கு முன்பாக நான்கு எட்டு வைத்து நடந்து விட்டவன் நின்று திரும்பி அவளை கூர்ந்து பார்த்தான் .

What’s your Reaction?
+1
4
+1
3
+1
1
+1
0
+1
0
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!