Serial Stories vana malai pol oru kathal

வானமழை போல் ஒரு காதல்-10

10

 

 

” எக்ஸ்க்யூஸ் மீ .நீங்கள் எல்லோரும் ஒரு ஐந்து நிமிடம் வெளியே இருக்கிறீர்களா  ? நான் என் பொண்டாட்டியிடம் ஒரு முக்கியமான விஷயம் பேச வேண்டும் ”  மணமகள் அறை வாசலில் வந்து நின்ற தேவராஜனை வாசுகிக்கு  அலங்காரம் செய்து கொண்டிருந்த பெண்கள் எல்லோரும் வென   பார்த்தனர்.

 

” முகூர்த்தத்திற்கு இன்னமும் அரை மணி நேரம் தான் இருக்கிறது .அதற்குள் என்ன பேச்சுகல்யாணம் முடிந்ததும் பேசிக் கொள்ளலாமே ? ” சொன்னவள் ராதா .சற்று முன்னால் வரை இப்போது இவனுடன் பேசக்கூடாது என்று நினைத்திருந்த வாசுகி இப்போது உடனடியாக எண்ணம் மாறினாள்.

 

ப்ளீஸ் எல்லோரும் கொஞ்ச நேரம் வெளியே இருங்க ”  தனது தோழிகளையும் அலங்காரத்திற்கு வந்திருந்த அழகு நிலைய பெண்ணையும் வெளியே அனுப்பினாள்.

 

 இன்னமும் நிறைய அலங்காரம்  மீதம் இருக்கிறது .ஐந்தே நிமிடம் தான் சரியா ? ” வெளியேறும்போது வாசலில் நின்றிருந்த அவனிடம் கொஞ்சலாய் பேசி நகர்ந்த ராதாவை எரிச்சலோடு பார்த்து நின்றிருந்தாள்.

 

” எதற்கு இத்தனை சுருக்கங்கள் ? ” கோபித்து சுருங்கியிருந்த அவள் நெற்றியை ஒற்றை விரலால் வருடியபடி அருகே நின்றான் தேவராஜன்.

 

 அன்று சேலை எடுத்து போன பிறகு போனில் கூட அவளிடம் ஒரு வார்த்தை பேசவில்லை .இப்போது குழைந்து கொண்டு வந்து நிற்கிறான்.” என்ன விஷயம் ? ” வேகமாக அவன் தொடுகையில் இருந்து நகர்ந்து நின்று கொண்டாள்.

 

” சும்மா ” கண் சிமிட்டினான் அவன் .” மேடை ஏறுவதற்கு முன்பு உன்னை தனிமையில் சந்திக்க வேண்டும் என்று நினைத்தேன் .அதனால் வந்தேன் ” என்றவனை கன்னத்தில் அறைந்தால் தவறு ஒன்றும் இல்லை என்றுதான் வாசுகுக்கு தோன்றியது.

 

” என் கன்னத்தை விசேஷமாக கவனிக்க வேண்டும் என்று நினைத்தால்  அதற்கு ஒரு நேரம் இருக்கிறது .அப்போது உன் இஷ்டம் போல் கவனித்துக் கொள்ளலாம் .”இதழ் குவித்து குறும்பாக கண் சிமிட்டினான்.

 




” சப்பென்று உங்கள் கன்னத்தில் ஒரு அறை  வைக்கலாம் என்று நினைத்தேன் ” 

 

” அது எதுவாக இருந்தாலும் சரி .எல்லாம் இன்று இரவு தான் ” என்றவன் இன்னமும் அவளருகே நெருங்கி காதருகே குனிந்து ” நம் தனி அறையில் உனக்கு எந்த கட்டுப்பாடும் கிடையாது வசு . நீ என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம் .உனக்கு முழு சுதந்திரம் தான் ”  என கிசுகிசுத்தான்.

 

இளம் சூடாய் தன் கன்னம் உரசிய அவனது மூச்சுக்காற்றில் வாசுகி கரைய ஆரம்பித்தாள்.”  நான் உங்களை கன்னத்தில் அடிப்பேன் என்று சொல்லிக் கொண்டிருந்தேன் ” சிணுங்கியது அவள் குரல்.

 

” ஆட்சேபனை இல்லை .அடிக்கிற அடிக்கு கணக்கு எழுதி வைத்துக்கொண்டு வட்டி வசூல் செய்து கொள்வேன் .எனக்கு பிடித்த வகையில் பல மடங்காக … ” பன்னீர் பூக்களை அவள் மேல் வாரி இறைத்துக் கொண்டிருந்தன அவன் சொற்கள் .சரியாக மாட்டப்படாமல் சரிந்து விழுந்த அவளது ஒருபக்க காது மாட்டலை எடுத்து அவள் தலைமுடியில் சொருகி சரி செய்தான்.

 

” ப்ளீஸ் வெளியே போங்களேன் .எல்லோரும் என்ன நெனைப்பாங்க ? ” வாசுகி கொஞ்சம் பரிதவிப்பை கூட்டினாள்.

 

” ஏன் தப்பு எதுவும் செய்கிறோமா ? “அப்பாவியாய் விழி விரித்தான்.

 

” ஐயோ ” மெல்லிய சிணுங்கலுடன் உதறிய அவள் கையைப் பற்றி  அருகே அவள் போடுவதற்காக வைக்கப்பட்டிருந்த வளையல்களை ஒவ்வொன்றாக எடுத்து அவள் கையில் போட்டு விட ஆரம்பித்தான்.

 

” வசு இந்த அலங்காரத்தில் நீ மிகவும் அழகாக இருக்கிறாய்டா ”  பட்டின் சரிகையாய் மின்னியபடி வந்தது அவன் குரல்.

 

” உங்களுக்குத்தான் நான் இப்படி அலங்காரமாக இருந்தால் பிடிக்காதே .என்னை சாதாரணமாக பார்க்கத்தானே பிரியப்படுவீர்கள் ”  கிள்ளையாய் மிழற்றினாள் .அவள் கைகளை வருடி அழுத்தி அவன் மெல்ல வளையல்களை போட்டுவிட்டு கொண்டிருந்த விதம் அவள் குருதிக்குள்  வேகம் கூட்டிக் கொண்டு இருந்தது.

 

வேண்டாம் வாசுகி மயங்காதே. இவன் எத்தன் .ஏதோ அவனுடைய காரியத்திற்காக தான் இப்படி உன்னிடம் குழைந்து கொண்டு இருக்கிறான் என்ற மூளையின் எச்சரிக்கை மிக பலவீனமாக வாசுகியின் அடி மனதிற்குள் புதைந்தது. மணமகனே மணப்பெண்ணை அலங்கரிக்கும் இதுபோன்ற பாக்கியம் வேறு எந்த பெண்ணிற்கு கிடைக்கும் ?/இவன்தான்  எத்தனை காதலானவன்என்ற எண்ணமே அவள் மனம் மேல் மிதந்து கொண்டிருந்தது.

 

” ஹேய் அது ஒரு அழகுஇது ஒரு அழகுடாஉன்னை எப்படி பார்க்கவும் எனக்கு பிடிக்கும் வசு . என்னை விடு .திலகா கூட இன்று உன்னை பார்த்து அசந்து விட்டாள் தெரியுமாகொஞ்ச நேரம் முன்பு என் அறைக்குள் வந்து உன் அழகை பற்றி தான் பெருமையாக பேசிக் கொண்டிருந்தாள் .அவள்  சொல்வதைக் கேட்டுத்தான் உன்னை பார்க்கும் ஆவலுடன் இங்கே வந்தேன் ” 

 

வாசகி மெல்ல தலையசைத்துக் கொண்டாள் .இதனை அவள் மறுப்பதற்கில்லை .ஏனென்றால் திலகா சற்று முன் இங்கே வந்து அவளுடைய அலங்காரத்தைஅவளை பார்த்து வார்த்தைகளில் பிரமித்து விட்டு போய் இருந்தாள். அந்த இதம் இன்னமும் மனதிற்கு அடியில் தேங்கிக் கிடக்க இப்போது மனம் கொண்டவனின்  பாராட்டும் சேர மணமகள் என்ற நிலையும் துணைபுரிய காதலும் நாணமுமாக இன்னமும் மிளிர்ந்தாள் வாசுகி.




எதிரே கண்ணாடியில் தெரியும் உருவம் தான் தானா என ஆச்சரியத்துடன் அவள் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது தேவராஜன் மென்மையாய் அவள் கன்னத்தை வருடினான் .” நம் வீட்டு ஆட்கள் எல்லோருக்கும் உன்னை பார்த்ததும் மிகவும் திருப்தி வசு .அம்மாவும் திலகாவும் அங்கே எல்லா உறவினர்களிடமும் உன் பெருமை தான் பேசிக்கொண்டு இருக்கிறார்கள் .உன்னை மருமகளாக அடைய கொடுத்து வைத்திருப்பதாக சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் ” 

 

கண்ணாடியில் தெரிந்த வாசுகியின் முகம் சோபை இழந்து போனது.இதற்காகத்தான் இவன் இப்போது இங்கே வந்தானா ? அவனது குடும்பத்தினரை நியாயப்படுத்தஎன்னை புகழ்ந்து தொட்டு வருடிவாசுகியின் மனம் அசூசையில் சுருங்கியது . இவனை பற்றி தெரிந்திருந்தும் சில நிமிடங்கள் இவனது தொடுகையில் மயங்கி விட்டேனேசற்று முன் சிலிர்த்து நின்ற தன் உடலை வெறுத்தாள் அவள் .

 

  சட்டென்று அவன் அருகாமையை விட்டு விலகிக் கொண்டாள். ”  இதை எனக்கு தெரியப்படுத்த தான் இவ்வளவு அவசரமாக வந்தீர்களா ? ” 

 

தேவராஜன் அவள் முகத்தை கூர்ந்து பார்த்தான் . ” நிச்சயம் .எனது வீட்டினரின் அன்பை நீ புரிந்து கொள்ள வேண்டுமில்லையாஉன் கழுத்தில் என் தாலி ஏறுவதற்கு முன்பே இதனை நான் உனக்கு உணர்த்த நினைத்தேன் ” 

 




” இப்படியே பேசிக்கொண்டு போனீர்கள் என்றால் நான் தாலி கட்டிக் கொள்வதையே யோசிக்க வேண்டியது இருக்கும் ” சொல்லி முடித்த மறுகணம் அவள் குரல் வளை அவனால் அழுந்த பற்றப்பட்டது.

 

எப்போது பார்த்தாலும் இது என்னடி பேச்சு ? உன் கையை காலை கட்டிப் போட்டாவது உன் கழுத்தில் தாலி கட்டுவேன்டி பார்க்கிறாயா ? ” 

 

வாசுகி கண்கள் கலங்க அவனை வெறித்துப் பார்க்க  தேவராஜன் இரக்கமற்ற பார்வை ஒன்றுடன் அவளை உதறி விலகிப் போனான்.

 

அடுத்த அரைமணியில் நெஞ்சு நிறைய பதட்டங்களும் பரிதவிப்புமாக வாசுகி தேவராஜன் கட்டிய தாலியை ஏற்றுக்கொண்டு அவனது மனைவி ஆனாள் .

 

 




What’s your Reaction?
+1
21
+1
20
+1
2
+1
1
+1
1
+1
1
+1
0
Subscribe
Notify of
guest

1 Comment
Inline Feedbacks
View all comments
muthuravi
muthuravi
1 month ago

romba chinna epia irukku

1
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!