Serial Stories Uncategorized சந்தியா ராகம்

சந்தியா ராகம்-9

9

ரவிச்சந்திரனின் தொழிற்சாலை ஊருக்கு வெளிப்புறமாக இரண்டு ஏக்கரில் அமைந்திருந்தது. ஆறு மிஷின்களை வாங்கி வைத்து கொட்டைகளை உடைத்துக் கொண்டிருந்தனர். கொட்டைகளை மிசினுக்குள் தட்டுவதற்கும் உடைந்து வந்த கொட்டைகளை அள்ளி எடுத்து மூட்டையாக கட்டுவதற்கும் என்று வேலையாட்களும் இருந்தனர்.

” வாங்கம்மா நல்லா இருக்கீங்களா?’ சந்தியாவிடம் நலம் விசாரித்த பெரியவரை “இவர் தான் கணக்குப்பிள்ளை’ என்று முணுமுணுப்பாய் தெரியப்படுத்தினான் கதிர்வேலன்.

” ரொம்ப நல்லா இருக்கேன் அங்கிள்” உற்சாகமாய் ஆரம்பித்த சந்தியாவின் குரல் முடியும்போது சிறு பிசிறலாய் முடிந்தது. காரணம் சற்று தள்ளியிருந்து அவளையே பார்த்துக் கொண்டிருந்த ரவிச்சந்திரன்.

 தனது தொழிற்சாலைக்குள் அவளை எதிர்பார்க்காததினாலோ என்னவோ ஒரு திடுக்கிடலோடு அவளை பார்த்து நின்றிருந்தான். அருகில் நின்றிருந்த மனைவியின் உடலில் விறைப்பை உணர்ந்த ஜெயசூர்யா அவள் கை மணிக்கட்டை இறுக்கி பற்றினான். அந்த அழுத்தத்தில் தன்னிலை மீண்டவள் தலையை உலுக்கி சமாளித்துக் கொண்டாள்.

 அவள் கையோடு தன் கை கோர்த்துக் கொண்டவன், “அவர் அப்பாவை சந்திக்க வேண்டும் என்று சொல் சந்தியா” என ஏவினான்.

” நானா?” தயங்கியவளிடம் “நீயேதான்” அவள் கையை அழுத்தி தைரியம் சொன்னான்.

” தொண்டையைச் செருமி தலையை நிமிர்த்தி ரவிச்சந்திரனை பார்த்த சந்தியா “உங்கள் அப்பாவை பார்த்து பேச வந்திருக்கிறோம்” அறிவித்து முடித்தபோது காதில் கேட்ட கம்பீரக் குரல் தன்னுடையதுதானா என்ற சந்தேகம் அவளுக்கு வந்தது.

 அதே திகைப்புதான் ரவிச்சந்திரனின் முகத்திலும்.”எ.. என்ன.. எதற்கு..?” கொஞ்சம் பதட்டமானான்.

” தொழில் விஷயமாக பேசுவதற்கு” சந்தியாவின் குரலில் கம்பீரம் இம்மியளவும் குறையவில்லை.

“அ…அங்கே… ஆபீஸ் ரூமில் இருக்கிறார்” ரவிச்சந்திரனின் கை ஓரமாக மரத்தடுப்பால் உண்டாக்கப்பட்டிருந்த அறையை காட்டியது. கண்கள் இன்னமும் நம்ப முடியாமல் சந்தியாவைத்தான் பார்த்துக் கொண்டிருந்தது.

 கதிர்வேலன் முன்னால் அறைக்குள் போக அவன் பின்னே சென்ற சந்தியாவின் பின்னால் வந்த 

ஜெயசூர்யா அவள் இரு தோள்களையும் அழுந்த பற்றி விடுவித்தான். “தைரியமாக பேசு”

 உற்சாக மருந்தொன்று உள்ளுக்குள் செலுத்தப்பட்டதாய் உணர்ந்த சந்தியா பெருகிய தன்னம்பிக்கையுடன் உள்ளே நுழைந்தாள். 




“என்னுடன் தொழில் பேசுமளவு பெரிய ஆளாகி விட்டாயா நீ?” முறைத்தபடி அமர்ந்திருந்த சட்டநாதனின் கையில் சிகரெட் புகைந்து கொண்டிருந்தது.

” ஒரே ஊரில் ஒரே தொழிலில் இருக்கிறோம். ஒரு புது முயற்சி செய்யும்போது நமக்குள் தெளிவாக பேசிக் கொள்வது நல்லதுதானே சார்?” கேட்டபடி சேரில் அமர்ந்தாள் சந்தியா.

 கதிர்வேலன் ஓரமாக நின்று கொள்ள அனுமதி இல்லாமலேயே தன் முன்னால் அமர்ந்தவர்களை கோபத்துடன் பார்த்த சட்டநாதன் “உன் அப்பா என் முன்னால் உட்காரக்கூட யோசிப்பான். அவனுக்கெல்லாம் சம்பந்தி மரியாதை கொடுக்க நினைத்ததன் பலன்தான் இப்படி தகுதியற்ற நீயெல்லாம் என் முன்னால் உட்கார்ந்து சட்டம் பேசிக் கொண்டிருக்கிறாய்”

” ஆஹா உங்கள் பெருங்கருணைக்கு என்ன செய்வேன் சார்! அதனால்தான் எங்கள் தோப்பை உங்களுக்கே சொந்தமாக்கிக் கொள்ள நினைத்தீர்களோ?” தயங்காமல் கேட்டாள்.

” பின்னே உன்னை மாதிரி பிச்சைக்கார குடும்பத்தையெல்லாம் என் குடும்பத்தோடு சும்மா சேர்த்துக் கொள்வேன் என்று நினைத்தாயா? ஆனால் இந்த விஷயத்தில் உன் அப்பன் என்னை விட ஒரு படி மேலே போய் விட்டான்.யாருடைய சொத்தையோ அவனுடையது என்று ஏமாற்றி உன்னை எங்கள் தலையில் கட்ட பார்த்தான். நல்ல வேளை நாங்கள் தப்பித்து விட்டோம். இந்த அப்பாவி மாட்டிக் கொண்டார்” தைரியமாய் நிமிர்ந்திருந்த சந்தியாவினுள் சிறு சலனம் வந்தது.

 கண்களை மட்டும் ஓரம் நகர்த்தி பக்கவாட்டில் அமர்ந்திருந்த ஜெயசூர்யாவை பார்க்க அவன் சிறு சலனமும் இன்றி முகத்தை நிர்மலமாய் வைத்தபடி சட்டநாதனை பார்த்திருந்தான். 

“என்னங்க சார் சென்னையிலிருந்து வந்திருக்கீங்க… நிறைய படிச்சிருக்கீங்க, ஆனாலும் உங்க சொத்தை கைப்பற்றுவதற்கு இதைவிட வேறு வழி உங்களுக்கு தெரியவில்லையா?” சந்தியாவை ஆட்காட்டி விரலால் மேலும் கீழும் சுட்டிக் காட்டி கேவலமான குரலில் கேட்டார் சட்டநாதன் .

மிக லேசாக இதழ் பிரித்து புன்னகைத்து விட்டு ஓரமாய் விழிகளை திருப்பி சந்தியாவை பார்த்து “ம்” என்பதாக கண் ஜாடை மட்டும் காட்டினான் ஜெயசூர்யா. அந்த சிறு இமையசைவு யானை பலத்தை சந்தியாவினுள் கொடுக்க 

“பர்சனல் விஷயங்களை பேச வேண்டாம் மிஸ்டர் சட்டநாதன்” கணீரென்ற குரலில் உரத்து பேசினாள்.

 “ஏய் என்ன மரியாதை இல்லாமல் பேரைச் சொல்கிறாய்?” துடித்து எழ  முயன்றவரை அலட்சியமாய் கையமர்த்தி “ஷ்…உட்காருங்கள் ,வரதட்சனை கொடுக்காததால் உங்கள் மகனின் திருமணத்தை பாதியிலேயே நிறுத்தி கையோடு இழுத்துப் போனவர்தானே நீங்கள்? உங்களிடம் குடும்ப விஷயம் பேசுவதில் எனக்கு இஷ்டமில்லை. நாம் தொழில் மட்டும் பேசுவோம். நானும் என் கணவரும் சேர்ந்து இங்கே கையால் கொட்டை உடைக்கும் தொழில் ஒன்றை ஆரம்பிக்கப் போகிறோம். ஆதனக்கோட்டை என்றாலே தரமான முந்திரிப் பருப்புகள் என்ற பெயர் கொண்டுவர விரும்புகிறோம். உங்களுக்கு விருப்பம் இருந்தால் எங்களுடன் இந்த தொழிலில் இணைந்து கொள்ளலாம்”

 கம்பீரமாக சந்தியா பேசி முடிக்க சட்டநாதன் நாற்காலியை பின்னுக்கு ஓசையுடன் தள்ளிவிட்டு எழுந்து நின்றார்.”எவ்வளவு தைரியம் இருந்தால் என்னிடமே என் தொழிலை நிறுத்து என்று சொல்வாய்” விரல்களை சொடக்கிட்டார். “பார்க்கிறேன் நீயும் உன் புருஷனும் இந்த தொழிலை இங்கே எப்படி நடத்துகிறீர்கள் என்று பார்க்கிறேன்?”




 சந்தியா அலட்டிக் கொள்ளவே இல்லை. “சட்டநாதனின் ஆர்ப்பாட்டத்தை அமர்ந்த நிலையிலேயே அமைதியாக பார்த்திருந்தவள் “வெல் பார்க்கலாம்” என்று எழுந்தாள். “போகலாம் சூர்யா” கணவனுக்கு கண் ஜாடை காட்டியபடி நடந்தவளின்  பின்னால் “தூ” என்று துப்பினார் சட்டநாதன்.

” ஒரு கல்யாணம் நின்று ஐந்தே நிமிடத்தில் அடுத்தவனை வளைத்து பிடித்து தாலி கட்டிக் கொண்டவளுக்கு ஜம்பத்தை பார்.இவளெல்லாம் பொம்பளையில் சேர்த்தியா?”

 மனதை நொறுக்கும் சட்டநாதனின் பேச்சில் சந்தியா ஸ்தம்பித்து நிற்க “யோவ்…” என்ற கூச்சலோடு கதிர்வேலன் முன்னால் வரும் முன்… ஜெயசூர்யா சட்டநாதனின் சட்டையை கொத்தாக பற்றி இருந்தான்.

” பாரு மிஸ்டர் வயதிற்காக பார்க்கிறேன். இல்லையென்றால் அடித்து நொறுக்கிவிட்டு போய்க்கொண்டே இருப்பேன்” உலுக்கினான்.

” என்னங்கடா எவ்வளவு தைரியம் இருந்தால் எங்கள் இடத்திற்குள்ளேயே நுழைந்து என் அப்பாவின் மேலேயே கை வைப்பீர்கள்?” இவ்வளவு நேரமாக எங்கே மறைந்து நின்றிருந்தானோ பாய்ந்து உள்ளே வந்திருந்தான் ரவிச்சந்திரன். அவன் வந்த வேகத்திற்கு தன் மேல் உரசி விடாமல் இருக்க அனிச்சையாய் பின்னால் நகர்ந்த சந்தியாவை தாண்டி ஜெயசூர்யாவின் கைகளை தந்தையிடமிருந்து பிரிக்க முயன்றான்.

 திரும்பி அவனை பார்த்த ஜெயசூர்யா இடக்கையை வீசி ரவிச்சந்திரனின் கன்னத்தில் அறைந்தான். துடிக்கும் புஜத்துடன் கரணையாக தன் முகமருகே கடந்து சென்ற கணவனின் கரத்தை பார்த்தபடி நின்றிருந்தாள் சந்தியா.

 வரி வரியா முகம் முழுவதும் செந்தடங்கள் பதிந்து விட அலறிய ரவிச்சந்திரன் முகத்தை மூடிக்கொண்டு கீழே குத்திட்டு அமர்ந்து விட வலக்கையில் பிடித்திருந்த சட்டநாதனை உதறினான். தொப்பென அவர் சேரில் விழ “ஒழுங்காக எங்களுடன் ஒத்துப் போய் விடுங்கள். இல்லாவிட்டால் உங்கள் தொழிலையே அழித்து விடுவேன்” ஒற்றை விரலாட்டி  எச்சரித்தான்.

 தன் மெல்லிய விரல்களால் அவன் தோள் பற்றிய சந்தியா “வாங்க போகலாம்” என்றாள்.

“ம்ம்…” என்று உறுமி விட்டு நடந்தான். வேட்டையை முடித்துவிட்டு செருக்கோடு நடக்கும் சிங்கத்தை நினைவு படுத்தினான் அந்நேரம். சற்று முன் அவன் தோளை தொட்ட போது  கடினமாய் இறுகியிருந்த அவன் உடலை உணர்ந்து கொண்டாள். ஹப்பா எவ்வளவு பவர்! அகன்ற அவன் தோள்களை பார்த்தபடி பின்னால் நடந்தாள்.ஓரக் கண் பார்வையில் சோர்ந்து வீழ்ந்து கிடந்த தந்தையும்,மகனும் பட ஏதோவோர் நிறைவில்  அவள் மனம் முழுவதும் ததும்பியது.

வீட்டிற்குள் நுழைந்ததும் ஆண்கள் இருவரும் சந்தியாவின் கைகளை ஆளுக்கு ஒன்றாக பற்றி “அசத்திட்ட சந்தியா” என்றனர் ஒரே குரலில். தன் நடவடிக்கை குறித்து கொஞ்சம் குழப்பமான மனநிலையுடன் இருந்த சந்தியா இந்த பாராட்டுதலில் மகிழ்ந்து  “அசத்தியது நானில்லை நீங்கள்தான்” என்று தன் கையை பற்றியிருந்த ஜெயசூர்யாவின் கையை குலுக்கினாள்.

 வாஸ்தவத்தில் அவனுடைய உள்ளங்கையை தன் கைக்குள் அடக்கி பிடிக்க முடியவில்லை என்பதை உணர்ந்தவள் மெல்ல தன் கையை உருவி கொண்டாள். அவள் உள்ளே சென்றதும் கதிர்வேலன் ஜெயசூர்யா கைகளை பற்றிக் கொண்டான். “எனக்கு இப்போது சந்தியா விஷயத்தில் உங்கள் மேல் முழு நம்பிக்கை வந்துவிட்டது சார்” என்றான் மனப்பூர்வமாக.

” டேய் அவள் என் மனைவிடா, இதை தவிர்த்து என்னிடம் வேறென்ன எதிர்பார்த்தாய்?” 

திருப்தியாய் தலையசைத்தான் கதிர்வேலன். “ஆமாங்க சார் இராமனும் சீதையும் போல நீங்க ரெண்டு பேரும், என்னையும் கூடவே வச்சுக்கோங்க அனுமனாக…” என்றபடி உதடுகளை அனுமன் போல் மடித்துக்காட்ட  அப்போது வந்த சந்தியா “ஏன்டா குரங்கு மாதிரி மூஞ்ச வச்சிக்கிட்டு இருக்கிற?” எனக் கேட்க ஆண்கள் இருவரும் சிரித்தனர்.




What’s your Reaction?
+1
25
+1
26
+1
2
+1
3
+1
1
+1
1
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!