mayiladum solayile Serial Stories

Mayilaadum Sollaiyilae – 38 ( Final )

                                               38

டமடமவென தொடர்ந்து கேட்டிக் கொண்டிருந்த இடிச் சத்தத்தில் மாதவிக்கு விழிப்பு வந்துவிட்டது .எழுந்து பார்த்தாள் .எல்லோரும் தூங்கிக் கொண்டிருக்க , பார்த்தசாரதியையும் , மணிமேகலையையும் காணவில்லை என்றதும் அவளுக்கு திக்கென்றது .

இருவரையும. எங்கே ….? பதட்டத்துடன் தேடியபடி பின்னால் வர , அந்த குன்று உயர்ந்து நின்று அவளை கையை நீட்டி அழைப்பது போலிருந்த்து .இருவரும் முட்டாளதனமாக மேலே ஏறி இருக்கிறார்களா …? நினைத்த மறுநொடியே மாதவி குன்றேற் ஆரம்பித்தாள் .

” தெய்வா …வேண்டாம் .நீ இதுவரை என் குடும்பத்தற்கு செய்த சோதனைகள் போதும. .இப்போது என் குழந்தைகளை விட்டு விடு …. வாய் விட்டு வேண்டியபடி ஏறினாள் .

—————–

” சுனந்தா அம்மா ஆசையாக தேடி ஆயிரம் பொருத்தம் பார்த்து எனக்கு மணம் முடித்து வைத்த பெண் .எங்களது முதலிரவின் போது என்னை பிடிக்கவில்லையென்றாள் .காரணம் …நிறைய படித்த அவளது படிப்பு .நாகரீக சென்னை வாழ்வு , எப்போதும் கூட்டமாக அதிக உறுப்பினர்களுடன்  இருக்கும் எங்கள் வீடு ….இப்படி சொன்னாள் ….”

” ஓ …அந்த பாதிப்பினால்தான் அவளது நிலைமையில் இருக்கும் என்னையும் அதே போன்றே நினைத்தீர்களா …? “

தலையசைத்த பார்த்தசாரதி ” இவை எல்லாவற்றையும் விட அவளது பிடித்தமின்மையின் மிக முக்கிய காரணம் ….அவளது காதல் ….”

மணிமேகலையின் உடல் அதிர்ந்து குலுங்கியது .

” என்ன சொல்கிறீர்கள் …? “

” அவளது மனம் போன்ற தகுதிகளுடன்  இருந்த ஒருவனை அவள் காதலித்திருக்கிறாள் .சாதியை காரணம் சொல்லி அவளை எனக்கு திருமணம் செய்து விட்டனர் அவள் பெற்றோர் .இதையெல்லாம் எங்களது முதலிரவின் போது சொல்லி அழுதுவளை நான் எப்படி தேற்ற …? அதன் பின் அவளை மனைவியாக மனதோரமாவது நினைக்க முடியுமா …? ஏனோ அவள் மீதும் எனக்கு பரிதாபமே வந்த்து .அதனால் அவளது காதலை சேர்த்து வைப்பதாக வாக்களித்தேன் ….”

” அவளது காதலனை சந்தித்து பேசினோம் .அவனுக்கு கொஞ்ச நாட்களில் வெளிநாட்டு வேலை கிடைத்து விடுமென்றும் …அது வரை அவளை எனது பாதுகாப்பில் வைத்திருக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டான் . சுனந்தாவின் பெற்றோர் அவளது காதலை ஏற்றுக் கொள்ள மாட்டார்களென்பதால் …நானே அவளை என் பாதுகாப்பில் வைத்திருக்க வேண்டியதாயிற்று .கடைசியாக அவளை அவள் காதலனுடன் வெளிநாடு அனுப்பும் நாளன்று அவளது பெற்றோரையும் அழைத்து , அவர்களிடம் சுனந்தாவை விளக்கி …சமாதானப்படுத்தி அவர்கள் சம்மத்த்துடனேயே அவர்களை அனுப்பி வைத்தேன் .”

” சுனந்தாவின் அப்பாவிற்கு என் மீது மதிப்பு அதிகமாகிக் கொண்டே போனது .இங்கே ஊருக்குள் எனது மதிப்பு கெடாமல் இருப்பதற்காகவே …தன் மகள் செத்து போனதாக இருக்கட்டும் என்று சொல்லி … ஒரு பொய்யான  விபத்தை உண்டாக்கி ….ஏதோ ஒரு  பிணத்தை ஏற்பாடு செய்து …இங்கே ஊருக்காக கொண்டு வந்து …ப்ச் …எல்லாம் அவர் ஏற்பாடு .கடைசியாக அவர் ஊருக்கு போகும் போது நிஜமாகவே என் காலை தொட்டு கும்பிட்டு விட்டு போனார் ….”

மணிமேகலையடமிருந்து சத்தமே வராது போக பார்த்தசாரதி அவளை திரும்பி பார்த்தான் ்விழிகள் அகன்றிருக்க அவனை பிரமிப்புடன் பார்த்தபடி இருந்தாள் அவள் .அவன் பார்வையை சந்தித்ததும் பட்டென அவன் கழுத்தைக் கட்டிக் கொண்டு அவன் முகம் முழுவதும் முத்தமிட தொடங்கினாள் .

” நீ …ஏன்டா …இப்படி …இவ்வளவு நல்லவனாக இருக்கிறாய் …? ” அவன் உச்சந்தலையை பிடித்து ஆட்டினாள் .

” ஏன்டி ..நல.லவனுக்கு கொடுக்கிற மரியாதை இதுவா …இப்படியா …என்னை பாராட்டுவாய் …? “

” நான் அப்படித்தான் …ராஸ்கல் .இதையெல்லாம் என்னிடம் முதலிலேயே சொல்ல மாட்டாயா …? “

” நான் உன்னிடமிருந்து தள்ளி நிற்க சுனந்தாவின் பெயரை உபயோகித்துக் கொண்டிருந்தேனே .எப்படி  உன்னிடம் சொல்வேன் …? “

” ஆனால் நான்தான் கொஞ்ச நாட்களாக உங்களை …உங்கள் காதலை புரிந்து கொண்டேனே ….”




” ம் …நானும் .உன் காதலை  புரிந்து கொண்டேன் . என் துண்டை சால்வையாக போட்டுக் கொண்டு சுற்றிக் கொண்மிருந்தாயே …அன்றிலிருந்தே .ஆனாலும் நம் வீட்டு  நன்மைக்காக வந்த பெண்ணை நாமே …இப்படி காதலென்ற பெயரில் நெருங்குவது சரியா என்ற குழப்பம் என் மனதில் இருந்து கொண்டே இருந்த்து ….”

” அப்போது சரி …இப்போது எல்லாம் கூடி வரும் போது ஏன் என்னை வெளியே போக சொன்னீர்கள் …? “

” இப்போது யமுனாவிற்கு வந்த வரனின் நிலையை கேட்ட பிறகு  எனக்கு ஒரு பயம் வந்துவிட்டிருந்த்து மேகா . ஒரு வேளை அம்மாவின் பயம்  உண்மைதானோ …நம் குடும்பத்திற்கு சாபம் இருக்கிறதோ …என்ற பயம் “

” பார்த்தா …நீங்களுமா …இப்படி …? “

”  அன்பும் …காதலும் மிக மோசமானவைகள் மேகா . அவை மிக உறுதியான மனதை கூட உடைத்து கலங்க வைத்துவிடும் .என் அம்மாவின் உறுதியான மனதை அவர்கள் பிள்ளைகள் மேல் வைத்திருந்த அனபு கலங்கடித்தது .எனது இரும்பு இதயத்தையும் உன் மீது வைத்திருந்த காதல் உருக வைத்துவிட்டது .எங்கள் குடும்ப சாபம் எங்களோடு போகட்டும் .உனக்கு வேண்டாமென்றுதான் உன்னை இங்கிருந்து போக சொன்னேன் ….”

மணிமேகலையால் பார்த்தசாரதியை திட்ட முடியவில்லை .அவள் மீதான காதல் அல்லவா அவனை இப்படியெல்லாம் கூட நினைக்க வைத்திருக்கறது .அவன் மார.பில் சாய்ந்து கொண்டாள் .

” நீங்கள் சரி .அத்தையும் ஏன் என்னை வீட்டை விட்டு போக சொன்னார்கள் …? “

” அதே காரணம்தான் மணி …” பதில் பார்த்தனிடமிருந்து இல்லை .வெளியிலிருந்து வந்தது .

இருவரும் வேகமாக பாறை இடுக்கிலிருந்து வெளியே வந்தனர் . வெளியே மழை நின்றிருந்த்து.   அங்கே மாதவி நின்றிருந்தாள் .ஏறி வந்த பெருமூச்சுடன் தளர்ந்த உடலோடு நின்றிருந்தாள் .

” அம்மா …”

” அத்தை …”

கை நீட்டியபடி வந்த இருவரையும் இரு கைகளாலும் அணைத்துக் கொண்டாள் .

” சுனந்தா விசயம் என்னிடம் சொல்லவே இல்லையே பார்த்தா …”

” அது உங்களுக்கு மன சங்கடத்தை தருமென்று நினைத்தே சொல்லவில்லை அம்மா ….”

” எத்தனையோ சங்கடத்தை தாங்கிவிட்டேன் .இதையும் தாங்க மாட்டேனா …? உனக்கிள்ளேயே வைத்து மறுகிக் கொண்டிருந்திருக்கிறாயேடா …” மகனின் தோள்களை பரிவாக வருடி அணைத்துக் கொண்டு தேம்பினாள் .

” போதும் …அம்மாவும் மகனும் ரொம்பவும் கொஞ்சாதீர்கள் …எனக்கு பதில் சொல்லுங்கள் .எதற்காக என்னை வீட்டை விட்டு போக சொன்னீர்கள் …? ” இடுப்பில் கை வைத்து அதட்டிய மணிமேகலையை இருவரும் கை நீட்டி தங்களுருகே இழுத்துக் கொண்டனர் .

” பார்த்தன் சொன்ன அதே காரணம்தான் மணி .நீ சொன்ன சுமைதாங்கி கல் பரிகாரம் மிகவும் அருமையானதுதான் .சரியானதும் கூட .அதனால் என் மனபாரம் இறங்கியதும் உண்மைதான் .ஆனால் இன்று வந்த இந்த செய்தி …என் குடும்ப சாபம் தீரவே தீராது என்ற எண்ணத்தை எனக்கு கொடுத்தது .அதனால் நான் உன்னை எங்கள் குடும்பத்தை விட்டு தள்ளி நிறுத்த நினைத்தேன் .அதனால்தான் …”

” ஓ …நீங்கள் எல்லோரும் ஒரே குடும்பம்.நான் தனி …அப்படித்தானே …இது போல் நீங்கள் கங்காவையோ …யமுனாவையோ …காவேரியையோ சொல்ஙீர்களா …? நான் இந்த வீட்டில் காலடி வைத்த நாள் முதல் நான் வேறு …இந்த வீடு வேறு என்று நினைத்ததில்லை .ஆனால் நீங்கள் என்னை வேறுபடுத்தி தானே நினைத்திருக்கிறீர்கள் .அதனால்தானே அப்படி சொன்னீர்கள் …? “

மணிமேகலையன் கேளவியிலிருந்த உண்மையை இருவரும் திகைப்புடன் உணர்ந்தனர் .தங்கள் தவறை உணர்ந்தனர் .இருவருமாக அவளை சமாதானம் செய்ய துவங்கினர் .

அது அவ்வளவு எளிதாக இல்லை .தோப்புக்கரணம் போடாத குறையாக இருவருமாக அவளை கெஞ்சி …கொஞ்சி , சமாதானப்படுத்தி முடித்த போது ….வானம் வெளுக்க ஆரம்பித்திருந்த்து .

முதலில் ஒரு புள்ளியாய் ஆரம்பித்த வான் ஒளி பிறகு வான் முழுவதும் பரவி …அங்கிருந்து அந்த குன்றிற்கும் இறங்கியது .இரவு முழுவதும் பெய்த கனமழையில் அந்த குன்றின் மேல் சேர்ந்திருந்த கசடுகள் , தூசுகள் அடித்து செல்லப்பட்டு ….குன்று புத்துணர்வோடு …புது ஒளி மின்ன விளங்கியது .

மூவருமாக கைகளை கோர்த்துக் கொண்டு கீழே இறங்க தொடங்கினர் .அவர்கள் மூவரின் முகமும் புத்தொளி சும்ந்து மின்னியபடி இருந்த்து .

அடிவாரத்தை அடைந்த போது , கங்கா அவர்களை நோக்கி ஓடி வந்தாள் .

” அம்மா …நீங்கெல்லாம் எங்கே போயிட்டீங்க …? போ …போன் வந்த்து .யமுனாவை பெண் பார்க்க வந்தவர்களுக்கு பெரிய விபத்து எதுவும் இல்லையாம் .சும்மா கார் பள்ளத்தில் இறங்கி விட்டதாம் .டிரைவருக்கு மட்டும்தான் லேசான சிராய்ப்பாம் .கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு நாளை வர்றோம்னு அவுங்க மேரேஜ் புரோக்கரிடம் சொல்லியிருக்காங்க .அவர் ஏதோ தப்பாக புரிந்து கொண்டு நம்மிடம் பெரிதாக சொல்லி விட்டார் போல …திரும்ப சரியான தகவல் சொல்ல நம்மை தொடர்பு கொள்ள அவரால் முடியவில்லை .போன் கிடைக்கவில்லை  நேரில் வருவதென்றாலும் மழையால் முடியவில்லை ..இப்போதுதான் போன் சரியாகி அவர் பேசினார் …இன்று சாயந்தரம் எல்லோரும் வருகிறார்களாம் ….”

மணிமேகலை கை தட்டி குதிக்க , மாதவி அழவே செய்துவிட்டாள் .பார்த்தசாரதி தனது போனில் அவர்களை தொடர்பு கொண்டு பேசி வந்த தகவலை சந்தோசமாக உறுதி செய்தான் .

” மலை சரிவில் உருண்டிருக்க வேண்டிய காராம் . நம் யமுனாவின் ராசியால்தான் அந்த பள்ளத்தோடு நின்று விட்டது என்று சொல்கிறார்கள் அவர்கள் …” பார்த்தசாரதியின் பார்வை வாஞ்சையோடு அங்கு வந்த தங்கையை பார்த்தது .

யமுனா இந்த செய்தியை நம்ப முடியாமல் பார்க்க , ” சகுனங்கள் அவரவர் எடுத்துக் கொள்வதில்தான் இருக்கிறது யமுனா .இந்த பெண்ணின் ராசியால்தான் விபத்து நடக்க பார்த்தது , என்பதை விட இவள் ராசியால்தான் நடக்க இருந்த விபத்து நின்றுவிட்டது எனபதும் ஒரு வகைதான் .உனக்கு ஏற்பட போகும் குடும்பத்தினர் இரண்டாவது வகையை சேர்ந்தவர்கள் .அவர்கள் காலம் முழுவதும் உன்னை நோகடிக்க மாட்டார்கள் .பக்குவமாக பேசி தாங்குவார்கள் ….” மணிமேகலை மயிலிறகு தடவலாய் யமுனாவிற்கு ஏற்பட இருக்கும் நல் வாழ்வை புரிய வைக்க …அவள் விம்மலுடன் மணிமேகலையின் தோள் சாய்ந்தாள் .

” உங்களுக்கு இந்த பயம் போய்விட்டதுதானே அத்தை …? ” மணிமேகலை குன்றை காட்டி கேட் க…

மாதவி அந்த சுமைதாங்கி கல்லை பார்த்தாள் .

” இந்த கல்லை நீ வைத்த நேரம் .தெய்வாவின் உக்கிரம் குறைந்து விட்டது .அவள் நம் குடும்பத்தின் மீது கருணை வைத்து விட்டாள் .இனி நமக்கு கவலையில்லை .தெய்வமாய் இருந்து அவள் நம்மை தாங்குவாள் …”

” கை …காலெல்லாம் காயப்படுத்தி குன்று ஏறி ….தெய்வான்னு ஒரு கேரெக்டரே கிடையாதுன்னு நிரூபித்தது நானு .உங்கம்மா அந்த கல்லை கொண்டாடிட்டு இருக்காங்க பாருங்களேன் …” மணிமேகலை பார்த்தசாரதியிடம் புலம்பினாள் .

” விடு மேகா …அவர்கள் நம்பிக்கை அவர்களுக்கு …”

—————–

அன்று மாலை யமுனாவை பெண் பார்க்க வந்தவர்கள் அப்போதே அவள் தலையில் பூ வைத்து உறுதி செய்து போனார்கள் .

அடுத்த வாரம் பரிகார திருமணமென இலஞ்சி முருகன் சந்நிதியில் பார்த்தசாரதி – மணிமேகலை உண்.மையான திருமணம் அவளது பெற்றோர்களுடன் நடந்த்து .

அடுத்த மாதம் அதே கோவிலில் வைத்து கவுசிக் – கங்கா திருமணம் நடக்க பெற்றோர் ஸ்தானத்திலிருந்து தாரை வார்த்துக் கொடுத்தனர் பார்த்தசாரதியும் ,மணிமேகலையும் .இரண்டாவது நாளே மணமக்கள் வெளிநாடு கிளம்பி சென்றனர் .

மூன்றாவது மாதத்தில் ஊரை வளைத்து பந்தல் போட்டு மிக விசேசமாக யமுனா – சந்தீப் திருமணம் அனைவரும் வியந்து பார்க்க நடந்த்து .

மாதவி குடும்ப சாபம் நீங்கிவிட்டது .அவளது குடும்பம் நன்றாக வாழ ஆரம்பித்து விட்டது …என ஊர் முழுவதும் பேச ஆரம்பிக்க மாதவி மனம் முழுக்க சந்தோசத்துடன் ஊரை வலம் வந்தாள் .

———+——




” மேகா செல்லம் இன்னும் சரியாக விடியவில்லையே .  ஏன்டா அதற்குள் எழுந்து கொண்டாய் …? வாயேன் இன்னும் கொஞ்ச நேரம் தூங்கலாம் …” பின்னிருந்து அணைத்து இழுத்த பார்த்தசாரதியின் கரங்களில் மோகம் பொங்கி வடிந்தபடி இருந்த்து .

மணிமேகலை அசையாமல் இருக்க அவள் பார்வை போன பக்கம் பார்த்தான் .அங்கே அந்த குன்று இருந்த்து .

அது முன்பு போல் காய்ந்து போய் கரடு போல் இருக்கவில்லை .தொடர்ந்து பெய்த மழையில் நிறைய செடிகள் , மரங்கள் என முளைத்து பசுங்குன்றாய்  மிக அழகாக மனதை கொள்ளை கொள்ளும் அழகோடு விளங்கியது .

” இந்த குன்று இப்போது  மிகவும் அழகாகி விட்டதில்லையா பார்த்தா ….? “

இன்னமும் குன்று மீதே பார்வையாக இருந்த மனைவியை முறைத்தவன்….

” ஏய் ..எப்போதும் என்னடி அங்கேயே பார்வை .இங்கே என்னை பாருடி …” மனைவியை தனக்கு வாகாக திருப்பிய போது …அவள் கத்தினாள் .

” ஐ …பார்த்தா …அங்கே பாருங்கள் …” விரல் சுட்டி கத்தினாள் .எதை காட்டி கத்தினாளென அவனுக்கு சுத்தமாக புரியவில்லை .அவன் விழித்துக் கொண்டிருந்த போதே அறைக்கதவை தறந்து வேகமாக கீழே இறங்கினாள் .

எதற்கு இப்படி ஓடுகறாள்…கொஞ்சம் பத்ட்டத்தோடு பார்த்தசாரதியும் கீழே இறங்கி போய் பார்த்த போது வீட்டின் பின்புறம் நின்றபடி மாதவியும் , மணிமேகலையும் கை கோர்த்து குதூகலித்து கொண்டிருந்தனர் .

” என்னம்மா …என்ன விசயம் …? “

” மயில் பார்த்தா …மயில் …திரும்ப வந்துவிட்டது …” மாதவி குதூகலிக்க மணிமேகலை குதித்தாள் .

” தெய்வா சாபம் கொடுப்பதற்கு முன்பு இந்த குன்று முழுவதும் மயில்கள் தான் இருக்கும் .அந்த மயில்களை பார்க்க , அதன் இறகுகளை சேமிக்கத்தான் நானும் தெய்வாவும் இதன் மேல் ஏறுவோம் .மயிலாடும் சோலை என்று இதற்கு பெயரே வைத்திருந்தோம் .பிறகு தெய்வா சாபமிட்ட பிறகு இந்த குன்று வறண்டு , மயில்கள் …மற்ற பறவைகள் எல்லாமே போய்விட்டன .இப்போது திரும்பவும் வந்து விட்டன .அப்போ அந்த சாபம் நீங்கி விட்டதாகத்தானே அர்த்தம் .இனி நம் குடும்பத்திற்கு எந்த ஆபத்தும் இல்லை …” உற்சாகமாக பேசிய தாயோடு சேர்ந்து குதூகலித்த மனைவியை ஆச்சரியமாக பார்த்தான் .

அம்மாவிற்குத்தான் நம்பிக்கை …இவளுக்கு என்ன …?

” அத்தையின் மனநிம்மதி மேல் அக்கறை பார்த்தா ….” பார்த்தசாரதியும் , மணிமேகலையும் சாயங்கால நேரம் அந்த குன்றின் மீது ஏறிக் கொண்டிருந்தனர் .

” மயில்கள் , பறவைகள் வருவதற்காக அவைகள் விரும்பும் சிறு தானியங்களை  பயிரிட்டு , புழு , பூச்சிகளை இங்கு இருக்க என தகுந்த  ஏற்பாடு செய்தது நாம்தானே .இப்போது தானே வந்த்து போல் இப்படி குதிக்கிறாயே ….”

” நமது அந்த உழைப்பிற்காக …அதில் கிடைத்த பலனுக்காக மகிழ வேண்டாமா பார்த்தா …? அந்த சந்தோசம் தான் ….”

” எப்படியோ …திரும்பவும் இந்த குன்று சோலைவனம் போல் ஆகிவிட்டது ….” சடசடவென சிறகடித்தபடி அங்கு வந்தமர்ந்த ஒரு மயிலை பார்த்தபடி சொன்னான் பார்த்தசாரதி .

” இதையெல்லாம் நாம்தான் செய்தோமென்று சொன்னாலும் , அதற்குரிய காலம் …அதாவது தனது சாபத்தை விலக்கிக் கொள்ஙோமென தெய்வா நினைத்த காலம் வந்த பிறகுதானே உங்களுக்கு இதை செய்ய தோன்றியது …என அத்தை திரும்ப கேட்பார்கள் .அதுவும் சரிதானே என்றே நமக்கு அந்நேரம தோணும் .இவையெல்லாம் மனித மனங்களின் உள்  நுண்ணுணர்வுகள் பார்த்தா .எப்போதும் இவற்றை சீண்டக் கூடாது .அவற்றின் போக்கிலேயே போய் சரி செய்ய வேண்டும் .அதனை நாம் வெற்றிகரமாக செய்து விட்டோம் .இனி நிச்சயம் நம் வீடும் சோலைவனம் தான் ….”

” ஆமாம் …இந்த மயில் ஆடும் சோலை …” கொஞ்சலாய் சொல்லியபடி மனைவியை அணைத்துக் கொண்டான் பார்த்தசாரதி .

கணவனின் அணைப்பை அனுபவித்தபடி கண் மூடி மனதிற்குள் மயிலின் ஆட்டத்தை உணர்ந்து உடல் சிலிர்த்தாள் மணிமேகலை .

                                                – நிறைவு –

What’s your Reaction?
+1
7
+1
5
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!