Serial Stories சந்தியா ராகம்

சந்தியா ராகம்-6

6

“கொட்டையை உடைத்து பிரிக்கும் போது உள்ளிருந்து முந்திரிப்பால் வெளியே வரும்.அது மிகவும் காரத்தன்மையோடு இருக்கும் .கிட்டத்தட்ட ஆசிட் மாதிரி  அந்த பால் கைகளில் பட்டால் அப்படி சதை பொத்து போகும். அதனால் தான் பருப்புகளை வறுக்கும் அவர்கள் எல்லோருடைய கைகளும் அப்படியிருக்கும்”

 சந்தியா விளக்கங்கள் கொடுக்க ஜெயசூர்யாவின் மனதிற்குள் ஒருவகை பிசைதல் உண்டானது. பாவம்! அந்த பெண்களுக்காக பரிதாபப்பட்டான்.

” இதுபோல சாலையோர குடிசைகளை எல்லாம் நாம் ஒழித்து விட்டால்… அதற்கு பதிலாக எந்திரங்களை வைத்து மட்டுமே பருப்புகளை உடைத்தால்…” ஜெயசூர்யா கேட்க சந்தியா திகைத்தாள்.

” பார்த்தாயா சந்தியா! இவர் கடைசியில் அவருடைய பணக்கார புத்தியை காட்டி விட்டார்.அன்றாட வயிற்று பிழைப்பிற்கு முன்னூறும் நானூறும் சம்பாதித்துக் கொண்டு இருப்பவர்களின் வயிற்றிலடிக்க முடிவு செய்துவிட்டார்” கதிர்வேலன் பொங்கினான்.

 “ஏதோ பாவம் அவர்கள் அரை வயிற்று கஞ்சி குடித்துக் கொண்டிருக்கிறார்கள். அது உங்களுக்கு பிடிக்கவில்லையா?” சந்தியா வெறுப்பாக கேட்க ஜெயசூர்யா குழம்பினான்

” ஆனால் இப்படி கையை புண்ணாக்கி கொண்டு இந்த வேலை பார்க்கத்தான்  வேண்டுமா?”

 “பிறகு என்னதான் செய்வார்கள்? அவர்களுக்கும் வருமானம் என்று ஒன்று வேண்டுமே. இந்த வேதனைகளை எல்லாம் அவர்கள் தாங்கிக் கொள்ள பழகி விட்டார்கள். உங்களுக்கு ஒன்று தெரியுமா? மிஷின்களில் உடைக்கும் பருப்புகளில் இந்த முந்திரிப் பாலை பிரித்து எடுப்பதில்லை. பாலோடுதான் எந்திரங்கள் பருப்புகளை உடைத்து வெளியேற்றுகிறது.ஆனால் இவர்கள் மிகவும் சுத்தமாக கையால் முந்திரிப் பாலை எடுத்துவிட்டு பருப்புகளை நமக்கு உடைத்துக் கொடுப்பார்கள். அதனால் இப்படி கையால் உடைக்கப்படும் பருப்புகள் அதிக சுவையுடன் இருக்கும். அத்தோடு வெகு நாட்களுக்கு கெட்டுப் போகாமலும் இருக்கும்” சந்தியா சொல்ல இரு விரல்களை சொடுக்கினான் ஜெயசூர்யா.

” கரெக்ட் சந்தியா, அவர்கள் கொடுத்த பருப்பு ரொம்பவும் ருசியாக இருந்தது. ஆனாலும் இதற்காக அவர்கள் கைகளை  கருக்கிக் கொள்வதானால்…ம்ஹூம் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை”

” எனக்கும் பிடிக்கவில்லைதான். ஆனால் அவர்களுக்கு இதைத் தவிர வேறு எந்த வேலையும் தெரியாதே…”

” சரி ஏதாவது யோசிக்கலாம். இப்போது நான் கொஞ்ச நேரம் படுக்கிறேன் சந்தியா. வெயிலில் வெளியே அலைந்தது டயர்டாக இருக்கிறது” ஜெயசூர்யா மாடி ஏறினான்.

” அது என்னவோ இந்த ஆளை எனக்கு பிடிக்கவே இல்லை சந்தியா.இன்று முழுவதும் பெரிய உத்தமன் போலவே நடந்து கொண்டார்.அன்று சல்லிப் பயல் போல் மரத்திற்கு பின்னால் ஒளிந்திருந்து உன்னை நோட்டமிட்ட ஆள் தானே?” முகம் சுருக்கி நின்றான் கதிர்வேலன்.

நீ சொல்லி விட்டாய், என்னால் சொல்ல முடியவில்லை…மனதிற்குள் நினைத்துக் கொண்டு தலையசைத்து வைத்தாள்.

” அங்கே திடீரென்று என்னுடைய பிரண்ட் என்று சொல்லிவிட்டார். நான் அதெல்லாம் கிடையாது இவர் யார் என்றே தெரியாது என்று விட்டேன். உன்னை தவிர எனக்கு வேறு யாரும் பிரெண்ட்ஸ் கிடையாது சந்தியா” சொன்னவனை வாஞ்சையுடன் பார்த்தாள்.




” நீ வீட்டிற்கு போய் சாப்பிட்டுவிட்டு வா கதிர்” என அனுப்பிவிட்டு மாடி ஏறியவள் திகைத்தாள். உள்ளே அறைக்குள் கட்டிலில் போய் படுக்காமல் அவள் படுத்துக்கொள்ளும் சோபாவில் படுத்திருந்தான் ஜெயசூர்யா.

 அவள் தலைக்கு வைத்துக் கொள்ளும் குஷனை எடுத்து மார்பின் மீது போட்டு அதை இறுக கட்டிக்கொண்டு தூங்கிப் போயிருந்தான். அவனது வலிய கரங்களுக்குள் சிக்கிக் கிடந்த குஷனை பார்த்ததும் ஏனோ மனம் படபடக்க வேகமாக கீழே இறங்கி வந்து விட்டாள்.

 அலைபாயும் மனதுடன் வாசல் படியில் அமர்ந்து முந்திரி மரங்களை வெறித்துக் கொண்டிருந்தாள். சல சலவென்று பேச்சும் சிரிப்புமாக பெண்கள் சிலர் தோப்புக்குள் நுழைந்து வந்தனர்.

” சந்தியா இன்னைக்கு எங்க குடிசை பக்கம் வந்தவரு உன்னோட வீட்டுக்காரராமே? இப்பதான் கேள்விப்பட்டோம்” ஒரு பெண் கேட்க “ஆமாம் ராசாத்தி அக்கா” என்றாள்.

” அப்போ உண்மைதானா? டவுன்ல இருந்து வந்திருக்காரு போல, அதுதான் அப்படி ஜம்முனு சினிமா ஹீரோ கெனக்க இருக்காரு…” என்றாள் இளம் பெண்ணொருத்தி.

அப்படியா என்ன! சந்தியாவின் மனம் இப்போதுதான் அவள் கணவனின் உருவத்தை மனதிற்குள் கொண்டு வந்து நிறுத்தி உச்சி முதல் பாதம் வரை ஆராய்ந்து பார்த்தது.

 “ஒரு போக்குல பாத்தா சந்தியாவுக்கு மாப்பிள்ளை மாறி போனது கூட நல்லதுன்னுதான் தோணுது” மற்றொருத்தி சொல்ல அனைவரும் சிரித்தனர்.

 சந்தியா உதடுகளை மடித்து கடித்துக் கொண்டாள் “சும்மாயிருங்க அக்கா” மெலிதாய் அவர்களை அதட்டினாள்.

” நாங்க சும்மா இருந்துக்கிறோம். ஆனால் நீங்க சும்மா இருந்துடாதீங்க” ஒரு பெண் வம்பிழுக்க சந்தியாவின் முகம் சிவந்தது.

” எதையாவது உளராமல் சும்மா இருங்கடி” மற்ற பெண்களை அகற்றி ராஜாத்தி சந்தியாவின் அருகே அமர்ந்து கொண்டாள்.

“ஏன்மா உன் அப்பா அம்மாவை வெளியே தட்டி விட்டு விட்டாயாமே! என்னம்மா இது?” கரிசனமாய் கேட்டாள்.

 சந்தியா முகம் வாடினாள். “எனக்கு வேறு வழி தெரியவில்லை அக்கா. அவர்கள் தப்பை உணர வேண்டுமே”  

“அது சரிதான். ஆனால் இது நீ எடுத்த முடிவுதானே?”

“என்னக்கா கேட்கிறீர்கள்?”

” உன் வீட்டுக்காரர் ஏதாவது கட்டாயப்படுத்தி…”

“ஐயோ இல்லைக்கா ” பதறி மறுத்தாள். “அவர் இப்போது வரை அம்மா அப்பாவை திரும்ப அழைத்துக் கொள்ளுமாறுதான் என்னிடம் சொல்லிக் கொண்டிருக்கிறார்” என்றவளின் மனது கணவன் தன்னை இது வரை எதற்குமே கட்டாயப்படுத்தவில்லை என்று குறிப்பெடுத்துக் கொண்டது.

“ஆனாலும் உன் தைரியம் வேற யாருக்கும் வராது புள்ள”

” இதுலென்னக்கா அதிசயம் இருக்கு? பொம்பளைக்கு தைரியம் வர்றதுக்கு மூல காரணமே புருஷன்தானே!சந்தியாவோட புருஷன் பவனும் பவுசுமா ராசா கெனக்க  இருக்காரு.அவளுக்கு தைரியமா பெத்தவங்கள உதர முடியுது”

சந்தியா திகைத்தாள். அவனது தைரியத்தில்தான் பெற்றவர்களை துறந்தேனா நான்? திருமணம் என்ற ஒன்று நடக்காமல் இருந்திருக்கும் பட்சத்தில் தந்தையின் தவறு தெரிய வந்திருந்தால் அப்போதும் இதே முடிவை எடுத்திருப்பேனா? தனக்குள்ளேயே யோசித்து குழம்பினாள்.

” இது என்னக்கா பிரமாதம்! கொண்டவன் துணை இருந்தா பொம்பள கூரை ஏறி கோழியும் புடிப்பா.வானமேறி வைகுந்தமும் போவா. நம்ம சந்தியா படிச்சவா.புருசன் கூட சேர்ந்து எத்தனை சாதனை பண்ண போறா பாருங்களேன்”

 பேசியபடியே அவர்கள் கலைந்து செல்ல ராசாத்தி மட்டும் கொஞ்சம் பின்தங்கி சந்தியாவின் கைப்பற்றி அழுத்தினாள். “இங்க பாரு புள்ள, உனக்கு கல்யாணம் ஆயிடுச்சு. பழசையெல்லாம் மனசுல போட்டு  குழப்பிக்காம கிடைச்ச வாழ்க்கையை அருமையா வாழப்பாரு. கிடைச்சதில்  ஜெயிக்கிற பொம்பளதான் கடைசிவரை பேசப்படுவா”




 அவர்கள் அனைவரும் போன பின்பும் அவர்கள் வார்த்தைகள் சந்தியாவின் மனதை வாழைநாராய் சுற்றி இம்சித்துக்கொண்டிருந்தன.பில்டர் காபியின் நறுமணம் நாசியை நிறைக்க திரும்பி பார்த்தவள் ஆச்சரியமானாள்.

 கைகளில் இரண்டு கப் காபியுடன் ஜெயசூர்யா வந்தான். அவளுக்கு ஒரு கப்பை கொடுத்துவிட்டு அவள் அருகிலேயே சற்று தள்ளி அமர்ந்து கொண்டான். “தூங்கி எழுந்ததும் கொஞ்சம் தலை வலிப்பது போல் இருந்தது. அதுதான் காபி கலந்தேன். நீ காபி குடிப்பாய்தானே?” அவன் கேட்டதும் லேசான குற்ற உணர்வு தலை தூக்க “என்னிடம் கேட்டிருக்கலாமே, நான் போட்டுத் தந்திருப்பேனே…” என்றாள்.

” அட இதில் என்ன இருக்கிறது? நான் காபி நன்றாகவே போடுவேன்?” என கப்பை உயர்த்தி காட்டி விட்டு உறுஞ்சினான். உண்மையில் காபி நன்றாகவே இருந்தது.

 அவர்கள் திருமணம் முடிந்த இந்த சில நாட்களில் சந்தியா மூன்று வேளைக்கும் சமையல் செய்து டேபிளில் எடுத்து வைத்து விடுவாள்.”சாப்பிடுங்கள்” என்று ஒரு வார்த்தையோடு நிறுத்திக் கொள்வாள்.

லேப்டாப் முன் அமர்ந்திருப்பவன் உடனே எழுந்து வந்து எந்த பிகுவும் இன்றி சாப்பிட அமர்வான். “நீ சாப்பிட்டு விட்டாயா?” விசாரிப்பவனுக்கு “பிறகு சாப்பிடுகிறேன்” என்று பதில் சொல்வாள்.இப்போது இன்னும் கொஞ்சம் அவனை அக்கறையாக கவனித்து இருக்கலாமோ என்று தோன்றியது. 

“என்ன?” ஜெயசூர்யா கேட்கவும் தான் அவனையே பார்த்துக் கொண்டிருப்பது புரிந்து அவசரமாக விழிகளை திருப்பிக் கொண்டாள்.சை… என்ன நினைப்பான்! தடுமாறியவள் “எதற்கு தலைவலி?” எதையோ கேட்க வேண்டும் என்று பேச்சு கொடுத்தாள்.

“வெயிலில் அலைந்து எனக்கு பழக்கம் இல்லை” நெற்றி பொட்டை அழுத்தி விட்டுக் கொண்டான்.

“ஏன் சோபாவில் வசதி இல்லாமல் படுத்துக் கொண்டீர்கள்?” 

“அந்த சோபாவில் தானே நீ படுத்து கொள்கிறாய். அது எப்படி இருக்கும் என்று பார்க்க நினைத்தேன்”

 அவன் சொல்லியதில் அவளுக்கு புரை ஏறியது.”மெல்ல… தலையில் தட்டவா?” அவள் தலைக்கு மேல் உயர்ந்த அவன் கரத்திலிருந்து நகர்ந்து கொண்டாள்.

” என் இடத்தை பிடிக்க நினைக்காதீர்கள். அது சரி வராது” அழுத்தமாக பேசிவிட்டு குடித்துவிட்டு வைத்திருந்த அவன் கப்பையும் சேர்த்து எடுத்துக் கொண்டு எழுந்தாள் சந்தியா.

” புரியவில்லை” சத்தமாக குரல் கொடுத்தவனுக்கு அவள் பதில் சொல்லவில்லை.

 சற்று நேரம் கழித்து தோப்புக்குள் நடந்து கொண்டிருந்தவளுடன் தானும் வந்து இணைந்து கொண்டான் ஜெயசூர்யா.” சந்தியா கொட்டைகளை எடுத்து விடுகிறீர்கள். முந்திரி பழங்களை என்ன செய்கிறீர்கள்?”

” அவற்றை தஞ்சாவூரில் ஏதோ மருந்து தயாரிப்பதற்கு என்று ஒரு கம்பெனியில் வாங்கிக் கொள்வார்கள் ஆனால் அவர்கள் பறித்தவுடன் பிரஸ்ஸாக வேண்டும் என்பார்கள். ஏனென்றால் முந்திரி பழங்கள் சீக்கிரமே அழுகத் தொடங்கி விடும் . நம்மால் அப்படி உடனுக்குடன் டெலிவரி கொடுக்க முடிவதில்லை. அதனால் பெரும்பாலான பழங்கள் வீணாகப் போகும். குப்பை கிடங்கில்தான் கொட்டுவோம்”

 “ஆஹா ஒரு உணவுப் பொருளை அப்படி வீணாக்கக்கூடாதே” ஜெயசூர்யா யோசித்தபடியே நடந்தான். வெயில் மங்கி மெல்ல மெல்ல இருள் கவிழத் துவங்கியது.

“கொட்டை வறுப்பவர்களுக்கு இனாமாக க்ளவுஷ் கொடுக்கலாமா?’ தயங்கித் தயங்கி கேட்டாள் சந்தியா. அவளுக்கு வெகு நாட்களாகவே அந்த எண்ணம் உண்டு .ஆனால் இதையெல்லாம் அவள் தந்தையிடம் பேசி விட முடியாது. யார் எப்படி போனால் உனக்கென்ன என்று வள்ளென்று விழுவார்.

 எதிர்பார்ப்புடன் தன்னை நோக்கி நின்றவளின் கண்கள் நிலவொளியில் மினுங்குவதை ஆவலுடன் பார்த்த ஜெயசூர்யா “அப்படி அவர்களுக்கு கிளவுஸ் கொடுப்பதால் நமக்கு என்ன லாபம்?” என்றான்.

 சந்தியாவிற்கு சப்பென்றானது. ஆக கடைசியில் இவனும் அவளது தந்தையை போலத்தானா?

சூம்பிய அவள் முகத்தை பார்த்தபடி “நான் வியாபாரி சந்தியா. எனக்கு லாபம் வரும் என்ற உறுதியற்ற விஷயங்களில் வீணாக பணத்தை போட மாட்டேன்” என்றான்.

போடா நீயும் உன் வியாபாரமும்,பணமும். மூட்டையாக கட்டி நீயே வைத்துக் கொள். கத்த துடித்த நாவை முயன்று கட்டுப்படுத்தி நின்றாள். 

குனிந்து அவள் முகம் பார்த்தவன் “வாய்க்குள் அடக்கி வைத்திருப்பதை துப்பி விடு சந்தியா. அல்லது அடித்தே விடலாம் என்று நினைக்கிறாயா?” என்றான் குறும்பாக. சந்தியா வெடுக்கென்று முகத்தை திருப்பிக் கொண்டாள்.

 “சந்தியா இருட்டுகிற நேரத்தில் இங்கே தோப்புக்குள் என்ன செய்கிறாய்? பூச்சி பொட்டு இருக்கப் போகிறது. வீட்டுக்கு போ” கத்தியபடி வந்த கதிர்வேலன் இருளுக்குள் இருந்த ஜெயசூர்யாவை அருகில் வந்ததுமே கவனித்தான்.

” ஹாய் ப்ரண்ட் நானும் இங்கேதான் இருக்கிறேன்” ஜெயசூர்யா சிரித்தபடி சொல்ல,ஒரு மாதிரி முகத்தை சுளித்துக் கொண்டு தள்ளி நின்றான்.

” நான் வீட்டிற்கு போகிறேன்” சந்தியா திரும்பி நடக்க, தள்ளி நின்ற கதிர்வேலனை அணுகி அவன் தோளில் கை போட்டுக் கொண்டான் ஜெயசூர்யா.

” என்ன இது கையை எடுங்கள்” அவன் ஒரு மாதிரி நெளிய “சும்மா வா ஃப்ரெண்ட்.உன் கூட கொஞ்சம் பேச வேண்டியதிருக்கிறது” வலுக்கட்டாயமாக அவனை இழுத்துக்கொண்டு நடந்தான்.




 

What’s your Reaction?
+1
27
+1
31
+1
2
+1
0
+1
1
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!