Serial Stories

Mullil Roja – 1

1

வெளுக்கிறது வெயிலென்றேன் 
சரி சரியென சலித்தபடி 
இளநீர் வாங்கி நீட்டுகிறாய் ,
கொட்டும் மழையை கூற 
பயமாய் இருக்கிறது ,
கம்பளி கொடுத்து காணாமல் 
போய்விடுவாயோ என ,
குமிழ் விடும் நீருக்குள் 
படகென நான் நீந்தியிருப்பது ,
சிலிர்க்கும் குளிரிலும் 
ஓர் ஓரம் போர்த்தும் உன் 
இமை வெப்பம் சுகிப்பதற்கெனத்தான்

 

 

மஞ்சளும்  , சிவப்பும் கலந்த நிறத்தை அந்த மலருக்கு தீட்டிவிட்டு , அடர் ஊதாவை அந்த மயில் தோகைக்காக எடுத்தாள்  . இதை கொடுத்துவிட்டால் கோலம் முடிந்த்து .அடுத்து வெள்ளைக் கோடுகளில் அவுட்லைன் மீண்டுமொரு முறை இழுத்து விட்டால் ,மெருகேறிவிடும் .குளிரில் விறைத்து விட்ட கரங்களை ஒரு முறை தேய்த்துக் கொண்டாள் .நாகரீக குப்பைகளின்றி சுத்தமாக இருந்த அந்த அதிகாலை காற்றை ஒரு முறை ஆழ இழுத்து நுகர்ந்தவள் ,வெள்ளை பொடியால் கோட்டின் மேலேயே இழுக்க ஆரம்பித்தாள் .

‘ டப டப ‘ சத்தத்துடன் அந்த ஆட்டோ வீட்டு வாசலில் வந்து நின்றது .சற்று முன் சுத்தமாக இருந்த வாசல் காற்று பெட்ரோலை புகையாய் துப்பிய எந்திரத்தால் மாசானது .ஒரு தவம் போல் விருப்புடன் செய்து கொண்டிருந்த அந்த அதிகாலை வேலையில் ஏற்பட்ட இடைஞ்சலில் எரிச்சலுற்று நிமிர்ந்து பார்த்தாள் .கையில் ஒரு பெட்டியும் , தோளில் ஒரு பேக்குமாக நின்ற அந்த ஆடவன் விழிகளை அகல விரித்து அவளைப் பார்த்தபடி நின்றான் .

யாரிவன் …? கேள்வியாய் உயர்ந்த புருவத்தோடு அவனை பார்த்தாள் .

” வணக்கம் .நான் …பூரணியம்மாவோட தங்கை பையன். அவுங்க …? ??”

” அதோ ..அந்த வீடு …” சுட்டிவிட்டு குனிந்து கோலத்தை தொடர்ந்தாள் .

” ஓ…சாரி தவறி உங்க வீட்டு முன்னால் இறங்கிட்டேன் .என் பெயர் சபரீஷ் .நீங்கதான் ஹவுஸ் ஓனர்னு நினைக்கிறேன் .உங்க பேர் ..? ” ஆவலாய் கேட்டான் .

” உங்க பெரியம்மா இன்னும் எழுந்திரிச்சிருக்க மாட்டாங்க…நீங்க எங்கள் வீட்டில் கொஞ்ச நேரம் உட்காருங்களேன் .அவுங்க எழுந்த்தும் போகலாம் ..”

” ஓ…”வேகமாக தலையாட்டியபடி பெட்டியை தூக்கிக் கொண்டு வேகமாக முன்னால் நடந்தவன் , பிறகுதான் அவள் இன்னமும் வரவில்லையென்பதை உணர்ந்து நின்றான் .அவளோ  அதனை கவனிக்காது , நிதானமாக தனது கோலத்தை முடித்து விட்டு நிமிர்ந்து அவனை பார்த்து உள்ளே வருமாறு தலையசைத்து விட்டு வாசல் படியேறினாள் .

” உங்கள் பெயரை சொல்லவேயில்லையே …? ” பேசியபடி உள்ளே நுழைய முயன்றவனை தடுத்து ,

” இங்கே உட்காருங்கள் .உங்கள் அம்மா எழுந்த்தும் வாசல் தெளிக்க வருவார்கள் .இங்கிருந்து பார்த்தால் தெரியும் ” என்று முன் வராண்டாவில் கிடந்த மூங்கில் நாற்காலியை காட்டினாள் .

உன் அம்மா எழுந்த்தும் நடையை கட்டு …என சொல்லாமல் சொல்கிறாளோ …? என அவள் முகத்தை கூர்ந்து பார்த்து அறிய முயன்றபடி , ” ரொம்ப நன்றிங்க , உங்க பெயரை மட்டும் சொல்லிடுங்க , அப்படியே ஒரே ஒரு கப் காபி குடுத்தீங்கன்னா ..” இழுத்தான் .

அவள் முறைக்கவும் ” ஐயோ முறைக்காதீங்க , இந்த மார்கழி மாச குளிர்ல இவ்வளவு அதிகாலை டிரெயின் பிரயாணம் …எவ்வளவு குளிர் தெரியுமா …? கையெல்லாம் விரைச்சிருச்சிங்க …திவ்யா …அதுதாங்க கேட்டேங்க சௌந்தர்யா …தப்பா எடுத்துக்காதீங்க ரசிகா …”

அவனது தொடர்ந்த பெயர் அடுக்கலில் இவள் விழித்தாள் .” யாரு இவுங்கள்லாம் ..? “

” யாரு …யாரு ….? இந்த பெயரெல்லாமா …? அது நானா உங்களுக்கு வச்ச பெயர்கள்ங்க “

” என்னது ….நீங்களாக வைத்தீர்களா …? “

,” ஆமாம் இந்த அதிகாலை மார்கழி குளிர்ல இவ்வளவு சுத்தமாக குளித்து முடித்து திவ்யமாக கோலம் போடும் பெண்கள் எல்லாம் எண்பதிலேயே காணாமல் போயிட்டாங்க.ஆனால் நீங்க இன்னமும் அப்படி இருக்கிறதால உங்க பெயர் திவ்யா என்று இருக்கலாமோன்னு நினைத்தேன் .

நைட்டியோ , லெக்கின்சோ ..இல்லாமல் அழகாக சேலை கட்டி  பாப் கட் பண்ணாமல் இவ்வளவு நீள முடியோட , அதில் சொட்டும் நீரோட ,நெற்றியில் திருநீரோட சௌந்தர்யமா நிற்கிறீங்களே …உங்கள் பெயர சௌந்தர்யா என்று இருக்கலாமோன்னு நினைத்தேன் .

அவ்வளவு அழகாக ரசித்து , ரசித்து …கோலம் போட்டீர்களே .அதனால் உங்கள் பெயர் ….”

” போதும் …போதும் ..உங்கள் யூகங்களையெல்லாம் மூட்டை கட்டி வையுங்கள் .என் பெயர் சாம்பவி ” என்றவளின் குரலில் லேசான சிரிப்பு தெரிந்த்து.

” ம் …சாம்பவி …நீங்கள் மட்டும் இல்லைங்க ..உங்க பெயர் கூட  வித்தியாசமாகத்தான் இருக்கிறது …”

” இதென்ன பெயர் சுத்த கர்நாடகமாக இருக்கிறது ….,” என கிண்டல் செய்த குரலொன்றின் நினைவு வர , முகம் வாடினாள் .

” பனியில் மலர் வாடுங்களா ..? நல்லா மலரத்தானே செய்யும் …? “

” சாரி …திரும்ப புரியலை .என்ன சொல்றீங்க …? “

,” அட உங்க முகத் தாமரையைத்தாங்க சொல்றேன் .திடீர்னு வாடிடுச்சே…” கலகலவென்ற அவன் பேச்சில் மீண்டும் முகம் மலர , மென்மையாய் சிரித்தாள் சாம்பவி .

அந்த மென் சிரிப்பு கூட வீட்டினுள் கேட்டதோ …? வாசலில் போட்டிருந்த  ஸ்கிரீனை தள்ளிக் கொண்டு தலையை மட்டும் நீட்டி   எட்டிப் பார்த்தாள் ஒரு பெண் .

சட்டென தன் சிரிப்பை நிறுத்திக் கொண்ட சாம்பவி ” இவர் சபரீஷ் .நம் பூரணியம்மாவோட தங்கை பையனாம் .அவுங்க இன்னமும் எழுந்திரிக்கலை .அதுவரை இங்கே இருக்க சொன்னேன் அண்ணி ,” அந்த பெண்ணிற்கு தகவல் தந்துவிட்டு உள்ளே போனாள் .

அந்த பெண் அப்போதுதான் குளிக்க கிளம்பியிருப்பாள் போலும் .தோளில் துண்டுடன் நைட்டியுடன் இருந்தாள் .அழுத்தமான பார்வையுடன் கூர்மையாய் அவனை பார்த்து விட்டு உள்ளே போனாள் .

” காபி யாருக்கு …? வாசலில் இருக்கிறானே அவனுக்கா …? ” காபி கலந்து கொண்டிருந்த சாம்பவியிடம் கேட்டாள் மாலினி .

பதில் சொல்லாமல் அவளை நிமிர்ந்தும் பார்க்காமல் செல்பில்  டப்பாக்களை உருட்டினாள் அவள் .

” பூரணியம்மா சித்தி  பையன்கிறதால காபி கலந்து கொடுக்கனும்னு என்ன கட்டாயம் இருக்கு …? “

” இந்த சீனி டப்பாவை எங்கே வச்ச.எடுத்ததை எடுத்த இடத்தில் வையுன்னு எத்தனை தடவை சொல்றேன் ” பட் பட்டென டப்பாக்களை நகர்த்தினாள் .

கேட்ட கேள்விக்கு பதில் சொல்றாளான்னு பாரு …என எண்ணியபடி ,” உன் கண் முன்னாலதான் இருக்கு …” எடுத்து நீட்டியவளின் கையிலிருந்து அதை வெடுக்கென பறித்து சக் ..சக்கென சீனியை அள்ளி காபியினுள் போட்டாள் .

” ஐய்யய்யோ …எதுக்கும்மா இத்தனை சீனி …எப்படி இந்த காபியை குடிக்கிறது …? ” பதறினாள் மாலினி .

” உன் புருசன் எழுந்திரிச்சிட்டார் .நல்லதாக ஒரு காபி போட்டு அவருக்கு கொண்டு போய் குடு ” காபி கப்பை வைக்க டிரேயை தேடியபடி கூறினாள் சாம்பவி .

எழுந்துட்டாரா …?எப்போ …? நான் கவனிக்கலையே …? சந்தேகத்துடன் வெளியே எட்டிப் பார்த்தாள் மாலினி .ஹால் சோபாவில் அமர்ந்து கொட்டாவி விட்டபடி பேப்பர் படித்து கொண்டிருந்தான் சந்திரன் .இரண்டு பேரும் கிச்சனுக்குள்தானே நின்றிருந்தோம் .எனக்கு தெரியவில்லை …இவளுக்கு தெரிந்திருக்கிறதே …சிறு குற்றவுணர்வுடன் நினைத்தாள் மாலினி.

” அவ்வளவு அக்கறை ..புருசன் மேல ….” மாலினியின் மனதிற்கு நக்கலாக பதிலளித்தபடி வெளியேறினாள் சாம்பவி .பேப்பர் படித்துக் கொண்டிருந்த அண்ணன் அவள் கண்களில் பட, டிரேயுடன் அவனிடம் நடந்தாள் .

இறக்கி வைத்த டிகாசனில் கணவனுக்காக  அவசரமாக ஒரு காபி கலந்து எடுத்துக் கொண்டு , மாலினி வந்த போது அவனை காணவில்லை .புருசனை கவனின்னு என்னை சொல்லிட்டு , அவரை வெளியே அனுப்பிட்டாளே …இவளை…பற்களை கடித்தபடி வெளி வராண்டாவிற்கு வந்தாள் .

ஆவி பறக்க தன் முன் நீண்ட காபியை பார்த்ததும் ” ஆஹா என்ன வாசமான காபி .இதற்கு நான் உங்களுக்கு நிச்சயம் நன்றி சொல்ல வேண்டுங்க ” சாம்பவிக்கான உபச்சார வார்த்தையுடன் நிமிர்ந்த சபரீஷ் அங்கே சந்திரனை பார்த்ததும் மிரண்டு பின் திகைத்து ” ஹி…ஹி ….” என வழிந்து …முடித்தான் .

” எங்க சாம்பவி கை பட்டாலே சுடுதண்ணி கூட மணக்க ஆரம்பிச்சுடும் ” தங்கையின் பெருமையை அண்ணன் போற்ற ஆரம்பிக்க , ‘ ம்க்கும் ‘ என தோள்பட்டையை முகவாயில் மனதிற்குள்ளாக இடித்துக் கொண்டு , தான் கொண்டு வந்த காபியை கணவனிடம் நீட்டினாள் மாலினி .

” நீங்க மும்பையிலதானே வேலை பார்த்துட்டு இருந்தீங்க ..? அப்படித்தான் உங்க பெரியம்மா சொல்லியிருக்காங்க …” காபியை குடித்தபடி கேட்டான் சந்திரன் .

காற்றிற்கு படபடத்துக் கொண்டிருந்த ஸ்கிரீன் சிறிது நகர்ந்து சாம்பவி தெரிவாளா ..? என்ற நப்பாசையுடன் அதனை பார்த்தபடி ” ஆமாம் ” என பதிலளித்த சபரீஷ் முகம் சுளித்தான் .அவன் குடித்துக் கொண்டிருந்த காபியினால் .

நிமிர்ந்து மாலினியை பார்க்க , அவள் கணவன் காபி குடிக்கும் அழகை ரசித்துக கொண்டு நின்றிருந்தாள் .

” ஏன் சார் காபி நல்லாயிருக்கா ….? ” எச்சில் விழுங்கியபடி அவன் சந்திரனிடம் கேட்க , ” சூப்பரா இருக்கே …” என்றபடி அவன் மேலும் காபியை உறிஞ்ச தொடங்கினான் .

அவன் சூப்பரில் புளகாங்கிதமடைந்த மாலினி ” உங்களுக்காக நானே பார்த்து பார்த்து போட்டேங்க ” என்றாள் காதலாக கணவனை பார்த்தபடி .

” ம் …ம் …” என்றபடி சபரீஷை பார்த்த சந்திரன் ” குடிங்க தம்பி …எங்க சாம்பவி போட்ட காபி .எப்படி இருக்கு …? என …

சற்று முன் அவன் விவரித்த ‘மணக்கும் சுடுதண்ணி ‘ நினைவு வர ஏதாவது குறை கூறினால் நிச்சயம் அவன் உதைப்பான் என அறிந்து  அவனது வலுவான புஜங்களை பார்த்தபடி அவஸ்தையுடன் அடுத்த மடக்கு காபியை உறிஞ்சினான் சபரீஷ் .

இப்போதுதான் சாம்பவி அள்ளி கொட்டிய சீனி நினைவு வர , திருதிருத்த சபரீஷின் முகம் சிரிப்பை அளிக்க வாயை மூடியபடி உள்ளே வந்துவிட்டாள் மாலினி .உள்ளே வந்த்தும் மூடிய கைகளை எடுத்து விட்டு ” பப்ப்ர்ர்ர் ” என வெடித்து சிரித்தாள் .

” இன்னும் அரைமணி நேரத்தில் குழந்தை விழித்து விடுவாள் .அதற்குள் இட்லி ரெடியாக வேண்டும் .நீ என்னடான்னா ..இன்னும் நைட்டியோடு நின்று கொண்டு வாயில் மாட்டு வண்டி ஓட்டிக் கொண்டிருக்கிறாய் …” மரகதவல்லி எதிரே நின்று கனல் கக்கிக் கொண்டிருந்தாள் .

மாமியாரின் கோபத்தை பார்த்ததும் மாலினியின் மகிழ்ச்சி மறைந்து விட உதட்டை கடித்தபடி ” சாரி அத்தை ..இதோ இப்போது குளித்துவிட்டு வந்து விடுகிறேன் ” என கிளம்பிய போது , தாயின் பின்னால் நின்றபடி அண்ணியின் சிரிப்பிற்கான காரணத்தை தேடியபடியிருந்த சாம்பவி கண்ணில் பட …

” அந்த ஆளுக்கு காபி ரொம்ப நல்லாயிருக்காம் ” என்றாள் .இறுக்கம் மறைந்து சாம்பவியின் முகம் புன்னகை பூசிக்கொள்ள , மாலினி மீண்டும் சிரிக்க தொடங்கினாள் .

மரகதவல்லி சக்தி அவதாரமெடுத்து முறைக்க  ஆரம்பிக்க , அட இவர் மகளும்தான் சிரிக்கிறாள் …என்னை மட்டும் ஏன் முறைக்க வேண்டும் …? முகத்தை உயர்த்தி சிறிது கெத்தாக மாமியாரை பார்த்து விட்டு நாத்தனாரை மீண்டும் பார்த்தபோது அங்கு அவள் இல்லை .மாயமாகி இருந்தாள் .

அடிப்பாவி என்னை மாட்டிவிட்டுட்டியே …மனதிற்குள் புலம்பியபடி சுவரை வெறித்து பார்த்தாள் மாலினி .

தன் பின்னால் திரும்பி பார்த்து விட்டு ” விடிந்தும் …விடியாமல் வெறும் சுவரை பார்த்துக் கொண்டு சிரிச்சுக்கிட்டு இருக்கியே ….உன்னை ” மரகதவல்லி
பற்களை கடித்தபடி வர , மாமியாரின் வாயோரம் கோரைப்பற்கள் போல் எதுவும் நீண்டிருக்கிறதா என ஓரக்கண்ணால் ஆராய்ந்தபடி , ” ஐந்து நிமிடத்தில் வந்து விடுகிறேன் அத்தை ” என பாத்ரூமிற்குள் ஓடிவிட்டாள் .

” இப்படி ஒருத்தியை வைத்துக் கொண்டு நான் எப்படி இந்த வீட்டை கொண்டு செலுத்த போகிறேன் பாப்பு …” கவலையுடன் புலம்பிய அம்மாவை …

” யாரோ விருந்தாள் மாதிரி தெரிகிறது .அண்ணன் பேசிக் கொண்டிருக்கிறார் .போய் பாருங்கள் அம்மா ” என கவனத்தை திருப்பி அனுப்பினாள் சாம்பவி .

அறையினுள் எட்டி பார்த்தாள் .குப்புற படுத்தபடி ஒரு ரோஜா குவியலாக தலையணையின் அணைவில் தூங்கிக் கொண்டிருந்தாள் சாஹித்யா .அப்படியே அவளை அள்ளி அணைத்து முத்தமிட வேண்டும் போன்றதொரு பரபரப்பு ஓட , தூங்கும் குழந்தையை கொஞ்சக்கூடாது …என்ற அம்மாவின் பேச்சை நினைவில் கொணர்ந்து தன்னை அடக்கிக் கொண்டு கட்டிலில் குழந்தையருகே அமர்ந்து ரசிக்க தொடங்கினாள் .

மூடியிருந்த கண் இமைகள் சிப்பிகளை நினைவூட்ட , அந்த இமைகளின் மீது இதழ் பதிக்கும் ஆவலில் சாம்பவி குனிந்த போது , அறையினுள் இருந்த பாத்ரூமை திறந்து கொண்டு வந்தாள் மாலினி .

” தூங்குற குழந்தையை முத்தம் கொடுக்க கூடாது ….” என்றாள் .எரிச்சலாக அவளை பார்த்துவிட்டு எழுந்து வெளியேறினாள் சாம்பவி .

வெளியே அம்மாவின் பேச்சு சத்தமாக கேட்க அங்கே சென்றாள் .மரகதவல்லி சந்தோசமாக சபரீஷிற்கும் , தனக்கும் உள்ள ஏதோ ஓர் உறவு முறையை ஆராய்ந்து கொண்டிருந்தாள் .

” இவர் நம்ம பூரணியோட பையனாம் பாப்பு .அவுங்க என் அம்மா ஊராச்சே …சுற்றி வளைத்து பார்த்தால் நமக்கு கொஞ்சம் கிட்ட சொந்தமாதான்மா வருது ” என்றாள் .

சபரீஷின் கண்கள் சாம்பவியை கண்டதும் மலர்ந்த்து .குடித்துவிட்டு இன்னமும் கையிலேயே வைத்திருந்த காபி கப்பை அவளிடம் கொடுத்து விட்டு ” காபி ரொம்ப நல்லாயிருந்த்துங்க ” என்றான் .

” நிஜம்மாகவா ….” அளவுக்கு மீறிய ஆச்சரியத்துடன் கேட்டாள் .

” வழக்கமாக இப்படித்தான் உங்க வீட்டில் காபி போடுவீங்களா …?” இன்னமும் தித்தித்த தனது தொண்டையை எச்சில் விழுங்கி மறைத்தபடி கேட்டான் .

” எங்க பாப்பு எப்பவுமே சூப்பரா காபி போடுவா …” இப்போது பெருமையடித்தது மரகதவல்லி .

” அது சரி …” அவஸ்தையாய் தலையை குனிந்து கொண்டான் .

” உங்க அம்மா இன்னமுமா எழுந்திரிக்கலை ….? “

” அது …நான் …உங்கள் அண்ணனிடம் சில வேலை  விபரங்கள் பேசிக் கொண்டிருந்தேன். அதனால் கொஞ்சம் லேட்டாகி விட்டது “

” வேலை  விபரமா …? என்ன அண்ணா ..? “

” ம் ..இங்கே இவருக்கு வேலை மாறியிருக்கிறதாம் பாப்பு .அதைத்தான் சொல்லிக் கொண்டிருந்தார் .”

” ஆமங்க …அங்கே மும்பையிலிருந்த எங்கள் ”  ஆர். எஸ் டைல்ஸ் ” கம்பெனியிலிருந்து இங்கே எனக்கு ஒரு வேலை கொடுத்து அனுப்பியிருக்கிறார்கள் .பூரணி பெரியம்மா இங்கே இருப்பதால் அவர்களுடன் தங்கிக் கொள்ளலாமென கிளம்பி  இங்கே வந்துவிட்டேன்.நல்ல வேலை , அதிக சம்பளம் ….” சொல்லிக் கொண்டே சென்றவன் இருண்டு போன சாம்பவியின் முகத்தை பார்த்ததும் பேச்சை நிறுத்தினான் .

மரகதவல்லியும் , சந்திரனும் கூட பேச பிடிக்காமல் மௌனமாக இருந்தனர் .

” அந்த கம்பெனியில் உங்களுக்கு தெரிந்தவர்கள் யாரும் இருக்கிறார்களா சார்  …? ” சந்திரனிடம் கேட்டான் .

” இல்லை ..அப்படி யாரும் இல்லை .” அவசரமாக பதில் சொன்னது சாம்பவி .

” நான் உங்கள் அண்ணனிடம்தான் ….”

” அம்மா குட்டி முழிச்ச மாதிரி தெரியுது போங்க …அண்ணா அந்த பர்சேஸிங் விபரம் உங்க்கிட்ட கொஞ்சம் பேசனும் வாங்க …உங்க அம்மா எழுந்திருத்திரு்ப்பார்கள் .நீங்கள் கிளம்புங்கள்..” முகத்திலடித்தாற் போல் அவனை பேசிவிட்டு சாம்பவி உள்ளே சென்று விட , மரகதவல்லியும் , சந்திரனும் அவளுக்கு முன்பே சென்று விட்டிருந்தனர் .

என்ன ஆச்சு …? புரியாமல் சிறிது நேரம் நின்றுவிட்டு தங்கள் வீட்டை நோக்கி நடந்தான் சபரீஷ் .

மனம் சரியில்லாமல் போனது சாம்பவிக்கு .தலையை பிடித்தபடி சோபாவில் அமர்ந்து விட்ட அவள் மடியில் சாஹித்யாவை கொண்டு வந்து வைத்தான் சந்திரன் .

” குட்டி முழிச்சிட்டாம்மா …எழுந்த்தும் உன்னைத்தான் தேடுகிறாள். ” என்றான் .அவன் சொன்னது போன்றே குழந்தை பாய்ந்து சாம்பவியின் மடியில் அமர்ந்து அவள் கழுத்தை கட்டிக்கொண்டது .

சற்று முன் பாரமாக இருந்த மனது இறகாய் மாறிவிட , குழந்தையின் குண்டு கன்னங்களில் ஆசையாக முத்தமிட்டாள் .பதிலுக்கு குழந்நையும் அவள் கன்னத்தில் முத்தமிட , பாச பயிரொன்றின் தளிர் முளை விட துவங்கியது அங்கு .இருவருமாக தங்களுக்குள் ஒரு தனி உலகை சிருஷ்டித்துக் கொண்டு , அதில் மூழ்க ஆரம்பித்தனர் .

திருப்தியோடு அங்கிருந்து நகர்ந்தனர் மரகதவல்லியும் ,சந்திரனும் .கண் கலங்க தள்ளி நின்று மகளை ரசித்தபடி நின்றார் மாணிக்கவாசகம் .இந்த குழந்தை மட்டும் இல்லையென்றால் ….சாம்பவியின் வாழ்க்கையை நினைத்தே பார்க்க முடியவில்லை அவரால் .பெருமூச்சுடன் அவர் நகர்ந்த்தும் அங்கே வந்தாள் மாலினி .

” இட்லி ஊட்டனும் .பாப்பாவை கொடு சாம்பவி ” கையை நீட்டினாள் .அவளை வெறித்தாள் சாம்பவி .குழந்தையை வாங்காமல் போகப் போவதில்லை எனும் பாவனையுடன் ” அத்தை பார்த்தால் என்னைத்தானே சத்தம் போடுவார்கள் …” என்றாள் .

எப்படியும் குழந்தையோடு தன்னால் நாள் முழுவதும் இருக்க முடிய போவதில்லை ..என நினைத்து விட்டு அழுத்தமான முத்தமொன்றை குழந்தையின் கன்னத்தில் பதித்து விட்டு மாலினியிடம் குழந்தையை கொடுத்தாள் .

சாஹித்யா போக மறுத்து மீண்டும் அவளிடமே தாவ , ” நான் பார்த்துக் கொள்கிறேன் .நீ போய் ஆபிஸ் கிளம்பு ” வலுக்கட்டாயமாக குழந்தையை எடுத்துக் கொண்டு போனாள் மாலினி .

ஒன்பது மணிக்கெல்லாம் சாப்பிட்டு முடித்து , வெளியே வந்த சாம்பவி தனது ஸ்கூட்டியை எடுத்தாள் .

” ஹலோ …என்னங்க எங்கே கிளம்பிட்டீங்க ..? ” ஆச்சரியமான கேள்வியுடன் வந்து நின்றான் சபரீஷ் .

” ஆபிஸ் போகிறேன் …” எரிச்சலாய் பதில் சொன்னபடி பட்டனை அழுத்தி வண்டியை ஸ்டார்ட் செய்தாள் .

” நீங்க ஆபிஸ் போவீங்களா …? ” சபரீஷுக்கு இன்னமும் ஆச்சரியம் விட்ட பாடில்லை .

” ஏன் என்னைப் பார்த்தால் ஆபிஸ் போவது போல் தெரியவில்லையா …? “

” ஆமங்க ..காலையில் குளிரில் வாசலில் அழகாக கோலம் போட்டிட்டு இருந்தீங்களே .அப்படி உங்களை பார்த்த யாரும் நீங்க ஆபிஸ் போய் வேலை பார்ப்பீங்கன்னா நம்ப மாட்டாங்க “

” வாசல்ல கோலம் போடுற பொண்ணு ஆபிஸ் போக மாட்டான்னோ ….ஆபிஸ் போகிற பொண்ணு வாசலில் கோலம் போட மாட்டான்னோ …உங்களுக்கு யார் சார் சொன்னது ..? ” சாம்பவி சண்டைக்கு தயாரானாள் .

” ஐய்யோ …தப்புதாங்க இனி அப்படி நினைக்க மாட்டேன் ” கன்னத்தில் போட்டுக்கொண்டான் .

” எந்த ஆபிஸ்ல வேலை பார்க்கிறீங்க ..? சும்மா தெரிஞ்சிக்கதாங்க ..ஒரு வேளை எங்க ஆபிஸ்லதானோ …? அதுதான் மேடம் “ஆர் .எஸ் டைல்ஸ்  ” ல யா ….? “

” இன்னொரு இடத்தில் போய் கைகட்டி நின்று வேலை பார்த்து சம்பளம் வாங்கும் நிலையில் என் அப்பாவோ ..அண்ணணோ …என்னை வைத்திருக்கவில்லை …நான் சொந்த தொழில் செய்கிறேன் .என் ஆபிஸிற்குத்தான் இப்போது போய் கொண்டிருக்கிறேன் ” கம்பீரமாய் அறிவித்து விட்டு ஸ்கூட்டியை கிளப்பிக் கொண்டு போய்விட்டாள் சாம்பவி .

அவள் சென்ற திசையை பிரமிப்புடன் பார்த்தபடி நின்றிருந்தான் சபரீஷ் .வீட்டினுள் செல்ல திரும்பிய போது அவர்கள் வீட்டு வாசலில் நின்று இவனை உறுத்தபடி இருந்தாள் மாலினி .சபரீஷ் அவள் பக்கம் திரும்பவும் அவள் முகத்தை திருப்பிக் கொண்டு வீட்டினுள் நுழைந்து கொண்டாள் .

What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!