Serial Stories Sollamal Thotu Sellum Thenral

Sollamal Thottu Sellum Thendral – 15

15

அடர் இருட்டு பழக்கமில்லை எனக்கு
உன்னுடனான இருசக்கர வாகன
பயணத்தின் போதுதான்
இருள் குகை வந்தது
மின்சார மின்னல் வந்ததால்..

கணவனின் முதுகை பார்த்தவாறே மீண்டும் ஓர் இரவை கழித்து விட்டு, அதிகாலை வசால் தெளிக்க கதவை திறந்தாள் மைதிலி.. அதிர்ந்தாள்..
வாசலில் வந்தனா நின்றிருந்தாள்.. அப்போதுதான் எதிர் வீட்டிலிருந்து ஓடி வந்திருப்பாள் போலும்.. முகம் சிவந்து மூச்சு வாங்க நின்றிருந்தாள்.. கண்கள் கலங்கியிருந்தன..
“என்ன வந்தனா..?”
கேட்டவளை தள்ளிவிட்டு வீட்டினுள் ஓடினாள்..
“பரசு.. பரசு..” அழுகையுடன் கத்தியபடி அவர்கள் அறைக்குள்ளேயே போய்விட்டாள்..
மைதிலி திகைத்து நின்று பின் சுதாரித்து உள்ளே ஓடி அறைக்குள் பார்த்த போது வந்தனா பரசுவின் மார்பில் சாய்ந்திருந்தாள்.. அவன் அவள் தலையை வருடி சமாதானம் சொல்லிக் கொண்டிருந்தான்.
“ஒன்றும் ஆகாது சரியாகி விடும்..” ஆறுதல் எதற்கு..? யாருக்கு..? மைதிலி அதிர்ந்து போய் அறை வாசலில் நின்று அவர்களை பார்த்தபடி இருந்தாள்..
“பரசு சீக்கிரம் வாங்க.. எனக்கு பயமாக இருக்கிறது..” வந்தனா கேவினாள்..
“இதோ போகலாம்..” பரசுராமன் அவளுடன் கிளம்ப மைதிலி நம்ப முடியாமல் அவர்களைப் பார்த்தபடி நின்றிருந்தாள்..
“மூதேவி மாதிரி ஏன் வழியை அடைத்துக் கொண்டு நிற்கிறாய்..? தள்ளிப் போ..” இரைச்சலாய் கத்தியதோடு அவளை பற்றி அந்தப் பக்கம் தள்ளவிட்டு வந்தனாவின் கை பற்றியபடி வாசலுக்கு விரைந்தான் பரசுராமன்..
அவன் தள்ளிய வேகத்தில் கீழே விழப் போன மைதிலி கடைசி நிமிடத்தில் சுதாரித்து பாதங்களை தரையில் அழுந்த ஊன்றி நின்றபோது, அவமானத்தில் அவள் கண்கள் கலங்க தொடங்கி விட்டது.. வேகமாக வாசலுக்கு ஓட அங்கே வழியை அடைத்துக் கொண்டு இடுப்பில் கைகளை தாங்கிக் கொண்டு அருணாச்சலம் நின்றிருந்தார்..
“பரசு என்னடா இது..? என்ன செய்து கொண்டிருக்கிறாய்..?”
“அப்பா விபரங்கள் சொல்ல இப்போது நேரமில்லை.. வந்து சொல்கிறேன்..”
வெளியேற முயன்றவனின் முன் கையை நீட்டினார்.
“டேய் என்னை மீறி வெளியே போய்விடுவாயா..?”
“அப்பா வியாக்யானம் பேச இப்போது நேரமில்லை.. அங்கே மாமாவுக்கு உடம்பு சரியில்லை.. நான் அவரை ஆஸ்பிடல் கூட்டிப் போக வேண்டும்.. வழி விடுங்கள்..”
“யாருடா உனக்கு மாமன்..? நான் சொல்லாமல் உனக்கு மாமன் வந்துவிட்டானா..? யாரோ எப்படியோ போகிறார்கள்.. நீ உள்ளே போடா..”
“அப்பா வறட்டு கௌரவம் பார்க்கும் நேரமில்லை இது.. ஒரு உயிர் போய் கொண்டிருக்கிறது.. நகருங்கள்..” அப்பாவின் கையை நகர்த்திவிட்டு வாசலில் இறங்கினான் பரசுராமன்..
“டேய் என் பேச்சை மீறி நீ போனதாக இருந்தால் திரும்ப இந்த வீட்டிற்குள் நீ நுழைய முடியாதுடா.. உன்னை தலை முழுகி விடுவேன்..”




“ரொம்ப நல்லது, முதலில் அதைச் செய்யுங்கள்..” ஓட்டமாய் எதிர் வீட்டிற்குள் நுழைந்த கணவனை இயலாமையுடன் இங்கிருந்து பார்த்தாள் மைதிலி..
இந்த அளவு பேசிய பிறகும் அப்பாவை மீறும் அளவு இவனுக்கு அந்த வீட்டின் மீது எவ்வளவு ஒட்டுதல்..?
பரசுராமன் தன் பைக்கின் பின்னால் வந்தனாவை உட்கார வைத்துக் கொண்டு போய்விட்டான்..
அருணாச்சலம் சிங்கத்தைப் போல் உறுமியபடி வீட்டிற்குள் நடந்து கொண்டிருந்தார்..
“மகாராணி..” அவர் கத்திய கத்தலில் நடுங்கியபடி வந்து நின்றவளின் கன்னம் அதிர்ந்தது..
“என்னடி நடக்குது இங்கே..? என்ன பிள்ளை வளர்த்து வைத்திருக்கிறாய்..? எப்படி எதிர்த்து பேசிவிட்டு போகிறான் பாரு.. இதெல்லாம் எத்தனை நாளாக நடக்கிறது..?”
மகாராணி சிறு விசும்பலுடன்.. “தெரியலைங்க..” என்றால்.. மீண்டும் அடி வாங்கினாள்..
“என்னடி தெரியாது..? பிள்ளைங்க வெளியே எங்கே போறாங்க.. வர்றாங்கன்னு கவனிக்காமல் நீ இங்கே என்னடி செய்ற..? நல்லா தின்னுட்டு தின்னுட்டு தூங்குறியா..?”
மீண்டும் மீண்டும் அடி வாங்கினாள் மகாராணி, மகன், மருமகள் முன் அடி வாங்கிய அவமானம் வேறு சேர்ந்து கொள்ள அவள் மெல்ல அழ ஆரம்பிக்க, கல்யாணசுந்தரமும், மைதிலியும் உள்ளறைக்கு வந்து விட்டனர்..
எந்த பாதிப்பும் இல்லாமல் அமைதியாக இருக்கும் கல்யாணசுந்தரம் அவளுக்கு எரிச்சலை தர,
“உங்கள் அப்பா அடிப்பதை தடுக்கலாமே.. சும்மா பார்த்துக் கொண்டு இருக்கிறீர்களே..” குற்றச்சாட்டாய் கேட்டாள்..
“நாம் தடுக்க தடுக்க அம்மாவிற்குத்தான் அடி அதிகம் விழும் அண்ணி.. அப்படியே விட்டு விட்டால் அப்பாவாகவே கொஞ்ச நேரத்தில் அமைதியாகி விடுவார்..”
“ஆமாம்.. அடித்து கை ஓய்ந்ததும் அமைதியாகத் தானே வேண்டும்..”
மைதிலியின் பொறுமலுக்கு பதில் சொல்லாமல் மௌனமாகி விட்டான் கல்யாணசுந்தரம்.. இப்படி எல்லாவற்றிற்கும் பேசாமல் இருப்பதற்கு அப்பாவை எதிர்த்து வெளியே போயிருக்கும் தன் கணவன் பெட்டரென அவளுக்கு தோன்றியது.. அவன் போன வேலை அவளுக்கு ஏற்புடையதாக இல்லைதான்.. ஆனாலும் அதில் இருந்த நியாயம் அவளுக்கு ஏற்கக் கூடியதாக இருந்தது..
எத்தனையோ வகைகளில் விஞ்ஞானம் வளர்ந்து விட்ட இந்தக் காலத்திலும், அந்த விஞ்ஞானத்தால் செய்ய முடியாத ஒரு விசயம் இறந்த உயிரை திரும்பக் கொண்டு வருவது.. அப்படிப்பட்ட மனித உயர் எல்லாவற்றையும் விட உயர்ந்தது அல்லவா..? அதனை காக்க போயிருக்கும் தன் கணவனின் செய்கையை மைதிலி பெருமிதமாகவே உணர்ந்தாள்..
ஹாலில் அருணாச்சலம் உறுமியபடி இருந்தார்.. 
“உன் மகன் வரட்டும்டி.. அவனுக்கு இருக்கு.. இனி அவன் இந்த வீட்டு வாசலில் காலடி எடுத்து வைக்க முடியாது.. என் சொத்துக்கள் எதற்குள்ளும் நுழைய முடியாது..” 
யாருக்கு வேண்டும் உங்கள் சொத்துக்கள்.. மைதிலி இகழ்ச்சியாக மனதிற்குள் நினைத்துக் கொண்டாள்.. மனிதர்களை விட பெரியதா உங்கள் சொத்துக்கள்..? அவற்றை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்.. எங்களை நிம்மதியாக வாழவிடுங்கள்.. அருணாச்சலம் பரசுராமனை வீட்டை விட்டு வெளியேற்றும் பொழுது தானும் தன் கணவனுடன் வெளியேறி விடுவதில் உறுதியாக இருந்தாள் அவள்..
மகாராணியும், கல்யாணசுந்தரமும் தந்தையின் கோபத்தில் கவலையோடு இருக்க, நேரம் மெல்ல மெல்ல நகர்ந்தது.. பரசுராமன் தன் பைக்கில் வந்து இறங்கினான்.. அருணாச்சலம் வேகமாக அவனை நோக்கி பாய, கணவனை அடித்து விடுவாரா.. பதட்டத்துடன் 
மைதிலியும் இடையில் வர, அருணாச்சலம் ஸ்தம்பித்து நின்றார்..
எதிர் வீட்டு வாசலில் ஆம்புலன்ஸ் ஒன்று வந்து நின்றது.. அதனுள்ளிருந்து அழுகுரல்கள் கேட்டன..
“மாமா நம்மை விட்டுப் போயிட்டாருப்பா..” பரசுராமனின் குரல் கரகரத்தது..
மகாராணி ஐயோ எனக் கதறினாள்.. கல்யாண சுந்தரம் அதிர்ந்து நிற்க மைதிலிக்கு தரை சுழல்வது போன்ற பாவனை உண்டானது.. அருணாச்சலம் ஓங்கிய கைகளுடன் அப்படியே வாசல்படியில் உட்கார்ந்து விட்டார்..
ஆம்புலன்சினுள்ளிருந்து சுந்தரேசனின் உடல் இறக்கப்பட்டு எதிர் வீட்டினுள் கொண்டு போகப்பட, ஈஸ்வரியும், வந்தனாவும் அழுதபடி பின்னால் போனார்கள்..
மகாராணியும், கல்யாணசுந்தரமும் அருணாச்சலத்தின் உத்தரவை எதிர்பார்த்து அழுதபடி நின்றிருக்க, அவர் இமை சிமிட்டாமல் அப்படியே அமர்ந்திருந்தார்..
“அப்பா ஒண்ணும் சொல்லமாட்டார்.. நீங்க போய் அத்தையை பாருங்கம்மா.. நீயும் போடா..”
தாயையும் தம்பியையும் எதிர் வீட்டுப் பக்கம் தள்ளி அனுப்பினான் பரசுராமன்.. அவர்கள் பின்னேயே தானும் போகப் போன மைதிலியின் கால்கள் அதிர்வில் நடுங்கி தடுமாற, அவள் தோள் தொட்டு ஆசுவாசப் படுத்தினான் பரசுராமன்..
“மெல்ல போம்மா.. போய் வந்தனாவிற்கு ஆறுதல் சொல்லு..” மைதிலி தலையசைத்து விட்டு கால்கள் நடுங்க எதிர்வீட்டிற்குள் நுழைந்தாள்..
தலையில் அடித்து கதறிக் கொண்டிருந்த வந்தனாவை பார்த்ததும் மைதிலியின் கண்கள் கண்ணீரை சுரக்க, அவள் கைகளை தடுத்து அவளை இழுத்து மடி மீது போட்டுக் கொண்டாள்.. தோள் தடவி, தலை வருடி வந்தனாவை சமாதானப்படுத்த தொடங்கினாள்..
சுந்தரேசனுக்கு கிட்னி பெயிலியராம்.. புது கிட்னிக்கு பதிவு செய்து வைத்து விட்டு, அதற்கான சிகிச்சையில் இருந்த போதுதான் இந்த எதிர்பாராத மரணம்..
தங்கை கணவனுக்கு ஏதோ உடல் நலம் சரியில்லை என்று அருணாச்சலத்தின் காதுகளுக்கு லேசுபாசாக வரத்தான் செய்தது.. அதனை அவர் விபரமாகக் கேட்டுக் கொள்ளவில்லை.. முதலில் சுந்தரேசனின் உடல் நலம் இந்த அளவு உயிரைப் பறிக்கும் அளவு இருக்குமென அவர் நினைக்கவில்லை.. அடுத்ததாக அவரது உடல்நலம் பற்றிய தனது விசாரணை தன்னையே பலவீனப்படுத்தி தன் பாசத்தை வெளிக் கொண்டு வந்து விடுமோ என்ற பயம்..




அதனால் தங்கை குடும்பத்தை பற்றிய செய்திகளுக்கு தன் காதுகளை மூடியபடியே வலம் வந்தார்.. அது குறித்து பேச வருபவர்களையும் அவர் திட்டவும், ஊருக்குள் யாருக்கும் அவரிடம் அது பற்றிப் பேசும் தைரியமில்லாது போயிற்று..
அங்கே சுந்தரேசனும் தன் பங்குக்கு வீம்பு பிடித்தவராக இருந்தார்.. தனது உடல் நிலையை காரணம் காட்டி மச்சானுடன் இணைவதை கௌரவக் குறைச்சலாக கருதினார்.. எனவே என் உடம்பை பற்றி உன் அண்ணனிடம் எதுவும் பேசக் கூடாது என்னும் கட்டளையை மனைவிக்கு விதித்திருந்தார்.. ஈஸ்வரியும் கணவனுக்கு கீழ்படிய சுந்தரேசன் உடல்நிலை யாருக்கும் தெரியாமலேயே போய் விட்டது..
சுற்றி நின்று அழுதபடி இருந்த பிற சொந்தங்கள், அக்கம் பக்கத்தினர், ஈஸ்வரி இவர்களின் அழுகை புலம்பல்கள் மூலம் இந்த விபரங்களை மைதிலி தெரிந்து கொண்டாள்.. இரண்டு ஆண்களின் வெட்டி கௌரவம் ஒரு உயிரை அநியாயமாகப் பறித்து விட்டதே.. நினைக்க நினைக்க நெஞ்சு தாளவில்லை அவளுக்கு.. சை என்ன மனிதர் இவர்.. தன் மாமனாரைப் பற்றி அவள் கசப்புடன் நினைத்த போது..
வாசல் கதவு படபடவென ஆட அதனை பிடித்தபடி தடுமாறி நின்றிருந்தார் அருணாச்சலம்.. அவர் உடல் முழுவதும் தடதடவென ஆடிக் கொண்டிருந்தது..
“ஈஸ்வரி..” குரல் தழுதழுக்க அழைக்க,
“அண்ணா..” எனக் கதறியபடி ஈஸ்வரி அவரிடம் தஞ்சம் புகுந்தாள்..
பிரிந்திருந்த அண்ணனையும், தங்கையையும் இணைக்க கடவுள் இப்படி ஒரு கொடூரமான சூழலை உண்டாக்கி இருக்க வேண்டாமென மைதிலிக்கு தோன்றியது..

What’s your Reaction?
+1
6
+1
2
+1
0
+1
0
+1
0
+1
0
+1
2
Subscribe
Notify of
guest

1 Comment
Inline Feedbacks
View all comments
Sarojini
Sarojini
4 years ago

சற்றே கனமான பதிவு, வந்தனாவின் தந்தையின் நிலை எதிர்பாராத திருப்பம்

1
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!