Serial Stories Sollamal Thotu Sellum Thenral

Sollamal Thottu Sellum Thendral – 16

16

 

மருவித் தயங்குகிறேன்
மறைந்து உருகுகிறேன்
மஞ்சத்தின் கணக்கீடுகளுக்கு
கூட்டல் போடாதே..

நேற்று எவ்வளவு மோசமாக பேசினாள்.. இன்று குழந்தை போல் இப்படி அநாதரவாக கிடக்கிறாளே.. தரையில் துவண்டு போய் கிடந்த வந்தனாவை மைதிலி பாவமாக பார்த்தாள்..
சுந்தரேசனின் சடலத்தை எடுத்துக் கொண்டு போய் முறைப்படி ஈமைக்கிரியைகள் செய்து முடித்தாயிற்று.. ஒவ்வொரு நாடாக சுற்றிக் கொண்டிருக்கும் ரவீந்தருக்கு சரியான நேரத்தில் இந்த துக்க விசயம் தெரிவிக்க முடியாமல் போக, தொடர் சிகிச்சையில் இருந்து தளர்ந்த உடல் என்பதால் சுந்தரேசனின் உடலையும் அதிக நேரம் வைக்க முடியாமல் போக, இனி அவனுக்கு தகவல் கொடுத்து அவனையும் பதறியடித்து வர வைக்க வேண்டாமென பரசுராமன் சொல்ல மற்றவர்கள், ஒப்புக் கொண்டு அவனுக்கு தகவல் கொடுக்காமல் விட்டாயிற்று..
ஈஸ்வரி, வந்தனாவின் ஆதரவிற்காக அவர்கள் அனைவரும் அவர்களுடனேயே தங்கியிருந்தனர்… கணவனின் சடலம் கிடத்தப்பட்டிருந்த இடத்திலேயே அழுதபடி சுருண்டு விட்டிருந்தாள் ஈஸ்வரி.. வந்தனாவும் அம்மாவை அணைத்தபடி அங்கேயே படுத்து விட்டாள்.. வெறும் தரையில் கிடந்த இருவரின் தலையையும் உயர்த்தி தலையணையை வைத்தாள் மைதிலி..
வீட்டின் வாசலில் உட்கார்ந்து அருணாச்சலம் தன் மகன்களுடன் பேசிக் கொண்டிருந்தார்.. கிட்டதட்ட நடு இரவாகி விட்டது.. ஆனாலும் அவர்களுக்கு தூக்கம் வரவில்லை.. தான் தங்கை கணவனுடன் இப்படி சண்டை போடாமல் இருந்திருந்தால் அவர் இன்னும் சிறிது காலம் உயிரோடு இருந்திருப்பாரோ.. எனும் அருணாச்சலத்தின் குற்ற உணர்வை யாராலும் கட்டுப்படுத்த முடியவில்லை.. இதோ இப்போது கூட அதுபோல் ஏதோதான் அவர் வருத்தப்பட்டுக் கொண்டிருந்தார்..
“காபி கொண்டு வரட்டுமா மாமா..?” அவரது மனதை திசை திருப்பும் முயற்சியாக மைதிலி கேட்டாள்..




“ஆமாம் இனி காபி குடித்து, சாப்பிட்டு.. நானும் உயிர் வாழ்ந்து..” அருணாச்சலம் சலிக்க..
“ஏன் இப்படி பேசுறீங்க..?” மகாராணி பதறினாள்..
“எல்லோருக்கும் காபி கொண்டு வா மைதிலி..” பரசுராமன் சொல்ல மைதிலி உள்ளே வந்து அனைவருக்கும் காபி கலந்தாள்..
மாமனார், மாமியார், கணவன், கொழுந்தன், நாத்தனார் என அனைவருக்கும் வரிசையாக கொடுத்தாள்..
“நீ குடிக்கவில்லையா..?” கேட்டவன் பரசுராமன் தானா கண்களை சிமிட்டி அவனைப் பார்த்தாள்..
“பால் இல்லையாம்மா..?” மகாராணி ஆதரவாக கேட்க,
“இந்தா இதைக்குடி..” என்று சூடு ஆற்றுவதற்காக கொண்டு வந்த டம்ளரில் தன் டம்ளர் காபியிலிருந்து பாதி ஊற்றி அவளிடம் கொடுத்தான்..
மைதிலிக்கு கண்கள் கலங்கிவிட்டன.. அவள் கணவன் அவளுக்காக செய்யும் முதல் சிறு ஆதரவு செய்கை.. இது போதும்.. இனி அவள் தன் வாழ்வை ஜெயித்து விடுவாள்.. கணவன் நீட்டிய தம்ளரை வாங்கிக் கொண்டு கால் நடுங்க, மாமியாரின் அருகே அமர்ந்து கொண்டாள்..
“நீயாவது பக்கத்திலிருந்து கவனித்துக் கொண்டாயே பரசு எனக்கு அதில் ரொம்ப நிம்மதிப்பா..” அருணாச்சலம் திரும்ப கண்கலங்கினார்..
“ஷ் அப்பா என்ன இது..? இதெல்லாம் பெரிய விசயமா..?”
“உங்களுக்கு யார் சொன்னார்கள் அண்ணா..? மாமா உடல்நிலை உங்களுக்கு எப்படி தெரியும்..?” சித்ரலேகா கேட்டாள்..
“வந்தனா..” என்றான் பரசுராமன்.. மைதிலியின் நாக்கில் காபியின் சூடு பட்டு லேசாக காந்தியது..
“வந்தனா ஒரு நாள் போனில் அப்பாவிற்கு அடிக்கடி உடம்பு சரியில்லாமல் போய்விடுகிறது பரசு என அழுதாள்.. நான் ஆஸ்பிடல் கூட்டிப்போ என்று சொல்லிவிட்டு போனை வைத்து விட்டேன்.. உங்களுக்காகத்தான்பா அன்று அப்படி செய்தேன்.. ஆனால் என் மனதை ஏதோ உறுத்திக் கொண்டே இருந்தது.. ஆண்பிள்ளை இல்லாத வீடு.. இருக்கும் ஒரே ஆணுக்கு உடம்பு சரியில்லையென்றால் பெண்கள் என்ன செய்வார்கள்.. என் மனசாட்சி குத்திக் கொண்டே இருந்தது..”
“இரண்டு நாட்கள் கழித்து வந்தனா திரும்பவும் போன் செய்தாள்.. ஆஸ்பத்திரியில் இருக்கிறேன்.. உடனே வாங்க.. டாக்டர் என்னென்னமோ சொல்கிறார்.. எனக்கு பயமாக இருக்கிறது என அழுதாள்.. இப்போது நான் கொஞ்சம் கூட யோசிக்கவில்லை.. உடனே கிளம்பி போனேன்.. அங்கே டாக்டர் பெரிய பெரிய குண்டுகளாக போட்டார்.. அத்தையும் வந்தனாவும் பயந்து அழுகின்றனர்.. மாமா உடல் வேதனையோடு இதையெல்லாம் சொல்லி பரிதாபம் காட்டி உன் அப்பாவை இங்கே கூட்டி வரக்கூடாது என்கிறார்.. எனக்கு வேறு வழி தெரியவில்லை.. உங்களுக்கு தெரியாமல் அவர்களுக்கு உதவ ஆரம்பித்தேன்..”
அப்படி பரசுராமன் அவர்களுக்கு உதவும் போதுதான் இனி அண்ணன் குடும்பத்துடன் தாங்கள் இணைந்து விடுவோமென்ற நம்பிக்கையுடன் ஈஸ்வரி அத்தை வெளியில் அதை ஒத்து பேச ஆரம்பித்திருப்பார் போலும்… மாமா அதைக் கேள்விப்பட்டு கோபத்தில் அவசரமாக வேறு கல்யாண ஏற்பாடுகள் ஆரம்பித்து கல்யாணத்தையும் முடித்து விட்டார்.. என மைதிலி நினைத்துக் கொண்டாள்..
“நல்ல காரியம் செய்தாயடா பரசு.. அப்போது நீ என்னிடம் கேட்டிருந்தாலும் நான் கோபத்தில் அதெல்லாம் ஒன்றும் செய்யக்கூடாது என்றுதான் சொல்லியிருப்பேன்.. அப்போது நீ எடுத்த முடிவுதான் சரி..”




அருணாச்சலம் மகனின் கைகளை பற்றிக் கொண்டார்..
“பச் எப்படி பார்த்தும் அந்த உயிரை நம்மால் காப்பாற்ற முடியவில்லையே..” மகாராணி கவலையுடன் கண்ணீர்விட ஆரம்பித்தாள்..
“என்னம்மா செய்வது.. முயற்சி மட்டும்தானே நம் கையில்.. முடிவு கடவுளின் கையில் அல்லவா..” தாயை அணைத்து தேற்றினான் பரசுராமன்..
இதே போலொரு தேற்றுதல்தான் அன்று ஹோட்டலில் நான் பார்த்ததோ.. அப்பாவின் உடல் நிலையில் மனம் வருந்தி சாப்பிட முடியாமல் இருந்தவளை ஹோட்டலுக்கு அழைத்து வந்து சிரித்து பேசி உணவருந்த வைத்தானோ.. அப்படித்தான் என மைதிலியின் மனம் அடித்து சொன்னது..
“டாக்டர் பத்து நாட்களுக்கு முன்பாகவே மாமாவின் உடல் நிலையை எனக்கு சொல்லிவிட்டார் அப்பா, எவ்வளவு சீக்கிரம் சிறுநீரகம் மாற்றுகிறோமோ.. அவ்வளவு நல்லது.. இல்லை என்றால் எந்நேரமும் உயிர் போகும் வாய்ப்பு இருக்கிறது என்றார்.. எனக்கு அதிர்ச்சி.. சிறுநீரகத்திற்கு பதிந்து வைத்திருக்கிறோம்.. பணம் கொடுத்தால் கிடைக்கும் விசயமாக அது இல்லை.. அப்படி கிடைக்குமானால் எத்தனை லட்சங்கள் வேண்டுமானாலும் கொடுக்க தயாராக இருக்கிறேன் என டாக்டரிடம் சொல்லி விட்டு வந்தேன்..
மாமாவின் நிலைமையை அத்தையிடமோ.. வந்தனாவிடமோ, இங்கே நம் வீட்டில் யாருடனோ பகிர்ந்து கொள்ள முடியவில்லை.. மாமாவை ஆஸ்பிடலில் கிட்னிக்காக எல்லா இடத்திலும் சொல்லி வைத்துக் கொண்டிருந்தேன்.. அதுவும் கிடைப்பது போல் இல்லை.. என் கண் முன்னாலேயே மாமா கொஞ்சம் கொஞ்சமாக செத்துக் கொண்டிருக்கிறார்.. நான் என்ன செய்வது..? ஷ்.. ரொம்ப கொடுமையான நிலைப்பா அது..”
பரசுராமன் சொல்ல சொல்ல அவனது நிலைமை மைதிலிக்கு நன்கு புரிந்தது.. பத்து நாட்களாக அவனது தவிப்பிற்கான காரணமும் தெரிந்தது.. ஒரு உன்னத காரியத்திற்காக கணவன் தவித்துக் கொண்டிருக்க, தான் அதனை அறியாமல் அவன் மீது எப்படிப்பட்ட குற்றச் சாட்டுகளை வைத்துக் கொண்டிருந்தேனே என தன்னைத் தானே வெறுத்தாள் அவள்..
“எனக்கு உன்னை நினைத்தால் ரொம்பவும் பெருமையாக இருக்கிறதுடா கண்ணா..” மகாராணி மகனின் தோள்களை அணைத்துக் கொண்டாள்..
“பரசு எனக்கு பிறகு.. என்று நான் நம் தொழிலுக்கும், வீட்டிற்கும் மிகவும் கவலைப்பட்டிருக்கிறேன்பா.. ஆனால் இனி அந்தக் கவலை எனக்கு இல்லை.. எனக்கு பிறகு நம் தொழில்களையும், வீட்டையும், உறவுகளையும் நீ மிக நன்றாகப் பார்த்துக் கொள்வாய் என்று நம்பிக்கை எனக்கு நூறு சதவிவிதம் வந்து விட்டது..”
அருணாச்சலத்தின் குரலில் பெருமிதம் நிரம்பி வழிந்தது.. மைதிலி கன்னத்தில் கை தாங்கிக் கொண்டு நிலவொளியில் வரி வடிவாக தெரிந்த கணவனை விழி விரித்துப் பார்த்தாள்..
இவன் என் புருசன்.. பெருமையுடன் மனதிற்குள் சொல்லிக் கொண்டாள்..
“சரி எல்லோரும் போய் படுங்க..” அருணாச்சலம் எழுந்து கொள்ள எல்லோரும் எழுந்து வீட்டிற்குள் போனார்கள்..
பரசுராமன் மட்டும் அங்கேயே அமர்ந்து வானத்து நிலவை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.. உள்ளே படுக்க போன மைதிலி அவனை பார்த்து விட்டு மீண்டும் வெளியே வந்தாள்.. தான் பட்ட பாடு வீணாகி ஒரு உயிர் அநியாயமாக போய் விட்டதே.. எனும் கணவனின் உள் மன மறுகலை உணர்ந்து கொண்டாள்..
அன்றொருநாள் இதே போல் ஒரு தவித்தலின் போது கணவனுக்கு ஆறுதளிக்க நினைத்தாள்.. அவன் அதற்கு அன்று அனுமதி அளிக்கவில்லை.. இதோ இப்போதும் தளர்ந்து தனிமையில் வெறுமையாக அமர்ந்திருப்பவனை அணைத்து ஆறுதல் கூற நினைக்கிறாள்.. இன்றாவது அவன் அதற்கு சம்மதிப்பானா..?
தயக்கத்துடன் படியிறங்கி கணவன் அருகே போனவள் மெல்ல அவன் தோள்களை தொட்டாள்..

What’s your Reaction?
+1
8
+1
2
+1
0
+1
0
+1
1
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

1 Comment
Inline Feedbacks
View all comments
Sarojini
Sarojini
4 years ago

பரசு, இதமாக அத்தை குடும்பத்தை தாங்கியிருக்கிறான், ஆனால் ஆதரவாக அவனை நாடும் மனைவியை என்ன சொல்வானோ?! நாளை பதிவு இருக்கிறதா பத்மா டியர்?

1
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!