Author's Wall Coming Soon Serial Stories

Kannam Vaitha Kalvanae – I – 44 ( Final )

44

” நம்ம ஊர் குலதெய்வம் கோவில் கொடை வரப்போகுது .நீங்கள் எல்லோரும் வர வேண்டும் மாப்பிள்ளை …” தாத்தா பரமசிவம் நடராசனிடம் வேண்டுகோள் வைத்தார் .

” எனக்கு லீவ் கிடைக்காதே மாமா .கலைக்கும் லீவ் கிடைப்பது கஷ்டம் ….”

” புது மாப்பிள்ளை பொண்ணை கூட்டிக்கொண்டு நம் ஊருக்கு வந்தீர்களானால் , நம்ம மாப்பிள்ளை நம் பக்கத்து சொந்தங்களை எல்லாம் பார்த்துக் கொள்வார் .அவர்களும் நம் வீட்டு மாப்பிள்ளையை பார்த்துக் கொள்வார்கள் .ஒருவரையொருவர் நன்றாக தெரிந்து கொள்ள வசதியாக இருக்கும் ….”

” நீங்கள் சொல்வது சரிதான் .ஆனால் எனக்கு ஆபிசில் லீவ் ….”

” இப்படி சொல்லியேதான் பத்து வருடமாக நம் ஊர் பக்கமே வரவில்லை மச்சான் .இந்த வருட கொடைக்கு நீங்க கண்டிப்பாக வரவேண்டும் ….” வடிவேல் …கலையரசியின் முதல்  அண்ணன் வற்புறுத்தினார் .

” ஆமாம் மச்சான்  .இது போல் விசேசங்களுக்கு நம் கிராம பக்கம் வந்தீர்களானால்தான் நம் பாரம்பரியம் பற்றி நம் பிள்ளைகளுக்கு தெரியும் .நம் பக்கத்து   பழக்க வழக்கங்களை உங்கள் வீட்டு புது மாப்பிள்ளை தெரிந்து கொள்வார் ….” சுந்தரம் …அண்ணனோடு இணைந்து வற்புறுத்தினார் .

நடராசன் யோசனையோடு கலைவாணியை பார்க்க அவள் ” போயிட்டு வரலாங்க .நம்ம சுவாதி வீட்டுக்கார்ருக்கு நம்ம ஊர் பக்கம் சுத்தி காட்டின மாதிரி இருக்கும் …” என்றாள் .

எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்த ஜோதி அப்பாவின் அருகே வந்து அமர்ந்து கொண்டாள் .

” ஆமாம்பா …போயிட்டு வரலாம்பா .மிஷின் மாதிரி ஓடிக் கொண்டிருக்கும் இந்த நகர வாழ்க்கையை விட்டு , கொஞ்சம்  ரிலாக்சாக நம் ஊர் பக்கம் போய் விட்டு வரலாம்பா …ப்ளீஸ் …” தலை சரித்து கெஞ்சிய மகளை மறுக்க மனம் வரவில்லை நடராசனுக்கு .

” சரிடா …உனக்காக …ஆபிசில் லீவ் சொல்லிவிட்டு கிளம்புவோம் …” ஜோதியின் தலையை வருடினார் .

ஹை ..்என்று துள்ளிக் குதிக்க தோன்றியது ஜோதிக்கு .பொட்டைப்புள்ளைக்கு என்ன அடக்கமில்லாமல் குதிப்பு …? நொட்டென தலையில் வைக்க தயாராக சுற்றிலுமிருந்த உறவினக் கும்பலை எண்ணி தனது உற்சாகத்தை அடக்கிக் கொண்டாள் அவள் .

கண்டிப்புதான் …நக்கல் பேச்சுக்கள் தான் …முறைப்புகள்தான் …..ஆனாலும் எல்லாவற்றின் பினபுறமும் பாசம் இருப்பதை அவள் உணர்ந்திருக்கிறாள் .எனவே தன் சொந்த பந்தங்களுடன் கிராமத்தில் கழிக்க போகும் நாளை அவள் எதிர்பார்த்தபடி இருந்தாள் .

முத்துராமனையோ , மஹிந்தரையோ ….குறிப்பாக ஹர்ஷவர்த்தனையோ சிறிது நாட்களுக்கு சந்திக்காமல் இருக்க நினைத்தாள் ஜோதி .இந்த மூன்று ஆண்களும் அவளது வாழ்வை தங்கள் கைகளில் எடுத்துக் கொண்டு இஷ்டம் போல்  சுழற்றுவதாக உணர்ந்தாள. .

அவர்கள் யாருமற்ற ஓர் புது உலகில் சில நாள் தன் மனம் போல் வாழ நினைத்தாள் .இந்த கிராமத்து பயணத்தை அவள் விரும்பிய காரணம் இதுதான் .




அந்த ஹர்ஷவர்த்தனுக்கு நான் எங்கே போகிறேன்னே தெரியாது .டார்ச்சர் பண்ண பக்கத்தில் ஆள் இல்லாமல் எங்கே போயிட்டேன்னு தெரியாமல் நல்லா முழி முழின்னு முழிக்கட்டும .

மனதுக்குள் குதூகலித்துக் கொண்டாள் .

” அண்ணி …அப்போ நீங்க எங்க ஊருக்கு வரப் போறீங்க ….” சந்தோசம் பொங்க அவளருகில் வந்து அமர்ந்தாள் மல்லிகா .

” ஆமாம் மல்லி …ரொம்ப நாளாச்சில்ல …எனக்கு ஒரே எகசைட்டிங்கா இருக்கு ….”

” அதென்ன மல்லி எங்க ஊருன்னு சொல்ற …அப்போ அது நம்ம ஜோதி அண்ணியோட ஊர் இல்லையா …? ” சுபத்ரா இடையில் வந்தாள் .

” அதானே ….ஏய் பார்த்தியா …அது உங்க ஊர் மட்டுமதானா …அப்போ எனக்கு …? ” கோபம் போல் முகம் தூக்கிக் கொண்ட ஜோதியை இருவரும் கன்னம் தடவி கொஞ்சி கெஞ்சி சரி செய்தனர் .

” மல்லி , சுபா நம்ம ஊருக்கேற்றாற் போல் கொஞ்சம் புதிதாக டிரஸ்ஸெல்லாம் வாங்கலாம்னு நினைக்கிறேன் .நீங்களும் கூட வர.றீங்களா …? எனக்கு செலக்சனல ஹெல்ப் பண்ணுங்க “

” ஓ …போகலாம் அண்ணி …என்ன டிரஸ் எடுக்க போறீங்க …?”

” இப்போ எனகிட்ட இருக்கிறதெல்லாம் ஜீன்ஸ் , மிடி , சுடிதார்னு மாடர்ன் டிரஸ்ஸாத்தான் இருக்கும் .அது இல்லாமல் அந்த பட்டிக்காட்டிற்கு ஏத்த மாதிரி ….” சொல்லிக் கொண்டே போனவள் நாக்கை கடித்து பேச்சை நிறுத்த , மல்லிகாவும் , சுபத்ராவும் அவள் முன் தங்கள் இடுப்பில் கை வைத்தபடி அவளை முறைத்துக் கொண்டு நின்றனர் .

” என்ன சொன்னாய் ….? “

” திரும்ப சொல்லு …”

” ஏய் …என்னங்கடி மரியாதை குறையுது ….”

” எங்க ஊரை பட்டிக்காடுங்கிறாய் .உனக்கு என்ன மரியாதை …? “

” அடிப்பாவிகளா …உங்களை நம்பி நான் எப்படியடி வருவது ….” ஜோதி போலியாய் சலித்து தலையில் கை வைத்துக் கொண்டாள் .

”  ஏய் அண்ணி நீ அந்த பட்டிக்காட்டிறகு வா …அங்கே இருக்கு உனக்கு …”

” என்னங்கடி பண்ணுவீர்கள் ….? “

” அதை அங்கே வா காட்டுகிறோம் …”

” மல்லி இவளை சாமியாடி முன்னாடி தள்ளி விட்டுடலாம் …”

” வேண்டாம்டி இவளையே கொடை கொடுத்திடலாம் …”

” அடிக் கொலைகாரிகளா …நீங்க இருக்கிற வேகத்துக்கு நான் ஊரிலிருந்து வரும் போது முழுதாக வருவேனா இல்லையான்னு தெரியலையே ….”

” உன்னை எப்படி திருப்பி அனுப்புறதுங்கிறது உன்னோட நடவடிக்கைகளில் இருக்கிறது ….”

” ஒரு நாப்பது பக்க நோட்டு தருகிறேன் . எப்படி நடக்கனுங்கிறதை …எழுதி தந்திருங்கடி .ஏதோ உங்க புண்ணியத்தில் உயிர் பிழைத்து போகிறேன் …”

ஜோதியும் , சுவாதியும் என்றுமே சகோதரிகளாக பழகியதில்லை .தோழிகளாகத்தான் பழகி வந்திருந்தனர் .அடி பிடியும் , கெஞ்சலும் , கொஞ்சலுமாக அவர்கள் வீடு எப்போதும் கலகலத்து கிடக்கும் .

இப்போதோ சுவாதி திருமணமாகி சென்று விட வீடு அமைதியாகி விட ஜோதிக்கு பயங்கர எரிச்சலாக இருந்தது .மிக வெறுமையாக உணர்ந்தாள் .அதனை மல்லிகாவும் , சுபதராவும்தான் இந்த பத்து நாட்களாக  சமன் செய்து கொண்டிருந்தனர்.

நான்கு நாட்களாக அவர்களுடன் சேர்ந்து கடைகளில் தேடி பிடித்து தனக்கான உடைகளை அவர்கள் ஆலோசனையோடு தேர்ந்தெடுத்தாள் .பெட்டியில் அடுக்கி பத்திரப்படுத்தினாள்.




பத்து நாட்களில் ஜோதியின் கை கட்டு அவிழ்க்கப்பட்டது .சில பிஸியோதெரபி சிகிச்சைகள் மட்டும் அவளுக்கு சொல்லித் தரபட்டது .சற்றே விரைப்பாக காணப்பட்டதை தவிர கையில் வேறு பிரச்சினை இல்லாது போக ஜோதி ஆவலுடன் தனது கிராம பயணத்தை எதிர்பார்க்க ஆரம்பித்தாள் .

இரவு தனது கட்டிலில் படுக்க வந்தவளுக்கு சுவாதியின் நினைவு வந்த்து .பதினைந்து  வருடத்திற்கும் மேலாக அவளுடன் இந்த கட்டிலை பகிர்ந்து கொண்டவள் .அவளது சுக , துக்கங்களை , உற்சாகங்களை பங்கு போட்டு கொண்டவள் .இன்று …திடீரென ஒரே நாளில் வேறு வீட்டிறகு போய்விட்டாள் .

மிக எளிதாக திருமணமென்ற பெயரில் தன் சகோதரியை இப்படி முழுதாக இன்னொரு குடும்பத்திற்கு தூக்கி கொடுத்ததை ஜோதியால் ஜீரணிக்க முடியவில்லை .

சை ….என்ன சம்பிரதாயங்கள் …சடங்குகள் …சலித்து கொண்டவளின் நினைவில் ஹர்ஷவர்த்தன் வந்து நின்றான் .

எதற்கு இந்த சடங்கு …சம்பிரதாயங்கள் …எனக் கேட்டான் .

போடா …உனக்கு ஒன்றும் தெரியாது .அதுதான் எங்கள் பாரம்பரியம் …இந்த சம்பிரதாயங்களை பழித்து கொண்டேனும் நாங்கள் இதன் பின்னால்தான் நடப்போம் .அப்படித்தான் வழி வழியாக நடந்து கொண்டிருக்கிறோம் .நீ …பணத்திமிரில் பேசுகிறாய் …உனக்கு ஒன்றும் தெரியாது .முட்டாள் நீ …

நாடு நாடாக சுற்றி கோடி கோடியாக சம்பாதித்து கொண்டிருக்கும் ஆண் பிள்ளைக்கு எளிதாக முட்டாளென்ற பட்டத்தை கொடுத்து விட்டு , மானசீகமாக அவனோடு ஒரு வார்த்தையாடலை நிகழ்த்தி சண்டையிட்டு விட்டே படுத்து கண்ணயர்ந்தாள் ஜோதி .

அவளது அன்றைய கனவு மிக அழகாக , வண்ணமயமாக நிகழ்ந்தது .பட்டாம்பூச்சிகள் பலவற்றின் சிறகடிப்பை தன்னுடலில் உணர்ந்தவள் , கனவிற்குள் தனது நினைவை தானே உணர்ந்தாள் .

திடுமென தித்தித்த தனது நாவை சுவைத்துக் கொண்டவளின் கனவில் இந்நாள் வரை முகம் காட்டாமலேயே திரும்பியிருந்த அவன் இன்று முகம் திருப்பி அவளுக்கு காட்டி அவள் கண்ணோடு கண் கலந்தான் .

அவன் நிச்சயம் ஹர்ஷவர்த்தன் தான் .

  • -அடுத்த பாகத்தில் தொடரும் –‘

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!