Serial Stories சந்தியா ராகம்

சந்தியா ராகம்-5

5

முழுமையான மணப்பெண் அலங்காரத்துடன் ஜெயசூர்யாவின் முன்னே நின்று கொண்டிருந்த சந்தியாவின் மனம் ஆழிப்பேரலையாய் ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தது. ஆனால் உதடுகளில் இருந்த சிறு நடுக்கம் மட்டுமே அந்த மனநிலையை சொன்னது. மற்றபடி மிக இயல்பாக திருமணம் முடிந்து முதலிரவிற்கு நுழையும்  சாதாரண பெண் போன்றுதான் நின்றிருந்தாள்.

” சந்தியா என்ன இது?” ஜெயசூர்யா ஆச்சரியமாக கேட்டான்.

” வீட்டில் பெரியவர்கள் யாரும் இல்லை. அம்மா அப்பா வெளியேறியதும் சொந்தக்காரர்களும் எல்லோரும் போய்விட்டார்கள். ஆனாலும் நமது நாட்டில் சம்பிரதாயங்கள் என்று இருக்கிறதே. அதனால்தான் நானே அலங்காரம் செய்து கொண்டு பாலை எடுத்துக் கொண்டு வந்தேன்”  பால் சொம்பை நீட்டினாள்.

“ஓ… ஆக உனக்கு இதிலெல்லாம் சம்மதம்.ம்…?” அவள் கண்களுக்குள் பார்த்து கேட்டான்.

 சந்தியாவின் விழிகளோ எதிர்புற சுவற்றில் நடனம் ஆடியது. “பெற்றவர்களிடமிருந்து சொத்துக்களை சந்தோஷமாக வாங்கிக் கொள்கிறோமே அதுபோல அவர்கள் செய்யும் பாவங்களுக்கான தண்டனைகளையும் பிள்ளைகள்தானே பெற்றுக் கொள்ள வேண்டும்” வறண்ட குரலில் பேசினாள்.

” சோ…என்னுடனான வாழ்வை உனக்கு சம்மதம் இல்லாவிட்டாலும்  தண்டனையாகவேனும் ஏற்றுக் கொள்கிறேன் என்கிறாய்…” மெல்லிய புன்னகையுடன் கேட்டாலும் ஜெயசூர்யாவின் மனம் கலங்கி தவித்துக் கொண்டிருந்தது.

“என்னுடைய சம்மதத்துடன் எதுவுமே நடக்கவில்லை. இதுவும் அப்படியே நடந்து விட்டு போகட்டும்”அப்பட்டமான விரக்தி குரலில்.  

“வேண்டாம்” அவன் முகமும் இறுகியிருந்தது. “திருமணம்தான் எதிர்பாராமல் நடந்து விட்டது. நாம் இருவரும் ஒருவரையொருவர் புரிந்துகொண்ட பிறகு இந்த சம்பிரதாயங்கள் எல்லாம் நடக்கட்டும்” 

“இதில் எனக்கு எந்த ஆட்சேபமும் இல்லை.என் அப்பா இத்தனை வருடங்களாக உங்கள் சொத்துக்களை அனுபவித்திருக்கிறார். நீங்கள் என் கழுத்தில் தாலி கட்டியிருக்கிறீர்கள். எப்படி பார்த்தாலும் நான் உங்களுக்கு கட்டுப்பட்டவளாகிறேன். உங்கள் விருப்பம் போல் நடந்து கொள்ள தயாராக இருக்கிறேன்” என்றவள் படுக்கையில் படுத்துக்கொண்டாள்.

“என்றாயினும் இந்த வாழ்க்கையை நான் வாழத்தான் வேண்டும்.அது இன்றேயாக இருக்கட்டும்” விழிகளை இறுக மூடிக் கொண்டு “ம் ” என்றாள்.

” முட்டாள் எழுந்திரு. உனக்கு மனதில் பெரிய தியாகி என்ற நினைப்போ?”

” இல்லை, நான் சாதாரண மனுஷி. இந்த நேரத்தில் ஒரு பெண் எப்படி நடந்து கொள்வாளோ அப்படியே நடந்து கொள்கிறேன்” சந்தியாவின் குரல் லேசாக கரகரத்தது.

 மணமேடையில் தனது தோள் பட்டதும் தனக்குள் குறுகிக் கொண்டவள் அவன் நினைவிற்கு வந்தாள். அது போன்ற மனநிலையில் இருப்பவள் உன்னுடன் உறவுக்கு தயார் என்றால்… அந்நேரத்தில் சந்தியாவின் மனம் படும் வேதனையை உணர்ந்து கொண்டான் ஜெயசூர்யா.

 மெல்ல கட்டிலை நெருங்கி அவள் தோள் பற்றி எழுப்பி அமர வைத்தான். தானும் அருகில் அமர்ந்து கொண்டவன் “பார் சந்தியா நம் திருமணம் நானே எதிர்பாராமல் நடந்ததுதான். உடனேயே தாம்பத்தியத்திற்குள்ளும் நாம் நுழைய வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. நாம் ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொள்வோம். பிறகு இதெல்லாம் பார்த்துக் கொள்ளலாம்” என்றான் மென்மையாக. 

சந்தியா விழிகளை அகல விரித்து அவனை பார்த்தாள்.இப்பொழுது அவள் முகத்தில் நூலிழை போல் மகிழ்ச்சி ரேகை ஓடுவது தெரிந்தது. 

“அ…அப்போ நான் போய் தூங்கட்டுமா?” பெரும் விடுபடல் உணர்வுடன் அவள் கேட்க ஜெய சூர்யாவிற்கு சிறிது ஏமாற்றம்தான்.

 இதோ இப்படி அருகமர்ந்து அவள் கைப்பற்றிக் கொண்டு இரவு முழுவதும் பேசிக்கொண்டே இருக்கச் சொன்னாலும் அவனுக்கு சம்மதமே. ஆனால் அதனை அவள் விரும்பவில்லை எனும்போது… “சரிம்மா நீ போய் படுத்துக்கொள். எனக்கும் தூக்கம் வருகிறது” என்றான்.

 வேகமாக எழுந்து கொண்ட சந்தியா அறைக்கு வெளியே கைகாட்டி “அந்த ஹாலில் இருக்கும் சோபாவில் படுத்து கொள்கிறேன்” அறிவிப்பாய் சொல்லிவிட்டு உடனே வெளியேறினாள். அவ்வளவு நேரமாக அறைக்குள் வீசிக் கொண்டிருந்த தென்றல் நின்று இறுக்கம் சூழ்ந்ததாய் உணர்ந்த ஜெயசூர்யா ஒரு வித மனச் சோர்வுடன் படுக்கையில் படுத்து கண்களை மூடிக்கொண்டான்.




 மறுநாள் காலை ஜெயசூர்யா விழித்த போதே சந்தியாவின் சத்தம் கீழிருந்து கேட்டுக் கொண்டிருந்தது.”இல்லை கதிர் இது ரொம்பவும் கம்மியான விலை.  இந்த விலைக்கெல்லாம் கொடுத்தால் நமக்கு கட்டுபடியாகாது.அவர்கள் வேண்டுமென்றே என்னிடம் வம்பிழுக்கின்றனர்”

” ஆனால் இத்தனை நாட்களாக உன் அப்பா இந்த விலைக்குத்தான் கொடுத்துக் கொண்டிருந்ததாக சொல்கிறார்  சந்தியா”

“அப்படி இருக்காது.இருந்தாலும் அப்பா  தவறாக தொழில் பார்த்தார் என்றால் அதையே நாமும் பின்பற்ற முடியாதில்லையா?” பின்னால் கைகளை கட்டிக்கொண்டு நாண் போல் நிமிர்ந்து நின்று பேசிக் கொண்டிருந்தவளின் பின்புற தோற்றத்தை ரசித்தப்படியே மாடிப்படிகள் இறங்கி வந்தான் ஜெயசூர்யா.

” என்ன விஷயம்?’ திடுமென அருகாமையில் அவன் குரல் கேட்கவும் வேகமாக பின் திரும்பியவள் கடைசி நொடியில் அவன் மீது மோதுவதை தவிர்த்து ஓரம் ஒதுங்கி “பருப்புகள் விலை விவரம் பேசிக் கொண்டிருந்தோம்” குரலை குறைத்து முணுமுணுத்தாள்.

“உடனே எதற்கிந்த பணிவு?”  கதிர்வேலன் காதில் படாமல் அவன் முணுமுணுக்க “முதலாளியிடம் காட்ட வேண்டிய பணிவு” என்ற அவளது பதிலில் எரிச்சலானான்.

 

“என்ன பருப்பு?” குரலுயர்த்தி அவன் கேட்க ” ம்…” என்றான் கதிர்வேலன்.

 அவன் ஜெயசூர்யாவை கீழ்பார்வையாக முறைத்தபடி நின்றிருந்தான். முட்டி தொடும் சாட்ஸும் கையில்லாத பனியனுமாக வீட்டின் உரிமையாளனாய் இயல்பான தோற்றம் காட்டி சந்தியா அருகில் உரிமையோடு நின்றிருந்தவனை இன்னமும் கதிர்வேலனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

” இது முந்திரி தோப்பு ,எந்த பருப்பை பற்றி பேசுவோம்?” சந்தியா கேட்க…

“ஓ… முந்திரி பருப்பு பிசினஸா? சரி சரி பாருங்கள்” என்று விட்டு நகர்ந்தான்.

 சந்தியா திகைத்தாள். “ஹலோ சார் இந்த முந்திரி தோப்பு உங்களுடையது. நீங்கள்தான் இதையெல்லாம் இனி பார்த்துக் கொள்ள வேண்டும்”

 திரும்பி தோள் குலுக்கினான். “இதைப் பற்றி எனக்கு ஒன்றுமே தெரியாதே, நான் எப்படி பார்த்துக் கொள்வேன்?”

” ஓ…சரி  கதிர் உங்களுக்கு எல்லாவற்றையும் சொல்லித் தருவான். நீங்கள் அவனுடன் போய் தெரிந்து கொள்ளுங்கள்” சந்தியா சொன்னதும் கதிர் ‘ஆங்’ என்று விழித்தான்.உடன் ஒரு மறுப்பை கண்களில் கொண்டு வந்தான்.

” யார் இவனுடனா? இப்போது கையில் ஒரு அரிவாளை கொடுத்தாயானால் உடனே என் கழுத்தை சீவி விடுவான். இவனை நம்பி கூடப் போக சொல்கிறாயே சந்தியா? உனக்கு என் மேல் கொஞ்சம் கோபம் இருப்பது தெரியும். ஆனாலும் அது இப்படி கொலை செய்யும் அளவுக்கானதா?’ கவலை காட்டினான்.

சந்தியா பார்வையாலேயே கதிர்வேலனை அதட்டினாள். “கதிர் அப்படியெல்லாம் இல்லை. இவன் என்னுடைய ஃபிரண்ட். பத்தாவது வரை இந்த ஊர் பள்ளிக்கூடத்தில் நாங்கள் ஒன்றாக படித்தோம்.அதற்குப் பிறகு நான் தஞ்சாவூருக்கு படிக்கப் போய்விட்டேன். கதிர் படிப்பு வராமல் படிப்பை நிறுத்தி விட்டான். அவன் அம்மா பருப்பு வறுக்கிறார்.அப்பா இல்லை.இவன் அப்பாவிற்கு உதவி செய்து கொண்டு இங்கேயேதான் இருப்பான்.”

 “அத்தோடு உனக்கு சிறந்த பாதுகாவலனும் கூட, சரியா?” கதிர்வேலனை பற்றிய அறிமுகத்தை முடித்து வைத்தான் ஜெயசூர்யா.

” ஒரு வகையில் அப்படித்தான், கதிர்  துணையோடு எங்கேயும் எந்த நேரத்திலும் செல்வேன்.அவனுக்கு இந்த தொழிலைப் பற்றி எல்லா விவரங்களும் தெரியும். நீங்கள் அவனுடன் போய் வாருங்கள்”

” உன்னை நம்பி போகிறேன், ஐயோ அம்மான்னு ஏதாவது அபய குரல் கேட்டால் உடனே என்னை காப்பாற்ற வந்து விடு” என்ற ஜெயசூர்யாவை ஒரு முறைப்புடன் அழைத்துச் சென்றான் கதிர்வேலன்.

” பச்ச முந்திரி கொட்டையை பழத்திலிருந்து பிரிச்சு எடுத்து மூட்டையா கட்டுவோம். ஒரு மூட்டை எண்பத்தோரு கிலோ இருக்கும்.அதை ஃபேக்டரிக்கு வித்தா 7000 ரூபாய்க்கு போகும். பிரிச்சு பாக்கெட் போட்டு வித்தா ரோட்டோர ஆளுங்க கிட்ட 7500 வரைக்கும் விற்கலாம். தையிலிருந்து சித்திரை மாசம் வரைக்கும் முந்திரி பழ சீசன்.அந்த நேரத்துல 10 ஆயிரத்திலிருந்து 12 ஆயிரம் வரைக்கும் ஒரு மூட்டைக்கு விலை கிடைக்கும். மத்த நாள் பூரா 6000, 7000ம் தான் கிடைக்கும்”

 விபரங்களை சொல்லியபடி நடந்தான் கதிர்வேலன். 

“அந்த ஃபேக்டரி எங்கே இருக்கிறது?”

” இங்கேதான். நம் ஊரிலேயே இரண்டு பேக்டரி இருக்கு. அவங்க மிஷின் வச்சு கொட்டையை பிரிச்சு எடுப்பாங்க. மூட்டை விலையை அடிச்சு பேசி வாங்குவாங்க. ஆனாலும் மொத்தமா உடனே காசு தந்துடுறாங்கன்னு அங்கேயே குடுத்துடுறது”

” சரி யார் அந்த ரோட்டோர ஆளுங்க?”

” அது நம்ம ஊரு ஆளுங்கதான். ரோட்டோரத்தில் குடிசை போட்டு அடுப்பு வச்சு முந்திரிப்பருப்பை கண்ணு முன்னாடியே வறுத்து கொட்டையை பிரிச்சு சுடச்சுட பாக்கெட்ல போட்டு அடைச்சு விப்பாங்க.இவுங்க ஏழை சனங்க. இவங்க கிட்ட பருப்புக்கு உடனே பணம் எதிர்பார்க்க முடியாது. நிறைய பேர் கடன்தான் சொல்லி வாங்கிட்டு போவாங்க.ஏதோ அவங்க அன்றாட பொழப்பு அது. நிறைய பேர் குடும்பத்தோடு இந்த வேலை பார்க்கிறாங்க”

 கதிர்வேலன் சொன்ன விபரங்களை உள்வாங்கிக் கொண்டு அசைபோட்டான் ஜெயசூர்யா.”அந்த ரோட்டோரம் பருப்பு வறுக்குமிடத்திற்கு என்னை கூட்டி போகிறாயா கதிர்?”




 கதிர்வேலன் ஜெயசூர்யாவை அங்கே அழைத்துப் போனான்.

” வேலை எப்படி போகுது?” ஒரு குடிசைக்குள் பெரிய இரும்பு வாணலியில் கொட்டைகளை வறுத்துக் கொண்டிருந்த பெண்ணிடம் கேட்டான்.

” ஏதோ ஓடுது கதிர். ஒரு நாளைக்கு 300 400 பாக்குறதுக்குள்ள மூச்சு நின்னுடும் போல…” வாய் புலம்பினாலும் அந்தப் பெண்ணின் கைகள் வேலையை நிறுத்தவில்லை.

” இரண்டு பருப்பு கொடுங்க அக்கா, சாப்பிட்டு பார்க்கிறேன்’ ஜெயசூர்யா கையை நீட்ட “தம்பி யாரு?” கண்களை சுருக்கி அவனைப் பார்த்தபடி வெதுவெதுப்பான சூடோடு இருந்த பருப்புகளை அவன் கைகளில் போட்டார் அந்தப் பெண்.

” கதிரோட ஃப்ரெண்ட்” ஜெயசூர்யா தன்னை அறிமுகம் செய்து கொள்ள கதிர்வேலன் வேகமாக இடையிட்டான்.

” இல்லையில்லை எனக்கெல்லாம் பிரண்ட்  கிடையாது. இவர் யாரோ இந்த பருப்புகளை வாங்க வந்திருப்பாராயிருக்கும்”உர்ரென்ற  முகத்துடன் தள்ளி நின்று கொண்டான்.

மனதிற்குள் புன்னகைத்துக் கொண்ட  ஜெயசூர்யாவின் கண்கள் அந்த பெண்ணின் கை விரல்களில் பதிந்தது. கருகி கறுத்து கிடந்தன பெண்ணின் விரல்கள்.




What’s your Reaction?
+1
27
+1
24
+1
2
+1
0
+1
0
+1
0
+1
3
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!