Serial Stories vanavil devathai Vanavil Dhevathai

Vanavil Dhevathai – 21

21

என்னதான் நாம் சொன்னாலும் இந்த பொண்ணுங்களுக்கு தெரியமாட்டேங்குது மேடம் ” குற்றச்சாட்டுடன் வந்து நின்றாள் கமலா .அங்கு வேலை செய்யும் பெண்களில் ஓரளவு படித்தவள்  இவள்தான் .மேல்நிலை படிப்பு முடித்திருந்தாள் .

 

” என்ன கமலா என்ன ஆச்சு ?”

 

, வெட்ட வெளியில் போகக்கூடாதுன்னுதானேம்மா இவுங்களுக்கு பாத்ரூம் கட்டி கொடுத்தீங்க . இதுங்க இன்னமும் மரத்திற்கு பின்னாலதான் போய்கிட்டிருக்குங்க .அப்புறம் அந்த நாப்கின் கூட …நானும் எவ்வளவோ முறையெல்லாம் சொல்லிக்கொடுத்து விட்டேன் .யாரும் காதிலேயே வாங்க மாட்டேன்கிறாங்க மேடம் .அதெல்லாம் எங்களுக்கு தோது வராதுன்னு நிறைய பேர் வாங்கிறதேயில்லை .வாங்கிய கொஞ்சம் பேரும் அதை சொன்ன இடத்துல போடாமல் ஆங்காங்கே போட்டு வைக்கிறாங்க .நான் சொன்னா சண்டைக்கு வர்றாங்க .நீங்க வாங்கி வச்ச நாப்கின் பாக்கெட்டெல்லாம் அப்படியே இருக்கு .என்ன மேடம் செய்ய “…

 

” சரி நீ போ நான் பார்த்துக்கொள்கிறேன்”,என்ற  அவளை அனுப்பிய சபர்மதிக்கு ஆயாசமாக இருந்தது .படிப்பறிவற்ற இந்த பெண்களுக்காகத்தான் இந்த எல்லா வசதிகளையும் அவள் யோசித்து , யோசித்து செய்தாள் .அதனை அவர்களே பயன்படுத்தி கொள்ளவில்லையென்றால் என்ன செய்ய …

 

இவர்கள் அறியாமையை போக்க கமலா ஒருத்தியால் முடியாது .இன்னும் சில பெண்கள் தேவை .என்ன செய்ய …? தீவிரமாக சிந்தித்தபடி இருந்தாள் .

 

தீபக்குமார் உள்ளே வந்தான் ” மேடம் அந்த முத்தையா வந்திருக்கிறார் .பார்த்து கவனமாக பேசுங்க ” எச்சரித்து விட்டு ஒதுங்கி நின்றான் .

 

முத்தையா அந்த வட்டாரத்தில் கொஞ்சம் அரசியல் செல்வாக்குள்ள ஆள் .அவர்களின் வாழைத்தோப்பை ஐந்து வருடங்களாக குத்தகைக்கு எடுத்து நடத்தி வருகிறான் .இந்த பகுதியில் விளையும் சிறு மலைப்பழங்களுக்கு இந்தியா முழுவதும் கிராக்கி உண்டு .அதிலும் சத்யேந்திரனின் தோப்பு பழங்கள் அதிக இனிப்புத்தன்மை கொண்டிருந்தன .எனவே அவற்றிற்கு கூடுதல் கிராக்கி என்றும் ,அதனை முத்தையா வெளிநாட்டிறகெல்லாம் ஏற்றுமதி செய்வதையும் அறிந்த சபர்மதி தானே அந்த தோப்புகளை பராமரிக்க விரும்பினாள் .

 




” வணக்கம்மா …”

 

வெள்ளை வேட்டி சட்டையில் பெரிய மனிதன் தோற்றம் காட்டினான் .அந்த ஆள் வாசலில் நுழையும்போதே ஜவ்வாது வாசம் தூக்கியது .பெரிய மைனர்னு நினைப்பு …மனதிற்குள்ளாக அவனை வைது கொண்டிருந்தாள் சபர்மதி .

 

அவள் வணக்கம் சொல்லவுமில்லை ,உட்கார சொல்லவுமில்லை .அதற்காக அவன் கவலை கொள்ளவும் இல்லை .தானே நாற்காலியை இழுத்து அமர்ந்தவன் , “இந்த அறையைக்கூட நல்லா மாற்றியிருக்கிறாயே …நல்ல ரசனைம்மா உனக்கு .அதுசரி எத்தனை நாடகத்தில் வேசம் கட்டினவ நீ ? இந்த அலங்காரமெல்லாம் உனக்கு தெரியாமலா இருக்கும் …?”

 

சபர்மதிக்கு அவளுடைய பழைய வாழ்க்கையை பேசினால் பிடிக்காது என தெரிந்தே ,அந்த பேச்சை இழுத்தான் .

 

” எப்போ தோப்பை ஒப்படைக்க போறீங்க சார் ?இன்றைக்கு செவ்வாய் கிழமை .அடுத்த புதன் நல்ல நாள்னு எங்க ஜோசியர் எனக்கு குறித்து கொடுத்திருக்கிறார் நான் ஆட்களெல்லாம் ஏற்பாடு பண்ணிவிட்டேன்.நீங்கள் வியாழக்கிழமை எனக்கு ஒதுக்கி கொடுத்துவிட்டால் நன்றாயிருக்கும் .வேறேதும் விபரம் வேண்டுமென்றால் தீபக்கிடம் பேசிக்கொள்ளுங்கள் .எனக்கு கொஞ்சம் வேலையிருக்கிறது .” வேகமாக எழுந்தவள் ” தீபக் சாருக்கு எதுவும் விபரம் வேணும்னா சொல்லிட்டு ஐந்து நிமிடத்தில் வந்து காரை எடுங்கள் ” வெளியே நடந்தாள் .

 

” என்ன விபரம் தேவை சார் ” பணிவாக நின்றான் தீபக்குமார் .

 

” யோவ் என்ன அவளுக்கு திமிரா ? எப்போது தோப்பை உங்களுக்கு கொடுக்கிறதா சொன்னேன் .ஒரு வார கெடு எனக்கு வைக்கிறாள் .வச்சிப்பார்க்க வக்கில்லாம எனக்கு குத்தகைக்கு விட்டுட்டு , இப்போ திடீர்னு கேட்டால்  என்ன செய்ய ?”

 

” திடீர்னு எங்க சார் கேட்டோம் .மூன்று மாதமாக சொல்கிறோம் .நீங்கள் முதலில் குத்தகைக்கு எடுத்த போது கொடுத்த அதே பணம்தான் இன்னும் கொடுக்கிறீர்கள் .அதுவும் இந்த வருடம் தரவில்லை .ஒப்பந்தம் இரண்டு வருடத்திற்கு முன்பே முடிந்துவிட்டது .அதனால்தான் …”

 

” ஏன்யா என்கிட்டயே கணக்கு கேட்கிற அளவு வந்துட்டீங்களா ?, அந்த பொண்ணுக்குத்தான் என்னை பற்றி தெரியாது .எல்லாம் தெரிந்த நீயும் அவள் கூட சேர்ந்து ஆடுற …”கத்தினான் .

 

” சரி வேறென்ன ..கிளம்புங்க ..அடுத்து நாங்கள் டீ எஸ்டேட் போகனும் .மேடம் காரில் காத்துக்கொண்டிருக்கிறார்கள். “

 

தீபக்குமாரின் அலட்சியம் முத்தையாவை வெறி கொள்ள செய்தது .” பார்த்துக்குறேன்டா உங்களை …” வெளியேறினான் .

 

” இன்னைக்கு அசத்தலா பேசிட்டீங்க மேடம் ” காரில் போகும் போது தீபக்குமார் பாராட்டினான் .

 

” பின்ன என்ன தீபக் , நம்ம இடத்தில விளைச்சல் பண்ணிக்கிட்டு ,உரிய பணமும் கொடுக்காமல் கொள்ளை லாபம் பார்த்துக்கொண்டு இருக்கிறான் .பணிவாகவாது பேசுகிறானா ? அதுவும் இல்லை .இவனிடம் தோப்பு சாவி வாங்குவதை தவிர்த்து வேறு எதுவும் பேசாதீர்கள் .”

 

” சரி மேடம் .இன்று நடந்ததை சொன்னால் பி.சி சார் ரொம்ப சந்தோசப்பட்டு உங்களை பாராட்டுவார் .இன்று போன் பண்ணியவுடன் அதைத்தான் முதலில் சொல்ல போகிறேன் .”

 

பேசத்தான் செய்வான் .பாராட்டத்தான் செய்வான் .இன்று இரவு அவள் போன் கண்டிப்பாக ஒலிக்கும் .ஆனால் அதற்கு முன்பே அதனை அணைத்து வைக்க வேண்டும் .

 

வரவா என கேட்ட கண்ணீரை அதட்டி உள்ளே தள்ளினாள் சபர்மதி .

 

சே .இது என்ன பலவீனம் …இம்மெனும் முன் விழி நிறைந்து விடுகிறதே .முன்பு எவ்வளவோ துயரங்களின் போது கூட வராத கண்ணீர் இப்போது முன்னே , முன்னே வந்து நிற்கிறதே .

இந்த காதல் மனிதர்களை எவ்வளவு கோழைகளாக்கி விடுகிறது .

 

கார் டீ எஸ்டேட்டிற்குள் நுழைந்தது .இறங்கியவுடன் கண்ணில் பட்டவள்

செல்லியம்மாள் தான் .உடன் ஒரு வயதான பெண்மணி .அம்சவல்லியை பற்றி முன்தினம் அவள் சொன்ன குற்றச்சாட்டு நினைவு வந்தது சபர்மதிக்கு.இன்று என்ன பிரச்சினை தெரியவில்லையே….

 

” அம்மா வணக்கம்மா …இது செண்பகம் .இவளோட மருமக அடிக்கடி உங்கள் பெரியம்மா ஆபிசுக்கு போய் வந்து கொண்டிருக்கிறாள் . கொஞ்ச நாட்களாக மாமியாரை மரியாதை இல்லாமல் பேச ஆரம்பித்து விட்டாள.இவளும் சின்னப்புள்ள போக போக சரியாகிடும்னு நினைத்துக்கொண்டு பொறுமையாகத்தான் இருந்திருக்கிறாள் .இன்று காலை ஒரு சின்ன பிரச்சினையில் மாமியாரை கை நீட்டி அறைந்து விட்டாள் .இந்த செண்பகம் என்னவென்றால் அவமானம் தாங்கவில்லை தற்கொலை பண்ண போறேன்னு நிற்கிறாள் .நான் தடுத்து உங்களிடம் கூட்டி வந்தேன் .என்னம்மா செய்யட்டும் “

 

சபர்மதிக்கோ அதிர்ச்சி .இதென்னதிது இப்படியெல்லாமா தூண்டி விடுவது ….நான்கு உதவாக்கரைகளை சேர்த்து வைத்துக்கொண்டு .. இவர்களை …திடீரென ஒரு யோசனை தோன்றுகிறது சபர்மதிக்கு …

 




“நீங்கள் கவலைப்படாமல் போங்க. இனி இப்படி நடக்காது .நான் பொறுப்பு …” அவர்களை அனுப்பிவிட்டு தனது யோசனைக்கு எப்படி அம்சவல்லியை சம்மதிக்க செய்வது என சிந்தித்தாள் .

 

அம்சவல்லி மகளிர் மன்றம் என்ற பெயரில் அந்த ஊரில் ஒன்று ஆரம்பித்து வைத்திருந்தாள் .அவளைப்போன்றே வீட்டுப்பொறுப்பற்ற சில பெண்களை அதில் உறுப்பினராக்கி கொண்டு , பெண்களுக்கு எதிரான அநீதிகளை தட்டிக்கேட்பதாக பேர் பண்ணிக்கொண்டு , ஒவ்வொரு குடும்பத்திற்குள்ளும் புகுந்து அமைதியை குலைத்துக்கொண்டிருந்தாள்.அவளிடம் மாட்டுவது பெரும்பாலும் இது போன்ற  உழைக்கும் வர்க்க பெண்கள்தான் .ஏனெனில் இச்சிறிய ஊரில் அவர்கள்தான் அதிக எண்ணிக்கையில் இருந்தனர் .

 

மாலை சற்று விரைவாகவே வீடு திரும்பி அம்சவல்லிக்காக காத்திருந்தாள் சபர்மதி .

 

” டாக்டர் ஏதாவது சொன்னாரா சபர்மதி “…

 

அனுசூயாதான் கேட்டாள் .அவளுக்கு இருபத்திநாலு மணி நேரமும் தரமனை பற்றிய நினைப்புதான் .டாக்டர் சொன்னதை இவளிடம் சொன்னால் பாவம் மிகவும் கவலைப்படுவாள் .எதற்கு இவளிடம் சொல்லிக்கொண்டு …என்று எண்ணியபடி …

 

” ஒன்றுமில்லை அனுசூயா அண்ணனிடம்  நல்ல முன்னேற்றம் தெரிகிறதாம் .விரைவில் குணமாகி விடுவாரென கூறினார் “

 

முகம் பூவாக மலர்ந்தது அனுசூயாவிற்கு .” ரொம்ப சந்தோசமாக இருக்கு சபர்மதி .அப்படி நடந்தால் பழனிமலைக்கு நடந்து வந்து மொட்டை போடுவதாக வேண்டியிருக்கிறேன் “துள்ளிக்கொண்டு உள்ளே சென்றாள் அனுசூயா .

 

” இது என்ன அன்பு …என்ன பாசம் …கருகருவென தொடை வரை நீண்ட கருங்கூந்தல் அனுசூயாவிற்கு .அதனை ஆண்டவனுக்கு தருவதாகவா வேண்டியிருக்கிறாள் .எந்த பெண்ணும் இழக்க விரும்பாத சொத்தல்லவா அது…முருகா இந்த பெண்ணின் அன்பை காயப்படுத்தி விடாதே …வேலவனிடம் மனதார வேண்டிக்கொண்டாள் சபர்மதி .

 

வராண்டாவில் அமர்ந்திருந்த சபர்மதியை கண்டும் காணாமல் மாடியேறினாள் அம்சவல்லி .கொஞ்சம் நேரம் அவகாசம் கொடுத்து விட்டு , மாடியேறி சென்றாள் சபர்மதி .

 

” என்ன …”, கடுமையாக ஒலித்தது அம்சவல்லி குரல் .

 

” பெரியம்மா நம்தோப்பிலும் எஸ்டேட்டிலும் வேலை செய்யும் பெண்களுக்காக சில வேலைகள் செய்தேன் .அதனை அவர்கள் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள் .உங்களைப்போல சமூக ஆர்வலர்களால்தான் அவர்களை புரிய வைக்க முடியும் .அதனால் நீங்கள் உங்கள் மன்ற உறுப்பினர்கள் அனைவரும் நாளையிலிருந்து நம் தோப்பு ,எஸ்டேட்டிற்கு வந்து அவர்களுக்கு சொல்லிக்கொடுக்கிறீர்களா ?” மெல்ல கேட்டாள் .

 

” நாங்கள் என்ன வேலை வெட்டி இல்லாதவர்கள்னு நினைத்தாயா …அதெல்லாம் முடியாது போ …”

 

” இல்லை பெரியம்மா நீங்கள் இனி உங்கள் மகளிர்மன்றத்திற்கு போக கூடாது .என்னுடன் நமது எஸ்டேட்டிற்கு தினமும் வருகிறீர்கள் ” உறுதி தொனிக்க கூறினாள் சபர்மதி .

” ஏய் …என்னடி என்னை மிரட்டுறியா ..இவ்வளவு நாளாக உங்கள் அப்பா என்னை மிரட்டி குடும்பம் நடத்தினார் .இப்போது உன் முறையா …”

 

” அப்பாவா …அவர் எதற்கு ….உங்களை மிரட்டினார் .பெரியம்மா அப்பா எவ்வளவோ துன்பங்களை அனுபவிச்சிட்டார் .இனி அவரை ஒரு வார்த்தை குறை கூற நான் அனுமதிக்க மாட்டேன் “

 

” ஓ…இப்போ உங்கப்பா குறையில்லாத மனிதனாகிவிட்டாரா .ஒரு ஆண் முழுமையான ஆண் என்று அவன் தாயோ , மகளோ , சகோதரியோ சொல்ல முடியாது .அந்த பட்டத்தை அவனுக்கு அளிக்கும் முழு உரிமையும் அவன் மனைவிக்கு மட்டுமே உண்டு .அந்த வகையில் உன் அப்பா ஒரு குடும்ப தலைவனென்ற பட்டத்திற்கு சிறிதும் உரியவரல்ல “

 

” ஏன் பெரியம்மா …இப்படியெல்லாம் பேசுகிறீர்கள் .அப்படி என் அப்பா உங்களுக்கு என்ன அநியாயம் செய்தார் “

 

” என்ன செய்யவில்லை ? ..பணத்துக்காக கல்யாணம் பண்ணிக்கொண்டு கடமைக்கு பிள்ளை பெறவில்லை ? ….இடையிலேயே என்னை தவிக்க விட்டுட்டு எவள் கூடவோ ஓடிப்போகலை ? கஷ்டப்பட்டு கண்டுபிடித்து கூட்டி வந்த பிறகும் , என் பொண்டாட்டி , என் பிள்ளைன்னு எந்நேரமும் புலம்பி என் குறை வாழ்வை அழித்தாரே …அது தப்பில்லையா ? ஒரு நாளாவது என்னிடம் அன்பாக ஒரு வார்த்தை பேசியிருப்பாரா?.. பிள்ளைகள் என்ன செய்கிறார்கள் என்று பார்த்திருப்பாரா…தர்மன் மனநிலை பிறழ்ந்து வீட்டில் கிடக்கிறான் .நான் தவித்துக்கொண்டிருக்கிறேன் .இவர் உன்னை தேடி ஓடிக்கொண்டிருக்கிறார் ….எனக்கு எப்படி இருக்கும் ….இப்படிப்பட்டவருக்கு சேவை செய்து இவர் தொழிலையும் வீட்டையும் நான் பார்க்க வேண்டுமா ?

 

என்ன நெஞ்சழுத்தமிருந்தால் நீ என்னிடமே வந்தே ஆகனும்னு உத்தரவு போடுவ ….என் கண் முன் நிற்காதே …உடனே வெளியே போ ” கத்தியதோடு நில்லாமல் சபர்மதியின் கைகளை பிடித்து இழுத்து அறைக்கு வெளியே தள்ளி கதவை பூட்டினாள் அம்சவல்லி .

 

” கடவுளே ஒரு முறையற்ற காதல் எத்தனை பேரை புண்ணாக்கி இருக்கிறது .அடுத்த தலைமுறை வந்த பின்னும் அக்காதலின் கசந்த சுவடுகள் ஓவ்வொருவர் மீதும் அழுத்தமாக பதிகிறதே .” தூக்கமின்றி படுக்கையில் புரண்டபடி தனக்குள்ளே புலம்பினாள் சபர்மதி .

 

இந்த பிரச்சினையை ஆரம்பித்தவர் தந்தைதான் .இதனை முடிப்பதும் அவர் கைகளில்தான் இருக்கிறது .சன்னல் கதவினை திறந்து அவுட்ஹவுஸை பார்த்தாள் .விளக்கு எறிந்து கொண்டு இருந்தது .சத்யேந்திரன் இப்போது இரவு தூங்க மாத்திரைகளை நாடுவதில்லை .நல்ல புத்தகங்களை சிறிது நேரம் வாசித்து கொண்டிருந்து விட்டு நிம்மதியாக தூங்கிவிடுகிறேன் என கூறியிருக்கிறார் .

 

இப்போதே அவரிடம் பேசி விட வேண்டியதுதான் .கீழே இறங்கி சென்றாள் சபர்மதி .வீட்டினுள் அனைத்து விளக்குகளும் அணைக்கப்பட்டு இருள் சூழ்ந்திருக்க ஆங்காங்கே சில விடிவிளக்குகள் .அவற்றின் அரைகுறை இருளில் ….யார் அது ….?.தலையில் முக்காடு போட்டபடி ஒரு உருவம் .கையில் எதையோ மறைத்து எடுத்தபடி …தர்மசேகரனது அறையை நோக்கி சென்றது .

 

சத்தமின்றி அவ்வுருவத்தின் பின் சென்ற சபர்மதி , திடீரென அதன் முன் சென்று நின்று , முக்காட்டை விலக்கினாள் .அதிர்ந்தாள் ….நீயா ….?

What’s your Reaction?
+1
1
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!