Author's Wall Cinema Entertainment

பேட்ட

அந்தப்படம் எப்படிப்பட்டது தெரியுமா …? அவர் எந்த மாதிரி் நடிகர் தெரியுமா …? என நாம் ஒவ்வொருவரும் சிலாகிக்கும் நடிகர்கள் நமது இளமை பருவத்தை ஆட்சி செய்தவர்களாக இருப்பார்கள் . அந்த திரைப்படத்தை மட்டுமல்லாது அது சம்பந்தப்பட்ட நமது வாழ்க்கை நிகழ்வுகளையும் அந்தப் படங்கள் …நடிகர்கள் நினைவுறுத்துவார்கள் .( இந்தப் படத்திற்கு போகிற அவசரத்தில் தோசையை கருக வச்சு அம்மாகிட்ட அடி வாங்கினேன் , இந்தப் பாட்டை பாடிக்கிட்டுத்தான் அவன் சதா என் பின்னாடி சுத்துனான் … இந்தப் பட டிக்கெட் எடுக்கத்தான் அப்பாவிற்கு தெரியாமல் சுவர் ஏறி குதிச்சேன் …என் முதல் லவ் லெட்டரில் இந்த பாட்டைத்தான் சேர்த்து எழுதினேன் …) பொழுது போக்குகள் வேறு அற்ற நம் ஓய்வு பொழுதுகளுள் அப்போது இரண்டற கலந்திருந்தன சினிமாக்களும் , அதன் நடிகர்களும் .

சந்தன நிறமும் , மயக்கும் காதலுமாகவும் , கறுத்த நிறமும் , திமிறும் வேகமுமாகவும் வித வித நடிகர்கள் நம் வாழ்வோடு பிணைந்திருந்தனர் .திரை வாழ்வில் அவர்கள் கோபமும் , வேகமும் , சோகமும் நமக்கு அத்துபடி . காலங்கள் நகர்கிறது . கவலைகள் துறந்த இளமை போய் ,பொறுப்பு பொதி சுமக்கும் நடுத்தரமோ , முதுமை ஆரம்பமோ …முன்பு போல் பொழுது போக்கை நாடாத நிலையில் இருக்கையில் , தளர்ந்திருக்கும் அம்முந்தைய நடிகர்களிடமும் கவனம் போவதில்லை . முதன் முதலில் ஒரு நாள் இந்த நூலை கோர்த்து கொடேன் – ஊசி நூல் நீட்டும் அம்மா , எத்தனை மார்க்குடா ? கண்ணாடி எடுத்து மாட்டி பேப்பரில் தேடும் அப்பா – நமக்கு உள்ளத்தில் அதிர்வை ஏற்படுத்துவர் . தொண்டையில் சிக்கிய மீன் முள்ளாய் அம் முதுமை அறிவிப்புகள் நம்மோடு பயணிக்கும் நம்மால் மனமார ஏற்றுக் கொள்ளப்படாமலேயே …அப்படித்தான் நம் மனம் கவர்ந்த திரை நாயகனின் வயோதிகமும் நம்மால் விரும்பப்படாமல் , ஏற்றுக்கொள்ளப்படாமல் நம்மோடு உருளுகிறது . உள்ளாற உண்மை என்னவெனில் அவர்களது தளர்வுகள் நம்மையே நமக்கு சுட்டுவதுதான் .

 

 

 

 

இந்த ஆழ்மன அரசியலே சிக்ஸ்டிஸ் , செவன்டிஸ் , எய்ட்டீஸ் , நைன்டீஸ் என அவரவர் வசந்தகாலத்தை பெரிதாக பேச வைக்கிறது .அக்காலத்திற்குள்ளேயே நம்மை உழல வைக்கிறது உள்ளூற ஏதோ ஏக்கத்துடன் . இச் சூழலில் இப்போது ப்யூஸ் போன பல்பாக மங்கலாக கண்ணோர சுருக்கங்களும் , தொங்கிய தோள்களும் , கழுத்து மடிப்புகளுமாக இருக்கும் முன்னாள் சூப்பர் ஸ்டார் , தனது வயதை முனைந்து உதறி , சேர்த்துக் கொண்ட இளமையும் , கோர்த்துக் கொண்ட ஸ்டைலுமாக …துள்ளலும் துடிப்புமாக திரையில் நடமாடினால் …அங்கே நாம் பார்ப்பது அந்த நடிகனை அல்ல .நமது இளமையின் பிம்பத்தை .இள மனது ஏக்கங்களை .இரண்டரை மணி நேரம் நமது நடுங்கி நகரும் நிகழ்காலத்தை மறந்து குதித்து அளந்த இளமை பருவத்திற்குள் உலாவி வந்தால் சநதோசமாகத்தானே இருக்கும் .அந்த இனிய அனுபவத்தைத்தான் நமக்கு தருகிறது ” பேட்ட ” .

ஒவ்வொரு ப்ரேமிலும் எண்பது , தொண்ணூறுகளின் ரஜினி ஸ்டைல் ராஜாங்கங்கள் .நாமும் அந்த முடி கோதலிலும் , வேகத்திலும் நமது அக்கால இளமையை சிறிது நேரம் மீட்டெடுத்து வருகிறோம் . இயக்குநரின் நோக்கமும் அது ஒன்று மட்டுமே …இதற்காகவே ரஜினி உபயோகிக்கும் ஆயுதம் முதல் பின்னணியில் ஒலிக்கும் பழைய பாடல்கள் வரை காட்சிக்கு காட்சி ரொம்பவே மெனக்கெட்டிருக்கிறார் .அதில் அவருக்கு நூறு சதவிகித வெற்றியும் கூட .

அப்புறம் வேறென்ன …கதை …? உஷ் …மூச் அதைப் பற்றியெல்லாம் பேசக் கூடாது . இளமை பூசிக் கொண்ட ரஜினி இருக்கிறார் , நடுக்கம் மறைத்த அவரது குரல் கம்பீரம் இருக்கிறது , ஸ்டைலான அவரது நடன அசைவுகள் இருக்கிறது .இதை விட வேறென்ன வேண்டும் …? இப்படித்தான் நினைத்திருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ் . மனதை அழுத்தும் பாரங்களிலிருந்து சிறு ரிலாக்சேசன்தான் எனக்கு சினிமா என சொல்லுபவர்களுக்கு முதல் டிக் இந்தப் படம் .நான் இந்த ரகம்தான் .எனவே எனக்கு பேட்ட படம் டபுள் ஓ.கே . மரண மாஸ் பாடலிலிருந்து க்ளைமேக்சில் ரஜினி அட்டகாசமாக நடனமாடி மூச்சிரைக்க நின்றபடி துப்பாக்கி எடுக்கும் ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் பாடல் வரை எனக்கு படம் மிகவும் பிடித்திருந்தது . இது போன்ற மனநிலை உள்ளவர்களுக்கு மட்டுமே பேட்ட படம் ரசிக்கும் .

எங்களுக்கு முன் வரிசையில் இரண்டு வயதான தம்பதியர் . எழுபதிலிருந்து எண்பது வரை வயதுகளை வரையறுக்கலாம் .அந்த நள்ளிரவு காட்சியையும் துளி சலிக்காமல் உடல் உபாதைகளை பொருட்படுத்தாமல் வாய் திறந்து சிரித்தபடி , சில நேரம் கைகளை தட்டியபடி கூட படத்தை ரசித்தனர் .அதே நான்கு வரிசை முன்னால் ஐந்தாறு பேர் கொண்ட இளவட்ட கும்பல் கை தட்டி , விசில் அடித்து , கத்தி , பாடலுக்கு நடனமாடி என படத்தை ரசித்தனர் .இதுதான் ரஜினி எனும் கலைஞனின் மாஜிக் .

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!